Sunday, January 9, 2022

சென்னை To பெங்களூரு பகுதி 23

 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🌹🌹🙏🏻🙏🏻

சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 23

அங்க கேட்ட கதைய வச்சு கூகுள்ல தேடி இவரா எதோ அடிச்சு வுடறார் படிங்கோ..

தூரத்திலேயே ஜொலிக்க ஆரம்பித்துவிட்டது தங்கக் கோயில். ‘பின் ட்ராப் சைலன்ஸ்’ என்பதெல்லாம் இதற்கு மொக்கையான உதாரணமாக இருக்கலாம். உலகின் மொத்த அமைதியையும் ஓரிடத்தில் கொட்டி வைத்தாற்போல், அப்படி ஓர் அமைதி இருக்கிறது கோயிலுக்குள். அது அப்படியே மனதுக்கும் பரவுகிறது. போதி மர தவத்துக்குப் பிறகு, நேரடியாக புத்தர் இங்கு வந்திருப்பார்போல. அன்பு வழியும் கண்களுடன் சிலையாக அமர்ந்து கருணையைப் போதிக்கிறார். 

இங்கு ஒலிக்க வேண்டிய ஒரே நாமம் - ‘புத்தம் சரணம் கச்சாமி!’ திபெத்திய மக்களின் கைவிற்பனைக் கூடம் ஒன்றும் வைத்திருந்தார்கள். கலைப் பொருட்கள் சிலவற்றை பார்சல் வாங்கியபோது, புத்த பிட்ச்சுக்கள் இன்னும் கருணை வழிய வழியனுப்பி வைத்தார்கள்.

புத்த மதத்தின் மிக முக்கியமான அம்சம் தியானம். 

தன்னை உணர, ஞானம் பெற, புத்தரை அடைய, புத்தராக மாற தியானம் உதவுகிறது என்பது இவர்களுடைய கொள்கை. 

அவர்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதில்லை. கண்களைத் திறந்து கொண்டுதான் தியானம் செய்கிறார்கள். 

அவ்வாறு கண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்யும்போது, சுற்றிலும் இருக்கும் காட்சிகளால்- ஏற்படும் சலனங்களால் மனம் அலைபாயாமல் இருக்க, உடலும் மனமும் ஒன்றுபட்டு தியானம் செய்ய "மண்டலா' என்னும் ஓவியத்தைப் பயன்படுத்துகின்றனர். 

இது பிரபஞ்சத்தைப் பிரதிபலிக்கும் சின்னமாம். இந்த ஓவியத்தின் நடுப்பகுதியை உற்று நோக்கி தியானம் செய்தால், தியான நிலையை மனம் வெகு சீக்கிரமாக அடையும் என்றும்; மனம் மிகவும் உன்னதமான நிலையை அடையும் என்றும் கூறுகிறார்கள். 

இதெல்லாம் கூகுள பாத்து இவரா அடிச்சி விடறது. ஆத்துல த்யானம் பண்ண சொன்னாலோ ,இந்த மாதிரி வெளியில ஒரு எடத்தை பார்க்க வந்தாலோ ஒரு எடத்துல ஒக்காராம சுத்திண்டுனா இருப்பர். 

இப்பவும் இவர் எதை பார்க்கிறார்..? யாரும் போகாத எடத்தை மிதிச்சோம்னு பெருமையா சொல்லிக்கறதுக்காக வந்துட்டு எங்கட்ட வழக்கப்படி பார்த்தது போதும்..நாம ஒன்னும் ட்ரைவர் வச்சிண்டு கார்ல வரல.. பஸ் பிடிச்சி மடிகெரேல ரூம் போட்டாதான் நாளைக்கு தல காவேரி போக முடியுங்கற்றார். தல விதிய நெனச்சு ண்டு ரோடுக்கு வரோம். 

அரை மணி காத்திருந்து மடிகேரே பஸ் ஏறரோம்..

வழக்கப்படி பஸ்ல யாருக்கிட்டயோ பேச்சுக்கொடுத்து வழில என்ன விசேஷம்கறார் 

அந்த ஆள் கன்னடத்துல குடகு மாவட்டத்தில், காவிரி நதியில் அமைந்துள்ள துபாரே எனும் சிறு தீவில் உள்ள யானைகள் முகாம். இருக்குன்னு சொல்றதுக்கும் இவர் எல்லிதேன்னு கேக்க அந்த ஊர் வரதுக்கும் சரியா இருக்கு. இல்லி எலியன்னு அவன் சொல்ல யானையா எலியான்னு குழம்பிண்டே ஒடனே என்னையும் எறங்க சொல்றார். 

சூரியன் மறைஞ்சு இருட்ட ஆரம்பிக்கறது. ஒரு மலைக்காட்டுல எறங்கி நிக்கறோம். எனக்கு கொலை நடுங்கறது.



No comments:

Post a Comment