அத்யாயம்: 16 .. செருவாமணி
Written by Baskar Sathya
தங்கள் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேடும் கனவுகளுக்கு ஏற்றார்போல் ஒரு ஜாதகம் கையில் கிடைத்தவுடன் ஆனந்தத்தில் திளைத்தனர் செருவாமணி தம்பதியினர்.
திரும்பத் திரும்ப சித்தப்பா சொன்னதை மனதில் அசைபோட்டனர்.
அழகான பையன், டாக்டர், வசதியுள்ள குடும்பம், மாமியார் இல்லை, நாத்தனார் வெளிநாடு ...
'மாப்பிள்ளை ஆத்துல தான் ஜாதக பொருத்தம் சரியா இருக்குன்னு சொல்லிட்டாளே சாலி. நாம வேற ஏன் தனியா பொருத்தம் பார்க்கணும்.'
'இல்லன்னா. நாமளும் ஒரு தடவை பார்த்துடலாம். பொண்ண பெத்தவாளுக்குத் தான் அக்கறை அதிகம் இருக்கணும்.'
'சாலி, எனக்கென்னவோ இந்த கல்யாணம் அமஞ்சுடும்னுதான் மனசுக்கு படறது.'
'இருக்கட்டும்னா. உங்க வாய் முஹூர்த்தத்துல அமெஞ்சுதுன்னா சந்தோஷம்தான். நேஷனல் ஸ்கூலுக்கு பக்கத்தில இருக்கற ஆனந்த வினாயகருக்கு சிதற் கா போடறதா வேண்டிண்டு, ஜம்பு ஜோஸ்யரைப் போய் பார்த்துட்டு வாங்கோன்னா. ரொம்ப சக்தி அந்த பிள்ளையாருக்கு தெரியுமோன்னோ?'
'நாலரை ஆறு ராகுகாலம் சாலி. அதை முடிச்சுட்டு ஜம்பு ஜோஸ்யரை பார்க்கலாம். ஆனா அவர் ஆறு மணிக்கு மேல ஜாதகம் பார்க்க மாட்டார். அதான் யோஜனையா இருக்கு.'
'எடுத்து சொல்லுங்கோன்னா. வரன் ஆத்துல அவசரப் படறான்னு. டிலே பண்ணினா, தட்டி போயிடப் போறது.'
'சரி சாலி. முயற்சிக்கிறேன்.'
ராகுகாலம் ஆனாலும் கிளம்பிவிட்டார், ஆனந்த வினாயகர் கோவிலுக்கு, ஆத்துல இருந்த ரெண்டு தேங்காய்களை எடுத்துக் கொண்டு. ஒன்று அர்ச்சனைக்கு மற்றொன்று சன்னதிக்கு முன் போட்டு உடைப்பதற்கு. போகிற வழியில் கற்பூரம், ஊதுவத்தி, வெத்தலை, பாக்கு வாங்கிக்கணும்.
திருப்பாற்கடல் தெருவிலிருந்து ஹை ஸ்கூல் ஒண்ணரை கிலோமீட்டர் இருக்கும். நடந்து கொண்டே சிந்தனைகள்.
இப்பவே கனவுலகில் சம்பந்தியுடன் மெட்றாஸில் கல்யாண பேச்சு வார்த்தை. அவர் அப்படிக் கேட்டா நாம இப்படி பதில் சொல்லணும். பெரிய இடம். மரியாதையா பேசணும். எதுக்கும் சித்தப்பாவ அழைச்சிண்டு போனா என்ன?
'சித்தப்பாதான் லெட்டர் போடலாம்னு சொன்னாரே. எதுக்கு நேர போகணும்?'
வழி நெடுக சிந்தனைகள். நின்றபாடில்லை. வழியிலே எதிர்ப்பட்ட வாடிக்கையாளர்களின் கரக் கும்பிடுகளுக்கு சிரக் கும்பிடுகள், ஏதோ மெக்கானிக்கலாக.
அர்ச்சனைய அவசரமா முடிச்சிண்டு இரண்டாம் தெருவுக்கு போகணும் ஜம்பு ஜோஸ்யரை பார்க்க. அவர வேற சம்மதிக்க வைக்கணும் ஜாதகம் பார்க்க வைக்க. கொஞ்சம் முசுடு வேற அவர்.
சந்நிதி திரையிடப்பட்டு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.
எப்படி காட்சி தருவார் என்று ஏங்கிக் கொண்டு காத்திருந்தார் செருவாமணி. 'பிள்ளாயாரப்பா, நல்ல வரனா தெரியறது. விக்னம் இல்லாம முடித்துக் கொடுப்பா.' பிரார்த்தித்துக் கொண்டே கண் இமைக்காமல் திரைவி விலகாதா என்ற ஏக்கத்துடன்.
இதோ பிரத்யக்ஷ மூர்த்தி சந்தனக் காப்புடன். புல்லரிக்க வைக்கும் அற்புதக் காட்சிக்கு கோவில் மணியும், தீபாராதனை மணியும் ஸ்ருதி சேர்த்தன. காட்சியிலேயே நல்ல சகுனத்தை கொடுத்து விட்டார் ஹேரம்பர்.
அரச்சனையை முடித்துக் கொண்டு அவசரம் அவசரமாக ஜம்பு ஜோஸ்யர் ஆத்தை அடையும்போது ஆறரை.
'வா செருவாமணி'
ஊரேதான் இவர் பெயரை மறந்து விட்டதே. இவரும் ஏற்றுக் கொண்டு விட்டாரே.
'மாமா, மெட்ராஸ்லேந்து ஒரு ஜாதகம் வந்துருக்கு. பொருத்தம் சரி இருந்தா நாளைக்கே மெட்ராஸ் கிளம்பணும். நல்ல வரனா தெரியறது. அதான்.'
'என்ன செருவாமணி. நான்தான் ஆறு மணிக்கு மேல ஜாதகம் பார்க்க மாட்டேனே, தெரியாதா? வெச்சுட்டு போங்கோ. நாளைக்கு கார்த்தால முதல் வேலையா பார்த்து சொல்லிடறேன்.'
'இல்ல மாமா, எனக்காக இப்பவே கொஞ்சம்...'. கெஞ்ச ஆரம்பித்தார்.
பெண்ணைப் பெத்தவனுக்கு இருக்கும் ஆங்க்ஸைடி. என்னவோ அதிசயமா முசுடு ஒத்துக்கொண்டார்.
அனுபவஸ்தரோன்னோ, அஞ்சு பத்து நிமிஷத்தில பார்த்துட்டார்.
'மனுஷன் வாயில நல்ல வார்த்தை வரணும்'. செருவாமணியின் ஏக்கம்.
'பொருத்தம் நன்னா இருக்கு. ஒரு பொருத்தத்தை தவிர ஒன்பது நன்னா இருக்கு. சந்தோஷமா போயிட்டு முடிச்சுட்டு வா'
ஆனந்த விநாயகர் சந்நிதி திரை விலகும்போது ஏற்பட்ட அதே புல்லரிப்பு.
'ரொம்ப சந்தோஷம் மாமா.'
வரனைப் பற்றி சில நிமிஷங்கள் பேசிவிட்டு விடைபெற உத்தரவு கேட்டு திரும்பும்போது ஜோஸ்யர் 'சித்த பையன் ஜாதகத்தை மட்டும் கொடு.'
ஏன் கேட்கிறார்? புரியவில்லை. இருந்தாலும் எதுவும் பேசாமல் கொடுத்தார்.
'நம்மாத்து பொண்ணு ஜாதகம் சுத்த ஜாதகம். பையனுக்கு சித்த தோஷம் இருக்கும் போல இருக்கு. பொருத்தமெல்லாம் சரிதான். பையன் ஜாதகத்தையும் நாளைக்கு நன்னா பார்த்துட்டு சொல்றேன். கவலப் படாதே. தோஷ நிவர்த்தியும் பார்த்து சொல்றேன்.'
'அப்ப நான் மெட்ராஸுக்கு...'
'நீ போற படி போ. நீ பேசிட்டு வந்த உடனே கூட இதப்பத்தி பேசலாம்.'
கமர்கட்ட குழந்தை கிட்ட கொடுத்துவிட்டு சாப்பிடும் போது பிடுங்கின மாதிரி இருந்தது. இருந்தாலும் ஆனந்த வினாயகர் சந்தனக்காப்பு சகுனம் கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது.
தொடரும்.....
No comments:
Post a Comment