Monday, January 3, 2022

இருட்டு

 இருட்டு...

வழக்கம் போல் ஐந்து மணிக்கு விழிப்பு வந்து விட்டது ஈஸ்வரிக்கு. வழக்கம் போல் இன்னும் கொஞ்ச நேரம் படுத்திரேன் என்று உடம்பு கெஞ்சியது. மெத்தென்ற இலவம்பஞ்சின் மென்மையை  அனுபவித்தவாறு கொஞ்ச நேரம் அப்படியே கண்களை மூடிக் கிடப்பதில் உள்ள சுகம்.. ஆஹா..! 

ஆனால்  ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இது போன்ற  சுகங்கள்  லபிக்கும். அப்போதும் கூட ஐந்து மணிக்கு விழிப்பு வந்து விடும். ஆனால் எழுந்திருக்க மனம் வராது. பெருமாளின் கை வேறு இவள் மார்பின் குறுக்காக விழுந்து இவளை அழுத்தும். 'ஞாயித்துக்கிழமை தானே...என்ன அவசரம்..கொஞ்ச நேரம் படு..' என்று அதற்கு அர்த்தம். 

அவனுக்கும் பாவம்  ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இந்த லக்ஸரி கிடைக்கும்.  மற்ற நாட்களில் அவனும் பரபர தான். ஐந்து மணிக்கு இல்லாவிட்டாலும் ஆறுக்குள் எழுந்து விடுவான். அவன் ஆபீஸ் சிடியிலிருந்து கொஞ்சம் தூரம். ஒன்றரை மணி நேரம் பயணித்து ரிஜிஸ்தரார் அலுவலகத்தின் உயர மேடையில் ஏறி அமர்ந்து கொண்டானானால் பொழுது பஞ்சாய்ப் பறக்கும்.    பெண்டாட்டியின் இடையில்  குறுக்காய்  கை போட்டு படுத்துக் கிடக்கிற சுகம் எல்லாம் அவனுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான். பெரும்பாலும் அதை அவன் தவற விடுவதில்லை. இந்த அவசர யுகத்தில் எல்லாவற்றுக்குமே நேரம் ஒதுக்க வேணுமாய் இருக்கிறது..

இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லை. எனவே எழுந்தாக வேண்டும். சுகம் கருதித் தாமதித்தால் இந்தத் தாமதம் நாள் பூரா ஏதோவோர் வகையில் படுத்திக் கொண்டேயிருக்கும். குழந்தைகள் டிபன் கேரியரில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் குறையலாம். "சாம்பார் சாதத்துக்கு  துவையல் வெச்சு அனுப்பி இருக்க....என்ன நினைச்சுருக்க நீ..?" என்று பெரியவன் எகிறுவான். ப்ளஸ் டூ தான். ஆனால் மீசை அரும்பி குரல் கனத்து விட்டது. மகள் எதுவும் சொல்வதில்லை என்றாலும் கொண்டு போனதை அப்படியே திருப்பிக்கொண்டு வந்து விடுவாள். ஒரு முறை தயிர்சாதம் கட்டி அனுப்பியதற்கு ' டிபன் பாக்ஸைத் திறந்தேன்...உள்ளே நிலவு" என்று கிண்டலாகக் கவிதை  அனுப்பியிருந்தாள்.

இவளுக்கானால் வழக்கமான பஸ் மிஸ் ஆகி விடும். கவுண்டரில் இவள் போய் உட்காருவதற்கு முன்பே கஸ்டமர்கள் வரிசை கட்டி நிற்பார்கள். மேனேஜரின்   பார்வையில் 'வந்ததே லேட்டு.. மசமசன்னு நிக்காம உடனே வேலையைப் பாருங்க..' என்ற விரட்டல் இருக்கும். மன உளைச்சலில் தவறுகள் நேரலாம். மதிய உணவு தாமதித்துத் தனியாக உண்ண நேரலாம். மாலை வீட்டுக்குக் கிளம்புவதும் லேட்டாகலாம். சங்கிலித் தொடர் போல் நேரும் பிரச்சினைகளுக்குப் பயந்தே எப்படியாவது 5 மணிக்கு எழுந்து விடப் பார்ப்பாள்.

அறை இன்னும் நல்ல இருட்டாக இருந்தது. ஐந்து மணிக்கு இத்தனை இருட்டு சாத்தியமில்லையே என்று நினைத்துக் கொண்டாள். மெல்லிய ஸ்க்ரீன் போட்ட ஜன்னலின் ஊடாக பொழுது லேசாக புலர்ந்து கொண்டிருப்பது தெரியும். காக்கைகள் பறக்கத் தொடங்கியிருக்கும். இவர்கள் வீட்டு ஏஸி பாக்ஸின் மீது புறாக்கள் வந்தமர்ந்து சிறகடிக்கும். கோழி வளர்ப்பவர்கள் யாரும் அருகில் இல்லாததால் சேவல்களின் கொக்கரக்கோ சாத்தியமில்லை. மாறாக நாய்கள் தலைபோகிற அவசரத்தில் தெருவில் ஓடிக் கொண்டிருக்கும். மார்னிங் வாக் கிளம்புபவர்களின் சர்ரக்..சர்ரக்..ஷு சத்தம் ..

இன்றைக்கு இது எதுவும் கேட்கவில்லை. அறைக்குள் ஆழ்ந்த இருட்டு. ஒருவேளை பொழுது இன்னும் புலரவில்லையோ…

திரைச்சீலை விலக்கிப் பார்த்தாள்.  வெளியில் ஒளியின் சுவடே இல்லை. இரவு இரண்டு மணி போல் இருட்டாக இருந்தது. ஆனால் கடிகாரம் ஐந்து என்று காட்டியது. கடிகாரம் தவறோ? செல்ஃபோன் எடுத்துப் பார்த்தாள். அதுவும் ஐந்து என்றது. பிறகென்ன? அதோடு இவளுக்கும் சரியாக ஐந்து மணிக்கு விழிப்பு வந்து விடும். உள் கடிகாரம். அது தவறுவதே இல்லை! 

எழுந்து கதவு திறந்து, க்ரில் திறந்து,  கேட் திறந்து வாசலுக்கு வந்தாள்.  தெரு இருளோ என்று கிடந்தது.  மையிருட்டு என்பார்களே..அது போல. ஒருவேளை வானம் மூடிக்கொண்டிருக்கிறதோ? மழை வரப்போகிறதோ? அப்படியும் தெரியவில்லை. மழைக்கு முன்னால் காற்று இடி மின்னல் போன்ற பக்கவாத்தியங்கள் இருக்குமே..? 

வாசல் பெருக்கிக் கோலம் போடலாமா என்று நினைத்தபோது பயமாக இருந்தது. இந்த இருட்டில்...தனியாக... எவனாவது வந்து கோலம்‌ போடுகிற கோலமயிலின்  செயினை அறுத்துக்கொண்டு போய் விட்டானானால்? சரி..இன்னும் கொஞ்சம் தெளியட்டும்... பிறகு போடலாம் என்று கதவு மூடிக்கொண்டு உட்புறம் வந்தாள். 

பல்தேய்த்து சுவாமி கும்பிட்டு பாலை  அடுப்பில் ஏற்றி.. குக்கரில் பருப்புப் போட்டு .. அந்த இருட்டில் குக்கர் விசிலடித்தது அசாதாரணமாக இருந்தது. ஆனாலும் பரபரவென்று சமையல் முடித்து டிபன் செய்து குளித்து...ஆ..வாசலில் கோலம் போடவில்லை என்பது ஞாபகம் வந்து மீண்டும் வாசலுக்கு வந்தாள்..

வாசல்  இன்னும்‌ இருட்டாகவே இருந்தது. அட.. இது என்ன என்று‌ திகைத்துப் போனாள். எதிர் வீட்டு சரிதாவும் கூட கோலம் போட வாசலுக்கு வந்தவள் அப்படியே  திகைத்து நின்றிருந்தாள்.

"என்ன‌ ஈஸ்வரி..இத்தனை இருட்டாயிருக்கு ?!" 

"அதான் நானும் பார்க்கிறேன்..அஞ்சு மணிக்கே வாசல் பெருக்க வந்து இருட்டாயிருக்கு என்று உள்ள போயிட்டேன். இப்ப மணி ஏழு... இன்னும் இருட்டு ! தெரு விளக்கை வேற அணைச்சுட்டான். பயமா இருக்கே.."

"ஒரு வேளை சூரியன் ஸ்ட்ரைக் பண்ணிட்டானோ..?!'

"ச்சீ..நீ வேற பயங்காட்டிக்கிட்டு!" என்று சிரித்தாள். "சமையல் முடிச்சாச்சு. பசங்களைக் கிளப்பணும். ஆபீஸ் கிளம்பணும். இந்த இருட்டில்...என்ன பண்றதுனே தெரியலையே..!" 

அதற்குள் தெருவில் ஜனங்கள் முடிச்சு முடிச்சாகக் குழுமி    விட்டார்கள். மணிரத்னம் படம் போல் இருட்டில் நடமாடினார்கள். எல்லார் முகத்திலும் வியப்பு. திகைப்பு.

உள்ளே பெருமாள் எழுந்து பல் தேய்த்து  காபிக்காகக் காத்துக்  கொண்டிருந்தான். ஈஸ்வரி பரபரப்பாக உள்ளே வந்து "வெளியில பார்த்தீங்களா?" என்றாள்.

"என்ன வெளியில?"  

"பொழுது விடியவே இல்ல! ஒரே இருட்டு!"

"என்ன கனாக்கண்டியா?" 

"நீங்களே போய்ப் பாருங்க.."

டிவியை ஆன் செய்தாள். தேவாரம் திருவாசகம் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு அந்த விடிகாலையிலும் மாஸ்க் அணிந்த  முதல்வர்    பிரதானமாகத் தெரிந்தார்.  நிருபர்கள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். 

"நேற்று ஆறு மணிக்கு சூரியன் அஸ்தமனம் ஆச்சு சார். வழக்கமா அஞ்சு மணிக்கு உதிச்சுடும். இன்றைக்கு ஏழாகப்போகுது. இன்னும்  காணோம்! என்னாச்சு சார்.. சூரியனை வேறு ஏதாவது கோள் மறைத்து விட்டதா என்ன?" என்றார் ஒரு நிருபர்.

"உதய சூரியனை எவராலும்  மறைக்க முடியாது. மறைத்து விட்டது போல் தோற்றம்  காட்டாலாமே தவிர உண்மையில் ஒருவராலும் மறைக்க முடியாது  என்பது தான் நிஜம்!" என்றார் முதலமைச்சர். 

"அது இருக்கட்டும் சார். இன்னிக்கு ஏன் உதயசூரியன்  இன்னும் உதிக்கலே ? அதுக்கு பதில் சொல்லுங்க?" என்றார் வேறொரு நிருபர்.

"கன்னியாகுமரியிலேயே இன்னும் உதயமாகவில்லை என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது.  மிக அரிதான  நிகழ்வு. விஞ்ஞானிகள், வான சாஸ்திரவியலாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் நாங்களும்  காத்திருக்கிறோம்.  கொஞ்சம்   பொறுமை காக்க வேண்டும் ப்ளீஸ்" என்றார் முதல்வர்.

"தெருக்கள் இருட்டாக இருக்கிறது. ஆனால்  வழக்கம் போல் ஆறு மணிக்குத் தெரு‌விளக்குகளை அணைத்து விட்டீர்கள். இது சரியா?" என்று கேள்வி எழுப்பினார் ஒரு நிருபர். 

"அது ப்ரோக்ராம் செய்யப்பட்ட ஸ்விட்ச். ஆட்டோமேட்டிக்காக  ஆறு மணிக்குத்  தானாக அணைந்து விடும்.  மின்சார அமைச்சரைத் தொடர்பு கொண்டு ஆவன செய்கிறேன். கவலைப்படாதீர்கள்"

"இன்றைக்கு ஸ்கூல்ஸ் இருக்குமா சார்? இந்த இருட்டில்  குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது?" என்று கவலைப்பட்டார் ஒரு குடும்பத் தலைவி.

"பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதற்கு பதிலளிப்பார்" என்றார் முதல்வர். "யோசித்துக் கொண்டிருக்கிறோம். சிறிது நேரத்தில் அறிவிப்பு வரும்" என்றது கல்வித்துறை.

"இந்த இருட்டில் பெண்கள் எப்படி வெளியே போக முடியும்? இன்று அலுவலகங்கள் இயங்குமா?" என்று கேள்வி எழுப்பினார்  ஒரு  நிருபி.

"நிலைமைகளைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும்"-முதல்வர்

முதல் நாள் மாலை மறைந்த சூரியன் மறுநாள் காலை உதிக்கவில்லை என்பதே உலகம் பூராவும் பெரும் பேச்சாக இருந்தது.  எப்பொழுதும் இப்படி ஆனதே இல்லையே என மக்கள் திகைத்தனர். உலகை ஏதும் பெரும் அபாயம் சூழுகிறதோ என்ற பயம் எல்லாருக்கும். 

பூமியில் பாபம் அதிகரித்து விட்டது அதுதான் சூரியனே கண்ணை மூடிக்கொண்டு விட்டான் என்றார் ஒரு பெரியவர்.  கோவிலில் சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டார்கள் சிலர். ஏற்கெனவே சூரியனார் கோவில்களில் பூஜைகள் ஆரம்பமாகி இருந்தது.  இது இன்று மட்டும் தானா..அல்லது இனி எப்போதுமே இப்படித்தானா?

தென் துருவத்தில் சூரியன் உதிக்கவில்லை  என்ற தகவல் வடதுருவ மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியது. அங்கு உதிக்கவில்லை என்றால் இங்கு மறையாதோ? ஐயோ..இருபத்து நான்கு மணி நேரமும் சூரிய ஒளியில்.. வெப்பத்தில் எப்படித் தாக்குப் பிடிப்பது..?! 

இருளையும் பொருட்படுத்தாமல் டிவி க்ரூக்கள் நீட்டிய மைக்குகளுடன் தெருவில் இறங்கி விட்டார்கள். இது போன்ற சந்தர்ப்பம் இனி ஜென்மத்துக்கும் அமையுமா என்ன?

"சொல்லுங்கள் டாக்டர்.. சூரியன் உதிக்காவிட்டால்  விளைவுகள் என்னவாக இருக்கும்..?"

அப்பொழுது  தான் எம்பிபிஎஸ் முடித்திருந்த அந்த இளம் டாக்டர், மார்னிங் வாக்கில் தனக்கு இப்படியொரு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்.  கொஞ்சமாகத் தலையை கலைத்து விட்டுக்கொண்டு நேராக கேமிரா பார்த்து பேசத் தொடங்கினார்..

"பொதுவாக காலைச் சூரியன் என்பது நமக்கு உற்சாகம் தரும் ஒன்று.  ஒரு நாளின் ஆரோக்கியமான துவக்கம் அது. அரைமணி நேரம் சூரிய ஒளி உங்கள் உடம்பின் மீது படும்படி இருந்தால் உங்கள் உடலில் வைட்டமின் D  அதிகரிக்கிறது. அது நம் எலும்பு சிஸ்டத்தை பலப்படுத்துகிற மூலப்பொருள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தோல் நோய்கள் வராமல் அது நம்மைப் பாதுகாக்கிறது.  நம் எனர்ஜி லெவல் கூடுகிறது.  மிக முக்கியமாக கான்ஸரிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம். தாவரங்களுக்கு ஸ்டார்ச் எவ்வளவு முக்கியமோ அதுபோல மனிதர்களுக்கு வைட்டமின் D முக்கியம்.."

"நன்றி டாக்டர். மிக அருமையாக  விளக்கினீர்கள். எங்கள் நெட் வொர்க் சார்பாக உங்களுக்கு வந்தனம்."

மைக் ஒரு குடும்பத் தலைவியின் பக்கம் திரும்புகிறது.  "நீங்க சொல்லுங்க அம்மா..சூரியன் உதிக்காவிட்டால் என்னவாகும்?" 

"என்னவாகும்? துணி காயப்போட முடியாது. மிளகாய் தனியா காய வைக்க முடியாது. வத்தல் வடாம் பிழிய முடியாது.  எப்பவும்  லைட் எரிந்து கொண்டிருந்தால் கரண்ட் பில் ஜாஸ்தியாவும்.  பூச்சிபொட்டுகள் வீட்டுக்குள் படையெடுக்கும்.  சமூக  விரோதிகளுக்கும் கொண்டாட்டம் தான்.."

"மிக நன்றாகச் சொன்னீர்கள் மேடம். உங்கள் பொது அறிவு வியக்க வைக்கிறது.  நன்றி."

"நீங்க சொல்லுங்க..சூரியன் உதிக்காட்டா என்னவாகும்?" மைக் ஒரு கீரைக்காரியின் முன்னே நீட்டப்படுகிறது..

"என்னத்தை ஆவும் ? மருமக இன்னும் ரெண்டு பெத்துப் போடுவா. ஏற்கெனவே மூணு பொட்டைப் பசங்க…இத்தோடு நிறுத்திக்கங்கன்னு சொன்னா  கேட்டாத்தானே?  ஒரு ஆம்புளைப் பையன் வேணுமாம் அவளுக்கு. அது என்ன எழுதியா குடுத்திருக்கு?"

நிருபி புன்னகைத்துத் திரும்பினாள்.

"மேடம் ஈஸ்வரி...இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"நானா ?! " ஈஸ்வரி திடுக்கிட்டுக் கண் விழித்தாள். 

"ஆமாம்.. நீங்க தான். பூமியில் சூரியன் உதிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள்?"

"சூரியன் உதிக்கலேன்னா.." என்று மெதுவாக முணகினாள்.."இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவேன்.." 

பெருமாள் சட்டென்று குனிந்து அவள் வாயருகே காதை வைத்தான்.  "நர்ஸ்...ஓடி வாங்க.. என் வொய்ஃப் பேசுறா ! என்னவோ சொல்லுறா! நீங்களே கேளுங்க!"

டாக்டர் வந்து அவள் நாடி பிடித்துப் பார்த்தார். தாடைகளைத் தட்டினார். விழிகளை அகற்றிப் பார்த்தார். "பேசினார்களா? கேட்டீர்களா?" 

"ஆமாம் டாக்டர்..என்னவோ சொன்னா…இன்னும் கொஞ்ச நேரம்  தூங்குவேன் என்பது போல.."

"அப்படியென்றால் அவருக்குப் பிரக்ஞை திரும்புகிறது என்று அர்த்தம். கோமாவிலிருந்து மீண்டு வருகிறார்.. கங்க்ராட்ஸ் மிஸ்டர் பெருமாள். அவர் விழிக்கோளம் நார்மலாக அசைகிறது பாருங்கள்..!"

டாக்டர் ஏதேதோ கருவிகள் எடுத்து அவள் கைமூட்டு..கால் மூட்டு..விரல் மூட்டுக்கள் எல்லாவற்றிலும் தட்டித் தட்டிப் பரிசோதித்தார். 

"மிஸஸ் ஈஸ்வரி.. கொஞ்சம் கண்களைத் திறந்து எங்கள் எல்லாரையும் பாருங்களேன் ! உங்கள் கணவர் மகன் மகள் எல்லாரும் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஏதாவது பேசுங்கள் ஈஸ்வரி?"

ஈஸ்வரி மெதுவாகக் கண்களைத் திறந்தாள். பெருமாள் தான் முதலில் தட்டுப்பட்டான். "எப்படி இருக்க ஈஸ்வரி?" என்றான்

"எனக்கு என்ன?" என்றாள் மெதுவாய். சுற்றுப்புறத்தை  ஆராய்ந்தாள். வெள்ளுடை நர்ஸ்கள்...ஐவி ப்ளூயிட்..  கைகளில் ஏறிக்கொண்டிருந்த சலைன்..

"நாம எங்க இருக்கோம்?"  என்றாள்.

"ஆஸ்பத்திரியில் ஈஸ்வரி.."

"ஆஸ்பத்திரி எதுக்கு?"  

"உனக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு ஈஸ்வரி. அன்னிக்கு ராத்திரி கட்டில்ல இருந்து திடீர்னு உருண்டு விழுந்துட்டயா.. கட்டில் கால்ல தலை இடிச்சு மயக்கமாயிட்ட. ஒண்ணுமே தெரியல உனக்கு. இருட்டு..இருட்டுன்னு என்னமோ சொல்லிட்டு இருந்த. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நினைவு இழந்துட்ட! இந்த டாக்டர் தான் மூணு நாளாப் போராடி உன்னை மீட்டு எடுத்து இருக்கார். டாக்டருக்கு தேங்க்ஸ் சொல்லு ஈஸ்வரி."

"தேங்க்ஸ்" என்றாள் டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து.

•••

கதையைப் படித்து முடித்தான் சரவணன். அவன் மனைவி ஈஸ்வரி எழுதிய கதை.  நிறைய எழுதுவாள். சிலது படித்திருக்கிறான். ஆனால் இது கதை தானா? அல்லது தன்  வாழ்க்கையை  ஒப்பித்திருக்கிறாளா? கதாநாயகியின்  பெயரே ஈஸ்வரி தான் என்பதைக்  கவனித்தான்.

'சூரியன் உதிக்கலைன்னா என்ன பண்ணுவீங்க..?'

'இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவேன்!'

அந்த வார்த்தைகள் அவனுள் ஒரு  திகைப்பை ஏற்படுத்தியது.  பக்கத்தில் படுத்திருந்தவளைத் திரும்பிப்  பார்த்தான்.  கண்களுக்குக் கீழ் கருவளையம். லேசாகக் கோடுகள்! திருமணத்தின் போது குவளை மலர் போல் இருந்த கண்களா இவை?! இப்போது ஆளே புகை படிந்த ஓவியம் போல..

மனது வலித்தது.  இவளை எல்லாரும் ரொம்பவே  உபயோகப்படுத்திக் கொண்டு விட்டோமோ?  செய்யக் கடமைப்பட்டவள் என்று நினைத்து விட்டோமோ? இவளையும்  தாங்கள்  கவனித்திருக்க வேண்டுமோ? 

அவள் தலையை லேசாகக் கோதி விட்டான். கண் கலங்கியது.  நிச்சயம் இதற்கு ஏதாவது  செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

••••பானுமதி கண்ணன்.

No comments:

Post a Comment