Monday, January 3, 2022

உறவுபோட்டமுடிச்சு_109

உறவுபோட்டமுடிச்சு_109

By பாஸ்கர் சத்யா 

'சாப்பாடு ரெடி'

'சாப்பட வாங்கோ'

'சூடா இருக்கு.  சாட்டுட்டு பேசலாமே.'

'நீங்க சாப்டாச்சா?'

' சாப்பிடாதவா யாராவது இருந்தா அனுப்புங்கோளேன்.  நாலஞ்சு எடம் இருக்கு.'

விதவிதமான பூவனூர் அக்ரஹார வாசிகளின் அழைப்பு அக்ரஹாரத்தில் தென்படும் மன்னார்குடி மற்றும் இதர ஊர்களிலிருந்து வந்தவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.

பசித்தவர்கள் பந்திகளுக்கு முந்திக் கொண்டார்கள்.  மற்றவர்கள் பேச்சுக்களில் லயித்திருந்தார்கள்.

நேற்று பூவனூர் வந்ததைப்பற்றி; ஞானத்தின் வரவேற்பு பற்றி; ஸ்நாக்ஸ் பற்றி; நேற்றைய சாமுண்டி தரிசனம் பற்றி;  இரவு சாப்பாடு பற்றி; இரவில் போட்ட ஆட்டம் பாட்டம் பற்றி; காலை டிஃபன் பற்றி;  எழுந்ததிலிருந்து கல்யாணி அம்மன் கோவில் வரும் வரை அனுபவித்து சிரித்துக் களித்த சின்ன சின்ன உணர்வுகளைப் பற்றி; ஊரைப் பற்றி; அக்ரஹார ஜனங்களைப் பற்றி; நிச்சயதார்த்த பிரம்மாண்டம் பற்றி; உபன்யாசம் பற்றி..... டாபிக்குகளுக்கா பஞ்சம் வந்தவர்களுக்கு?

சுப நிகழ்சிகளை குறையில்லாம நடத்துவதை விட வந்த விருந்தினர்களை மன நிறைவோடு அவர்கள் எண்ணங்கள் முழுவதும் நிகழ்ச்சியின் பிம்பங்களை நிரப்பி வழி அனுப்புவதில் இருக்கும் சுகம் இருக்கிறதே.  அது நடுத்தர வர்க்கத்திற்கேயான பிரத்யேகம்.

'கீதா, அத்தைய கூப்பிடேன்...... அத்த, இப்ப இங்க ரெண்டு தேங்கா மூட்டைகள் வரும். ஒரு ஓரமா வெச்சிருங்கோ.  மாமி, மூணரை மணிக்கு இங்க வந்து, எல்லா மன்னார்குடிகாராளுக்கும் தாம்பூலம் வெச்சு கொடுப்பாளாம்.'

'சாப்டுட்டு தூங்கிடாத கீதா.  எல்லாரையும் ஷார்ப்பா நாலு மணிக்கு தயாராக சொல்லு.  நாலரைக்கு ராகுகாலம் ஆரம்பிச்சுடறதே இன்னிக்கு.  நடக்க முடியாத வாளுக்கு மாத்ரம் வில்லு வண்டி ஏற்பாடு பண்றேன்.'

'சில பேர், சாமுண்டி அபிஷேகம் முடிஞ்சோண்ண அப்படியே அங்கேந்தே கிளம்பிடுவா போல இருக்கு.  அவா லக்கேஜுகளுக்கு இன்னொரு வண்டி தேவப் படும்.'

'துணி மணி லக்கேஜ்கள் தான.  எதுக்கு வில்லு வண்டி?  கட்ட வண்டி போதும்.  நான் பார்த்து ஏற்பாடு பண்றேன்.'

'சந்தானம், அவர் ரெடியானு பாரு.  மாமா குடிசக்காராள கவனிக்க சொன்னாளே.  ரெடியா இருந்தா, போயிட்டு வந்துடறோம்.'

தயாராக இருந்த பாலாஜியும் கீதாவும் குடிசைவாசிகள் சாப்பிடும் முதலியார் கோடௌனுக்கு வருகிறரார்கள்.

இருவரையும் கண்டவுடன் பூரிக்கிறார்கள் அவர்கள்.

'ஏன் தள்ளி தள்ளி போறேள்.  கிட்டக்க வாங்கோ.  கார்த்தால நன்னா சாப்டேளா?'

தலையசைக்கிறார்கள்.  

'என்ன சொல்றதுன்னே புரியல புள்ள.  எங்க ஊருக்கு ஆத்தாவே மருமகளா வந்தா மாதிரி இருக்கு கீதா.  நல்லா இருக்கோணும் நீங்க ரெண்டு பேரும்.'

'போதும் போதும்.  ஐஸ் நிறைய வெச்சா ஜன்னி கண்டுடும்.'

அவர்களுடைய ஒரிரு கைக்குழந்தைகளை அவர்கள் எவ்வளவோ தடுத்தும் கையிலெடுத்து கொஞ்சுகிறாள்.

'வாங்கோ சாப்ட போலாம்.'

அவர்களில் பலரோடு சேர்ந்து விவசாயத்தை பார்த்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட ஹாஸ்ய அனுபவங்களை பாலாஜியோடு பகிர்ந்து கொள்கிறாள்.  

'கீதா, உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு.  படிப்பெல்லாம் இப்பவே நிறுத்திட்டு அடுத்த முகூர்த்தத்திலேயே தாலி கட்டினா என்னன்னு தோணறது.'

பெரிதாக சிரிக்கிறாள் கீதா.

'என்னமோ பெரிசா படிப்புதான் முக்கியம்னு மெட்ராஸுக்கு போனேளே.  இப்ப என்ன திடும்னு இப்படி.  படிக்காத வேல வெட்டி இல்லாத மாப்பிள்ளய நான் கட்டிக்க மாட்டேம்பா.'

'ஏய் கீதா.  ரெண்டு நாளா கவனிக்கிறேன்.  என்ன புதுசா வாங்கோ போங்கோ பேச்செல்லாம்?  எனக்கு பிடிக்கவே இல்ல சுத்தமா. கல்யாணம் வரைக்குமாவது நீ நீயாவே இருக்கலாமே.'

'எங்க அம்மாவோட உத்தரவு.  எனக்கும் முடியல தான்.  ஒரு கால கட்டத்துல அப்படி கூப்டுத்தான வாழணும்.  அதுக்கு ஒரு ப்ராக்டீஸாக இருக்கட்டுமே.  ரெண்டு நாளா இப்படி கூப்டறதுலே எனக்கே ஒரு சந்தோஷம் வந்துடுத்து.'

குடிசைவாசிகளின் நன்றிகளையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு அக்ரஹாரம் திரும்புகிறார்கள்.

வரும் வழியில் மீனாட்சியை பார்க்கிறார்கள்.

'சாரி மீனு குட்டி.  உன்னத்தான் கவனிக்கவே இல்ல சரியா.  அவசரப் பட்டு கிளம்பிடாத. எல்லாம் நாளைக்கு போலாம்.'

'இல்ல மன்னி.  டாக்டர் சாமுண்டி தரிசனம் முடிச்சுட்டு கிளம்பணும்ங்கறார்.  நாளைக்கு ட்யூட்டி வேற இருக்கு.  அண்ணா, பிரமாதமா நடந்ததுண்ணா நிச்சயதார்த்தம்.'

'ரொம்ப தேங்க்ஸ்.  அப்பறம் கிளம்பும் போது என் கிட்ட மறக்காம சொல்லிண்டு போ மீனாட்சி.  உனக்கு மெட்ராஸ்லேந்து ட்ரெஸ் எடுத்துண்டு வந்துருக்கேன்.  அதோட மாத்திரம் இல்ல.  டெஸ்ஸி ஸிஸ்டர் இன்னும் ரெண்டு பேர் .... பேர் மறந்துட்டேன்.  கீதா சொல்வா.  அவாளுக்கும் ட்ரெஸ் எடுத்திருக்கேன்.  அவா கிட்ட சேர்த்துடு.'

'எதுக்கண்ணா இதெல்லாம்.'

'எங்க அப்பா அட்மிஷன் போது நீங்கள்லாம் எவ்வளவோ ஹெல்ப் பண்ணியிருக்கேள்.  மோரோவர், இந்த ஏற்பாடு கீதாவோட கட்டளைல நடக்கறது.  அதனால எக்ஸ்யூஸுங்கற பேச்சுக்கே இடம் இல்லை.'

'வித்யாசமா நெனைக்காத இவளே.  வாங்கிக்கோ.   வர உற்சவத்துக்கு செங்கிப்பட்டி ஃப்ரெண்ட்ஸோட மன்னார்குடிக்கு வா.  ஜாலியா எல்லாரும் ஊர் சுத்தலாம்.'

மீனாட்சியுடன் பேசிவிட்டு மாமா வாத்துக்கு வரும் போது பத்ம விஜயம் கிளம்பிக் கொண்டிருந்தார்.

'சாரி பாலாஜி.  என்னென்னமோ நெனச்சிண்டு ப்ளான் பண்ணினோம்.  மாமிக்கு இப்படி உடம்புக்கு வரும்னு தெரியாது.  அங்க எப்படி மாமி இருக்காளோன்னு கவலையா இருக்கு. நாங்க கிளம்பறோம்.  வித்யாசமா எடுத்துக்காத.  மெட்ராஸுக்கு வா.  நிறைய பேசலாம்.'

'சரி சார்.  மாமி நன்னாயிடுவா.  நான் வந்து பார்க்கறேன் மெட்ராஸ்ல.  அபிஷேகத்துக்கு இருக்க முடியாட்டியும் கோவில் திறந்தோண்ண சாமுண்டி தரிஸனமாவது பண்ணிட்டு போகலாமே.  எங்க ஊர் லேடி டாக்டர் சாமுண்டீஸ்வரி.'

'அப்பா கூட சொன்னா.  சாமுண்டடி தரிஸனம் முடிச்சுட்டே போறோம்.'

பக்கத்தில் இருந்த லக்ஷ்மி கீதாவை இறுக்க கட்டிப் பிடிக்கிறாள்.

'உன் புராணத்த தான் மாமா ஒரு மணி நேரமா பேசிண்டே இருந்தார்.  எங்க பாலாஜி படவா ரொம்ப லக்கி.  மொதல்ல எல்லாரும் கிளம்பினோண்ண உனக்கு திருஷ்டி சுத்தி போடச் சொல்லியிருக்கேன் மாமி கிட்ட.'

'மெட்ராஸ்ல அவர பார்த்துக்கோங்கோ மன்னி.'

'ஆமாம் ஆமாம்.  இனிமே அவன் உன் சொத்தாச்சே.  பத்திரமா பார்த்துக்கறோம்.  நீ மெட்ராஸ்ல பத்து நாள் நம்மாத்துல தங்கற மாதிரி அம்மாவ அழச்சிண்டு வாயேன்.  எங்காத்து சுமதி எல்லா எடத்துக்கும் உங்கள அழச்சிண்டு போவா.'

'பார்க்கறேன் மன்னி.  என்னோட எக்ஸாம் ஸென்டர் கூட அநேகமா இந்த தடவ மெட்ராஸ்ல தான் இருக்கும்.  லெட்டர் போடறேன் அவர் கிட்ட அட்ரஸ் வாங்கிண்டு.'

அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு பாலாஜியை அழைத்துக் கொண்டு கருப்பனையும் ஸ்வர்ணத்தையும் சென்று பார்க்கிறாள் கீதா.

'ஹாய் குழந்தைகளா?  சாப்ட்டேளா ?  பாதாம் கீர் சாப்டேளா?'

கீதாவைப் பார்த்தவுடன் கருப்பனுக்கும் ஸ்வர்ணத்துக்கும்  தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் உடம்பை சிரித்து, தலையை ஆட்டி, மணி ஓசை எழுப்பி, ரெஸ்ட்லெஸாக கால்களை உதைத்து.

'எதுக்கு இப்படி பண்றேள்.  நான்தான் சின்னய்யாவோட வரேன்னு சொன்னேனேன்னோ ?  ஹோய்... ஹோய்..... ரிலாக்ஸ்.'

'கீதா, எனக்கென்னமோ ஒழுங்கா நீ டிகிரி முடிப்பியான்னு சந்தேகமா இருக்கு.  இதுக ரெண்டு கிட்டேயும் அநியாயாத்துக்கு ரொம்ப அட்டாச்டா இருக்கியே?'

'நீங்க சொல்றது சரிதான்.  இந்த ஆறேழு மாசமா உங்க கிட்டேயும் இதுங்க கிட்டேயும் கிட்டத் தட்ட பைத்தியமாவே ஆகிட்டேன்னு நெனைக்கிறேன்.'

'இந்த பசு எப்ப கன்னு போடும்?'

'ஸ்வர்ணம்னு சொல்லக் கூடாதா?  அவளுக்கு பேர்தான் இருக்கோன்னோ?  ஏப்ரல்   எண்டுல பிரசவிப்பா.'

'சாரி கீதா.  ஸ்வர்ணத்தோட குட்டிக்கு இப்பவே பேர் வெச்சிருப்பியே.'

'பெண் குட்டியா இருந்தா சாமுண்டி தான், நோ அதர் ச்சாய்ஸ்.  காள குட்டியா இருந்தா ராமன்னு வைக்கலாம்னு மாமா கிட்ட சொல்லியிருக்கேன்.  பார்க்கலாம்.  ராமா ராமான்னு கூப்படற சாக்குல நாலு நாமாவ சொல்லி புண்ணியம் தேடிக்கலாமே இல்லையா?'

இருவரும் சேர்ந்து வைக்கோல் பிரிகளை கொடுத்து விட்டு உள்ளே வருகிறார்கள்.

ஒப்பனை பரபரப்புகளுக்குப் பிறகு கீதா மன்னார்குடி நட்புகளோடு நான்கு மணிக்கு பெரிய கோவில் கிளம்புகிறாள்.

அதைப் போலவே பாலாஜியும்.

மெல்ல மெல்ல நடந்து கோவிலை வந்தடையும் போது மணி நான்கரையைத் தாண்டியிருந்தது.  குஞ்சுமணி குருக்களும் கோவில் வாசலைத் திறந்து உள்ளே நுழைந்து அனைவரையும் அழைக்கிறார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு கோவிலுக்கு வெளிப்புறத்திலும் உள் பிரகாரங்களிலும் நட்புகள் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றன.

இதோ சாமுண்டீஸ்வரி அபிஷேக ஆராதனைகளுக்கு தயாராகி விட்டாள்.  இனி தீபாராதனை முடியும் வரை கீதாவிடம் பிரக்ஞை இருக்காது.  அவள் இஷ்ட தெய்வத்தை மனதில் வைத்து அவளோடு உரையாட ஆரம்பித்து விடுவாள்.

சாமுண்டியும் சும்மா இருப்பாளோ? கீதா உடம்பு முழுவதும் மின்சார உணர்வுகளைப் பாய்ச்சுவாள்.  கீதா கேட்கும் கேள்விகளுக்கு ஆறுதல்களையும் தேற்றுதல்களையும் கொடுத்து மனதை சாந்தப் படுத்துவாள்.

'நான் பாலாஜிய மெட்ராஸ்ல பார்த்துக்கறேன்.  இத்தன நாள் பார்த்துக்கலையா என்ன?'

'நீ மன்னார்குடிக்கு போயிட்டா மாமா மாமிய நான் பார்த்துக்கறேன்.  முதல்ல நீ உன் படிப்ப பாரு.  வேலைய தேடிக்கற வழியப் பாரு.'

'என்ன அழுகை?  அசடே, நான் எங்க போயிடப்போறேன்.  பார்க்கணும் போல தோணித்துன்னா உடனே வந்து என்ன பாரு.'

'உங்க மாமா நன்னா ஆயிட்டார்.  நீ தான பார்த்துண்ட அவர.  அவா ரெண்டு பேருக்கும் நீ இல்லாம வருத்தம் இருக்கத்தான் செய்யும்.  உனக்கு உத்யோகம் கெடச்சு கல்யாணம் ஆகற வரைக்கும் பொறுமையா இருப்பா.  அப்பைக்கப்ப பூவனூர் வந்து தலைய காமிச்சிட்டு போனா போறது.'

'உன் அம்மா தான?  அவ தான் எனக்கே தைரியம் கொடுப்பாளே.  அவளப் பத்தி ஒரு கவலையும் வேண்டாம்.  உன்னோட குழந்தைகள் கொடுக்கப்போற சந்தோஷத்திலேயே இங்கேயே அவளுக்கு ஸ்வர்கத்த காமிச்சுடறேன்.  போதுமா?  கண்ண தொடச்சிக்கோ.  கல்யாண பொண்ணு இப்படி அழுதுதேன்னு எல்லாரும் அப்பறம் சிரிப்பா.'

சாமுண்டியே இப்படி கீதாவின் கேள்விகளுக்கான பதில்களில் அவளைத் தேற்றினாலும் கண்களில் பொங்கி வந்த கங்கைக்கு தடை போட கீதாவுக்கு மனம் வரவில்லை.  இருக்கட்டுமே?  கொட்டட்டுமே?

மனசு அமைதியானா கண்ணீர் கங்கை தானா அடங்கிடப் போறா?

'என் மேல உனக்கு எத்தனை கருணை சாமுண்டி?  ரொம்ப ரொம்ப த்தேங்க்ஸ் தாயி.'

அபிஷேகங்கள் முடிந்து திரைச் சீலை விலகும் போது அலையாய் ஆர்பரித்த அவன் மனசு அமைதி பெறுகிறது.

நீலக்கலர் புடவை வெள்ளிக் கண்மலர்கள் ஏந்திய சூலம் .... சாமுண்டியின் அழகை அணு அணுவாக ரசிக்கிறாள் கீதா.  நின்று போன கங்கை மீண்டும் ஊற்றெடுக்கிறது.

கண்ணீர் திரையோடு பிறைப் பார்வையுடன் தான் இம்முறையும் தீபாராதனை அவளுக்கு.

சந்தோஷ கனவுகளுடன் சாமுண்டி அவளை வழி அனுப்பி வைக்கிறாள்.

பெரிய கோவில் வாயிலில் கரகம் மற்றும் வாண வேடிக்கைகளும் அங்கிருந்த எல்லா மனங்களுக்கும் சந்தோஷ ஸ்ருதி சேர்க்கின்றன.

கிராமத்தில் அவ்வளவாக மின் விளக்குகளின் ஒளியில்லை.  தன் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த கீதாவின் சந்தோஷங்களை மேலே கிளம்பு ஒளிக்கீற்றைப் பரப்பும் வண்ணங்களில் பார்த்து ரசிக்கிறான் பாலாஜி.

'என்ன நீங்க, என்னையே பார்த்துண்டு இருக்கேளே.  யாராவது பார்த்துட்டு உங்கள கிண்டல் பண்ணப் போறா? வாண வேடிக்கைகளைப் பாருங்கோ?'

ஏற்கனவே வாணவேடிக்கைகளை " 'ஆஆஹா... ஊஊஊ....ஓஓஓ..' என்று குரல் எழுப்பிக்கொண்டு பார்த்து பிரமித்துக் கொண்டிருந்த சுற்றங்கள் அவர்களையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.  மனம் ஒருமித்த பார்வைகளுக்கு இங்கிதம் தெரியுமா என்ன?

ஊர் மக்கள் மனமும் உறவினர்கள் மனமும் நிறைவாக பாலாஜி கீதாவை வாழ்த்தின.  அவர்களின் காதல் பயணம் சிறிது காலம் லட்சியங்களிலும் கடமைகளிலும் உழன்று விட்டு திருமண பந்தத்தில் நுழைய வேண்டும்.

கையைப் பிடித்து வலம் வந்த நட்பு இப்போது தோளில் சாய்ந்து காதலை வலுப்படுத்த யதார்த்த கடமைகளில் நுழைய வேண்டும்.  பிறகு உறவுகளின் ஒப்புதல்களோடு மார்பில் சாய்ந்து ஒருவருக்கொருவர் தாயாக வேண்டும்.

சாமுண்டி மற்றும் கல்யாணி அம்மன் அனுக்ரஹங்களோடு நம்பிக்கையோடு நாமும் வாழ்த்துவோம் இருவரையும்.

நிச்சயதார்த்த வைபவத்தில் சிலிர்த்த அனைவருக்கும் சாமுண்டி மற்றும் கல்யாணி அம்மனின் பரிபூரண நல்லாசிகள் எப்போதும் நிறைந்திருக்கட்டும்.

அன்புடன்

பாஸ்கர் சத்யா

No comments:

Post a Comment