Monday, January 3, 2022

உறவுபோட்டமுடிச்சு_107

 உறவுபோட்டமுடிச்சு_107

வேத கோஷங்களுக்கு இடையே ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகங்கள் அற்புதமாக நடந்து அலங்காரத்திற்கான திரைச் சீலை போடப்பட்டது.

'ஏண்டா பாலாஜி, பத்ம விஜயம் அவர் ஆத்துக்காரர், குழந்தைகள் யாரையுமே இன்னும் காணோமே.'

'அதாம்பா இன்னும் புரியல எனக்கு.  நேத்தி ராத்திரியே வந்திருக்கணும்.  எப்படியும் வந்துடுவான்னு தான் தோணறது.'

இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே பத்ம விஜயம் அவர் மாட்டுப்பெண் லக்ஷ்மி மற்றும் பெண் சுமதியுடன் கோவிலுக்கு நுழைகிறார்.

'வா பத்து.... என்ன லேட்டு.  நேத்திக்கே ஏன் வரல?  வாம்மா லக்ஷ்மி.  வா சுட்டிப் பொண்ணே.  பூமாவும் நரசிம்மனும் எங்கே?'

'சபேஸா, அவா ரெண்டு பேரும் வரல.  வந்த எடத்துல பூமாவுக்கு ப்ரஷர் கூடிடுத்து.  அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்.  நீ எப்படி இருக்க?  எல்லாம் நன்னா போயிண்டிருக்கில்லையா?'

பத்ம விஜயத்தை அங்குள்ள முக்கியஸ்தர்களிடம் அறிமுகப் படுத்துகிறார்.

'மெட்ராஸ்ல இவா தான் பாலாஜிய அப்பா அம்மா ஸ்தானத்துல இருந்து கவனிச்சுக்கறா.  டிஃபன் சாப்டுட்டு வேணா வரையா பத்து?'

'இல்ல சபேசா.  யாரையும் தொந்தரவு பண்ணாத. ஃபக்ஷன் முடிஞ்சு முதல் பந்தியிலேயே சாப்டறோம்.'

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே லக்ஷ்மியின் கண்களும் சுமதியின் கண்களும் கீதாவை தேடி கண்டுபிடித்து விடுகின்றன.

இறுக்கி ஒரு கட்டு.  நெற்றியில் முத்தம்.  தோள்களில் இரு கைகளை வைத்து ஒரு குலுக்கல்.

'என் தம்பி அவசரப் பட்டதுல ஞாயம் இருக்கு கீதா.  யூ ஆர் அப்ஸலூட்லி ப்யூடிஃபுல்.  பை தி பை நான் லக்ஷ்மி.  இவ என் செல்ல நாத்தனார் சுமதி.'

'புரிஞ்சிண்டேன் மன்னி.  அவரை விட எங்க மாமா உங்க எல்லாரப் பத்தியும் அடிக்கடி சொல்லிண்டே இருப்பா.'

'ஒ.  வெரி நைஸ்.  உங்க அம்மா எங்க?  நான் முதல்ல உங்க அம்மாவ பார்த்து நமஸ்காரம் பண்ணனும்.'

கீதா லக்ஷ்மியை சீதாவிடம் அழைத்து செல்கிறாள்.

'மாமி, என்ன முதல்ல ஆசிர்வாதம் பண்ணுங்கோ.  இந்த ஊர் கிழக்கு மேற்க நீங்கதான் சொல்லிக் கொடுக்கணும்.'

திசை பார்த்து வைஷ்ணவா முறைப்படி நான்கு தடவை நமஸ்கரிக்கிறாள்.

'மாமி, உங்க மாப்ள பாலாஜி எங்காத்துக்கு வரும்போதெல்லாம் அத்த அத்தனு உருகுவான்.  சில பேருக்குதான் தாயாரே அம்மாவா கெடைக்கற பாக்யம் இருக்கு.  அந்த விஷயத்துல கீதா பாக்யம் பண்ணியிருக்கா.  மாமி, இப்பவே சொல்லிட்டேன் நான் மாப்பிள்ளயாத்து காராளா வந்தாலும் பொண்ணாத்து கட்சிதான்.  நான் கொஞ்சம் லொட லொட.  சகிச்சுக்கணும்.  அவ்வளவு தான்.'

'நீங்களும் என் பொண்ணு மாதிரி தான?'

'மாமி, பார்த்தேளா.  பொண்ணுங்கறேள்.  நீங்கங்கறேளே.'

'சரி லக்ஷ்மி.  இனிமே வாடி போடின்னே கூப்டறேன்.  போதுமா?  எங்க ஊர் கல்யாணிய நன்னா பிரார்த்தன பண்ணிக்கோ.  அடுத்த வருஷம் உங்காத்துல ஒரு கிருஷ்ணன் வரானா இல்லையா பாரு.  முடிஞ்சா மன்னார்குடிக்கும் எங்களோட வந்து ராஜகோபால ஸ்வாமி சந்நிதில இருக்கர சந்தான கோபாலன மடில வெச்சிண்டு போ.  மெட்ராஸ் போனோண்ண கண்டிப்பா நல்ல சேதி சொல்வ, நீ வேணா பாரு.'

'இது போதும் மாமி.  உங்களோட இந்த ஆசிர்வாதம் ஒண்ணே போதும் மாமி.'

கலகலப்பாக லக்ஷ்மி பேசுவதால்  அவள் அன்பு வலைக்குள் எல்லோருமே வந்துவிட்டார்கள்.

பூவனூர் அக்ரஹாரத்தில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி வைஷ்ணவ குடும்பங்களும் உண்டு.  அந்த அக்ரஹாரத்தின் மேற்கே உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களின் நிர்வாகங்களை அவர்கள்தான் கவனித்து வருகிறார்கள்.

நெற்றியில் திருமண்ணோடு இருந்த பத்ம விஜயத்தையும் அவர் குடும்பத்தையும் பார்த்த உடன் அவர்கள் மகிழ்சியும் அவர்களோ இணையத் துவங்கியது.

பட்டாச்சாரியார் கோதண்டம், ரகுநாதய்யங்கார், பார்த்தசாரதி வாத்யார், ஸ்ரீனிவாச தேசிகர், அவர் பசங்க கோபாலன், ராகவன், செல்லப்பா, மகள்கள் ராஜி, கண்ணாட்டி, மற்றும் பங்கஜம் மாமி, ரங்கநாயகி மாமி எல்லோரும் பத்ம விஜயம் குடும்பத்துடன் அறிமுகப் படுத்திக்கொண்டு அளவாளாகி மகிழ்கிறார்கள்.  பாலாஜியின் நண்பன் அப்புவோடு கூட படிக்கும் மைதிலி, சுந்தரி, ப்ரேமா, மாலா இவர்களும் சுமதியோடு பேசித் தீர்க்கிறார்கள்.

முகூர்த்த நேரம் நெருங்க, சோமாஸ்கந்த குருக்களின் அறிவிப்பு:

'வந்திருக்கறவா அத்தன பேரும் ரெண்டு பக்கமா நில்லுங்கோ.  சந்நிதிகள் அலங்காரம் முடிஞ்சு திரைய எடுக்கப் போறேன்.  ஆரத்திகள் முடிஞ்சோன்ன நிச்சயதார்த்தம் ஆரம்பிச்சுடலாம்.'

கட்டுக்கோப்போடு நின்ற உறவுகளுக்கு கண் கொள்ளா ஆரத்தி விருந்துகள்.  அனைவர் உடம்புகளிலும் ஆயிரம் வாட் தெய்வீக மின்சார அதிர்வுகள்.

கத்திரிப்பூ கலரில் மடிசார்.  வாடாமல்லி கலரில் ரவிக்கை.  ஆபரணங்கள் ஜொலிக்க கல்யாணி நின்ற அழகில் சொக்கியே இருந்தாள் கீதா.  மனதில் கல்யாணி அம்மனை உட்கார வைத்து நிகழ்கால சந்தோஷங்களையும் எதிர்கால கனவுகளையும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.

'அம்பாள் மேல யாராவது பாடுங்கோளேன்.'

சபைக்கு விடுத்த சபேஸய்யரின் குரலுக்கு, சோமா குருக்கள், 'யாரும் வேண்டாம்.  நம்ம கீதாவே பாடட்டும்.  கல்யாணி அவ பாட்டுகளையும் ஸ்லோகங்களையும் எத்தனை நாள் சந்தோஷப் பட்டிருக்கா தெரியுமோ?'

சுற்றங்களின் சந்தோஷம் ரெட்டிப்பானது. கீதாவின் சபைக் கூச்சம் நட்புகளின் உற்சாகத்தில் தோற்றுப் போனது.

'ஜக ஜனனி... சுகவாணி ....  கல்யாணி............'

கர கோஷங்களைத் தொடர்ந்து கைகுலுக்கல்கள் பாலாஜிக்கும்.  இருக்காதா பின்னே?  இனி கீதாவின் ஒவ்வொரு வெற்றிக்கும் பாலாஜிக்கும் பாராட்டுகள் கிடைக்குமே.

விபூதி குங்கும பிராசாதங்களைத் தொடர்ந்து நிச்சயதார்த்த ஏற்பாடுகளுக்காக பதினைந்து நிமிட இடைவெளி கொடுக்கப்பட்டது.

ஸ்ரீ கைலாசநாதரும் கல்யாணி அம்பாளும் மிடுக்கான அலங்காரத்தில் பிரத்யஷமாக நின்று கொண்டு மன்னார்குடிக் காராளின் சீர் வரிசைகளை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சொந்தங்களுக்கு ஜமக்காள இடம் கொடுத்து விட்டு நட்புகள் நின்று கொண்டு வைபவ நிகழ்சிகளை கண்டு களிக்க ஆனந்தம் மனதிலும் முகத்திலும் பொங்க காத்துக் கொண்டிருக்கின்றன.

'சடகோபா, இங்க வா.  என் பக்கத்துல உட்கார்ந்துக்கோ.  நீ தான் இந்த முடிச்சுக்கு என்ன விட ஆசப் பட்டவன்.  ரங்கன் பொண்ணு தான் பாலாஜிக்குன்னு அழிச்சாட்டியம் பண்ணிண்டிருந்தே நீ என்ன பார்க்கறச்சேயல்லாம்.  பூரணியையும் கூப்டுக்கோ பக்கத்துல.  மாப்ள தோழா சந்தானம், சித்த நாழில வேலையெல்லாம் ஒண்ணும் ஆயிடாது.  என் புள்ள டென்ஷனோட இருக்கான் பாரு.  அவன் பக்கத்துலேயே இரு'

'பவானி நீ ஆத்துக்காரர அழச்சிண்டு அந்த பக்கம் போ.  சுசீலா நீயும் போ அத்திம்பேர அழச்சிண்டு.  பொண்ண பெத்த சீதா நிச்சயதார்த்தத்த கண் குளிர பார்க்கற மாதிரி யாரும் வழிவிட்டு உட்காருங்கோ.'

'சின்ன கோவில்.  எட வசதி அவ்வளவா கிடையாது.  அதனால பெரியவாளுக்கு இடம் கொடுத்து சின்னவாள்லாம் ஒதுங்கி நில்லுங்கோ.'

'பாப்பா, நிச்சயதார்த்த ஓலை ரெடி பண்ணிட்டியா?  ரெண்டு தரப்பு ஓலைகளையும் மன்னார்குடி ரகு சாஸ்திரிகள் கிட்டேயும் காமி.  வாசகங்கள்லாம் சரியா இருக்கான்னு பார்க்கட்டும்.'

'நிச்சயதார்த்தம் முடிஞ்சோண்ண அரை மணி நேரம் என்னோட ஃப்ரெண்ட் கதாகாலக்ஷேப சூடாமணி ராமசாமி அய்யர் ஸ்ரீராமர் கல்யாணத்த பத்தி ஸ்லாகிப்பார்.  அதையும் எல்லாரும் அமைதியா உட்கார்ந்து கேக்கணும்னு விண்ணப்பிக்கிறேன்.'

'கெட்டி மேளத்தோட ஆரம்பிக்கலாமா?'

சபையோர் ஒப்புதல் பெறப்பட்டு மஞ்சளில் உருயேறி நான்முகக் கடவுள் பிரத்யக்ஷம்.

பிறகு குழந்தைகள் இருவரும் தனித்தனியாக சபை நமஸ்காரத்தை முடித்து விட்டு புது வஸ்திரங்களை பெறுகிறார்கள்.

பாலாஜி சந்தானத்தை அழைத்துக் கொண்டு மேற்கு பிரகாரத்திற்கு செல்கிறான்.  கீதா தன்னுடன் லக்ஷ்மி, சுபத்ரா, ஜானா, மற்றும் மன்னார்குடி தோழிகளுடன் கோவிலுக்கு அருகில் உள்ள சோமா குருக்களாத்திற்கு ஒப்பனைக்காக செல்கிறாள்.

ரங்கன் சீதாவுக்காக வாங்கிக் கொடுத்த வளையலை யாருக்கும் தெரியாமல் பண்ட மாற்று முறையில் தங்க சங்கிலியாக மாற்றி பாலாஜியின் கழுத்தில் செருவாமணி பாலுவை விட்டு அணிவிக்க வைக்கிறாள்.

வளையல்களை காசாக மாற்றியதில் கிடைத்த மிச்ச மிருந்த பணத்தில் ஒரு பவுன் மோதிரத்தையும் பர்மா ஷெல் சுந்தர ராமய்யரை விட்டு பாலாஜி கையில் அணிவிக்க வைக்கிறாள்.

இனிமேல் சீதா நகை நட்டு இல்லாத ராஜாத்தி.  இந்த அணிகலன்கள் விவகாரம் கீதாவிற்கு தெரியாமல் வைத்திருந்த ரகசியம்.

'மெல்ல சொல்லிக் கொண்டால் போச்சு.  புரிஞ்சுப்பா.  இனி எனக்கு எதுக்கு வளையலும் செயினும்?  ரெண்டு மூணு ரூபாய்க்கு துளசி மால ஜபத்துக்கு இருந்தா போறாதா என்ன?'

'எப்படி ஆகுமோ பொண்ணு கல்யாணம்னு கவலப் பட்டுண்டிருந்தோம்.  இப்படி அண்ணா என்ன பெரும படுத்துவார்னு துளி கூட நெனச்சு கூட பார்த்ததில்ல.'

'இப்படி இருக்கப்போறோம் அப்படி இருக்கப்போறோம்னு கீதா அப்பா என் கைய பிடிச்ச போது கனவா இருந்தது.  ஆனா அந்த கனவெல்லாம் கீதா கல்யாணத்துக்கப்பறம் நிறைவேறப் போறது அவளுக்கு. என்ன ஒண்ணு, அவருக்கு இதெல்லாம் பார்க்க கொடுப்பின இல்ல.'

அவளுக்கு இப்போது கூடியிருந்த சபையோர்கள் தெரியவில்லை.  கடந்து வந்த பாதையில் கடமைச் சுமையை சற்று இறக்கி வைத்த நிம்மதியில் பிரமித்திருந்தாள்.  நிம்மதிப் பெருமூச்சில் எப்போதுமே தெய்வீகம் இருக்கும்.  இப்போது அந்த பெருமூச்சாகவே கல்யாணி அம்மன் இருப்பதை உணர்கிறாள்.

'கண்ணுல ஜலமா வர்றது கல்யாணி. பக்கத்துல இருக்கரவாள கூட பொற விழுந்த கண்ண வெச்சிண்டு பார்க்கற மாதிரி பார்க்க வேண்டியிருக்கு. அத மாத்திரம் சித்த நிறுத்தேன் சித்த நாழிக்கு.  புண்ணியமா போகும் நோக்கு.'

பொங்கி வரும் கண்ணீரை அடக்கத் தெரியாமல் மற்றோர் பார்வையில் படாமல் கோவில் வாசலுக்கு வந்து புடவைத் தலைப்பில் ஒத்தி ஒத்தி எடுக்கிறாள்.   அவளுக்குத் தெரியாது கல்யாணி கொடுத்தது கண்ணீர் துளிகள் இல்லை, கங்கைப் பிரவாஹம் என்று.

அன்பு மற்றும் உழைப்போட பலம் கொடுக்கும் சாந்தியை அவள் அறிவாள்.  தினமும் அனுபவிப்பது அது.  ஆனால் பிரார்த்தனையின் பலம்? கல்யாணி இவள் மனதுக்குள் புகுந்து ஹ்ருதய கமலத்தில் அமர்ந்த பிறகு அவளே தேற்றினால்தான் உண்டு.

'அன்னா, பேரன பார்த்துட்டு வரேன்னா.  அதுக்குள்ளேயும் சீதா சீதான்னு கூப்டுக்காதீங்கோ.   எனக்கு ஒரு ஆசை.  உங்க ஜாடைல பேரன் இருக்க மாட்டானான்னு.  அத மாத்திரம் பாத்துட்டு வந்துடறேன்.'

ஜெயிக்கறவாளுக்கு ஜெயிக்க ஜெயிக்க ஆசை.  உழப்ப போட்டுண்டே இருப்பா. அதே மாதிரி தான் அன்பு செலுத்தறவாளுக்கும்.  செலுத்தற அன்பு பதிலுக்கு கிடைக்கறதுன்னா, ஆயுள லேசுல விட மனசு வராது.

நல்லதுதான் ஸ்வர்கத்தில் தான் இருக்கும் என்று அங்கு செல்ல நினைப்பவர்கள் கூட அடுக்கடுக்காக இன்பங்கள் இந்த லோகத்திலேயே கிடைக்க ஆரம்பிக்கும் போது ஆயுளை கூட்டுமாறு பகவான வேண்டறது இல்லையா என்ன?

இன்னும் கொஞ்ச நேரம் கல்யாணி இவளோடு விளையாடிப் பார்க்க ஆசைப் படுகிறாள் போல இருக்கிறது.  கண்ணீர் நின்ற பாடில்லை.  வேக வேகமாக கல்யாணி அம்மன் சந்நிதி பின்புறம் ஓடுகிறாள்.  அபிஷேகம் எப்போதோ முடிந்திருந்தாலும் அபிஷேக ஜலம் சொட்டு சொட்டாக சிம்ம முக வாய்க்கால் வழியாக வந்து கொண்டிருந்தது.  அதை உள்ளங்கையை கூப்பி பிடித்துவிட்டு கண்ணில் தெளித்துக் கொள்கிறாள்.

கல்யாணியை தோற்கடித்த பெருமிதம்.  அழுதியான்னு யாராவது கேட்டா, ' இல்லையே அபிஷேக ஜலத்தால கண்ண தொடச்சிண்டேன்னு சமாளிச்சுடலாமே.'

நிச்சயதார்த்த லக்ன பத்திரிக்கை வாசிக்கப்படுகிறது.

கௌண்டின்ய கோத்திரத்தை சேர்ந்த கீதாவுக்கும் ஹரித கோத்திரத்தை சேர்ந்த பாலாஜிக்கும்.

வைத்யநாதய்யரின் கொள்ளுப் பேத்தி கீதாவுக்கும், ஸ்ரீராமய்யரின் கொள்ளுப் பேரன் பாலாஜிக்கும்.

மஹாராஜபுரம் நாராயணய்யர் பேத்தி கீதாவுக்கும், பூவனூர் சாமினாதய்யர் பேரன் பாலாஜிக்கும்.

மன்னார்குடி (லேட்) ரெங்கநாதன் என்கிற ரெங்கன் மற்றும் சீதா தம்பதியினரின் சீமந்த புத்திரி கீதாவுக்கும் பூவனூர் சபேஸய்யர்-ஞானாம்பாள் தம்பதியினரின் சீமந்த புத்திரன் பாலாஜிக்கும்

திருமணம் காஞ்சி ஆச்சார்யாரின் அனுக்ரஹத்துடனும்         பெற்றோர்கள் உற்றோர்களின் பரிபூரண சம்மதத்துடனும் நிச்சயிக்கப் படுகிறது.

பத்திரிக்கையின் ஸாராம்ஸம் இது.  மற்ற பொது வார்த்தை ஜோடனைகளுடன்.

முப்பத்து முக்கோடி தேவர்களும் கோவிலில் குழந்தைகளுக்கு தங்களது நல்லாசிகளை வழங்கியது பாலு சாஸ்திரிகளின் ஸ்வஸ்தி வாக்யங்களிலும் ஆசிர்வாத மந்திரங்களிலும் வெளிப்பட்டது

வெற்றிலை பாக்கு சஹிதம் தட்டுகள் பரிமாற்றங்கள் ஏற்பாடுகள் படி.

கெட்டி மேளம்.  கர கோஷங்கள், கைக் குலுக்கல்கள், சந்தோஷத் தழுவல்கள், ஆனந்தக் கண்ணீர் சொறியல்கள் ....  இவைகள் சுற்றங்களுக்குள்.

ஓரவிழிப் பார்வைகள், கண் சிமிட்டல்கள், ஜாடைகள், சேட்டைகள், ஒழுங்குகள் ..... .  கூட்டத்தில் உள்ள அனைவர்களையும் குருடாக்கி பாலாஜி மற்றும் கீதா நடத்திய காதல் சங்கேதங்கள்.

அம்மாவை கட்டிக் கொள்கிறாள் கீதா.  ஐந்து நிமிடங்கள் பிரிய மனமில்லாது.  அந்த அணைப்பில் அன்பு இருந்தது.  பாசம் இருந்தது.  வாழ்த்து இருந்தது.  ஆசி இருந்தது.  நன்றி இருந்தது.

ஞானமும் தன் இரு கைகளையும் நன்கு விரித்து கீதாவை அழைக்கிறாள்.  இன்னொரு தாயாக கீதாவின் அணைப்பில் அவளும் சுகம் பெறுகிறாள்.

தொடரும்....

No comments:

Post a Comment