Friday, January 14, 2022

மரணம் அமிர்த மாகட்டும்

 # சிறுகதை.

( கஞ்சாநகரம் துங்க பாலா)

மரணம்  அமிர்த மாகட்டும்

" மிஸ்...  மிஸ்...

ரஷீதா  டைட் (Died)

"

பூனம் ஷா. மன்ப்ரீத் சிங்,   ரமேஷ்  முத்து, வில்ஸன் கோஷி, ஸாகரி தேஷ்பாண்டே, ஆகியோர் பரபரப்புடன் வந்து  4 வது வகுப்பு ஆசிரியை   ஜயஸ்ரீ  காதில்  சொன்ன போது,   அவள் தடுமாறித்தான் போய் விட்டாள்

காலை .  " சின்ன அரும்புகள்   ஆரம்பப்  பள்ளி  ஸயானில்" அஸெம்பிளி  நேரம்.

புதுமலர்கள் போல் நீலச்  சீருடையில் சிறுவர் சிறுமியர்.

" ஜன கண மன" ...  முடிந்து .... 

" Almighty God! We Thank Thee for the Pleasant Morning Light... "

 ஆங்கில    ப்ரேயருக்குப் பின், 

இறை வணக்கம்... 

" அஸத்தோமா  ஸத்  கமய... 

( அறியாமை ஞானமயமாகட்டும்.)

தமஸோமா  ஜோதீர் கமய...  

( காரிருள்  ஒளி மயமாகட்டும்.)

மிருத்யோர்மா    அம்ரிதம்  கமய...

( மரணங்கள்    இறவா வரமாகட்டும் )

ஓம் ஷாந்தி...   ஓம் ஷாந்தி...  ஓம் ஷாந்தி...    "  

அதற்குப் பின்  பள்ளி கீதம் முடித்து சிறுவர்கள் வகுப்புக்குப் போகத் தொடங்கியபோது தான்....

இந்த பரபரப்பு செய்தி.

முதல்  பீரியட்.    யோகா.

சிறுவர்களை  சில  ஆரம்ப  யோகா பயிற்சிகளுக்குப் பின்  கண்களை மூடி மெளனமாக இருக்கச் சொன்னாள்.

எல்லோருக்கும்  பரபரப்பு . ஒரு கண் திறந்து,  கை சைகைகளினால்  டீச்சருக்குத் தெரியாது என்று நினைத்து கிசு கிசுக் குரலில் பேச்சு.

ஜயஸ்ரீக்கு  அடக்க முடியாமல்   கண்ணீர் வழிந்தது.  கைக் குட்டையால் துடைக்க  முற்பட்ட போது... 

ஹோ வென்று   எல்லாம்  மௌனச் சிறையிலிருந்து விடுபட்டு  அவளைச் சூழ்ந்து    ரஷீதா பற்றி சொல்ல ஆரம்பித்தன.

" Be Silent"

 வகுப்பை அமைதிப் படுத்திவிட்டு  முன் தினம்  சொல்லிக் கொடுத்த  ஆங்கிலப்  பாடக் கேள்வி  பதிலை   கரும்பலகையில் எழுதி விட்டு அமர்ந்தாள்.

ரஷீதாவிடம்   300 ரூபாய்  கொண்டு வரச்சொல்லியிருக்க  வேண்டாமோ?

மனம் குற்ற உணர்வில் தவித்தது.

கம்ப்யூட்டர் செக்ஷன் பள்ளியில்   உண்டு.  அதற்குத் தனியாகப் பணம்  கட்ட வேண்டும்.  கம்பல்ஸரி,  

"ஃபீஸைத் தவிர, புத்தகம் அது இதுன்னு இது வேறயா? " என்று  பெற்றோர்கள்  அலுத்துக் கொள்வதைக் கேட்டிருக்கிறாள்.

நிறைய. பணக்காரக் குழந்தைகளுடன் அருகிலுள்ள  குடிசைப் பகுதி   குழந்தைகளையும்  பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் 

தனியார் பள்ளியானாலும் முனிஸிபாலிட்டி   கிராண்ட் தந்திருப்பதால்   அனுமதி மறுக்க முடியாது.  ஆனால் டொனேஷன் வாங்கலாம்.

கார் டிரைவர்,  வீட்டு வேலை செய்பவர்கள் குழந்தைகளும்   மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கும்.

ரஷீதா  வகுப்பிற்குக் கொஞ்சம்  வயதான பெண்.  குடிசைப் பகுதியிலிருந்து வரும்  ஏழைப்பெண்.   

அதனால்   மாணவர்கள் அவளுடன் பழகமாட்டார்கள்  டீச்சர் சொன்னால் கூட. 

அப்பெண் கண்ணில் எப்போதும் ஒரு சோகம்.   இடைவேளையில் எல்லோர் டப்பாவிலும்  சிப்ஸ், பிஸ்கட் என  நிரம்பி  வழியும்.

அவள் மட்டும் தனியாகத்தான்  இருப்பாள்..  யார் கொடுத்தாலும் வாங்க மாட்டாள்.

இப்போது மானேஜ்மென்ட்  டீச்சர்கள் மேல் அதிகாரம கம்ப்யூட்டர் பணம் கொடுக்க டெட்லைன் சொல்லி விட்டார்கள்.

ரஷீதா மட்டும் தரவில்லை.  கொஞ்சம்  கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். மறுநாள் 300 ரூபாய்   பணம்  வந்தது.

இது நடந்தது நாலு நாள் முன்னால். அதன் பின்  ரஷீதா பள்ளிக்கு வரவில்லை. அடிக்கடி லீவு எடுக்கும் பெண் தான்.

 இன்று  ரஷீதா இறந்து விட்டாள் என்ற செய்தி.

என்னவாயிருக்கும்?

ஜயஸ்ரீக்குப்  பயமாக இருந்தது. 

 ரஷீதாவின் சென்ற வருட கிளாஸ் டீச்சர்,  அரட்டைக் குழந்தைகளிடமிருந்து   கிடைத்த விவரம்   அவளை மேலும் உறைய வைத்தது.

 அம்மா  அமீனா  முனிசிபாலிட்டியில்  துப்புரவுத் தொழிலாளி. 

ரஷீதா அவள் முதல் கணவன் ரஸாக்  ஷேக்குக்குப் பிறந்தவள்.   அவன்  முத்தலாக் சொல்லிவிட்டு இவளை விட்டு விட்டுப் போய்  வேறு திருமணம்  செய்து விட்டான். 

 பின்   ரஹீம்  அக்தர்,  வயதில் பெரியவளானாலும்  மெஹர் பணம் கொடுத்து மணந்து கொண்டான்.   முக்கிய காரணம் அவளுக்கு முனிஸிபாலிட்டியிலிருந்து மாதா மாதம் சம்பளம்  ரெகுலர்.  

அவன்  ப்ளம்பர்.  சில நாள் தான் வேலை கிடைக்கும்.    ஆனால்  தினம் குடி உண்டு.

வேலை கிடைக்காவிட்டால்  சண்டை போட்டு அமீனாவிடமிருந்து  பணம் வாங்கிக் குடித்து விட்டு  இரவில்   அடிதடி ரகளை,.

இந்த நெருக்கடியில்   தினமும் ரஷீதா  அம்மாவிடம் பணம் கேட்டுத் தொல்லை செய்திருப்பாளோ?  . அம்மா கொடுக்கப் பணமில்லாமல்  அடித்தே கொன்றிருப்பாளோ?

வகுப்பு டீச்சராதலால் இது மாதிரி சம்பவங்கள்  நடந்தால் போய்ப் பார்க்க வேண்டும்.

மாலை  இன்னொரு   டீச்சரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு,    குடிசைகள் நிறைந்த  ஆண்டப் ஹில்   என்ற அந்தப் பகுதிக்குப் போனாள்.

எறும்புப் புற்றுப்போல், தேன்  கூடுகள் போல் ஒரு அறையில் பலர் வாசம்.. 

இவர்களைப் பார்த்தவுடன். அந்த சிறு சந்தில் பல தலைகள் எட்டிப் பார்த்தன.  

ரஷீதா வீடு எது என்று  ஒரு வீட்டில் கேட்ட போது... 

கிசு கிசு  குரலில்  "போலீஸ் கேஸு   ச்சுப்  ரஹோ. பேசாதே.  அந்தர் ஆ. பேப்பர் ஆளுங்க " 

காதில் விழுந்தது.

உடைந்த  கதவுகள் படபடவென மூடப்பட்டன.

ரஷீதா வீட்டில்  கூரைக்குள்  குனிந்து  எட்டுக்கு எட்டு  அறைக்குள் நுழைந்த போது... 

ஒரு வயதான கிழவி  இருந்தான்.

" ரஷீதா அம்மா இல்லையா?"

" எல்லாரும்  போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்காங்க"

வெறுமையான மெளனம்.  மயான அமைதியோ?

அதன் பின் அந்த மூதாட்டி வாயையே திறக்கவில்லை.

அவள் கையில்  ரஷீதாவின்  முன்னூறு ரூபாய் பணத்தைக் கொடுத்து  அமீனாவிடம் கொடுத்து விட் சொன்னாள்.   

 பெண்ணோ இல்லை..  அந்தப் பணம் . எதற்கு பள்ளிக்கு?  கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட்டில்   வாதாடித் திரும்ப வாங்கினாள்.

பள்ளி மன்னித்திருக்கலாம்.  இவளே கூடக்  கொடுத்திருக்கலாம்.  அதனால் தான் ஜயஸ்ரீ  மனத்தில் அந்தக் குற்ற உணர்வு.

ஆனால்  இப்போது அக் குற்ற உணர்வு போய் விட்டது.

ரஷீதாவின் மரணம்  .அந்த  300 ரூபாயினால் இல்லை.

வேறு ஏதோ மறைக்கப் படுகிறது.  

 அப்பா   இள  வயதுக்காரன்.  ரஷீதா 12  வயதுப் பெண்.   குடிகாரன்.

ஏதோ நடந்து  ... 

ரஷீதா  தவறான முடிவு எடுத்திருப்பாளோ? அருகில் தான்  ஹார்பர் ப்ரான்ச் ரயில் தடங்கள்.

அல்லது  இது தெரிந்து   அம்மாவே விஷம் வைத்துக்  கொன்றிருப்பாளோ?    

ஜெயஸ்ரீ  "ஸ்டாப் இட் ."   மனத்திற்குக் கடிவாளம் போட்டாள்.

அஸெம்ப்ளியில் தினம் பாடும்  இறை வணக்கப்  பாட்டு   நினைவில் வந்தது.

இறைவனே! 'இந்த உலகில்  ரஷீதா போன்ற  இளம் அரும்புகளுக்கு... 

அறியாமை நீங்கி,  ஞானம்  மேம்பட்ட...  இருள் நீங்கி, ஒளி மயமான ... 

எதிர் காலத்தைக் கொடு."

வருங்கால  ரஷீதாக்கள்  இப்படி அகால மரணமடையக் கூடாது.  அமுதமயமாக வாழ வேண்டும்."

ரஷீதாவிற்காக ஒரு மெளனி  அஞ்சலி செய்து விட்டு   அணுசக்தி நகர் போக 8 Ltd  B.E.S.T.  பஸ்ஸைப்   பிடித்தாள் ஜயஸ்ரீ.

No comments:

Post a Comment