போதிமரமா? பாதிமரமா?
வழிமேல் விழிவைத்து காத்திருந்தான் சேகர், காதலிக்காக அல்ல அவனது சிவப்புகலர் ஸாம்ஸனேட் சூட்கேசுக்காக. மீனம்பாக்கம் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டின் கன்வேயர் பெல்ட் நம்பர் 2ல் கலர் கலரான விதவிதமான பெட்டிகள் உருண்டோடி வந்தபோதும் இவனுடையது மட்டும் வந்தபாடில்லை. சிகாகோவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த நீண்ட பயணத்தின் களைப்பு உடலை அழுத்த தூக்கம் வழிந்த கண்களை கடிகாரத்தில் பதித்தான். விடியகாலை 5 மணி. அடுத்து கோவை ஷதாப்தியை பிடிக்கவேண்டும். இன்னும் ஒரு மணிநேரத்தில் வெளிவந்தால்கூட சென்ட்ரலுக்கு நேரத்திற்கு சென்றுவிடலாம் என்று ஆறுதலடைந்தான். சென்னையிலிருந்து கோவைக்கு மதியம்தான் ஃப்ளைட் இருந்ததால் ட்ரையினில் போனால் 2 மணிக்கெல்லாம் கோவையே போய்விடலாமென முடிவெடுத்தான்.
பையிலிருந்து ஃபோனை உருவி மனைவிக்கு சென்னை அடைந்த விவரத்தை வாட்ஸ்அப் செய்தான். அவர்கள் போன வருடம்தான் யூ எஸ் சென்றார்கள். குடும்பத்துடன் அடுத்த வருடம்தான் வருவதாக இருந்தது. ஆனால் இப்போ..தனியாக..அதுவும் திடீரென..மனதில் பெரிய பாரத்துடன் வந்திருக்கிறான். ‘ எல்லாம் யோசித்துதானே செய்தோம். எல்லாவற்றையும் நேரில் பார்த்து அவர்களின் சம்மதத்துடன்தானே செய்தேன். ஒரு வேளை அவர்கள் உண்மையில் சம்மதிக்கவில்லையோ? அவர்கள் உள்ளுணர்வை புரிந்துகொள்ளவில்லையா? சே! எனக்காக எப்படியெல்லாம் பாடுபட்டார்கள். அவர்கள் மனம் நோக விட்டுவிட்டேனா?’ அவன் மனம் அரற்றிகொண்டே இருந்தது. இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட ஒரு மாதமாகவே இப்படிதான் மருகி கொண்டிருக்கிறான். இதை தாங்க முடியாமல்தான் இதோ புறப்பட்டு வந்துவிட்டான் எல்லாவற்றையும் நேரிலேயே பார்த்து நன்கு புரிந்து கொள்ள.
அவன் எதிர்பார்த்து கொண்டிருந்த சிவப்பு சூட்கேஸ் ஒரு வழியாக ஆடி அசைந்து வந்து சேர்ந்தது.
சென்ட்ரலை அடைந்தபோது மணி 6:30. அருகில் உள்ள சிற்றுண்டிஸ்டாலில் இட்லி வடை காஃபி சாப்பிட்டுவிட்டு காத்திருக்கும் ஷதாப்தியில் ஏறி தன் சீட்டிற்கு மேல் தட்டில் சூட் கேஸை தள்ளிவிட்டுவிட்டு சீட்டில் சரிந்தான். நீண்ட பயணம் ஜெட் லாக் எல்லாம் சேர்ந்து அவனை ஆழ்ந்த உறக்கத்தில் தள்ளிவிட்டு விட்டது.
எவ்வளவு நேரம் தூங்கினான் என்று தெரியவில்லை. திடீரென ட்ரெயினின் குலுக்கலில் விழித்துகொண்டவன் சீட்டில் சரிந்திருந்த தன் உடம்பை நிமிர்த்தி கண்ணை கசக்கி கைக்குட்டையால் முகத்தை துடைத்தவாறே சுற்றும் முற்றும் பார்த்தான்.
“ ரொம்ப அசதி போல. தூர தேசத்திலேர்ந்து வர்ரீங்களோ?”
அவன் சீட்டுக்கு எதிரிலிருந்து கேட்ட முதியவரை ஏறிட்டு பார்த்தான். சுமார் 65 -70 வயதிருக்கலாம். ஒட்டிய முகத்தில் நாலுநாள் நரைத்த தாடிமீசையுடன் ஏராளமான கவலை ரேகைகள். பஞ்சடைந்த கண்களை கனமான குழி கண்ணாடி பெரிதாக்கி காட்டியது. அவர் பக்கத்தில் கிட்டதட்ட அவர் வயது தோற்றத்துடன் அவர் மனைவி. வெகு நாள் மணந்தவர்கள் நாளடைவில் ஜாடையிலும் ஒருவரை ஒருவர் பிரதிபலிப்பார்கள் என்று எங்கோ படித்தது சேகருக்கு ஏனோ நினைவிற்கு வந்தது.
“ கொஞ்சம் காஃபி சாப்பிடறீங்களா?” என்று தொடர்ந்த பெரியவரின் குரல் அவனை நினைவலைகளிலிருந்து மீட்டியது.
“ ஓ சாரி..கொஞ்சம் வாஷ் பண்ணிட்டு வரேன்” என்று எழுந்து டாய்லட் போய் முகம் கழுவி திரும்பியவனிடம் பிளாஸ்கிலிருந்து காஃபியை டம்ப்ளரில் கவிழ்த்து நீட்டினார்.
" ரொம்ப தாங்க்ஸ் சார். என்னறியாம தூக்கம் அசத்திடுத்து” என்றான் ஒருவித குற்ற உணர்ச்சியுடன்.
“ பாவம் ரொம்ப தூரத்திலேர்ந்து வந்த களைப்பு. என்ன யூஎஸ்லேர்ந்து வரீங்களோ?”
“அட எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?"
“உங்க சூட்கேஸ்ல தொங்கற டாக் சொல்லிடுத்தே!” பொக்கை வாய் தெரிய சிரித்தார்.
“ஆமாமாம்”
“ கோயம்பத்தூர் சொந்த ஊரா? எங்க வீடு?”
அவன் சட்டென அமைதியானான்.
ஏதாவது தவறாக கேட்டுவிட்டோமோ என்று பெரியவர் தயங்கி ஏதோ சொல்ல வாயெடுத்தபோது அந்த நிலைமையை சமாளிக்க அவர் மனைவி “ காஃபி சரியாயிருக்கா? சுகர் போறுமா?" என்று பேச்சை மாற்றினார்.
“ ஓ பர்ஃபெக்டா எங்க அம்மா போடற காஃபி மாதிரியே இருக்கு” என்றான்.
அந்த பெரியவர் இதை பயன்படுத்தி “ கோயமத்தூர்ல அம்மா அப்பா இருக்காங்களா?" என்று தன் பங்குக்கு நிலமையை சமாளிப்பதாக நினைத்து கேட்டார். அவன் மீண்டும் மௌனம் சாதிப்பதை பார்த்த அவர் மனைவி
"அவர ஏன் சும்மா தொந்தரவு பண்றீங்க. அவர் ரொம்ப டயர்டா இருக்கார் அவர் நெலம தெரியாம ஏன்தான் இப்படி.." என்று பெரியவரை கடிந்து கொண்டார். பெரியவர் மிகவும் கூனி குறுகுவதை பார்த்த சேகர் “ சே சே அதெல்லாம் ஒன்னுமில்ல. எங்க அம்மா அப்பா கோயம்பத்தூர்லதான் இருக்காங்க. ஆனா..”
அவன் கொஞ்சம் தயங்குவதை பார்த்த பெரியவர் “ பரவாயில்ல. நீங்க ஒன்னும் சொல்லவேண்டாம். நாந்தான் தெரியாத்தனமா என்னத்தையோ கேட்டுட்டேன்..சாரி.."
" நோ நோ நீங்க ஒன்னும் தப்பா கேக்கல நாந்தான்.." என்று தயங்கியவன் கடந்த ஒரு மாதமாக தன் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் இந்த விஷயத்தை தன் பெற்றோர்களின் வயதையொத்த இவர்களிடம் சொன்னால் என்ன என்று தோன்றியது.
“ சார் எங்க அப்பா அம்மா “—- “சீனியர் சிட்டிசன் ஹோம்ல இருக்காங்க” என்று சொல்லி அவர்கள் முகத்தை கூர்ந்து நோக்கி அதில் ‘அட பாதகா’ போன்ற உணர்ச்சிகள் தென்படுகிறதா என்று பார்த்தான். மாறாக அவர்களிடம் ஒரு ஆச்சர்யம் கலந்த மலர்ச்சி தெரிந்ததால் மேலும் தொடர்ந்தான்.
“ நாங்க ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிவரை சென்னைல ஒன்னாத்தான் இருந்தோம். நா ஒரு யூஎஸ் ஐடி கம்ப்பெனில ஆர்கிடெக்டா இருந்தேன். அப்போ அவங்க என்னை சிக்காகோவுக்கு ப்ரோமஷன்ல டரான்ஸ்ஃபர் பண்ணினாங்க. நல்ல டெர்ம்ஸ் நல்ல பொசிஷன் மறுக்க முடியல. எல்லாருமாதான் போனோம். ஆனா அப்பா அம்மாக்கு அந்த குளிரும் ஊரும் ஒத்துக்கல. அப்புறம்தான் இந்த” ——“சீனியர் சிட்டிசன் ஹோமை பத்தி கேள்வி பட்டு போன வருஷம் இங்கே ஒரு வில்லாவை வாங்கி அவங்களை விட்டிருந்தேன். கொஞ்ச நாள் அவங்களோட இருந்து எல்லாம் சரியா இருக்குன்னு திருப்தியானப்புறம் யூஎஸ் போய்ட்டேன். வாரத்தில ரெண்டு மூணு நாள் வீடியோ கால் பேசி விசாரிப்பேன். எல்லாம் நல்லாதான் போய்கிட்டிருந்தது ஆனா..கடந்த ஒரு மாசமாதான் புதுசா ஒரு குழப்பம் ..சஞ்சலம்..” சற்று நிறுத்தி அவர்களை பார்த்தான்.
“ என்னாச்சுப்பா? சொல்லு” என்றவர் “ சாரி நான் உங்கள மரியாத இல்லாம பேசிட்டேன்” என்றார் அவசரமாக.
“ சே சே ..நீங்க எங்க அப்பா மாதிரி இன்ஃபாக்ட் நா இதப்பத்தியெல்லாம் உங்ககிட்ட இவ்வளவு தூரம் சொல்றதுக்கு காரணமே நீங்க எங்கப்பா ஸ்தானத்தில் இருப்பதால்தான்” என்றவன் தொடர்ந்தான்.
“ என் வைஃப் கொஞ்சம் ஃபேஸ் புக்ல ஆக்டிவா இருப்பா. சமீபத்தில “—- “க்ரூப்ல சேர்ந்து கதை கவிதையைல்லாம் எழுதி ஃபேமஸ் ஆனா. என்னையும் சேத்துவிட்டு படிக்கவச்சா. அப்போதான் நா அந்த க்ரூப்ல வர மத்த போஸ்ட்களையும் படிக்க ஆரம்பித்தேன். அதில ஒரு விஷயமட்டும் அடிக்கடி காரசாரமா விவாதிக்கப்பட்டது. பொதுவா எல்லாருமே வயதான பெற்றோர்களை முதியோர் விடுதியில் விட்டு விட்டு ஃபாரினில் செட்டிலாகும் பிள்ளைகளை சாடு சாடு ன்னு சாடறதை படிச்சேன். வயதானவர்கள் எல்லாரும் பிள்ளைகளுடன் இருப்பதற்காக ஏங்குவதாகவும் பிள்ளைகள் இரக்கமே இல்லாம அவங்கள தனிமைப்படுத்துவதாகவுமாகத்தான் கருத்து வந்ததும் நா குழம்பிட்டேன். நா அவங்களுக்கு ஒரே பிள்ளை. எனக்காக அவங்க எத்தனையோ தியாகங்கள் செஞ்சாங்க. அவங்களை தவிக்க விட்டுட்டேனோன்னு வருந்த ஆரம்பிச்சேன். ஃபோன்ல கேட்டப்ப ஒரு ப்ராப்ளமும் இல்லேன்னுதான் சொல்றாங்க. ஆனா எனக்குதான் மனசு கேக்கல. நேர வந்து பாத்துட்டு ஓப்பனா கேக்கலாம்னுதான் வந்துட்டேன். அவங்களுக்கு நான் வரது தெரியுமே தவிர எதுக்கு வரேன்னுட்டு தெரியாது..” அவன் மேலே தொடருமுன் பெரியவரின் ஃபோன் ஒலித்தது.
“ சொல்லுப்பா..ஆமா திருப்பூர் தாண்டிட்டோம்..சரி..சரி..சரி.." ஃபோனை அணைத்தவர் மனைவியை பார்த்தார். “ உன் பிள்ள தான். அவனுக்கு ஆபீஸ்ல வேலையாம் அதனால நம்மள ஒரு ஆட்டோவை பிடிச்சுட்டு வர சொல்லிட்டான். அப்புறம் ஷதாப்தியிலேயே நாம சாப்பிட்டிருப்போங்கறதுனால லஞ்ச் ஒன்னும் வைக்கலையாம். போன உடன உன்ன பசங்களுக்கு ஏதாவது டிஃபன் பண்ணி வைக்க சொன்னான்” வரட்சியாக சிரித்து கொண்டே மனைவியிடம் சொல்லிவிட்டு சேகரை பாத்து
“ இத்தன நேரம் நீ ஒங்கதைய சொன்னே. இப்ப எங்கதைய கேளு. நீ சொன்னயே அந்த மாதிரி நாங்க மகன் மருமக பேரப்பிள்ளைங்களோட கூட்டு குடும்பமாதான் இருக்கோம். நீ சொல்ற அந்த ஃபேஸ்புக் க்ரூப்ல என் மருமக பிரமாதமா எழுதுவா..”
“ ஆமா எழுதுவா. படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோவில்” பெரியம்மா குறுக்கிட்டாள். “ இந்த பெரியவங்கள நம்மகூடவே வச்சுக்கனும்னு இவளும் அதில அடிக்கடி எழுதுவா. ஆனா அது பாசத்தினால இல்ல, வேலைக்காகன்னு எங்களுக்குதான் தெரியும். காலைலேந்து படுக்கறவரைக்கும் எனக்கு சமயகட்டு , வீட்டு வேலைகள். இவருக்கு பேரப்பிள்ளைங்களை ஸ்கூலுக்கு ட்யூஷனுக்கு டென்னிஸ் க்ளாஸ் பாட்டு க்ளாஸ் டான்ஸ் க்ளாஸ்னு மாத்தி மாத்தி கொண்டுவிட்டு கூட்டி வரணும். இவங்க ரெண்டுபேரும் வேலைக்கு போயிடுவாங்க நாங்க ரெண்டுபேருந்தான் இந்த குடும்ப பாரத்தை சொமக்க வேண்டியிருக்கு. முடியலப்பா…அந்த காலத்திலதான் பண்ணினோம் இப்பவாது ஓய்வு வேண்டாமா? சரி அப்படி பண்ணினாலும் எதாவது மதிப்பும் மரியாதையும் கெடைக்குதான்னு கேட்டா அதுவுமில்லை. பிள்ளை மருமக ஏன் பேரப்பிள்ளங்களுக்கு கூட இது கெடையாது. இதோ இப்போ இவரோட தம்பி பேத்திக்கு கல்யாணம்னு சென்னைக்கு அனுப்பறதுக்கு அவ்வளவு யோசனை. கரெக்டா 2 நாள்ல திரும்பிடனும்னு டிக்கட் போட்டுட்டா. ஏன்னா வேலைகளை பாக்க ஆள் வேணுமே. போப்பா.. நீ போய் இந்த ஃபேஸ் புக் கீஸ்புக்கெல்லாம் படிச்சு அநாவசியமா குழம்பாதே. நீ பண்ணினதுதான் கரெக்ட். நாங்கூட இவர்கிட்ட இந்த மாதிரி எதாவது ஹோமுக்கு போயிடலாம்னு சொல்லிட்டே இருக்கேன். இவருதான் கேக்க மாட்டேங்கறாரு” பெரியம்மா பொரிந்து தள்ளினார்.
“ எனக்கு மட்டும் ஆசையில்லையா. ஆனா இந்த ஹோம்ல வாடகைக்கு கெடச்சா போகலாம். எனக்கு வர பென்ஷன்ல சமாளிக்கலாம். ஆனா விலைக்குதான் தருவாங்களாம். வாங்கற அளவுக்கு எனக்கு பணமில்ல. நீ விசாரிப்பா எதாவது வாடகைக்கு கிடைக்குதான்னு” என்று சொல்லி தன் ஃபோன் நம்பரை சேகரிடம் தந்தார்.
ட்ரெய்ன் கோயம்பத்தூரை அடைந்தது. இந்த பெரியவர்களுடன் பேசியதில் தன் மனப்பாரம் பெருமளவு குறைந்ததை உணர்ந்த சேகர் அவர்களிடமிருந்து நன்றிபெருக்குடன் விடை பெற்றுக்கொண்டு ட்ரெயினைவிட்டு கீழே இறங்கியவன்,
“சேகர்” என்ற அப்பாவின் குரல் கேட்டு ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தான். அப்பாதான்! இரண்டு சுற்று பெருத்தாற்போலிருந்தார். “ அப்பா. நீ எதுக்குப்பா ஸ்டேஷனுக்கு வந்தே. நா என்ன சின்ன குழந்தையா நானே வரமாட்டேனா?”
“ அடப்போடா இதென்ன கஷ்டம். அது சரி நீ என்ன விஷயமா இப்படி திடீர்னு வந்துருக்கே?"
“எல்லாம் டீடெய்லா போகும்போது பேசலாம்” என்று கூறியபடியே டாக்சியில் ஏறினார்கள்.
வழி நெடுக தன் மனக்கவலையை அப்பாவிடம் கொட்டிதீர்த்தான். எல்லாவற்றையும்
பொறுமையாக கேட்டுவிட்டு பெரிதாக சிரித்தார். “ போடா பைத்தியகாரா. ஃபேஸ் புக்ல எதையோ படிச்சுட்டு இப்படி அநாவசியமா செலவு செஞ்சு வந்தியா? இந்த மாதிரி எழுதறவங்களுக்கு பாதி விஷயம் தெரியாது. இந்த ஹோம்ங்கறதை பத்தி ஒன்னுமே தெரியாது. அவங்க இத என்னமோ அநாதை விடுதி மாதிரின்னு நெனச்சுட்டிருக்காங்க. திஸ் இஸ் ஃபைவ் ஸ்டார் ஃபெசிலிட்டின்னு பாத்தா தான் புரியும் . எங்கள மாதிரி சீனியர் சிட்டிசன்களுக்கு இது ஒரு ஹெவன். நீயே வந்து பாரு. இல்லே இந்த மாதிரி எழுதறவங்க பிள்ளைங்க ஃபாரின் போக முடியலையேங்கற ‘சீ சீ இந்த பழம் புளிக்கும்’ ங்கற ஆட்டிட்யூட்னால எழுதலாம். இல்லேன்னா..” அவர் மேலே தொடரும்முன் அவர் ஃபோன் ஒலித்தது. “ சரி சரி மறக்கமாட்டேன் ஜஸ்ட் நௌ தான் ட்ரெய்ன்லேந்து இறங்கி இருக்கான். கேக்கறேன் கேக்கறேன் டோன்ட் வொரி” என்று ஃபோனை வைத்தவர் சேகரிடம் “ நம்ம பக்கத்துவீட்டுகாரன். அவங்கிட்ட ஒரு அடிஷனல் வில்லா இருக்காம். உன் ஃப்ரென்ட் யாருக்காவது வாடகைக்கு வேணுமான்னு கேளு கேளுன்னு தொணத்துகிட்டிருக்கான். அநாவசியமா மெய்ட்டனன்ஸ் கட்டிண்டிருக்கானாம். வாடகை கூட வேண்டாம் வெறும் மெய்ட்டனன்ஸ் சார்ஜ் மட்டும் கட்டினால் போதும்ங்கறான். அது சரி..இப்ப நீ எதுக்கு அநாவசியமா செலவழிச்சு வந்தே. இந்த விஷயத்தை ஃபோன்லேயே கேட்டிருக்கலாமே?” என்று பேசியதை சட்டை செய்யாமல் சேகர் பையிலிருந்து ஃபோனை உறுவினான். “ என்ன சொன்னே? அநாவசியமா ஏன் வந்தேன்னா? இல்லவே இல்ல ..,பெரியவங்களுக்கு உதவணும்னுதான் வந்தேன். அதைதான் செய்யபோறேனே.. செலவு அநாவசியமாகல..” என்றவாறு ட்ரெயினில் பார்த்த பெரியவரின் ஃபோன் நம்பரை அழுத்தினான்.
No comments:
Post a Comment