ஒம்பதேகால் வண்டி
---------------------------------__ரமணி
சதர்ன் ரயில்வே அதன் முன்னாள் அடையாளமான ஸ்ரீரங்கம் ஐயங்கார் ரயில்வே ( SIR ) என்பதைத் தொலைத்துக் கொண்டிருந்த கடைசிப் பருவம் அது.
தொன்றுதொட்டு ப்ரிட்டிஷ் வழக்கத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்களும், கார்டுகளும் ட்ரைய்ன்களை நம்பர் வைத்துதான் கூப்பிடுவார்கள்.
ஆனால், எங்கள் பயணிகளின் குல வழக்கம் அவற்றின் நாமகரணம் அவை வரும் நேரத்தை வைத்துத்தான். வரும் நேரம் என்றா சொன்னேன்? தவறு. வரவேண்டிய நேரம் என்று திருத்திக் கொள்ளவும்.
ஒம்பதேகால் வண்டி என்று செல்லமாய் அழைக்கப்படும் ஆஃபிஸ் வண்டி ரொம்ப ப்ரசித்தி.
அதற்கு முன்பு அது பத்து மணி வண்டியாகவும் அமாவாசை நாட்களில் இன்னும் கொஞ்சம் லேட்டாகவும் ஸ்ரீரங்கத்திற்கு வந்து சேரும்.
காலை ஆறேகாலுக்கு அதன் அக்கா ( ரயில் பெண்பாலில்லையா? ) ஒர்க் ஷாப் வண்டியாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வந்து போகும்.
ஒம்பதேகால் வண்டிக்குதான் ஒய்யாரம் எல்லாம். அதில்தான் கல்லூரி யுவன்களும் யுவதிகளும் தத்தம் தந்தைமார்கள் சகிதம் பயணித்தாலும் கண்கட்டு வித்தையால் அவர்களைக் குருடாக்கி இளமை விளையாட்டுக்களை அளவோடு ஆடிக்கொண்டிருப்பார்கள்
அப்போதைய ஸ்ரீரங்கம் ஸ்டேஷனுக்கு ரெண்டே ரெண்டு ப்ளாட்ஃபார்ம்கள். நடுவில் மரங்கள். உட்கார்ந்துகொள்ள கல் பெஞ்சுகள்.
SR என்று பெஞ்சில் செதுக்கியதன் பக்கத்தில் ஒரு ராஜா அம்பு துளைத்த இதயத்தில் தன் ராதாவிற்கான காதலைப் பொறித்திருப்பான். பல ராஜாக்களும் ராஜாக்களின் ராதாக்களும் " கண்ணுக்குள் நூறு நிலவா " என பாரதிராஜாவின் வேதம் புதிதை அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள்.
ஒன்பதேகால் மணி வண்டிக்கு, முன்னெச்சரிக்கையாகவோ, மாமிகளோடு சண்டையான காரணத்தினாலோ அல்லது பெரும்பாலும், ஸ்டேஷனுக்கு வெளியிலிருக்கும் மணி ஐயர் கடையில் பூரி கிழங்கு சாப்பிடும் உத்தேசத்திலோ எட்டரை மணிக்கே வந்து பெஞ்சில் உட்கார்ந்து பறவைகளின் எச்சத்தை வாங்கிக்கொண்டு வடக்கு நோக்கிப் பார்த்துத் தவமிருப்பவர்களும் உண்டு.
வேலைக்குச் செல்லும் சில பெண்கள் குளித்துவிட்டுப் புடவையை மட்டும் கட்டிக்கொண்டு வந்து தலை சீவி சிங்காரித்தல்களையும், டிஃபனையும் ஸ்டேஷனுக்கு வந்தே முடித்துக்கொள்வர்.
உத்தமர்கோவிலிலிருந்தே தன் வருகையைப் பறையறிவித்து, கொள்ளிடப் பாலத்தில் படபடத்து நீராவிப் பெருமூச்சை விசிறிக்கொண்டு கருங்கூந்தல் அலைபாய ஒம்போதேகால் வண்டி ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் கிறீச்சிட்டு நிற்கும்.
நாலுகால் பாய்ச்சலில் சில லேட் மாமாக்கள் பரபரப்பாய் வந்து தன் சகாக்களைத் தேடுவார்கள்.
வரதூ..... என்ற சத்தம் ரயிலின் கூ ஊ....வுடன் இணைந்து கேட்க ஓடிவந்தவர்கள் பெட்டியைக் கண்டுபிடித்துத் தாவி ஏறுவார்கள்.
அந்த வண்டிக்குள் சுழலும் உலகமே வேறு.
பஞ்சகச்ச மாமாக்கள் சிலர் கழற்றின சட்டையை ஜன்னலுக்கு மேல் வளைந்திருந்த கொக்கியில் மாட்டிவிட்டு, ராம நாம பஜனில் ஐக்கியமாகி, உச்சஸ்தாயில் சஞ்சரிக்கும்போது காலையிலேயே வயிறுமுட்ட சாப்பிட்டு விடுவதால் வரும் நிறுத்த முடியாத எக்ஸ்பிரஸ் ஏப்பத்தை லாவகமாக பெளன்ஸரைக் கெந்திவிடும் பேட்ஸ்மேன்போல அதன்போக்கில் வெளியேற்றுவார்கள்.
ஹிண்டு சகிதம் சிலபேர், ஓசியில் பேப்பரை இதழ் இதழாகப் பிரித்து சிலபேர், க்ராஸ்வொர்ட் சிலபேர் என சமூகம் பிரிந்து கிடக்க அந்த காலத்திலேயே அந்த பேப்பர் உதவ, தூங்கமுடியாத சிலபேர் ஆபிச்சுவரி காலத்தில் பேருரக்கத்தில் ஆழ்ந்தவர்கள் யார் எனப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
காவிரிப் பாலம் வரும்வரை படியில் தொங்கிக்கொண்டோ அல்லது அதிக சாகசமாக வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே கம்பார்ட்மெண்ட் விட்டு கம்பார்ட்மெண்ட் ( வெஸ்டிப்யூல் இல்லாத காலம் அது ) தாவி வந்து பெண்கள் பெட்டியில் கண்வைத்திருந்த ராஜாக்கள் சற்றே உயிர் பயம் வர உள்ளிழுத்துக்கொண்டு தலை சிலுப்பிக் கொள்வார்கள்.
இவர்கள் எஸ் ஆர் சி பெண்கள் காலேஜின் ஹாஸ்டல் வராண்டாக்களில் தென்படும் தேவதைகளுக்கும் உச்சிப்பிள்ளயாருக்கும் வந்தனம் சொல்லி முடிக்குமுன்,வண்டி டவுன் ஸ்டேஷனிற்குள் நுழைந்து முதல் டவுன் லோடிற்கு நிற்கும்.
பள்ளிக்குச் செல்பவர்கள் சின்ன புத்தகங்களையும் பெரிய பயத்தையும் சுமந்துகொண்டு இறங்க, கல்லூரி இளசுகள் பெரிய புத்தகங்களுனுடன் சின்ன பயத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு அல்லிமால் தெரு, பட்டர் ஒர்த் ரோட் எனத் தமிழைக் கலப்புமணம் செய்துகொண்ட ஏதேதோ தெருக்களின் வழியே நடந்தேகுவார்கள். ஒம்பதேகால் வண்டி சடுதியில் ஏதோ சாபத்தின் வசப்பட்டு இளமையை இழந்தது போல் தோன்றும். அவர்கள் போகட்டும்.
நாம் ஒம்பதேகால் வண்டிக்குள் வருவோம். டவுன் ஸ்டேஷனில் கவர்ந்துகொண்ட புது அரசாங்க அடிமைகளோடும் ஜாலி ஜமால் மற்றும் தேசிய கல்லூரி ஹீரோக்களோடும் வண்டி, வாழைத்தோப்பும் தென்னந்தோப்பும் வரப்பு கட்டி வகிடெடுத்த தண்டவாளப் பாதையில் இளம் வெய்யிலில் பளபளக்க தொண்டைகட்டின குரலில் இறங்கிப்போன இளசுகளை நினைத்து புலம்பும்.
சீட்டாட்ட ஸ்வாரஸ்யத்தில் டவுன் ஸ்டேஷனில் இறங்காமல்," எல்லாம் ஜங்ஷன் போய்ட்டு திரும்பி பஸ்ல வந்துக்கலாம் " என்று விட்ட காசைத் திரும்பி எடுக்க விரும்பும் கும்பலோடு, வெற்றிலையும் புகையிலையும் வாயில் குளம்கட்டி நிற்க ," ஏழ்ன் யா மூழைப் போட்டீர் " என்று பக்கத்து ஆளின் தொடைதட்டித் தெரிவித்த கோபத்தில் தெளித்த சிவப்புத் துளிகள் சலவை வேஷ்டியில் மாட்ர்ன் ஆர்ட் போலச் சிதறிவிழ அங்கு பின் நடக்கும் கலவர வார்த்தைகளை எழுதினால் சென்சார் பிடித்துக்கொள்ளும்.
மற்ற கல்லூரி மாணவர்கள் போலல்லாது, எஸ். ஐ. டி என்றழைக்கப்பட்ட சேஷசாயீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் மிகவும் அடக்கமானவர்கள்.
நெற்றியில் நாமமோ விபூதியோ துலங்க, சங்கரரையும் ராமானுஜரையும் ப்ரத்யட்சமாக்கிவிட்டாற்போன்ற தோற்றத்துடன் அந்தத் தோற்றத்திற்கு சிறிதும் சம்பந்தமற்ற டீ ஸ்கொயர் என்ற திரேதாயுகத்து வரை உபகரணத்தை ஏசு நாதரின் சிலுவை போல சுமந்துகொண்டு அரியமங்கலம் ஹால்ட் ஸ்டேஷனில் அவர்கள் இறங்கத் தயாராவார்கள்.
இதற்குள், வண்டிக்குள் சம்பள நிர்ணயம் பற்றியோ, வர வேண்டிய நிலுவைத் தொகை குறித்தோ அக்கவுண்ட்ஸ் மற்றும் பெர்சனல் ப்ராஞ்ச் விற்பன்னர்களுக்குள் நடக்கும் பட்டிமன்றத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கும் ஊழியர் நலனும் ப்ரிட்டிஷ் ஆங்கிலமும்.
எஸ்.ஐ. டீயின் தேவமைந்தர்கள் துரிதமாய் இறங்கிப்போக, அரியமங்கலத்தின் அரிய பொருளான தண்ணீருக்கு ஒரே மூலமான ஒம்போதேகால் வண்டியின் எஞ்சினை, இந்தியாவின் பிரதமரே வந்து உடனே எடு என்று சொன்னாலும் வண்டியைக் கிளப்பமாட்டார்கள் ஆங்கிலோ இந்திய ட்ரைவர்கள்.
அவர்கள் ஆண்டாளின் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல்கள்.
அரியமங்கலத்தின் டிஸ்டிலரீஸ் வெளித்தள்ளூம் சாராய வாடையை மாஸ்க் இல்லாமல் தாங்கிக்கொண்டு தண்ணீருக்கும் தவிக்கும் அப்பகுதி குடிசை வாழ் மக்கள் எல்லோரின் குடம் நிறைய அதனால் அவர்கள் மனம் நிறைய அதன்பின்தான் அங்கிருந்து கிளம்பும் ஒம்பதேகால் வண்டி.
இனி பொன்மலை நாயகர்கள் இறங்கி ஆஞ்சனேயரையும் பிள்ளையாரையும் வணங்கி அந்த மண்ணின் காற்றில் வேஷ்டி படபடக்க கருங்கல் கோட்டைக்குள் நுழைய ஆயத்தமாவார்கள்.
இனி வண்டியில் நிறைய இடமிருக்கும். எதிர்த்த பெஞ்சில் காலை நீட்டிக் கொள்ளலாம்.
ஆனால் திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் என்ற சரித்திர ஸ்டேஷனில் மாத்திரம் இந்த வண்டியை நிறுத்த உடனடியாக ப்ளாட்ஃபார்ம் இருக்காது.
எனவே, டைம் டேபிளில் இல்லாத முடுக்குப் பட்டியில் பெருமூச்சு
விட்டுக்கொண்டு காத்திருக்கும் ஒம்பதேகால் வண்டி.
இது ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்களுக்கு நடை தூரத்தைக் குறைப்பதால் அவர்களுக்கு வசதியாகப் போகும்.
அதன்பின், இந்தப் ப்ரயாணத்தின் கடைசிப் பயணிகள் கீழே உட்காரப் போட்டுக்கொண்ட அங்கவஸ்த்திரத்தையும் வெற்றிலைச் செல்லத்தையும் எடுத்து பையில் வைத்துக்கொள்ள கடன் கொடுத்தவருக்கு ஹிந்து பேப்பரைத் திரும்ப வாங்க, எக்ஸாம் ஹாலில் மணி அடித்தபின் ஆன்சர் பேப்பரைப் பிடுங்கும் அவலம் நேரும்.
நேஷனல் கல்லூரி மாணவர்கள் ஜங்ஷனையும் தாண்டி வண்டி யார்டுக்குப் போனபின்தான் இறங்கிக்கொள்வார்கள்.
ஆனால், சீட்டுக் கச்சேரி மாத்திரம், முடியவே கூடாத ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத் தோடி மாதிரி அந்த இடத்திலும் முடிந்துவிடக் கூடாது என்ற பிடிவாத ரசிகர்களை ரயில்வே ஊழியர்கள் அடித்துதான் இறக்குவார்கள்.
இப்படி ஒம்பதேகால் வண்டியின் எக்ஸ்டெண்டட் பயணம் ஒரு தற்காலிக சோகத்தில் நிற்பது நினைவின் தடங்களில் எந்த சிக்னல் தடையும் இல்லாமல் இப்போது எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment