உறவுபோட்டமுடிச்சு_101
சிறுவயதில் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களை பூவனூரில் பார்த்திருக்கிறாள் கீதா. ஆனால் இந்த முறை எப்போதுமில்லாத அளவு சந்தோஷங்கள் அவள் மனம் முழுவதும் பொங்கிக் கொண்டிருந்தன.
ஆத்தைப் பெறுக்குவதென்ன அலம்பி விடுவதென்ன தோரணங்கள் கட்டுவதென்ன, மாமாவின் சங்கராந்தி பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதென்ன.... தன்னை பம்பரமாக்கிக் கொள்வதில் கூட சுகம் காண்கிறாள்.
மாட்டுப் பொங்கலுக்கு கேட்கவே வேண்டாம். கருப்பனையும் ஸ்வர்ணத்தையும் குளிப்பாட்டி விடுவதென்ன, அவைகளின் கொம்புகளுக்கு பெயிண்ட் அடிப்பதென்ன, நெட்டி மாலைகளையும் ஜவ்வந்தி மாலைகளையும் போட்டு அழகு பார்ப்பதென்ன.. அவள் ஆனந்தத்தின் உச்சத்திலே மெய் மறந்திருந்தாள்.
இடையிடையே பாலாஜிக் கனவுகள். ஸ்வர்ணத்தின் வயிற்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். கன்றுக் குட்டியின் கால்கள் தெரிகிறதா முகம் தெரிகிறதா என்ற உணர்வு ஆராய்ச்சிகள் வேறு.
'ஏய் ஸ்வர்ணம். ஏப்ரல் பதினஞ்சு தேதில தான் உனக்கு பிரசவ தேதி வரது. நானும் பரிட்சைய முடிச்சுட்டு வந்துடுவேன். அதுக்கு முன்னாடி அவசரப் பட்டு பெத்துண்டியோ, எனக்கு கெட்ட கோபம் வரும் பார்த்துக்கோ.'
மதியத்தில் நேரம் கிடைத்த போதெல்லாம் பால்ய நட்பு வட்டத்தின் மத்தியில் அரட்டைகள், விளையாட்டுகள், குதுகூலங்கள், பற்களின் பலத்தோடு திகட்டும் அளவு தின்று தீர்த்த கருநீல கரும்புகள்.
ஒவ்வொரு முறையும் சந்தோஷிக்கும் போது மனம் நினைக்கும் இப்போது போல எப்போதும் ஆனந்தமாகவே இருக்கலாமே என்று. அதே மனது பிறகு கடமைகளோடு போராட வைத்து யதார்த்தத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்லும். சந்தோஷ நினைவுகளோடு நம்மை அவ்வப்போது பெருமூச்சைக் கொடுத்து தாலாட்டும்.
உஷாவோடு அரட்டை அடித்துவிட்டு ஆத்துக்கு கிளம்பிய கீதாவை சந்தானம் பார்க்கிறான்.
'அடுத்த மாசம் எட்டு தேதிலேந்து நாலு நாள் லீவு போட்டுட்டேன் கீதா. நிச்சயதார்த்த வேலையெல்லாம் நான் தான் பார்த்துக்கனும்னு உங்க மாமா உத்தரவு. ஒங்க ஆளு எப்ப வரானாம்?'
'தெரியல டா. எனக்கும் லெட்டர் போட கூட நேரம் இல்ல. வயல் வேலைல இருந்ததால மூச்சு விட கூட நேரம் இல்ல.'
'எனக்கும் தான் இவளே. எங்க பாத்தாலும் கரும்பு அறுவடையும் சேர்ந்து நடக்கறதால எங்க மில்லுல எல்லாருக்குமே வேல ஜாஸ்தி.'
'மாமா வேற என்ன பொங்கல் கழிஞ்சோண்ண மன்னார்குடிக்கு போயிட்டு நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் வந்தா போதும்னு சொல்றார். பெரிய ஸ்கேல்ல வேற இழுத்து விட்டுண்டிருக்கார். நானும் கோபப்பட்டு கூட பார்த்துட்டேன். கேட்கல. இப்பத்தான் உடம்பு நன்னா ஆயிண்டு வரார். நீதாண்டா கொஞ்சம் அவாளையும் பார்த்துக்கணும்.'
'நான் பார்த்துக்கறேன். நீ கவலைப் படாதே. அதான் முதலியாரும் இருக்காரே. நீயும் அலச்சல்ல ரொம்ப வாடியிருக்கற மாதிரி தெரியறது. மன்னார்குடி போய் நன்னா ரெஸ்ட் எடுத்துக்கோ.'
சந்தானம் மட்டுமில்லை, அவளுடைய பால்ய நட்புகளும் அவளுக்கு நம்பிக்கைகளைக் கொடுத்தன.
மாமியோடு கும்பகோணம் திருபுவனம் பர்சேஸ்களும் முடிந்தன. மன்னார்குடி திரும்பும் நேரம்.
'சீதா, மன்னார்குடியில உங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சவா எத்தன பேரானாலும் கூப்பிடு. என் சார்பிலேயும் கூப்பிடு. பழைய உடம்பா இருந்தா எல்லாரையும் அழைக்க நானும் ஞானமுமே வந்திருப்போம். கூப்பிடப் போறவாகிட்ட என் நிலமையை சொல்லி புரிய வை.'
'ஏய் சமத்தே, உன்னோட த்திக் ஃப்ரெண்ட்ஸ் ஒருத்தரையும் விட்டுடாத. எல்லாரையும் அழச்சிண்டு முதல் நாள் மத்யானத்துக்குள்ள வந்துடு. அப்பறம் உனக்கு கூட தெரியுமே மன்னார்குடியில ஒரு கண்டக்டர்.. பேர் கூட...... சரவணன். அவனையும் கூப்டு. ரொம்ப நல்லவன். பஸ்ஸுல கூட்டமா இருந்தாலும் டிக்கெட்டுகளுக்கு வழி பண்ணிடுவான் பூவனூர்னு சொன்னாலே.'
'பாலாஜி எனக்கு மருதாணி கொடுக்கறதுக்காக பஸ்ஸையே நிறுத்தினானே, அவனா மாமா?'
இப்படி கேட்க நினைத்து அடக்கிக் கொண்டாள். காதல் ரகசியங்களை கடவுளிடம் கூட பேச முடியாதே.
'சரி மாமா. சந்தானம் எட்டாம் தேதிலேந்தே லீவு போட்டு எல்லாத்தையும் பார்த்துக்கறேன்னு சொன்னான். நீங்க அலையாதீங்கோ அங்கேயும் இங்கேயும். மாமி, நீங்களும் உடம்ப பார்த்துக்கோங்கோ.'
'மாமா, மாத்திரைகள், எக்ஸர்ஸைஸ் எதையும் விடக்கூடாது. அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்.'
'கோபம் வருமா?' சபேசன் இப்படி சொல்லிவிட்டு ஞானத்தோடு சேர்ந்து சிரிக்கிறார்.
'மாமா விளையாடதீங்கோ. ஸீரியஸா இருங்கோ மாமா உடம்பு விஷயத்துல. மாமி, ஸ்வர்ணத்த பார்க்க டாக்டர அழச்சிண்டு வரச் சொல்லி இருக்கேன் சிவலிங்கத்துகிட்ட. ரெண்டு நாளா சோர்ந்து சோர்ந்து போரா.'
'சரிடி. நீ விஜாரப் படாத. நான் பார்த்துக்கறேன்.'
'அப்பறம் மாமா, ஆத்துல அடுக்கி வெச்சிருக்கிற மாப்பிள்ள சம்பா மூட்டைகள விக்க முதலியார் மாமாவ ஏற்பாடு பண்ண சொல்லியிருக்கேன். ஆலங்குடில ஏதோ பார்ட்டி இருக்காம். கூடவோ கொறச்சலோ பார்த்து வித்துடுங்கோ. பணத்த முழுசா வாங்கிண்டு நெல்ல கொடுங்கோ.'
'சரிம்மா'
'மாமா, நம்மாத்து வயலுக்கு பக்கத்துல வைக்கல் குமிச்சி வெச்சிருக்கா. அத நம்மாத்து தோட்டத்துல ஓரமா குமிச்சுட சொல்லுங்கோ. ஸ்வர்ணமும் கருப்பனும் பொழுது போகாத போது தின்னு அச போட்டுண்டு இருப்பா.'
'சரி கீதா'
அடுக்கிக் கொண்டே போகிறாள். சரி சரி என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் மாமாவும் மாமியும்.
'கீதா, அம்மா வெயிட் பண்றா பாரு. வண்டி ரெடியா இருக்கு. நாங்க எங்கள பார்த்துக்கறோம். நீ கிளம்பு முதல்ல. நேரம் ஆயிண்டே இருக்கு பார்.'
எட்டு மாதங்களுக்குள் கீதாவை ஆக்ரமித்த பூவனூர். இன்னும் சிறிது நேரம் கீதா இருந்தால் இவளிடம் வசப்பட்டு அதுவும் அழ ஆரம்பித்து விடும்.
பேசிக்கொண்டே இருந்தவள் சொல்லைப் புறம் செல்கிறாள் கும்பகோணத்தில் வாங்கிய மணியையும் கழுத்துக்கு போட சலங்கைகளையும் எடுத்துக் கொண்டு.
ஸ்வர்ணத்துக்கு இரண்டையும் கட்டுகிறாள். அவள் நெற்றியை கையால் வழித்து ஒரு படக்' திருஷ்டி.
பிறகு கருப்பனுக்கும் திருஷ்டி.
'நான் போயிட்டு வரேன். மாமி கிட்ட சொல்லியிருக்கேன் உங்கள பார்த்துக்க சொல்லி. கருப்பா, ஸ்வர்ணம் புள்ள தாச்சி. நீ தான் அவள ஜாக்ரதையா பார்த்துக்கணும்.'
அவளையும் அறியாமல் கண்ணோரங்களில் எட்டிப் பார்க்கும் கண்ணீர் திவலைகள்.
மாமா மாமியை ஒன்றாக நிற்க வைத்து நமஸ்கரிக்கிறாள். மாமா மாமிக்கும் அவளுடைய சிலிர்ப்பு ஒட்டிக் கொள்கிறது.
வெற்றிலை, களிப்பாக்கு, உறிமட்டை தேங்காய், மஞ்சள், குங்குமத்துடன் வெள்ளி சிமிழ் , கையலக கண்ணாடி, ஒரு ஜாண் சீப்பு, ஒரு கவரில் ரூபாய் ஐநூறு.
வாங்கிக் கொள்கிறாள்.
'இது என்ன மாமி கவர்?'
'கீதா, உன்ன உதப்பேன் பார்த்துக்கோ. கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னோமோன்னோ? நாங்க எது கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்லக் கூடாதுன்னு சொன்னோமா இல்லையா?'
மாமியை ஒரு ஹக். மாமியின் கண்ணீரை கீதாவின் வலது தோளும் கீதாவின் கண்ணீரை மாமியின் இடது தோளும் உப்புச் சுவையோடு ஏற்கின்றன.
அக்ரஹாரத்தை விட்டு வில்வண்டி திரும்பியும் மாமாவும் மாமியும் ஈரக் கண்களோடு அவள் சென்ற திசையை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆத்தில் மீண்டும் ஏதோ ஒரு வெறுமையை உணர்கிறார்கள். அதை அவர்கள் இனி அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தோஷ நாட்களின் உணர்வுகளோடு ஆற்றிக் கொள்ள வேண்டும்.
மன்னார்குடி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த அடுத்த நொடியில் சீதாவின் மடியில் தன் முகம் பதிக்கிறாள் கீதா. சீதாவின் வருடல்களும் தலைக் கோதல்களும் அவளுக்கு இதமளித்துக் கொண்டிருந்தது.
தொடரும்.....
(அவசியம் வாருங்கள் நிச்சயதார்தத்திற்கு)
No comments:
Post a Comment