உறவுபோட்டமுடிச்சு_108
அடுத்த ஐந்து நிமிடங்களில் ஸ்ரீ ராமசாமி அய்யர் துவங்கவிருக்கும் 'ஸ்ரீ ராமர் கல்யாணம்' சொற்பொழிவிற்குள் எத்தனை குதுகூலங்கள் அந்தச் சிறிய கோவிலுக்குள்.
பூவனூர் தோழிகளும் மன்னார்குடி தோழிகளும் கீதாவின் கன்னத்தைப் பிய்க்காத குறை.
கோவில் சந்நிதிகள் என்ற உணர்வு கூட இல்லாமல் கலகலப்புகள் கூடிக் கொண்டே இருக்கின்றன. கைலாஸ நாதரும் கல்யாணி அம்மனும் சேர்ந்தல்லவா ரசிக்கிறார்கள் இவை அனைத்தையும்?
அன்று ஸ்ரீ ராம ஜெயந்தி இல்லை. இருந்தாலும் களித்தே களைத்திருந்த நெஞ்சங்களுக்கு மன்னார்குடி வேணு மாமா ஏற்பாடு செய்திருந்த பானகமும் நீர் மோரும் எல்லோருடைய வயிற்றிலும் தேவாமிர்தமாய் சென்று கொண்டிருந்தது.
இதோ ராமசாமி ஐயர் ஸ்ரீ ராமர் கல்யாணத்தை ஸ்லாகிக்க தயாராகிவிட்டார். ஆவலுடன் கேட்க நெருங்கிய சுற்றங்கள் தங்களை நெருக்கிக் கொண்டு உட்காருகின்றன.
வாசனை திரவிய குளியலாலும் தூபாராதனைகளாலும் அணிந்து கொண்டிருந்த மலர்களாலும் கைலாஸ நாதரும் கல்யாணி அம்மனும் பரப்பிய நறுமணங்கள் பிரத்யக்ஷமாக அவர்கள் இருவருமே சுற்றங்களோடு அமர்ந்திருப்பதாகவே எல்லோரும் உணர்ந்தார்கள்.
நாமாவளி ஸங்கல்பங்களோடு ஆரம்பிக்கிறார் ராமசாமி அய்யர். நம: பார்வதி பதயே .... ஸ்ரீ கைலாஸநாத ஸ்வாமிக்கு....
'பொதுவா ஸ்ரீராமர் கல்யாணத்த சீதா கல்யாணம்னுதான் சொல்லுவா. சபேஸன் ஏன் ஸ்ரீராமர் கல்யாணம்னு டைடில் வெச்சான்னு எனக்கு தெரியல. பாலாஜி நிச்சயதார்த்தம்னு வந்துட்டு இங்க வந்திருக்கறவா ஒருத்தர் விடாம கீதா நிச்சயதார்த்தம்னு தான் சொல்லிண்டிருக்கா பாருங்கோ.'
'சபேஸனோட மருமா கீதா எப்படி பாலாஜி மனசுல ஐக்கியமானாளோ அதே மாதிரி பாலாஜி நிச்சயதார்த்தம்னு வந்த நான் கீதா நிச்சயதார்த்தத்துல ஐக்கியமாயிட்டேன்.'
'கார்த்தால என்னோட சபேசன் சித்த தன் மருமாள பத்தி பேசிண்டிருந்தான். அப்பத்தான் புரிஞ்சுண்டேன் சபேஸன் எவ்வளவு இன்டலிஜெண்ட்டுன்னு. இப்பேர்பட்ட கீதாவ சுயம்வரத்துல யாராவது தட்டிண்டு போயிடக் கூடாதேங்கற பயத்துல தன் புள்ளைக்கு முடிச்சு போட்டு நிச்சயதார்த்த ஏற்பாடுகள்ல இறங்கிட்டான்னு நெனைக்கறேன். பெரியவாள்லாம் தங்களோட குழந்தைகள நன்னா ஈஸியா படிக்க வெச்சுடலாம், நல்ல குழந்தைகளா வளர்க்க வெச்சுடலாம். ஆனா குழந்தைகளுக்கு ஏத்த வரன்கள சேர்க்கறதுல அவா படற ஏக்கமும் முயற்சிகள சொல்ல வார்த்தைகளே இல்ல. பயிர்கள கண்ணும் கருத்துமா பார்த்துண்டு வர சபேசனுக்கு இந்த ஆயிரங்காலத்து பயிர்கள சேர்க்கறதுல கஷ்டமாவா இருந்திருக்க போகறது?'
இப்படித்தான் ஸ்ரீராமனுக்கு ஏத்த பிராட்டி சீதான்னு தெரிஞ்சுண்டுதான நேரா அயோத்தி போகாம மிதிலைக்கு போய் ரெண்டு பேர் கல்யாணத்துக்கு அஸ்திவாரம் போட்டார் மஹாமுனி விஸ்வாமித்திரர்.
இப்படி ஆரம்பித்து ஸ்ரீராமர் சீதா பிராட்டி கல்யாணத்த ஒரு பிடி பிடித்தார் அனைவர் நெஞ்சங்களும் குளிரக் குளிர.
'சீதா கல்யாணத்துலேயே முக்கியமான பகுதின்னா அது கம்பர் பிரமாதமா சாதிச்ச அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்னு வர காட்சிதான். இளசுகள் மாத்திரம் இந்த வரிகள்ல மயங்கறதில்ல. பெரியவாளுக்கு கூட இந்த வரிகள் அவா பெண் பார்க்க போனதுலேந்து கல்யாண ஏக்கங்களையும் சேர்த்து மனசுல கொண்டு வந்துடும் பாருங்கோ. என்ன நான் சொல்றது சரிதானே சபேஸா? அதான் குழந்தைகள் ரெண்டு பேரோட கண்பார்வைகளிலேயே புரிஞ்சிண்டு சேர்த்து வெச்சுட்டான்.'
(சிரிப்பொலிகள்)
'அண்ணலும் நோக்கினான் கம்பராமாயணத்துல மட்டும் வர காட்சி. இதுல உம்முக்கு நிறைய சிறப்பு. அதைத் தொடர்ந்து அவளும் நோக்கினாள்னு வருவதை கட்டியம் கூறுவது.'
'அண்ணல் மட்டுமா நோக்கினான். அவனைத் தொடர்ந்து வந்த சந்ததி எல்லாம் நோக்குவதை குறிக்கிறது இந்த உம்.'
'பாருங்கோ, இங்க இப்போ பாலாஜியும் நோக்கினான். (உடன் கூட்டத்தில் பெருத்த சிரிப்பொலி). கீதா நாணத்தில் தலை குனிந்தவாறே தானும் நோக்கினாள். '
'தவிர, இந்த உம்மிற்கு இன்னொரு பொருள். அடுத்தடுத்து செயல்கள் நடக்கணும்னா நாம என்ன சொல்றோம்? உம் .... உம் நடக்கட்டும் நடக்கட்டும்னு தானே? அது போல, இன்று நிச்சயதார்த்தம். அடுத்து கல்யாணம், காட்சி, குடும்பம்னு ஆத்துல சந்தோஷம் விருத்தி ஆறதுக்கு இன்னிக்கு அச்சாரம் போட்டாச்சு.'
'கதையில இரண்டு பாயிண்ட்
ராமர் கல்யாணம் பண்ணிண்டாலும் சீதா கல்யாணம்னு தான் உலகம் கொண்டாடறது. அதுபோல, இன்னிக்கு கீதா கல்யாண நிச்சயதார்த்தம்.'
'சீதா கல்யாணங்கறது யோகமும் போகமும் சேர்வது போல். இந்தக் கதையை கேட்டவாளுக்கும், இந்த கதையை படிச்சவாளுக்கும் யோகமும் போகமும் பெற்று பெருவாழ்வு வாழ வடுவூர் இராமனும், மன்னார்குடி ராஜகோபாலனும், சாமுண்டீஸ்வரி மற்றும் கல்யாணி அம்மனின் பூரண கடாக்ஷம் கிடைக்கணும்னு பிரார்த்திச்சுக்கறேன்.'
'சீதா கல்யாணத்த அர மணியில ஸ்லாகிப்பதுங்கறது எந்த பாகவதாரலேயும் முடியாது. நல்ல நேரதத்துல தெய்வங்கள மனுசுல நெனச்சு தெய்வீகமான வார்த்தைகள கேட்டுண்டு பிரார்த்தனைகள பகவான் கிட்ட வெச்சு குழந்தகள வாழ்த்தணும் ஆசிர்வதிக்கணுங்கற நோக்கத்தில தான் என்ன சபேசஸன் இங்க பேச அழச்சிருக்கணும். நானும் இந்த கீதா பாலாஜி நிச்சயதார்த்தத்துல பங்கேத்து ரெண்டு வார்த்த சீதா கல்யாணத்த சாதிச்சதுல ரொம்ப பெருமைப் படறேன்.'
தனித்தனியாக நமஸ்கரித்த கீதா மற்றும் பாலாஜியை மனப்பூர்வமா ஆசிர்வதித்து விட்டு வாசலில் தயாராக இருந்த வில்லு வண்டியில் தன் மகன் வைதீஸ்வரனோடு ஏறுகிறார்.
நிச்சயதார்த்தத்தை ஓட்டிய எல்லா சம்பிரதாயங்களும் நிறைவடைந்த நெகிழ்ச்சியில் கல்யாணி அம்மன் கோவிலிலிருந்து அனைத்து சுற்றங்களும் வெளி வந்து கொண்டிருக்கிறார்கள்.
நிச்சயதார்த்தம் முடிந்து வெளியே வரும் கீதாவின் அழகைப் பார்க்க கல்யாணி அம்மன் வாசலில் உயர்ந்து வளர்ந்த அரச மரத்தின் இடுக்குகளில் பெரிய மனிதர்களின் கண்களில் படாமல், ஏக்கப் பார்வைகளை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் நந்தனார் வர்க்க குடிசை வாசிகள் சிலர்.
'சந்தானம், இங்க வா. குடிசைக் காராள்லாம் டிஃபன் சாப்டாளா? சடகோபன் கோடெளன்ல தான ஏற்பாடு?'
'மாமா, கவலப் படாதீங்கோ. ஒன்பதரை மணிக்கு ஆரம்பிச்சு ரெண்டு மணி நேரம் ஓடித்து டிஃபன். எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். சிவலிங்கம் மத்யான சாப்பாட்ட ரெண்டு மணிக்கு ஆரம்பிச்சா போதும்னு சொல்லிட்டான். நாங்க பார்த்துக்கறோம் மாமா.'
'கீதா, பாலாஜி, இங்க வாங்கோ சித்த.'
'என்னப்பா'
'அக்ரஹார சாப்பாடெல்லாம் முடிஞ்சோன்ன, நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து குடிசக்காராள்லாம் வயிறாரா சாப்பிடறாளான்னு பர்ஸனலா கவனிக்கணும் என்ன? ஊர் கட்டுப்பாட்டுல அவாளால பாவம் கோவிலுக்கு வர முடியல. அதனால நீங்க ரெண்டு பேரும் அவா முன்னாடி சித்த நின்னுட்டு வாங்கோ, புரியறதா நான் சொல்றது? கீதா, உனக்கு தனியா சொல்லவே வேண்டாம். இருந்தாலும் மன்னார்குடி காராள ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு விவசாய குடும்பத்து காராளோட பேசிட்டு வா.'
'சரி மாமா. நீங்க சீக்கிரமா சாப்டுட்டு ரெஸ்ட் எடுங்கோ. நாலு மணி வாக்குல பெரிய கோவில் வேற போகணுமே?'
'சரி' என்று சொல்லிவிட்டு அங்கிருந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து விட்டு ஆத்துக்கு கிளம்பிய சபேஸய்யரிடம் சந்தானம், 'மாமா, வில்லு பாட்டு பார்ட்டி வரலையாம். ஏதோ சுப்புவுக்கு தொண்ட சுகமில்லையாம். அட்வான்ஸ முதலியார் கிட்ட கொடுத்துட்டு அவா க்ரூப்லேந்து ஆள் சொல்லிட்டு போயிட்டான்.'
'அட ராமா. சரி, பரவாயில்ல. ஏதோ ஒரு திருஷ்டி வேணுமோன்னோ நமக்கும். இன்னொரு நாள் ஏற்பாடு செஞ்சு தரதா விவசாயிகள் கிட்ட சொல்லிடுங்கோ.'
மாமா மாமி நகர்ந்தவுடன் இளம் சிட்டுகளின் ஆட்டம் பாட்டம் கிண்டல் கேலிகள் அமர்க்களப் படுகின்றன.
சரியாக ஒரு மணிக்கு நிச்சயதார்த்த சாப்பாடு அழைப்பு மன்னார்குடி வேணு மாமாவிடமிருந்து.
'நேத்திக்கு சொன்ன மாதிரி பாலாஜி கீர், கீதா பாதாம் பண்ணிருக்கேளேன்னோ ?'
பாதாம் கீர் ரகசியம் கீதாவுக்கும் பாலாஜிக்கும் தெரிய வர அக்ரஹார சிரிப்பலைகள் காற்றில் அதிர்கின்றன.
அக்காரவடிசல், தயிர்பச்சடி, ஃப்ரூட் பச்சடி, கோசுமல்லி, அவியல், உருளைக் கிழங்கு கறி, கத்திரிக்கா ரோஸ்ட், சௌசௌ கூட்டு, பிசிறின மாங்காய், மாஹாலி ஊறுகாய், அப்பளம், ஆமை வடை, புளி சாதம், கலத்து பருப்பு, முருங்கக்காய் சாம்பார், மைசூர் ரஸம், பூசணிக்கா மோர்க்குழம்பு, வத்தல் குழம்பு, கெட்டி மோர், ஜெரிமானத்துக்கு புளி இஞ்சி..... இவையெல்லாம் தலை வாழை இலையில். கூடவே தொன்னையில் பாதாம் கீர்.'
சொல்ல மறந்துட்டேனே, சாதம்... கீதாவின் மேற்பார்வையில் விளைச்சலில் வந்த கிச்சலி சம்பா அரிசியில். பொல பொல வென்று வெள்ளை வெளேர் கலரில். சுடச் சுட அனைத்தும்.
ஆரத்தி வரவேற்புடன் மாமாவாத்திற்கு வந்த கீதா ஸ்வாமி நமஸ்காரம் செய்து விட்டு அங்குள்ள பெரியோர்களையும் நமஸ்கரிக்கிறாள்.
எல்லாருடைய அன்பையும் ஆசிகளையும் பொக்கிஷமாக மூட்டை கட்டிக் கொண்டு யதார்த்த நடைக்கு தயாராகிறாள் கீதா.
தொடரும்.....
(அடுத்த அத்யாயத்தோடு கதைக்கு ஒரு சுபம் போடுவோமா?)
No comments:
Post a Comment