Sunday, January 9, 2022

செருவாமணி 14

அத்யாயம்: 14 .. செருவாமணி

Written by Baskar Sathya 

நிலைகுலைந்த பெற்றோர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்?  டாக்டர்களிடம் அழைத்துச் சென்றாகிவிட்டது.  அவளுக்கு பதிலாக செவ்வாய் கிழமை விரதம் இருந்தாச்சு.  

வாரப் புத்தகங்களில் வரும் வலி தீர்க்கும், வினை தீர்க்கும் கோவில்களுக்கும் முடிந்தவரை சென்றாகிவிட்டது.  தன்வந்திரி, வைதீஸ்வரர், மருந்தீஸ்வரர், சரபேஸ்வரர், ப்ரத்யங்கரா என்று ஒரு சுற்று சுற்றி, அர்ச்சனை அபிஷேகம் முடித்தாகி விட்டது.

மனசுக்குள்ள புலம்பினாலும், வாய்விட்டு கதறினாலும் அர்ச்சித்த தெய்வங்கள் செவிசாய்க்க வில்லை.

பார்த்த மருத்துவர்கள் தொடர்ந்து சொன்னது சிலருக்கு திருமணத்திற்குப் பிறகு படிப்படியாக இந்த பிரச்சனை தீர வாய்ப்பு உண்டு என்பதுதான்.  சிறு பெண்ணாக இருப்பதால் தற்போது பெரிய அளவில் சிகிச்சையை தவிர்ப்பது நல்லது என்பதும் தான்.

'இதுக்குத்தான் சொன்னேன், காலேஜெல்லாம் வேண்டாம்னு.  இப்ப படிப்பை முடிக்கற வரைக்கும் நாம எப்படி கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிறது, சொல்லுங்கோ.'

'விசாலம் சொன்னபடி கேட்டிருக்கலாமோ?  குழந்தை நன்னா படிக்கட்டுமேன்னு நெனச்சது தப்பா?  பகவானே என் கொழந்தைய ஏன் இப்படி சோதிக்கற.  அவ என்ன பாவம் செஞ்சா?'

செருவாமணி அடிக்கடி ஸ்வாமிக்கு ரெண்டு டோஸ் விட்டு தன் ஆத்தாமைய போக்கிக் கொண்டிருந்தார்.

மீண்டும் மீண்டும் செத்துடலாம் போல இருக்குன்னு நந்தினி சொன்னது மாத்திரம் அவரை நிலைகுலைய வைத்துக் கொண்டிருந்தது.

வருடங்களும் தன் கணக்குக்கு சென்று கொண்டுதான் இருந்தது.

'சார், நல்ல டாக்டரா காண்பிக்க கூடாதா?  மாசாமாசம் அவ படற வேதனைய சகிக்க முடியல எங்களாலயே.'

வார்டன் பத்மா ஒவ்வொரு முறை சொல்லும்போதும் கண்ணீர்தான் பதில்.  வேறு என்ன செய்ய முடியும்.

டிகிரி மூன்றாவது வருஷம்.  பல்லைக் கடித்துக் கொண்டு பகவானை வேண்டிக் கொண்டும் சபித்துக் கொண்டும் ஓட்டிக் கொண்டிருந்தார்கள் செருவாமணியும் விசாலமும்.

'நல்ல வரனா பார்க்க ஆரம்பிங்கோன்னா.  இப்ப தேட ஆரம்பிச்சாதான் டிகிரி முடிச்சவுடனே கல்யாணம் செஞ்சுடலாம்.  அவ வேலைக்கெல்லாம் போய் நமக்கு பொங்கிப் போடணும்னு அவசியம் கூட இல்லை.  ஒரே பொண்ணு.  நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்தவுடனே, ஏதோ இருக்கறத வெச்சிண்டு நம்ம காலத்த ஓட்டிடலாம்.  இப்பவாவது நான் சொல்றதை கேளுங்கோ.'

செருவாமணிக்கு சரின்னு பட்டுது.  'சாலிக்கும் நந்தினி மேல உரிமை இல்லையா என்ன?  நம்மாத்துக்கே இருபது வயசுக்குள்ள கல்யாணம்கறது சாஸ்வதமோ என்னமோ?'

'சாலி, அவ ஏதாவது தையாத் தக்கானு குதிக்கப் போறாடி.  அவகிட்ட எடுத்து சொல்லிட்டு வரன தேடுவோம்.'

இன்னும் ஆறு மாசம்தான் பாக்கி அவளோட காலேஜ் வாழ்க்கைக்கு.  இப்ப ஆரம்பிச்சாத்தான் சரியா இருக்கும்.

'அப்பா டிகிரி முடிச்சுட்டு IAS க்கு படிக்கறேம்பா.  இப்ப போய்.'

'இல்லடா செல்லம்.  உனக்கு உபாதை இல்லைனா பரவாயில்லை.  சுவர் இருந்தாதானேடா சித்திரம் எழுதமுடியும்?  அப்பாம்மா உன் நல்லதுக்குதானே சொல்றா.  வேணும்னா மாப்பிள்ளையாத்துல பேசி நீ மேற்கொண்டு படிக்க பேசிப் பார்க்கிறேன்.  எல்லாம் நல்ல படியா நடக்கும் செல்லம்.  ஒவ்வொரு தடவையும் நீ வலியப் பத்தி சொல்லும்போது எங்களுக்கு பதைபதைக்குது டா. டாக்டர் எல்லாம் உனக்கு கல்யாணம் ஆனா சரியாயிடும்னு சொன்னா இல்ல.  எத்தனை நாளு இப்படி வேதனப் பட்டுண்டிருப்ப சொல்லு.  உன் நன்மைக்குதாண்டா சொல்றோம்.'

அவளால் முடிந்தவரை மறுத்துப் பார்த்தாள்.  பெற்றோர்களின் கண்ணீருக்கு முன் லட்சியமாவது ஒண்ணாவது.

அழுதாள்.  மௌனித்தாள்.  அதை சம்மதமாகவே எடுத்துக் கொண்டனர் செருவாமணியும் விசாலமும்.  பெற்றோர் அவர்கள் தீர்மானத்தை முன்னிருத்தும் போது சார்ந்திருக்கும் குழந்தைகள் ஜெயிக்க முடியுமா என்ன?

'சாலி, எங்காத்து ஸைடு உறவுக்காரா அப்பா செத்துப் போனோண்ணயே நம்மள விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டா.  உங்காத்து மனுஷாள் கிட்ட சொல்லி வை, ஏதாவது நல்ல வரனா கிடைக்குமான்னு.  டாக்டர், இன்ஞினியர், சொத்து பத்தோட.  ஏழெட்டு வயசு வித்யாசம் இருக்கலாம், தப்பில்ல.  கொழந்தை போற இடத்துல எல்லா சௌகர்யத்தோட இருக்கணும், என்ன.  நானும் சித்தப்பாகிட்ட சொல்லி வைக்கறேன்.  தெருவுல பழக்கப் பட்டவாகிட்டயும் சொல்லி வைக்கிறேன்.  பத்து பதினஞ்சு பேர்கிட்ட சொல்லி வெச்சாத்தான் சீக்கிரமா ஏதாவது தெகையும்.'

'நீங்களும் கடைல நேரம் கிடைக்கும் போது ஜாதக நோட்டிலேந்து அவ ஜாதகத்த காப்பி எடுத்துண்டிருங்கோ.  கடைக்கு வர பிராமணா கிட்டேல்லாம் சொல்லி வைங்கோ.  ஏன்னா, பணம் காசெல்லாம் இருக்கோல்யோ?'

'என்ன சாலி இப்படி கேட்டுட்ட.  ரெண்டு கல்யாணம் கடன் வாங்காத அளவுக்கு சேர்த்து வெச்சிருக்கேன்.  அஞ்சாறு லட்சம் இருக்கு, போதாதா?'

'சாதாரணமா கேட்டேன்னா.  யார் கேட்டாலும் நன்னா கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்னு மாத்திரம் சொல்லுங்கோ.  என்கிட்ட சொன்னமாதிரி இவ்ளோ இருக்கு அவ்ளோ இருக்குன்னு சொல்லிக்காதீங்கோ.  ஜாதகமெல்லாம் பொருந்தி லௌகீகம் பேசும்போது பார்த்து சொல்லிக்கலாம், என்ன?'

தயாராகி விட்டார்கள் சுறுசுறுப்புடன் வரன் தேடுவதற்கு.

தொடரும்.....

No comments:

Post a Comment