உறவுபோட்டமுடிச்சு_103
பதினோறாம் தேதி மதியம் மூன்று மணி அளவில் மன்னார்குடியிலிருந்து வேன்கள் கிளம்ப தயாராக இருந்தன.
'அம்மா, லக்கேஜெல்லாம் உங்க வேன்ல வெச்சுண்டு வாம்மா.'
'அடிப்பேன் உன்ன கீதா. அந்த வேன்ல பெரியவாள்லாம் வரா. அவா செளகர்யமா வரட்டும். நீங்கள்லாம் குழந்தைகள் தான. அட்ஜஸ்ட் பண்ணிண்டு வாங்கோ.'
'அம்ம்ம்..மா' செல்ல சிணுங்கல் கீதாவிடமிருந்து.
'வர வர செல்லம் ஜாஸ்தியா போயிண்டிருக்கு. இன்னும் ஒண்ணு சொல்றேன். பாலாஜிய எப்போதும் கூப்பிடற மாதிரி அவனே இவனே வாடா போடான்னெல்லாம் இனிமே கூப்டக் கூடாது. நிச்சயதார்த்ததுக்கு அண்ணாக்கு தெரிஞ்ச பெரிய மனுஷாள்லாம் வருவா. அவாளுக்கு முன்னாடி பாலாஜிய அப்படியெல்லாம் கூப்ட்டு மானத்த வாங்காத.'
'அம்மா, மாமா மாமிதான் கல்யாணம் வரைக்கும் வாடா போடான்னு கூட்டுக்கோ பரவாயில்லைனு சொன்னாளே.'
'உன்ன உதப்பேன் பார்த்துக்கோ. உன்னோட வாடா போடால்லாம் மூட்டைய கட்டிடணும். எதுலதான் விளையாடறதுன்னு இல்லையா? இனிமே நீ சின்ன பாப்பா இல்ல. இங்கிதம் கௌரவம் மரியாத எல்லாம் தெரிஞ்சு நடக்கணும். நானே எந்த திருஷ்டியும் படாம நன்னா எல்லாம் நடக்கணுமேன்னு வயத்துல நெருப்ப கட்டிண்டு வளைய வந்துண்டிருக்கேன். அச்சான்யமா எதுவும் பண்ணி தொலைக்காதே. உன் கிட்ட சமத்தும் நிறைய இருக்கு. அசட்டுத் தனமும் அப்பைக்கப்ட வந்து ஒட்டிக்கறது. அதான் எனக்கு பயமா இருக்கு.'
'சீதா பிராட்டியே.... ஒரு கவலையும் படாத. சொல்லிட்டியோன்னோ, மாப்பிள்ளைய மரியாதைல எப்படி அசத்தறேன் பாரு.'
'சரி, நேரம் ஆகறது பார். தலைல நான் கொடுத்த ரெண்டு வேப்பலைய செருகிண்டுட்டியா? இந்தா இந்த ஸ்கூல் பிள்ளையார் விபூதிய நெத்திலே இட்டு விடறேன். ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிட்டு வண்டிலே ஏறு. போற வழியில வேன நிறுத்த சொல்லி தாமரக்குள பிள்ளையாருக்கு முன்னாடி சிதர் தேங்கா போடணும். ஃப்ரெண்ட்ஸுகளோட பேசிண்டே மறந்துடாத. சீர் பக்ஷண சம்படங்கள நீயும் உன் ஃப்ரெண்ட்ஸ்களும் மடியிலேயே வெச்சு இறுக்கமா புடிச்சிக்கோங்கோ. இல்லாட்டி வேன் குலுக்கல்ல உடஞ்சி உதுந்து போயிடும். ஜாக்ரத. ஜமுனா கிட்டேயும் சொல்லியிருக்கேன். உனக்கும் கவனம் இருக்கட்டும்.'
ஆனந்தத்திலும் கவலைகள் சூழ்ந்தே இருந்தன சீதாவிற்கு. நிச்சயதார்த்தம் நன்றாக முடிகிற வரைக்கும் நான்கு பக்கங்களும் பார்வையை செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
'நாளைக்கு பழங்கள வாங்கிண்டு வந்து சேர்ந்துடறேன்னு பர்மா ஷெல் ஆத்துல சொல்லிட்டா. மீதி எல்லாத்தையும் மறக்காம எடுத்துண்டோமான்னு யோஜன படுத்திப்போம்.'
'அன்னா, நீங்க விட்டுட்டு போன கடமைய அங்கேந்தே பகவான் கிட்ட சொல்லி நடத்தறேள். நிச்சயதார்த்தம் வரைக்கும் என்னோடையே இருங்கோன்னா. நீங்களும் நானும் பக்கத்துல பக்கத்துல உக்காந்து நிச்சயதார்த்த தட்டுகள பரிமாறிக்கதான் கொடுப்பின இல்லாம செஞ்சுட்டேள். அந்த ஒரு வருத்தம் தான்னா உங்க மேல.'
இந்த நல்ல நேரத்துல போனவரை எதற்கு நினைக்க வேண்டும் என்று மனதே சொல்லிவிட்டு அதே மனது ரங்கனை அழைத்து வந்து அவள் முன் நிறுத்தினால் பேசாமல் அனுப்பிவிட முடியுமா என்ன?
ரங்கன் கிட்ட அவள் வைத்திருந்தது பேப்பர்ல அன்புன்னு எழுதி ரப்பரால அழிக்கிற பந்தமா என்ன?
'துருதுருன்னு எல்லா வேலையும் செய்யற. மனசுல கொள்ள ஆசைய வெச்சிண்டு ஒண்ணு விடாம செஞ்சு அசத்தற. அப்பறம் எதுக்கு அடிக்கடி கவல படறே. நல்ல வாளுக்கு ஒரு கொறையும் வைக்க மாட்டான்டி பகவான்.'
ரங்கன் அவளை இப்படி ஒவ்வொரு முறையும் ஊக்கப் படுத்தும் போது அவள் மனது என்னவோ இனம் புரியாமல் சந்தோஷிக்கும்.
அப்படித்தான் பகவான் குறை வைக்க மாட்டான்னு நம்பியிருந்தவளுக்கு கர்மா கணக்கில் கோர தாண்டவம் ஆடி இவளுக்கு ஊனத்தையல்லவா கொடுத்து விட்டான்?
மனசு ரங்கன் மறைவு கொடுத்த ஊனத்தை நினைக்கும்போதெல்லாம் ஒவ்வொன்றிலும் பயம் வந்து விடுகிறது. நம்பிக்கை வானளவு மனசுல இருந்தாலும் ஒரு வித பயத்தோடைய எதையும் பார்க்க வேண்டியிருக்கிறது அவளுக்கு.
பத்து கிலோ மீட்டர் தான் மன்னார்குடிக்கும் பூவனூருக்கும். மிஞ்சி மிஞ்சிப் போனால் அரை மணி நேர வேனில் பயணம்.
ஸ்கூல் எஸ்கர்ஷன்னு நினைப்பு இந்த இளம் சிட்டுகளுக்கு. வேன் முழுவதும் 'ஆஆஆ... ஊஊஊ...' இரைச்சல்கள், பாட்டுகள், கேலிகள், கிண்டல்கள், ஜோக்குகள்... கீதாவை ஒரு வழி ஆக்கி விட்டனர் மன்னார்குடி சிட்டுகள்.
பூவனூர் பெரிய கோவில் பக்கம் வேன் நின்ற போது மாலை நாலேகால் மணி இருக்கும்.
வேன் வருவதை பார்த்த உடனேயே பூவனூர் குடிசை வாசிகள் சிலருக்கு புகையிலைச் சிரிப்பு.
'அய்யரு மருமவ கீதா வருது போல இருக்கு கொழலி. ஒரு எட்டு பாத்துட்டு வருவோம். வா புள்ள.'
'ஏஏஏய்... சொக்காயி. வாரீயா நீயும்? பேச்சி இருக்காளா பாரு. அது கிட்டேயும் சொல்லிட்டு கோவி பக்கம் வா. கருக்கல்லேந்து பேச்சி அந்த புள்ளய பத்தி தான் பேசிகிட்டே இருந்துச்சு.'
சின்னாத்தா குழலியிடம். குழலி சொக்காயிடம், சொக்காயி பேச்சியிடம். ஆகாசத்தைப் பார்த்து வாழும் ஏழை ஜனங்களின் ஆகாஷவாணி ஒலிபரப்பு பரிமாற்றங்கள். அவர்களுக்கு கீதாவைப் பார்க்க வேண்டும். புதுப் பெண்ணாக பார்க்க வேண்டும். ஒப்பனை அழகுடன் பார்க்க வேண்டும். மனதார அவளை வரவேற்க போட்டி போட்டுக் கொண்டு வர வேண்டும்.
'சின்னம்மா.. இப்பத்தான் வாரீயளோ? எம்புட்டு அழகு புள்ள நீ. அய்யரு புள்ள உன்ன கண்ணாலம் கட்ட கொடுத்து வெச்சிருக்கணும் புள்ள.'
'இவகள்லாம் உன் கூட படிக்கற புள்ளீகளா? எல்லாருமே மன்னார்குடிங்களா?'
'ஆத்தால்லாம் பின்னாடி வாராகளாக்கும்.'
'பேச்சி, பார்த்தியா கீதா புள்ளய. கருக்கல்லேந்து வண்டி வருதான்னு பாத்துட்டு இருந்தியே. நம்ம ஊரு மருமவ எம்புட்டு அழகா வந்துருக்கு பாரு. இந்த புள்ளங்கள்லாம் கீதாக்கு தோழிகளாம் புள்ள.'
'அது என்னவோ பேச்சி, அய்யருமாருங்க பொண்ணுங்களுக்கு ஒரு தனி கலரும் அழகும் அமைப்பா வந்துடுது. நானும் வெள்ள மாவ போட்டு போட்டு பார்த்தாலும் கலரு ஏற மாட்டேங்குது.'
'அங்குட்டு நவரு கொழலி. சின்னம்மா வந்ததும் வராததுமா இப்படி கண்ணு போடறையே. அவ கெடக்கா கீதா. மொதல்ல மருமவளுக்கு திருஷ்டி சுத்தி போடணும்.'
கொல்லென்ற சிரிப்பு அங்கு. எல்லோரையும் நலம் விசாரிக்கிறாள் கீதா.
'சந்தானம் ரெண்டு தடவ வந்து பார்த்துட்டு தான் போச்சு. நாலரைக்கு வரேன்னு தான் சொல்லிட்டு போச்சு. மூக்காண்டி பொட்டி கடைலேந்து ஜோடா கலர் வாங்கியார சொல்லவா தாகத்துக்கு எல்லாருக்கும்?'
'வேண்டாம் பேச்சி. அம்மா வர வரைக்கும் என் ஃப்ரெண்ட்ஸுகளோட பேசிகிட்டு இருப்போம்.'
ஜமுனா, கமலா, சத்யா, உஷா, பேபி, நந்தினி ... என்று வேனில் இருந்த பட்டாளங்களை அறிமுகப் படுத்துகிறாள் அவர்களுக்கு. ஆனால் அறிமுகங்களை விட அந்த கிராமத்தின் அழகு அவர்களை ஈர்த்திருக்க வேண்டும்.
வண்ணத்துப் பூச்சியை துரத்திக்கொண்டு ஒருத்தி; குளக்கரையில் லயித்து இருவர்; பெரிய கோவில் அழகில் பிரமித்து சிலர் இப்படியாக சுதந்திரக் காற்றுடன் உரசவே அதிக ஆர்வம் காட்டினர்.
சந்தானம் வந்தாச்சு வில் வண்டியுடன்.
'ஏம்மா மஹாராணி. மதியானமே வரேன்னு லெட்டர் போட்டுட்டு இப்பத்தான் வரதாக்கும். உன் மாமனார் மாமியார் ஏன் இன்னும் வரல ஏன் இன்னும் வரலைனு தொளச்சு எடுத்துண்டிருக்கா. டிஃபன் லாம் வேற ஆறிப் போறது. எல்லாம் ஆத்துக்கு போய் பேசிக்கலாம். உன்னையும் அத்தையையும் வில்லு வண்டில அழச்சிண்டு வர சொன்னா. மத்த பேரெல்லாம் நான் நடத்தி அழச்சிண்டு வரேன்.'
'வேண்டாம் சந்தானம். லக்கேஜுகள வண்டில ஏத்திட்டு எல்லாருமே நடந்தே போகலாம். நாங்க வண்டியில ஏறி மத்தவாள மாத்திரம் நடக்க சொல்றது அவ்வளவு மரியாதையா இருக்காது.'
லக்கேஜ்களை ஏற்றிக் கொண்டிருக்கும் போதே சீதா சகிதம் மன்னார்குடி பெரிய சுமங்கலிகளும் வந்தாச்சு.
சீதாவைப் பார்த்து தங்கள் சந்தோஷங்களைக் கொட்டி விட்டு நகர்கின்றனர் குடிசை வாசிப் பெண்கள்.
'கோவில் அழகா இருக்கே. சாமுண்டிய ஒரு பார்வ பார்த்துட்டு வரலாமா?'
காமாக்ஷி மாமி கேட்டவுடன் சந்தானம் இடை மறிக்கிறான்.
'மாமி மன்னிக்கணும். அப்பறம் ஆத்துக்கு போயிட்டு ஆஸ்வாசப் படுத்திண்டு சாயரக்ஷையா நானே உங்கள எல்லாரையும் அழிச்சிண்டு வரேன். எட்டு மணி வரைக்கும் தொறந்திருக்கும் கோவில். அங்க எல்லாரும் ஆர்வமா காத்திண்டிருக்கா.'
எல்லா பெண்களும் நடந்து வர பூவனூர் கிராமமே கன்னிப் பெண்ணாகவும் சுமங்கலியாகவும் காஸ்ட்யூம்களை மாற்றி மாற்றி ஆனந்தப் படுகிறது.
அக்ரஹாரத்திற்குள் நுழைந்த கூட்டத்தில் நிச்சயதார்த்த பெண்ணின் முகம் தெரிந்த அடுத்த நொடி கல்யாணி அம்மன் கோவில் வாசலில் காத்திருந்த பரமசிவம் அண்ட் பார்ட்டி நாயனத்தையும் தவிலையும் கையிலெடுத்து இசைக்க ஆரம்பித்து அவர்களுக்கு முன்னால் நடக்க ஆரம்பித்து விட்டனர்.
நாதஸ்வர ஓசை கேட்டு அவரவர் வீட்டு திண்ணைகளில் தயாராக வைத்திருந்த ஆரத்தி தட்டுகளை எடுத்து கீதாவை வரவேற்கின்றனர். முதல் ஆத்தில் ஆரத்திக்கு முன் சந்தானத்தின் தங்கை உஷா, தயாராக இருந்த ரோஜாப்பு மாலையை போட்டு கீதாவின் கழுத்தை அலங்கரிக்கிறாள்.
மன்னார்குடி மக்கள் வைத்த கண் வாங்காமல் தாங்கள் பார்ப்பது பிரமையில்லையே என்று தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்ளாத குறை.
மாமா வாத்து வாசல் வரும்போது சந்தானம் அனைவரையும் நிற்க சொல்கிறான்.
மாமாவும் மாமியும் ஆத்துக்குள்ளிருந்து வெளியே வந்து அனைவரையும் வரவேற்கிறார்கள். கூடவே இரண்டு அக்காக்கள் குடும்பத்தினரும் சேர்ந்து கொள்கின்றனர். மாமி ஆரத்தி எடுக்கிறாள்.
சபேஸய்யாத்தில் அனைவரும் வந்து விட்டு சிறிது நேரம் கழித்து மன்னார்குடி வாசிகள் தங்க வேண்டிய சுந்தர ராமய்யராத்திற்கு செல்ல வேண்டும்.
'சந்தானம், அவர் இல்ல?'
யார் காதுகளுக்கும் கேட்காத அளவு மெதுவாக கேட்கிறாள் கீதா.
'என்ன? அவரா? அட்ரா சக்க. இதெல்லாம் எப்போலேந்து? இப்படி நீ கேட்கறத நம்ம பய மாத்திரம் கேட்டிருந்தா இன்னேரம் உன்ன அலாக்கா தூக்கியிருப்பான் டி.'
வெட்கம் சூழ்கிறது கீதாவின் முகத்தில் கன்னத்தை சிவக்க வைத்து.
'கேட்கறேன்னோ ? எங்கடா அவர்? ஊர்லேந்து வந்திருப்பாரே.'
'அவனும் சிவா அத்திம்பேரும் ஆலங்குடி வரைக்கும் போயிருக்கா. மாமா யாரையோ கூப்பிட மறந்துட்டாராம். அதான். சித்த நாழில வந்துடுவான் உன்னோட 'அவர்'.'
மன்னார்குடி நட்புகளும் பூவனூர் பந்தங்களோடு அளவளாவி தங்கள் மகிழ்ச்சியை தொடர்கின்றனர்.
தொடரும்.....
No comments:
Post a Comment