Monday, January 3, 2022

உறவுபோட்டமுடிச்சு_102

உறவுபோட்டமுடிச்சு_102

பிப்ரவரி பத்தாம் தேதி அதிகாலை பூவனூர் பாலத்தடியில் பாலாஜி இறங்கி நடந்து அக்ரஹாரத்திற்குள் நுழையும் போது பிரமித்தே போய்விட்டான்.

உடல் முழுவதும் ஆனந்த மின்சாரம் பாயந்த உணர்வு.  கிட்டத்தட்ட அக்ரஹார தெரு முழுவதுமே பந்தல் சூழ்ந்திருந்தது.

அக்ரஹாரத்து சில வீடுகளில் திண்ணைகளில் குவித்து வைக்கப் பட்டிருந்த ஸீரியல் லைட் சரங்கள், வாழை மரங்கள், பனை மற்றும் கமுகு குலைகள், பந்தல்களின் உள் விட்டங்களை அலங்கரிப்பதற்க்காக ஜரிகை பார்டர்கள், பந்தல் தூண்களில் ஒட்ட கலர் காகிதங்கள், கீற்றுகளை மறைக்க வெள்ள வெளேர் துணிகள்....

பூவனூரே ஒரு பெரும் விழாவிற்கு தயாராகிக் கொண்டிருப்பதை உணர்கிறான்.

'நடக்கப் போறது கல்யாணமா?  நிச்சயதார்த்தமா?  எதுக்கு இவ்வளவு பெரிசா?  இவ்வளவு ஏற்பாடுகளை அப்பா எப்படி தனியா?'

மனதில் எழுந்த பல கேள்விகளோடு ஆத்துக்குள் நுழைகிறான்.

'அப்பா..... அம்மா..'

'வாடா வாடா வாடா.... மாப்பிள்ள பையா!!!!'

அப்பாவின் தடபுடலான வரவேற்பில் சிரித்தான்.

'என்னப்பா, நிச்சயதார்தத்த பெரிசா இழுத்து விட்டுண்டிருக்கேள் போல இருக்கே.'

'பந்தலெல்லாம் பார்த்தியாக்கும். அது இருக்கட்டும்.  பத்ம விஜயம் ஆத்துல யாரும் வரலையா உன்னோட?   தனியா அவருக்கு கடுதாசு போட்டுருந்தேனே.'

'வந்துருக்கப்பா.  மாமா, மாமி, அவர் பொண்ணு, புள்ள, மாட்டுப் பொண் எல்லாருமே என்னோட கும்பகோணம் வரைக்கும் வந்தா. அப்பறம் திருவாரூர்ல மாமியோட அண்ணா ஆத்துல தங்கி சாமி தரிசனமெல்லாம் முடிச்சிண்டு நாளைக்கு சாயந்திரமா வரேன்னு சொல்லியிருக்கா.'

'சரி, அம்மாவோட பேசிட்டு காப்பியெல்லாம் முடிச்சிண்டு என் கிட்ட வா.  பேசலாம்.'

சமையல் அறை முற்றத்தில் பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்த ஞானம் பாலாஜியை பார்த்தவுடன் கை வேலைகளை உதறிவிட்டு வருகிறாள்.

'ஏஏஏஏய் பாலாஜி.  எப்படா வந்த?'

'இப்பதாம்மா.'

அரை மணி நேரம் பாலாஜியோடு தன் நிச்சயதார்த்த சந்தோஷங்களை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறாள்.  நடந்தவைகளும் நடப்பவைகளும்  அவளிடம் பிரவாஹமாய் நிறைந்திருப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறான்.

'நிச்சயம் முடிஞ்சு ஒரு வாரம் இருப்பியோன்னோ?'

'இல்லம்மா.. திங்கக் கிழம சாயந்திரமே கிளம்பணும்.  மார்ச் கடைசில பரிட்சையோன்னோ.  பாடமெல்லாம் நிறைய போயிண்டிருக்கும்மா.  லீவு விடட்டும், ஒரு வாரம் என்ன ஒரு மாசம் தங்கறேன், போதுமா?'

அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த போதே வாசலில் பெரிய அளவில் பேச்சுக் குரல்கள்.  பாலாஜி பெட்டியோடு வருவதைப் பார்த்திருக்க வேண்டும்.  இது போதாதா, பாலாஜியை பார்க்க அக்ரஹாரத்து நட்புகள் ஒன்று கூடி அவனை உடனே பார்க்க வருவதற்கு.

'மாஆஆப்ள....எப்படா வந்த?  பூவனூரே எப்படி கள கட்டிருக்கு பார்த்தியா?'

நண்பர்களோடு சிறிய அளவில் சந்தோஷ பரிமாற்றங்களை முடித்து விட்டு அப்பாவிடம் வருகிறான்.  அவரும் உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு கொட்டிய வியர்வைத் துளிகளை துண்டால் ஒத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

'அப்பா உடம்பு நன்னா தேவலாமா?  பரவாயில்லையே, எக்ஸர்ஸைஸ்கள விடாம பண்றேளே!'

'கீதா சொல்லி சொல்லி இப்ப இதெல்லாம் எனக்கு ரொடீனாவே வந்துட்டுது.  அவள மன்னார்குடிக்கு அனுப்ச்சி இருபது நாளைக்கு மேல ஆகறது.  இன்னும் அவ நம்மாத்துலேயே வளைய வந்துண்டிருக்கறதாவே நினைப்பு.  நானாவது பரவாயில்ல, ஒன்னோட அம்மா புலம்பிண்டே இருக்கா சித்தைக்கு ஒருக்க.'

'ஏம்ப்பா.... அப்படின்னா கீதாவ ஏன் அனுப்பிச்சேள்?'

'நன்னா இருக்கே.  எத்தன நாள் அவ நம்மளையே சுத்திண்டு இருக்கறது.  அவ தன்னோட நிச்சயதார்த்த சந்தோஷத்த மன்னார்குடில அவ பழகினவாளோட பேசிக்க வேண்டாமா? அவாளல்லாம் கூப்பட வேண்டாமா நிச்சயதார்தத்துக்கு?  கார்த்தால என்னோட பேசிண்டே இருந்தபோதே உன் கண்ணு அல பாஞ்சிண்டிருந்தது எனக்கா தெரியாது?'

நமுட்டு சிரிப்பை பாலாஜி பதிலாக்குகிறான்.

'பாலாஜி, ஒண்ண ஒண்ணே ஒண்ணுதான் கேப்பேன்.  படிப்ப முடிச்சோன்ன எவ்வளளவுக்கு எவ்வளவு சீக்கிரம் வேலைய தேடிண்டு கீதாவ கல்யாணம் பண்ணிக்கறையோ அவ்வளவுக்களவு நல்லது.  கல்யாணத்த உங்க அத்தையால எப்படி க்ரேண்டா செய்ய முடியுமோ முடியாதோன்னு தெரியாதுங்கறதால தான் கொஞ்சம் பெரிசாவே நிச்சயதார்த்தத்த நடத்த தீர்மானிச்சேன்.  இந்த பிரம்மாண்டம் நாங்க ஆசப் பட்டது, சரியா?  ஏன் இவ்வளவு ஆடம்பரம்ங்கறது உனக்கு தேவையில்லாதது.  கீதா மாத்திரம் நமக்கு நேரத்துல வந்து ஹெல்ப் பண்ணலைனா நீ மேற்கொண்டு படிப்ப கூட தொடர்ந்திருக்க முடியுமோ?  நாங்க பண்றதெல்லாம் கீதாவுக்குன்னு கூட வெச்சிக்கோ.'

'உங்க ரெண்டு பேர நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குப்பா.  வேல கிடச்சோண்ண கல்யாணத்த பண்ணிண்டு எல்லாரும் ஒண்ணாவே இருக்கலாம்ப்பா.  அத்தையும் நம்ம கூடவே இருக்கட்டும்.  உங்களுக்கு ஆக்ஷேபணை இல்லையே?'

'நானும் அப்படித்தான் யோசிச்சிண்டு இருக்கேன்.  நானும் அதுக்குள்ள நிலப் பிரச்சனையெல்லாம் முடிச்சிக்கறேன்.  கீதாவும் படிச்சிட்டு ஒரு உத்யோகத்த தேடிக்கட்டும்.  இனி வரப்போற காலங்கள்ல ரெண்டு பேர் சம்பாத்யத்தில தான் எல்லா குடும்பமும் ஓடப்போறது.'

'உங்க கிட்ட சொல்றதுல என்னப்பா இருக்கு?  கீதாவும் நானும் உங்க கண் முன்னாடியே நன்னா குடுத்தனம் பண்ணி உங்க கிட்ட நல்ல பேர் எடுப்போம்ப்பா.  எங்க மனச புரிஞ்சிண்டு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சதுக்கு ரொம்ப த்தேங்கஸ்ப்பா.'

'சரி, சடகோபனும் சந்தானமும் தான் எல்லா ஏற்பாட்டையும் பார்த்துண்டிருக்கா.  நீயும் சாப்ட்டுட்டு கூட மாட அவாளோட ஏற்பாட்டு வேலைய என் சார்பா பாரு.'

ஊர் வாசிகளைத் தவிர ஆள் நடமாட்டங்கள் அரிதாக இருந்த பூவனூர் தனக்குத்தானே பூக்களைச் சூடிக் கொண்டு சொந்தங்களுக்காகவும் நட்புகளுக்காகவும் காத்துக் கொண்டிருந்தது.

சனிக்கிழமை காலை திருவஹந்திபுரம் சுசீலா அத்தை குடும்பத்தினர் வருகை.  அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் பவானி அத்தை, அத்திம்பேர் மற்றும் ஜானா.

குறித்த நேரத்திற்கு முன்னரே வந்த கேட்டரிங் கோஷ்டியினர்.

இதற்கிடையே பதினைந்து நாட்களுக்கும் மேலோக மன்னார்குடி நட்புகளிடம் நிச்சயதார்த்த விஷயங்களைப் பற்றி சொல்லி சொல்லி சீதாவின் வாயே வலி கண்டுவிட்டது.

'சீதா மாமி, என் பொண்ணு நந்தினியும் கீதாவும் கூடப் பொறக்காத கொறையா பழகிண்டிருக்கா.  நீங்களும் எங்காத்தோட ஆத்மார்த்தமா பழகிண்டு வரேள்.  அதனால நிச்சயதார்த்தத்துக்கு சீர் வைக்கறதுக்கு தேவையான முந்திரி, திராட்சை, பாதாம்.. என்னென்ன வேணுமோ அத்தனையும் எங்க மளிகை கடைலேந்தே நான் கொடுத்துடறேன்.  தனியா இதுக்காக எந்த செலவும் பண்ணாதீங்கோ.  சொல்லிட்டோம்.  இது என் பொண்ணோட உத்தரவும் கூட.  மறுத்தா நாங்க கோச்சிப்போம்.'

செருவாமணி மாமா குடும்பத்தினர் இப்படி சொல்லிவிட்டார்.

'சீதா, ரொம்ப சந்தோஷமா இருக்கு கேட்கறச்சயே.  பகவான் கண்ண தொறந்துட்டார் டி.  கீதா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க பூவனூரே கொடுத்து வெச்சிருக்கு.  இந்த மாதிரி ஒரு பொண்ண ஏத்துக்க எந்த குடும்பம்தான் தயக்கம் காட்டும் சொல்லு.  நிச்சயதார்த்தத்துக்கு சீர் கொண்டு போற பழவகைகள் எல்லாமே எங்காத்து செலவு. எல்லாத்தையும் வாங்கி எங்க கார்லயே எடுத்துண்டு போயிடலாம்.  ஆப்பிள், சாத்துக்குடி, கமலா, திராட்சை, இன்னும் என்னென்ன பழக்கடைகள்ல கண்ணுல படறதோ ....  அஞ்சஞ்சு கிலோவா வாங்கிண்டு போய் உங்க அண்ணா வாத்த அசத்த மாட்டோம்?  வேண்டாம்னு மட்டும் சொல்லிப்பாரு, அப்புறம் உத கொடுப்பேன்.'

பர்மா ஷெல் சுந்தர ராமய்யராத்துல இப்படி பேசினா தட்ட முடியுமா சீதாவால?  மாசம் ஒண்ணாம் தேதி ஆச்சுன்னா, கணக்கு வழக்குன்னு எதுவும் பார்க்காம சுளையா நூறு ரூபாய் கொடுத்து அவள் கெளரவத்த காத்துண்டு வருகிற பர்மா ஷெல் குடும்பம்.  

'அஞ்சு கிலோ திரட்டுப் பால் நான்தான் பண்ணி எடுத்துண்டு வருவேன் சீதா'

நாலு குழந்தைகள வெச்சிண்டு கஷ்டப்படற கபிலாவே இப்படி சொல்லிவிட்டாள்.

'வெள்ளி பஞ்ச பாத்ர உத்தரணி அனாவசியமா வாங்காத சீதா.  எங்காத்துல ஏகப்பட்டது பரண் மேல போட்டு வெச்சிருக்கோம். அதுலேந்து ஒண்ண எடுத்து புதுசு பண்ணிக்கலாம்.'

காளாஞ்சிமோடாத்துல சொல்லியாச்சு.

'எனக்கு ரொம்ப நாளா ஆச சீதா. சின்னதா ரெண்டு வேன் வாடகைக்கு எடுப்போம்.  நம்ம திருப்பாற்கடல் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணா கிளம்பி பூவனூருக்கு போறோம்.  நிச்சயதார்த்தத்த ஒரு கலக்கு கலக்கறோம்.  வண்டி செலவு எங்காத்துது.'

ஹெட்மாஸ்டராத்துல, சிவராமன் வாத்யாராத்துல இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு செலவையையும் தங்கள் சக்திக்கு உட்பட்டு போட்டி போட்டுக் கொண்டு ஏற்றனர்.

இனிமே என்ன பாக்கி இருக்கு?  சீர் பக்ஷணங்கள் மட்டும் தான்.  சீதா கரண்டிய பிடிச்சா ஊரே மணக்கப் போறது.  சீதா கை மணம் பத்தாதுன்னு அண்ணுவும் கிரிஜாவும் கூட மாட உதவி பண்ணப் போறா வேற .

உறவுகள் போடும் முடிச்சு தற்போது ஊர்கள் போடும் முடிச்சாக மாறிக் கொண்டிருக்கிறது.

'ஏம்மா, அவாள்லாம் செலவ ஏத்துக்குறேன்னாலும் வேண்டாம்னு சொல்ல மாட்டியா?'

'கீதா, நான்சொல்லாம இருப்பேனா.   சம்மதிக்கலைனா கெட்ட கோபம் வரும்னு சொல்றா... அடிப்போங்கறா.... ஒதப் பேங்கறா.... இனிமே நம்மளோட பேச மாட்டேங்கறா.... இதெல்லாத்தையும் நம்ம மேல உள்ள பச்சாதாபம் மாதிரி தெரியல.  ஏதோ அதுக்கும் மேல... அன்பால பாசத்தால ..  என்னால அவாள தடுத்து நிறத்த முடியல.  அவாள்லாம் ஒவ்வொண்ணையும் ஏத்துக்கும்போது ஆனந்தம் பொங்கி பொங்கி ஜலமா வருதுடி.  முடியல.  உழச்சா பணம் தான் கிடைக்கும்னு இது நாள் வரைக்கும் நெனச்சிண்டிருந்தேன்.  ஆனா அன்ப சேர்த்துப் போட்டு உழச்சா ஆதரவோடு சேர்ந்து பலன் கிடைக்கும்னு இப்பத்தான் புரியறது.  இப்ப என் கவலையெல்லாம் மன்னார்குடிக் காராள எப்படி அந்த சின்ன கிராமத்துல நன்னா கவனிச்சு அண்ணா அனுப்பப் போறான்னு தான்.'

'அம்மா, இது ஓவர் மா.  ரொம்ப அலட்டிக்காத.  என்னோட வருங்கால மாமனார் மாமியார பத்தியும் எனக்கு தெரியும்.  என்னோட பூவனூர் மனுஷாளப் பத்தியும் எனக்கு தெரியும்.  உங்க மன்னார்குடி காராளுக்கு சாப்பிட வயிறு இருக்கான்னு பார்த்துக்கோ.'

'அதுக்குள்ளேயே புக்காத்த குறை சொன்னா செல்ல குட்டிக்கு கோபம் வரதாக்கும்.'

நடுத்தரவர்க குடும்பங்களில் ஏதாவது விசேஷம் வந்து வாசலைத் தட்டிவிட்டால் அவர்கள் அனுபவிக்கும் ஆனந்த சித்ரவதைகள் இருக்கே ...  அவைகள சொல்லி மாளாதய்யா.

தொடரும்.....

No comments:

Post a Comment