Sunday, January 9, 2022

செருவாமணி 11

அத்யாயம்: 11.. செருவாமணி

Written by Baskar Sathya 

'செல்லக்குட்டி,  அப்பாக்கு ஆசைதான் செல்லம்.  ஆனா உன்ன எப்படி தனியா ஹாஸ்டல்ல விட்டுட்டு நாங்க நிம்மதியா இருக்க முடியும் சொல்லு.'

'அப்பா, நாலு வருஷம் தானேப்பா.  மூணு மணி நேரத்துக்குள்ளேயே திருச்சிக்கு நீங்களும் வரலாம், மன்னார்குடிக்கு நானும் வரலாம்ப்பா.  ப்ளீஸ்ப்பா.'

'அது இல்லடா, மாசா மாசம் ஒனக்கு அந்த வயத்துவலி ப்ரச்சனை வேற இருக்கே.  தனியா எப்படி?'

'அதான் டாக்டர் மருந்து கொடுத்திருக்காளே அப்பா.  எப்படியாவது சமாளிச்சுக்கறேம்ப்பா.  ப்ளீஸ்.'

'சரி.  ஒன்னோட படிச்ச பசங்க யாராவது திருச்சி காலேஜுல சேர்ரதா இருந்தா யோஜிக்கறேன்.'

நமக்கு புரிபடாம இருக்கிற விஷயத்தை யார் கிட்டயாவது பேசுவோமே.  அப்படித்தான் சித்தப்பா கிட்ட கேட்டார் செருவாமணி.

'மாப்ள, படிப்ப நிறுத்தறதா?  மஹா தப்பு.  பொண்ணு என்னமா மார்க் வாங்கியிருக்கா?  குழந்தைகள நாம ரொம்பவும் பொத்தி பொத்தி வளர்க்க கூடாதுங்காணும்.  நானும் கூட வரேன் திருச்சிக்கு.  சீதாலக்ஷ்மி ராமசாமி காலேஜுதானே.  அந்த காலேஜ் நடத்தறவா சொந்தக்காரா கூட என் கிட்ட படிச்ச ஞாபகம்.  நான் கொழந்தைய ஸ்பெஷலா பார்த்துக்க சொல்றேன்.'

'அதுக்கில்ல சித்தப்பா.  பொண்ணுக்கு அந்த பிரச்சனை வேற இருக்கே.  அதான்?'

'பொண்ணா பொறந்தாளே கஷ்டம்தான்.  ஏதாவது ஒண்ணு மாத்தி ஒண்ணு வரும்.  இதுக்கெல்லாம் கவலைப் பட்டுண்டு இருக்கலாமா?  திருச்சிக்கு போனா அங்க மகமாயி பார்த்துப்பா ஒம்ம பொண்ண.'

'சாலி வேற ரொம்ப கொழப்பறா சித்தப்பா.  பொண்ணு ஒடம்ப கவனிச்சுக்காம விட்டுடுவாளோன்னு பயப்படறா.'

'நான் விசாலத்துக்கிட்ட பேசறேன்.  நீங்க திருச்சி கிளம்பறதுக்கு தயாரா இருங்கோ.  இதுக்குதான் ஒரு பொண்ணோட நிறுத்தியிருக்கப் படாது.  இங்க பாருங்கோ.  இப்ப என் குழந்தைகள் எங்க விளையாடறாங்கன்னு எனக்கே தெரியாது.  ஆத்துக்குள்ள வரும், போகும்.  நாம வளர்கறது எவ்வளவு முக்கியமோ, அதுங்களா வளறதும் முக்கியம் மாப்ள.'

'அப்ப நாளைக்கு ... சாலி கிட்ட வந்து....'

'நான் வரேன் மாப்ள.  பொண்டுகள் கிட்ட கேட்க ஆரம்பிச்சேள்னா அவாளும் குழம்பி நம்மளையும் குழப்பிண்டே இருப்பா.  நல்ல குழந்த, படிக்கற குழந்த.  நாம அதோட படிப்புக்கு தடையா இருக்க கூடாது.  நந்தினியை உம்ம விட சமயபுரத்தா நன்னாவே பார்த்துப்பா.'

சிரிச்சுண்டே விடை பெற்றுக் கொண்டார் செருவாமணி.  

'இந்த சித்தப்பாகிட்ட வந்தாலே மனசு லேசாயுடறது, தெம்பு வந்துடறது.  அவர் சொல்றதைப் போல சமயபுரத்தா கிட்ட பாரத்த போட்டுடுவோம்'

வந்தார்.  விசாலத்துகிட்ட சொன்னார் நடந்ததை.

'ஆமாம், சித்தப்பாகிட்ட போய் வேலை மெனக்கெட்டு கேட்டுட்டு வந்தேளாக்கும்.  அப்பாவும் பொண்ணும் ஏற்கனவே முடிவெடுத்துட்டேள்.  சப்பகட்டுக்கு சித்தப்பாவாக்கும்.  ஏதோ பண்ணுங்கோ எல்லாரும்.'

கேட்டுக் கொண்டிருந்த நந்தினி ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சிட்டாய் பறந்துவிட்டாள் ஃப்ரெண்ட பார்க்க.

விசாலி சிரிக்க, செருவாமணியிடமிருந்து ஒரு ஊமைக் குசும்புச் சிரிப்பு பதிலாக.

திருச்சி சீதாலக்ஷ்மி ராமசாமி பெண்கள் காலேஜ்.  விசாலம் வரவில்லை.  நந்தினியை அழைத்துக் கொண்டு செருவாமணியும் சித்தப்பாவும் கிளம்பினர்.

மன்னார்குடியை பார்த்துவிட்டு திருச்சி பிரம்மாண்டமா தெரிஞ்சுது நந்தினிக்கும் செருவாமணிக்கும்.

மார்க் நன்றாக இருந்ததால் அட்மிஷன் ஒரு பிரச்சனையாகவே இல்லை.  அவள் கேட்ட மேத்ஸ், ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி கிடைத்து விட்டது.

ஹாஸ்டல் கட்டுப்பாடுகள் கடுமை.  அதுதானே வேணும் வெளியூர்ல இருக்கிற பெற்றோர்களுக்கு.  சித்தப்பாவும் செருவாமணியும் ஹாஸ்டல் வார்டன் பத்மாவதியிடம் அவள் உடல்நிலை விஷயமாக எடுத்துக் கூறினார்கள்.

'என் பொண்ணாட்டம் பார்த்துப்பேன் சார்.  கவலைப் படாம போங்கோ.'

எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.  நந்தினி வானத்தில் பறக்கவில்லை.  செருவாமணிக்கோ இப்பவே அவள் கருப்பு கோட்டையும் கான்வகேஷன் தொப்பியும் போட்டுண்டு நிற்கிற மாதிரி.  அவளைப் பார்க்கிறார், நினைக்கிறார், சிரிக்கிறார்.  அவருடைய அர்த்தமுள்ள அர்த்தமில்லாத சிரிப்பை பார்த்து சித்தப்பாவும் சிரிக்கிறார்.

'மாப்ள, வந்ததுதான் வந்தோம்.  சமயபுரம் போயிட்டு வந்துடுவோமா?'

போனார்கள் ஒரு பெரிய மாலை, அரச்சனை தட்டு, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு.

'அம்பாளே, நீதாம்மா என் குழந்தைக்கு எல்லாம்.'

நிலை குலுங்கி ஒரு கதறல் செருவாமணியிடமிருந்து. பிரார்த்தனையின் பலமே கதறல் தானே.  என்னமோ அப்படி ஒரு குலுங்கு குலுங்கினா அவ கேட்டுடுவான்னு ஒரு கணக்கு பக்தனுக்கு.

இன்னும் ஒன்றரை மாதம் கழித்து கல்லூரி திறக்கும்.

அதுவரை நந்தினி... சொல்லணுமா என்ன?  பட்டாம்பூச்சி தான்.

தொடரும்.....

No comments:

Post a Comment