🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🌹🌹🙏🏻🙏🏻
சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 22
அப்பாடா இதோ கான்டீன் மாதிரி எதோ இருக்குன்னு இவர்ட்ட காட்டறேன். உள்ள ஒரு திபெத்திய துறவி வரவேற்கிறார்.
திபெத்திய பிரெட் சாப்பிடுங்கள் என்று அழைத்துச் சென்றார் ..காத்திருந்தோம். ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு புன்னகையுடன் ஒரு சிறு பிளாஸ்டிக் தட்டை நீட்டினார். வெள்ளையாகவும், தடிமனாகவும், கொழுகொழுப்பாகவும், பிசுபிசுப்பாகவும் இருந்தது. அது பிரெட்டா அல்லது பிரெட்டுக்கான மூலப்பொருளா? துறவி விழுந்து விழுந்து சிரிக்கறார் பிறகு சொல்றார் கவலையையும் தயக்கத்தையும் விட்டொழித்தால்தான் துறவியாக முடியும்.'நாங்க என்ன துறவியறத்துக்கா இங்க வந்தோம்னு இவர்ட்ட முணுமுணுக்கறேன்.
பசிக்கு எப்படியோ முழுங்கி வைக்கறேன். அடுத்ததா டீ வர்றது. திபெத்திய வெண்ணெய்த் தேநீர்; என்பது போ சா என்றும் போட் சா என்றும் சா சுமா என்றும் குர் குர் என்றும் திபெத்திய, சீன, லடாக் மொழிகளில் அழைக்கப்படும் திபெத்தியத் தேநீர் இதுங்கறார். நீங்க எப்படி அழைச்சா எனக்கென்ன்ன்னு அதையும் முழுங்கறேன்.
அப்பறம் எங்களை அழைச்சிண்டு போய் சுத்தி காட்டறார். எனக்கு தேசிகர் ஸ்தோத்தரம் நுழையற மாதிரி இந்த பேரெல்லாம் வாய்ல நுழையல..இனிமே இவர் சொல்வார்.
இதனை நம்த்ரோலிங் மடாலயம் என்றும் சொல்லலாம். முழுப்பெயர், தெக்சோக் நம்த்ரோல் ஷெட்ரூப் டார்க்யெலிங்.
ஆட்டோவைவிட்டு இறங்கி, மடாலயத்தின் அழகான, ஆடம்பரமான நுழைவாயிலை நெருங்கும் போதே வித்தியாசத்தை உணரமுடியும். மலைப்பாம்பு போல் நீண்டிருக்கும் அமைதியான மைதானம். அதன் முடிவில் ஓங்கி உயர்ந்து நிற்கும் வண்ண மடாலயம். மைதானத்தையொட்டி அமைந்துள்ள குடியிருப்புகள் துறவிகளுக்கானவை என்பதை உணர்த்தும் வகையில், சிவப்பு அங்கிகள் கொடிகளில் க்ளிப் போட்டு உலர்த்தப் பட்டிருந்தன. வான் கோழிகளும் வாத்துகளும் முயல்களும் துள்ளிக் கொண்டிருக்கும் பச்சைப் புல்வெளிகளைக் கடந்து சென்றால் மடாலயம் வரவேற்கிறது.
அடித்தளம், தூண், கூரை, கதவு, கதவின் கைப்பிடி, சுவர் ஓவியம் என்ற மடாலயத்தின் ஒவ்வொர் அங்குலத்திலும் திபெத்திய கட்டடக்கலை. (சீன மற்றும் இந்திய அழகியல் அம்சங்களை உள்ளடக்கியது திபெத்திய கட்டடக்கலை). அருகில் திபெத்திய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெரிய மணி. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அந்த மணியை ஆட்டியும் குலுக்கியும் நகர்த்தியும் பார்த்தனர். சிலர் ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர்.
காலணிகளை அகற்றிவிட்டுப் படிக்கட்டுகளில் ஏறினால், திபெத், கண்முன் விரிகிறது. மடாலயத்தின் முகப்பில் ஒரு துறவி அமர்ந்திருக்கிறார். தொழுகை நேரம் தொடங்குவதை இவர்தான் அறிவிப்பார். பெரிய வெங்கல முரசு இவர் முன்னால் பொருத்தப்பட்டிருக்கும். ஆர்கெஸ்ட்ரா நடத்தும் லாவகத்துடன் இவர் அந்த வெங்கல முரசை விதவிதமாக இசைக்கிறார். திடீரென்று நாலாப்புறத்தில் இருந்தும் துறவிகள் திரண்டு வருகிறார்கள். பாலகத்துறவி, இளையத் துறவி, நடுத்தர துறவி, பொக்கை வாய் துறவி, இந்திப்பட ஹீரோ துறவி அனைவரும் பிரவேசிக்கும் வரை வெங்கல மணி இசைக்கப்படுகிறது.
வழிபாடு நடைபெறும்போது அனுமதி இல்லை' என்கிறது அறிவிப்புப் பலகை. ஆனால் வெளியில் இருந்து பார்க்கலாம்; கேட்கலாம். கருஞ்சிவப்பு அங்கியும் இளமஞ்சள் ஆடையும் உடுத்தியிருக்கும் நூற்றுக்கணக்கான துறவிகள் நீளநீளமான வரிசைகளில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறார்கள். எதிரில் பிரம்மாண்ட தங்க புத்தர். திபெத்திய மொழியில் அச்சிடப்பட்ட தொழுகைப் புத்தகம் ஒவ்வொருவரின் முன்னாலும் விரிந்து கிடக்கின்றன. சிறு சிறு இடைவெளியுடன் கூடிய ஓதுதல் ஆரம்பமாகிறது. ஆளுயர டரம்பட்டை இரு துறவிகள் அவ்வப்போது இசைக்கிறார்கள். ஒவ்வொரு தொழுகையும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடைபெறுகிறது.
தற்போதைய பதினான்காவது தலாய் லாமா 1959ல் திபெத்தில் இருந்து வெளியேறி தர்மசாலாவில் அடைக்கலம் புகுந்தார். அவரை தங்களது மானசீக ஆன்மீகக் குருவாகவும் அரசியல் தலைவராகவும் வரித்துக் கொண்ட ஆயிரக் கணக்கான திபெத்தியர்கள் தலாய் லாமாவின் பாதையைப் பின்தொடர்ந்து இந்தியாவுக்கு வர ஆரம்பித்தனர். தர்மசாலாவில் சிலருக்கு இடம் கிடைத்தது. பலர், இந்தியா முழுவதும் பரவிச் சென்றனர். திபெத்திய பௌத்தத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லும் பணியை இவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்படி திபெத்தில் இருந்து வெளியேறியவர்தான் இந்த மடாலயத்தைத் தொடங்கி வைத்த புனித பேமா நோர்பு ரின்போச்சே.
பேரைக்கேட்டதும் இங்க எறங்காம நேரா கூர்க் போயிருந்தா அழகா இட்லி வடை சாப்ட்டிருக்கலாமே ‘வட போச்சேன்னு ‘நினைச்சுக்கறேன்.
இவர் ரொம்ப சுவாரசியமா கதை கேட்டுண்டு வரார்.
No comments:
Post a Comment