Monday, January 3, 2022

உறவுபோட்டமுடிச்சு_106

 உறவுபோட்டமுடிச்சு_106

Written by Baskar Sathya 

எத்தனையோ முறை கீதா இந்த அக்ரஹாரத் தெருவில் வலம் வந்திருக்கிறாள்.  ஓடி ஆடி சிநேகிதிகளோடு மகிழ்ந்திருக்கிறாள்.  அக்ரஹார முகப்பில் உள்ள கல்யாணி அம்மன் கோவிலில் அவளுடைய ஸ்லோக குரல்கள் கணீர் என்று ஒலித்திருக்கிறது.

இப்படி இத்தனை வருடங்கள் பார்த்திருந்தும் இன்று கீதாவை வரவேற்பதில் பூவனூர் வாசிகள் ஒரு பேரானந்தத்தைக் காட்டுகிறார்கள்.

ஸ்ரீ கைலாஸ நாதர் சமேத கல்யாணி அம்மன் சந்நிதிகளுக்கு அபிஷேகங்கள் நடப்பதற்கு அரை மணி நேரம் முன்பாகவே கோவில் வாசலில் ஐம்பதுக்கும் மேற் பட்டவர்கள் குழுமியிருக்கிறார்கள் குதூகுலத்துடன்.

எட்டு முழ மயில்கண் வேஷ்டி பச்சைக் கலர் ஜிப்பா பட்டு அங்கவஸ்திரம் பட்டை போட்ட நெற்றி இருபது பவுன்களுக்குக் குறையாமல் கழுத்தில் செயின்கள், கையிலே ப்ரேஸ்லட் மற்றும் தங்க கடிகாரம் இவற்றோடு முதல் ஆளாக மனைவி பூரணியுடன் பூரணமாக ஜொலிக்கிறார் பூவனூர் பிரபலம் சடகோப முதலியார்.

கிட்டத்தட்ட குட்டி போட்ட பூனையாக முகம் முழுவதும் சந்தோஷ வெளிப்பாடுடன் அவர் அங்குமிங்கும் வந்து கொண்டிருப்பவர்களை வாயார வரவேற்கும் விதத்தை ரசித்துக் கொண்டிருந்தனர் அக்ரஹார வாசிகள்.

'பூரணி, நம்ம புள்ள கீதா வரும்போது என் பக்கத்துல நின்னுடனும் என்ன?  அந்த புள்ள கழுத்துல நம்ம மாலை தான் முதலாவதா இருக்கணும்.'

சடகோப முதலியார் மனம் முழுவதும் அவர் நண்பன் ரங்கன் நிறைந்திருந்தான்.  'ஏய், ரெங்கா.  உன் புள்ளைய நாங்க விட்டு கொடுக்கல பார்த்தியா?  உன் பொண்ணு தான் எங்க ஊரு மருமவ.  இனிமே அது பேச்ச தான் நாங்க கேக்கப் போறோம்.'

அப்பு, கண்ணு, பாஸ்கர், சாரி, ராஜாமணி, ரவி ...  கிட்டத்தட்ட எல்லா இளைய பட்டாளமும் படு பிஸி அவர்களுடைய நண்பன் பாலாஜி நிச்சயதார்த்த ஏற்பாடுகளில்.  சந்தானம் மதிய சமையல் ஏற்பாடுகளில். கோபாலய்யராத்தில் இட வசதி குறைவாக இருப்பதாக வேணு ஜயர் கருதியதால் பிச்சை மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் SPS மணி ஐயராத்திலும் சமையல் வேலைகள் துவங்கியது.  ஏற்கனவே அக்ரஹாரத்தில் உள்ள குடும்பங்கள் கல்யாணம் என்றால் மணி அய்யராத்தில் தான் சமையல் வேலைகள் நடக்கும்.  அதனால் அங்கு ஏற்கனவே நிரந்தரமாக கோட்டை அடுப்புகள் வசதி உண்டு.

அக்ரஹார ரோடு அடிக்கற பம்ப் குழாயில் மாற்றி மாற்றி தண்ணீர் இறைத்து அதை கோவில் பிரகாரத்தில் வைத்திருக்கும் அண்டாவில் வெள்ளைத் துணி கட்டி வடிகட்டி கொட்டுவதில் வேகம் காட்டிக் கொண்டிருந்தனர் சிலர்.

அபிஷேக சாமான்களை ஒவ்வொன்றாக பிரித்து பாத்திரங்களிலும் குடங்களிலும் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்ததார்கள்.

கோவிலின் வாசல் முகப்புப் படியில் வைக்கப் பட்டிருந்த சந்தனம் குங்குமம் பன்னீர் சொம்பு புஷ்ப சரங்கள் வருபவர்களை வரவேற்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தன.

வேத மந்திரங்களை ஒரு பிடி பிடிக்க மன்னார்குடியிலிருந்து வந்த ரகுபதி மற்றும் பாலகிருஷ்ண சாஸ்திரிகளும், பூவனூர் ஆத்து வாதியார் பாப்பா சாஸ்திரிகள் மற்றும் பெரிய கோவில் குஞ்சுமணி குருக்கள் அனைவரும் தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள்.  இவர்களோடு பூவனூர் சாமியாப்பிள்ளை ஸ்கூல் அட்வைசரும் அக்ரஹாரத்தில் வாத்தியார் என்று பட்டத்துடன் பிரபலமான சுந்தரேஸய்யரும் சேர்ந்து கொள்ள கோவில் உள்ளே செல்கிறார்.  இவர்களோடு இணைய இருக்கவே இருக்கிறார் சபேஸய்யரின் நண்பரும் பாகவதருமான ராமசாமி ஐயர்.  அத்தனை பேருமே உடல் முழுவதும் விபூதிகளைப் பூசிக் கொண்டு சிவப்பழங்களாக தேஜஸ் நிரம்பி காட்சி அளித்தனர்.

கோவில் முகப்புப் பந்தலில் பூக்களுடன் குலை தள்ளிய கூடிய இரு பக்க வாழை மரங்கள் கலாசாரத்தோடு தெய்வீகத்தையும் சேர்த்துக் கொண்டிருந்தது.

இதோ சபேஸய்யர், ஞானாம்பாள், மாப்பிள்ளை பாலாஜி, அத்தைமார்கள் சுசீலா மற்றும் பவானி குடும்பத்தினர், பாகவதர் ராமசாமி ஐயர் மற்றும் அவர் பிள்ளை வைதீஸ்வரன், டாக்டர் பசுபதி மற்றும் அவர் மனைவி, அக்ரஹார வாசிகள் சிலரோடு கல்யாணி அம்மன் கோவிலை நோக்கி நடந்து வருகிறார்கள்.

இவர்கள் கோவிலை அடைந்தவுடன் மேள தாளத்தோடு கீதா அண்ட் பார்ட்டி அழைத்து வரப்பட வேண்டும்.

மாப்பிள்ளை ஆத்துக்காரர்கள் கோவில் வந்து விட்டது தெரிவிக்கப் பட்டவுடன் சீதாவின் பரபரப்பு கூடுகிறது.

'சாலி, ஆளுக்கு ஒண்ணா எடுத்துப் போமா?'

பக்ஷண டின்கள் சம்படங்கள்

வித விதமான பழங்கள் வைக்கப்பட்ட தட்டுகள்.

புஷ்பக் கூடைகள்

புத்தம் புதிய எவர்சில்வர் அடுக்கில் ஐந்து முகத்தில் பிரகாசத்தை வெளிப்படுத்திய சிறிய குத்து விளக்கு.

பெரிய அளவில் ஒரு பலாப் பழம் 

பெரிய ரிஸப்ஷன் தட்டில் கலர்ஃபுலாய் ஆடை அணிந்து தலையில் கம்பீரமாக கதம்பத்தை சுற்றிக் கொண்டு கொண்டு வரும் சீர்களுக்கு சாக்ஷியாக நிற்கும் இரண்டு மனோஹர பருப்பு தேங்காய் கூடுகள்.

அடுக்கிலிட்ட விளக்கு காற்றில் அணையாமல் கீதா எடுத்து வர வேண்டும்.  கவனம் முழுவதும் விளக்கின் ஜீவனில் இருக்கப் போவதால் நடையில் மெல்லினமும் இடையில் நளினமும் குனிந்த தலையில் நாணமும் அனிச்சையாக ஒட்டிக் கொண்டு விடாதா என்ன?

தூரத்தில் கேட்கும் தவில் முழக்கமும் நாதஸ்வர இசையும் சேர்ந்து காற்றிலே கலந்து கல்யாணி அம்மன் கோவில் வாசலில் காத்திருக்கும் இதயங்களுக்கு எதிர்பார்ப்புகளை கூட்டுகிறது.

'கிளம்பியாச்சு மாதிரி தெரியறது.'

'அடேங்கப்பா... இத்தன பேரா மன்னார்குடியிலேந்து வந்திருக்கா?'

'ஏகப்பட்ட சீரா இருக்கும் போல இருக்கே?  பெரிய பலாப் பழத்த கூட எடுத்துண்டு வந்திருக்காளே?  வாழைத் தார் வேற?  பேஷ் பேஷ்.... கஷ்டப் படறவ மாதிரியா சீதா தெரியறா சீரெல்லாம் பார்க்கும் போது.'

கோவிலுக்கு நூறு அடி முன்னால் நாதஸ்வரம் கர்நாடக இசைக்கு விடை கொடுத்து யதார்த்த இசைக்குள் நுழைகிறது.

'மணமகளே மருமகளே வா வா

வலது காலை எடுத்து வைத்து வா வா

குணமிருக்கும் குலமகளே வா வா

தமிழ் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா......'

இளஞ்சிட்டுகளின் உணர்வுகளை உசுப்பேத்த கர்நாடக இசை திரையிசையாக நிகழ்சிக்கு ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நண்பர்கள் மத்தியில் அவர்களின் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் நெளிவுகளோடு பாலாஜியின் இதயம் தவிக்கிறது.

கீதாவின் அன்றைய தினத்தின் காஸ்ட்யூம் பாலாஜியின் நரம்புகளை முறுக்கேற்றிக் கொண்டிருக்கிறது.

கூட்டத்தின் நடுவே ஜோடிப் புறாக்களின் சங்கேத பாஷைகள்.  கண்கள் பேசி அவரவர் இதயங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தன.

விடலைப் பருவங்களுக்குள்ளும் மனப் பரிமாற்றங்கள் இருக்காமல் இருக்குமா?  தாவணிக் கன்னிகளின் கனவுகள் பூவா தலையாவில் சுகம் கண்டு கொண்டிருந்தன.  

சடகோப முதலியாரின் மனைவி பூரணி கீதாவிற்கு மாலை அணிவித்து வரவேற்கிறாள் சுற்றங்களின் கரவொலி இசையுடன், விடலைகள் கொளுத்திய சரவெடி சப்தங்களோடு.

சீதாவிற்கு பூரணி ஒரு ஷால் அணிவிக்கிறாள்.  மிகுந்த மறுப்புகளோடும் நெளிவுகளோடும் ஏற்றுக் கொள்கிறாள் அவளும்.   கஷ்டங்களுக்கு இடையே தன் மகளை ஊர் மெச்சும் அளவு வளர்த்த ஒரு ஏழைத்தாய்க்கு பூவனூர் கொடுக்கும் அங்கீகாரத்தை ஏற்காமல் இருக்க முடியாதே.

கோவில் வாசலில் காத்திருந்து வரவேற்ற பூவனூர் நல்லிதயங்களும் வரவேற்பை மன மகிழ்சியுடன் ஏற்ற மன்னார்குடி மனங்களும் கோவில் உள்ளே செல்கின்றன.

நிழல்தரும் பந்தல்கள் பிரகாரங்கள் முழுவதும்.  விரிக்கப் பட்ட ஜமக்காளங்கள்.

'மன்னி, சீர் சாமான்கள எங்க வைக்க சொல்லலாம்?'

'ஒரு ஓரமா இருக்கட்டும்.  அபிஷேகங்கள் முடிஞ்சோண்ண அழகா வெச்சுடலாம்.  ஏண்டி சீதா, எவ்வளவோ சிரமத்துக்கு நடுவ இவ்வளவு பெரிசா எல்லாத்தையும் எடுத்துண்டு வந்திருக்கியே!'

'மன்னி, இங்க வந்திருக்கற மன்னார்குடி ஃப்ரெண்ட்ஸ் அத்தன பேருக்கும் கீதான்னா உயிரு.  நான் ஏதோ பக்ஷணம் மாத்திரம் தான் பண்ணி எடுத்துண்டு வந்தேன்.  மத்த எதுவும் எங்களோட வந்திருக்கறவா ஏற்பாடு.  அதோ மன்னி, ஒரு மாமி வைரத்தோடு போட்டுண்டிருக்காளே, அவா தான் நான் சொல்லிண்டே இருப்பேனே பர்மா ஷெல்லாத்து மாமி.  அவாதான் எல்லா பழங்களும் வாங்கிண்டு வந்தா.  இதோ அந்த தூணுல சாஞ்சா மாதிரி பேசிண்டிருக்காளே, அவ தான் சாலி.  செருவாமணி மளிகை கடை ஓனர்.   அவர் தான்  முந்திரி, பாதாம், பிஸ்தான்னு... எல்லாத்தையும் எடுத்துண்டு வந்தது.  உபகாரம்னா அவா கிட்ட தான் கத்துக்கணும்.  முக்கியமா இவா ரெண்டு பேர்களும் கொடுக்கற தெம்புல தான் நாங்க மன்னார்குடில உழண்டுண்டு வரோம்.'

'நாங்கதான் கொடுத்து வெச்சிருக்கோம்னு பார்த்தா நீயும் சீதாவும் மன்னார்குடியையே பாசத்தால கட்டுப்போட்டு வெச்சிருக்கேளே.'

குழுமியிருந்தவர்களின் பேச்சு சலசலப்புகளை சோமாஸ்கந்த குருக்கள் பெரிய சாரீர குரலில் அறிவிப்பு கொடுத்து அமைதிப் படுத்துகிறார்.

'எல்லாரும் வந்தாச்சா.  அபிஷேகங்கள் ஆரம்பிக்கலாமா?  பெரியவாள்லாம் உத்தரவு கொடுத்தா இப்பவே ஆரம்பிச்சுடலாம்.'

'சோமா ஏற்கனவே இருபது நிமிஷம் லேட்.  நீ ஆரம்பி அபிஷேகத்த.  வந்திருக்கற பெரியவா எல்லாரும் வேத மந்திரங்களையும் ஆரம்பிச்சுடுங்கோ ஸைட் பை ஸைட்.  என்ன நான் சொல்றது?'

'பேஷா சபேஸா.  ரெண்டு கொழந்தைகளும் கல்யாணி அம்மன் முன்னாடி எதிர்த்தாப்புல எதிர்த்தாப்புல உக்காந்து அபிஷேகங்கள பார்த்துண்டே வேதங்களையும் காது குளிர கேக்கட்டும்.  வாங்கோ குழந்தைகளா.  ஈஸ்வரனுக்கும் அம்மனுக்கும் தனித்தனியா நமஸ்காரத்த பண்ணிட்டு, வந்திருக்கற பெரியவா எல்லார்கிட்டேயும் ஆசீர்வாதங்கள் வாங்கிண்டு சந்நிதிகள் முன்னாடி பிரார்த்தன பண்ணிண்டே உட்காருங்கோ அபிஷேகம் முடியற வரைக்கும்.'

பாலாஜியும் கீதாவும் கல்யாணி அம்மன் முன்பு எதிர் எதிராக அமர்ந்தவுடன் கல்யாணி மற்றும் கைலாசநாதர் சந்நிதிகள் திரையிடப் படுகின்றன அபிஷேகங்களுக்காக.  

சில நிமிட ஆலய மணி ஓசை அபிஷேகங்களின் துவக்கத்தை அனைவருக்கும் உணர்த்தி விடுகின்றன.

கணீர் என்று துவங்கிய வேதக் குரல்கள் அரங்கை நிஸப்தமாக்கியது.

'சபேஸா, நிச்சயதார்த்த தட்டுகள சபையில நானும் அத்திம்பேரும் வாங்கிக்கலாமா?  சட்டுனு என்னமோ தோணித்து டா.'

'என்ன பவானி, இப்ப வந்து சொல்றயே.  சுசீலாவும் அவ ஆத்துக்காரரும் சீதா சார்புல வாங்கிக்கட்டும்னுதான பேச்சு. அப்பவே சொல்லியிருக்கலாமே.  இப்ப வந்து சொல்றயே.  அவா தானே மூத்தவா?  இப்ப மாத்தினா நன்னா இருக்குமா?'

'இல்ல சபேசா.  இந்த ஊரே கீதாவ கொண்டாடிக்கறது.  நானும் இதெல்லாம் புரியாம எப்படி எப்படியோ அவளையும் சீதாவையும் மனசுல நிந்திச்சிருக்கேன்.  அதெல்லாம் எவ்வளவு தப்புன்னு இப்ப புரியறது.  என் மனசு சாந்தப் படணும்னா, எங்க கையாலையே தட்ட மாத்தி சீதா கையில கொடுத்துட்டு மனசார கீதுவையும் ஆசிர்வாதம் பண்ணனும்னு தோணறது.  உனக்கு சங்கடமா இருந்தா நானே சுசீலா கிட்டேயும் அத்திம்பேர் கிட்டேயும் பேசறனே இத பத்தி.'

இவ்வளவு தூரம் அவள் இறங்கி வந்து பேசுவாள் என்பதை எதிர் பார்க்கவில்லை.  மறுத்துப் பேசவும் சபேஸய்யருக்கு மனம் வரவில்லை.

'சரி, நீ போய் சுசீலா கிட்டேயும் சிவா அத்திம்பேர் கிட்டேயும் பேசு.  நானும் சீதா கிட்டேயும் கீதா கிட்டேயும் பேசி புரிய வைக்கறேன்.'

பவானியும் ராமநாதனும் அவர்களைத் தனியாக அழைத்துப் பேசி சம்மதம் பெறுகிறார்கள்.

சபேஸய்யரும் பவானியின் விருப்பத்தை சீதா மற்றும் கீதாவை தனியாக கூப்பிட்டு சொல்கிறார்.

'அண்ணா, இதெல்லாம் எங்க கிட்ட சொல்லணுமா?  உங்க மனசு படி தீர்மானம் பண்ணுங்கோ.'  இது சீதா.

'மாமா, எங்க ரெண்டு பேருக்கும் எல்லாமே நீங்களும் மாமியும் தான்.  ஆஸ்பத்திரியில நீங்க இருக்கும்போது உறவுகள பகச்சுக்க கூடாதுன்னு சொன்னேளே.  பவானி பெரியம்மா இவ்வளவு தூரம் பேசினதுக்கு அப்பறம் அவாளோட விருப்பப் படி நடக்கறதுல எங்களுக்கு என்ன ஆட்சேபண இருக்கப் போறது?  ரெண்டு பெரியம்மா பெரியப்பாக்களும் சேர்ந்தே வாங்கிண்டா கூட அதுவும் எங்களுக்கு பெருமை தானே மாமா?'

'சரி, ஞானத்தையும் ஒரு வார்த்தை கேட்டுண்டு அது படி நடத்திண்டா போச்சு.  ஞானம், இங்க சித்த வா.'

நடந்தவைகளை சொல்கிறார் சபேஸய்யர் ஞானத்திடம்.

'நம்மாத்து மாட்டுப் பொண் சொல்றது தான் சரி.  அவளோட ரெண்டு பெரியம்மா பெரியப்பாக்களுமே சேர்ந்து தட்ட மாத்திக் கட்டுமே?'

எழுந்த ஒரு சிறு பிரச்சனை சுமூகமாக தீர்ந்ததில் அவைவருக்கும் சந்தோஷம்.

தெய்வம் நிச்சயம் செய்த காதல்  வேத மந்திரங்களிலும் உறவுகளின் ஆத்மார்த்த உணர்வுகளிலும் சிலிர்த்துக் கொண்டிருந்தது.

தொடரும்....

No comments:

Post a Comment