பெண்கள் வருஷம் - சுஜாதா சிறுகதை
(நன்றி: கல்கி தீபாவளி மலர் 1975)
தலைநகரத்தில் குளிர் விலகிக் கொண்டிருந்த ஒரு பிப்ரவரி தினத்தின் ஒரு மத்தியான நேரம். அனந்தராமன் அவனுடைய அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். கடலைக் கொட்டை வாங்கி மெல்லத் துவங்கினான். தூரத்தில் பச்சைப் புல்வெளியில் மரத்தடியில் முண்டாசு அணிந்த ஆசாமி துளசிதாஸரின் ராமாயணம் படித்துக் கொண்டிருக்க, எதிரே 40 - 50 பேர் தற்காலிகமாக குந்தி உட்கார்ந்திருந்தார்கள். அனந்தராமன் லஞ்ச் இடைவெளியின் போது சற்று நேரம் கடலைக் கொட்டை மென்றுகொண்டு துளசிதாசரின் ராமாயணம் கேட்பான். அதில் ஏதோ மெலிதான, இலவசமான, புரதசத்து சேர்ந்த புண்ணியம் இருப்பதாக அவனுக்கு நம்பிக்கை.
அவள் இந்த சர்வ ஜகத்திற்கும் தாய்
அவள் பொறுமையின் அவதாரம்
அவள் கற்பின் சிகரம்
அவள் அழகின் உன்னதம்
அவள் தெய்வம்....
சீதா தேவி !!
சீதாதேவி அக்னி பிரவேச கட்டத்தில் இருந்தாள். சுற்றிலும் உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் த்ஸொ த்ஸொ என்று அந்த மகத்தான துயரத்தில் ஆழ்ந்து உருகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் சர்க்கார் அலுவலக பியூன்கள், டெஸ்பாட்ச் குமாஸ்தாக்கள்……. தத்தம் சீதாதேவிகளை குடித்துவிட்டு அடிப்பவர்களாக இருக்கலாம் என்று அனந்தராமன் எண்ணினான். அவன் கல்யாணம் ஆகாதவன். அலுவலகத்தில் ஒரு ஸ்டெனோ டைப்பிஸ்ட். அவன் சம்பளம் அவனுக்கு போதும். ஆனால் கல்யாணம் செய்துகொண்டால் அவஸ்தை படுவான்.
அம்மா வாராவாரம் அவன் கல்யாணத்தை பற்றியே கடிதம் எழுதுகிறாள், அனந்தராமன் கல்யாணம் செய்து கொள்ளாததற்கு தேவையான விஷயங்களை பட்டியல் போட்டு வைத்திருக்கிறான். அந்தப் பட்டியலில் முதல் ஐட்டம் பணம். பணம் இல்லாமல் கரோல்பாக்கில் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க முடியாது. தேனிலவு போக முடியாது. வீட்டுக்கு ஃபர்னிச்சர் வாங்க முடியாது.
"பெண் எஸ்எஸ்எல்சி பாஸ் பண்ணி இருக்கிறாள். வீணை வாசிக்கிறாள். நல்ல அடக்கமான குடும்பத்துப் பெண். நல்ல நிறம். சரசாவின் பெண் மாலினி போல் சாயல். ஆனால், அவளைவிட நல்ல சிவப்பு. காது மூக்கு போட்டு கையிலும் கொடுக்கிறேன் என்கிறார்கள். பெண்ணின் போட்டோவை அனுப்பட்டுமா?"
"மிஸ்டர் அனந்தராமன்....."
காது மூக்கில் வைரம் அணிந்து வீணை வாசித்துவிட்டு காரியம் செய்யச் சென்ற அந்த எஸ்எஸ்எல்சி பெண்ணிடமிருந்து அவன் கவனம் கலைந்தது. திரும்பிப் பார்த்தான்.
ஒரு பஞ்சாபி பெண் போல செக்கச்செவேல் என்று இருந்தாள். ஆண்களின் சட்டை, காதுகளில் பெரிய வளையம், பாண்ட் கோஷ்டி போல தொளதொளவென்று பேண்ட் அணிந்திருந்தாள். தலையில் அடர்த்தியாக செம்பட்டையாக, முடி காற்றில் அலைந்தது.
"என்னையா?" என்றான் பின்னால் பார்த்துக்கொண்டு
"ஆம் உங்களை தான். என்னுடன் கொஞ்சம் வருகிறீர்களா?"
"நான் திரும்ப ஆபீஸ் செல்ல வேண்டும். ஆர் யூ ஷ்யூர் யூ வாண்ட் மீ?"
"பத்து நிமிஷம்"
"எதற்கு?"
"உங்கள் நன்மைக்கு"
"புரியவில்லை. நீங்கள் யார்?"
"என் பெயர் ப்ரியா. கான்டினென்டல் கன்ஸ்டிரக்ஷன்ஸ்".
அந்தக் கம்பெனியின் பெயரை கேள்விப் பட்டிருக்கிறான்
"என்ன விஷயம் சொல்லுங்கள்".
ஞாபகம் வந்தது அவன் பணியாற்றும் கம்பெனிக்கு போட்டி கம்பெனி. அனந்தராமன் உஷாரானன்.
"இங்கே சொல்லும்படியாக இல்லை நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?"
"சாப்பிட்டுவிட்டேன்"
"வாருங்கள். காபி சாப்பிட்டு கொண்டு பேசலாம். உங்களை நான் கடித்து விழுங்கி விட மாட்டேன். நான் ஒரு பெண்"
"எனக்குப் புரியவில்லை"
அவளுடன் தன்னை அறியாமல் நடந்து சென்றான்.
"என்னுடன் வந்தால் புரியும்"
கான்டினென்டல் கம்பெனியில் வேலைக்கு மனு போட்டு கிடைக்காதது நினைவுக்கு வந்தது. வேலை கொடுக்கப் போகிறீர்களா? என்னை இவளுக்கு எப்படி தெரியும்? போய்தான் பார்ப்போமே. அனந்தராமன் மனதில் அப்போதே உணர்ச்சி உருவாகியது. அதிலிருந்த மெலிதான கவர்ச்சி அவனை அந்த ப்ரியா என்ற பெண்ணின் பின்னால் செல்லத் தூண்டியது. பின்னால் திரும்பி தன்னுடைய ஆபீஸ் கட்டடத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டான். ஒன்பதாவது மாடி ஓரத்தில் தெரியும் ஜன்னல் தான் அவன் ஜன்னல். பக்கத்து ஜன்னலில் ஏர் கண்டிஷனர் தெரிகிறதே அதுதான் அவன் டைரக்டர். அங்கிருந்த பார்த்தால் அடையாளம் கூட தெரியாது.
ப்ரியா ஒரு ஃபியட் காரின் கதவைத் திறந்தாள். அவள் முன் சீட்டில் உட்கார்ந்து கொள்ள. அனந்தராமன் அருகிலிருந்த சீட்டில் உட்கார்ந்தபோது மெலிதான சென்ட் வாசனை அடித்தது.
கார் நகர்ந்தது.
"உங்கள் திறமையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். உங்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கிறார்கள்?"
"ஏன்?"
அவள் கையில் ஒரு கடிகாரம் அணிந்திருந்தாள்.
"நாங்கள் உங்களுக்கு ஒரு நல்ல ஆஃபர் தர முடியும்"
"என்ன வேலை?"
அவள் விரல்கள் நீளமாக இருந்தன.
"பர்சனல் அசிஸ்டன்ட்"
"சம்பளம் ?"
சொன்னாள்.
விரல் நகங்களில் வெளிர் ரோஜா நிற பாலிஷ் அணிந்திருந்தாள்.
"நீங்கள் சொல்கிற தொகை நம்ப முடியவில்லை"
இதில் ஏதோ சூது இருக்க வேண்டும். அவள் பேசட்டும்.
அனந்தராமன் அவனுடைய 24 வருட வாழ்க்கையில் இதுபோல ஒரு பெண்ணின் அருகில் உட்கார்ந்தது இல்லை.
இந்தப் பெண் இளஞ்சுடராக இருந்தாள். வாசனையாக இருக்கிறாள். கார் ஒரு ரெஸ்டாரன்ட் முன்பாக நின்றது. உள்ளே நுழைந்தபோது அனந்தராமன் சுற்றிலும் பார்த்துக்கொண்டான். யாராவது பார்த்து விட்டால்…… அரை இருட்டில் சங்கீதமும் பீங்கான் சத்தங்களும். கலந்து ஒலிக்க, வெய்ட்டர்கள் மேஜைகள் ஊடே சரசமாட…… அந்த சர்தார்ஜி ஒரு எலும்பை உறிஞ்சி உண்டு இல்லை என்று செய்து கொண்டிருந்தான்.
ப்ரியாவை பார்த்ததும் "ஹலோ ப்ரியா" என்றான். அவன் கண்கள் அவளை விஷமப் பார்வை பார்த்துவிட்டு அவன்மீது தங்கின. 'வெளியே வா, பார்த்துக் கொள்கிறேன்' என்பதுபோல ஒரு பார்வை.
தனியான மேஜையில் அவன் எதிரே உட்கார்ந்தாள்.
"என்ன சாப்பிடுகிறீர்கள் மசாலா தோசை?" என்றாள்
அதில் தான் ஒரு மதராஸி என்கிற கேலி இருப்பதாக அனந்த ராமனுக்கு பட்டது
"வேண்டாம்" என்றான்
"ஓகே ஐஸ்கிரீம் சாப்பிடுங்கள்" என்று வெயிட்டரைச் சொடுக்கி கூப்பிட்டு ஆர்டர் செய்தாள். அவள் பார்வை அங்கங்கே அடையாளங்களைக் கண்டு புன்னகை செய்தது.
"உங்கள் மாதிரி திறமையுள்ள ஆசாமி அடிக்கடி கம்பெனி மாறுவதில் ஆச்சரியமில்லை"
"என்னைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்?"
"நாங்கள் தெரிந்துகொண்டோம். நீங்கள் கெட்டிக்காரர், கம்பெனி டைரக்டரின் வலது கை மாதிரி"
"நீங்கள் எந்தக் கை/"
"நான் பப்ளிக் ரிலேஷன்ஸில் இருக்கிறேன்"
ஏறக்குறைய அரை செங்கல் அளவுக்கு அளவுக்கு ஐஸ்கிரீம் வந்தது. தித்திக்க போகிறேன் என்றது. அதன் நடுவில் ஒரு முந்திரிப் பருப்பு பதிந்திருந்தது. ப்ரியாவின் மார்பின் நடுவே ஒரு தங்க டாலர்.
"சாப்பிடுங்கள்" என்றாள்
மெதுவாக அதன் ஓரத்தை சேதம் செய்து சப்பிய போது அவள் இரண்டு கண்களையும் மூடித் திறந்தாள்
"உங்களுக்கு ஒரு புதிய வேலையில் இஷ்டமா?"
"என்ன வேலை?"
அனந்தராமன் கை கடிகாரத்தை பார்த்துக்கொண்டான்
"நான் திரும்ப ஆபீஸ் செல்ல வேண்டும்"
"அதற்கு முன் நீங்கள் எங்களுக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்"
விஷயத்திற்கு வந்துவிட்டாள். வேலை கொடுக்கிறேன் என்பதெல்லாம் உபரி விஷயம். என்னால் இவளுக்கு ஒரு காரியம் நடக்க வேண்டி உள்ளது. அதை யூகித்து இருந்தான்.
"என்ன காரியம்?"
"அதற்கு அட்வான்ஸாக ரூபாய் ஆயிரம்....."
"இதெல்லாம் எதற்கு முதலில் விஷயம் என்ன என்று சொல்லுங்கள்"
"வொர்க் மினிஸ்ட்ரியின் ஒரு டெண்டர் நாளை கடைசி தினம் உங்களுக்கு தெரிந்திருக்குமே?"
"சொல்லுங்கள்"
"உங்கள் கம்பெனி எவ்வளவு கொட்டேஷன் கொடுத்திருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்"
"புரிகிறது"
"எவ்வளவு என்று சொல்லுங்கள். உடனே ஐயாயிரம் ரூபாய். ஆபிசில் போய் தெரிந்துகொண்டு போன் செய்தாலும் சரி. அட்வான்ஸ் பணம் கொடுக்கிறேன். பாக்கி….."
"புரிந்தது" என்றான்
"நீங்கள் கெட்டிக்காரர் உங்களுக்கு விவரமாக சொல்லத் தேவையில்லை"
அனந்தராமன் யோசித்தான். அந்த கொட்டேஷன் இன் டிராஃப்ட் அவன் மேஜை மேல் டைப் அடிக்கக் காத்திருக்கிறது. அவனுக்கு கம்பெனி கொட்டேஷன் எவ்வளவு கொடுக்கப் போகிறார்கள் என்பது நன்றாக தெரியும். பதினெட்டு இலட்சத்து இருபதினாயிரம்.....…… இதை இவளிடம் சொன்னால் இவளுடைய கம்பெனி சற்று குறைவாக டெண்டர் அனுப்பி காண்ட்ராக்டை வாங்கிவிடுவார்கள்
"என்ன சொல்கிறீர்கள்?'
சொன்னால் என்ன அது துரோகம்….. துரோகம் ஒரு வார்த்தையில் அடங்கிவிட்டது. அவன் டைரக்டர் அவனிடத்தில் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு துரோகம் அவ்வளவுதான்.
அந்தப் பெண் அவனைப் பார்த்து கண் சிமிட்டினாள்
"எனக்கு ஞாபகம் இல்லை" . ஏன் முடியாது என்று சொல்லி எழுந்து போக மாட்டேன் என்கிறேன் இன்னும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
"ஆபிசுக்கு போய் எனக்கு போன் செய்யுங்கள். என் நம்பர் தருகிறேன்"
"எனக்குத் தெரியாது. ஃபைல் டைரக்டரின் அறையில் அலமாரியில் பூட்டி வைத்திருப்பார்"
"உங்களிடம் எல்லா சாவிகளும் இருக்குமே?"
"என்னிடம் இல்லை"
"நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏன் பயப்பட வேண்டும் உங்களுக்கு இஷ்டம் இல்லாவிட்டால் வேண்டாம். மறந்து விடுங்கள். ஏன் உங்களுக்கு கை நடுங்குகிறது"
"அதெல்லாம் இல்லை"
யூ ஸீ மிஸ்டர் அனந்தராமன் உங்கள் முதலாளி ஒரு மார்வாரி. என் முதலாளி ஒரு சிந்தி. இரண்டு பேருக்கும் பணம் நிறைய இருக்கிறது. இது நாய் நாயை தின்னும் வியாபாரம். வந்த டெண்டருக்கு இவர்கள் இருவரும் போட்டி போட, இதில் மார்வாரிக்கு கிடைத்தால் என்ன சிந்திக்கு கிடைத்தால் என்ன? ஒருவரும் கவிழ்ந்து போகப் போவதில்லை. நம் போன்றவர்களுக்கு பலன் எதுவும் இல்லை நீங்கள் சொன்னால் நம் இருவருக்கும் லாபம். என்ன சொல்கிறீர்கள்? பணம் வேண்டும் என்றாலும் இப்போதே வாங்கிக் கொள்ளுங்கள். ஐயாயிரத்துக்கு மேலே வேண்டுமா?
ஐயாயிரம் ரூபாய். அட்வான்ஸ் கொடுத்து விடலாம். பர்னிச்சர் வாங்கிவிடலாம். தேன் நிலவு கூட போகலாம்
"நீங்கள் கேட்கும் விஷயம் எனக்குத் தெரியாது. அந்த டெண்டரை என் டைரக்டர் பார்த்துக் கொள்கிறார்"
"இஷ்டமில்லை என்று சொல்லிவிடுங்கள். அனாவசியமாக பொய் சொல்லாதீர்கள். உங்களை நான் அதிகம் வற்புறுத்த விரும்பவில்லை. யோசியுங்கள், இதெல்லாம் டில்லியில் சர்வ சாதாரணம். பணத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் எனக்கு தகவல் சொல்லலாம். எனக்கு உங்களிடம் நம்பிக்கை இருக்கிறது"
இதிலும் ஒரு நம்பிக்கை
"இல்லை வேண்டாம்" என்றான்
வெயிட்டர் கொண்டுவந்த பில்லின் மீது அவசர அவசரமாக கையெழுத்து போட்டுவிட்டு "கிளம்பலாமா?" என்றாள். "உங்களை நான் மறுபடியும் ஆபீஸில் டிராப் செய்கிறேன்"
காரை மெதுவாக செலுத்திக் கொண்டிருந்தாள்
"அழகாக இருக்கிறது" என்றான்
"எது?"
"கார்"
கம்பெனி கார். மியூசிக் என்ற பட்டனை தட்ட பின் சீட்டில் இருந்து ஹிந்தி பட சங்கீதம் மெலிதாக ஒலித்தது.
"ஏன் ஓரமாக உட்கார்ந்து இருக்கிறீர்கள்?. மிகவும் வெட்கப்படுகிறீர்கள். அனந்தராமன் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?"
"இல்லை"
"கல்யாணம் உன்னதமானது"
"உங்களுக்கு?"
"இல்லை. நேரமில்லை மிஸ்டர் அனந்தராமன் நான் உங்களை ஒன்று கேட்கட்டுமா?"
"கேளுங்கள்"
"உங்களுக்கு அந்தத் தொகை தெரியுமல்லவா? அதை இங்கே வைத்திருக்கிறீர்கள் அல்லவா?" என்று தன் நெற்றியை தொட்டுக் காட்டினாள்
"இல்லை" என்றான் ஹீனமாக
"உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்"
"இன்று மாலை ஃப்ரீயாக தானே இருப்பீர்கள். என்னுடைய பிளாட்டுக்கு வாருங்கள். சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்"
"ப்ரியா நான் உங்களை ஒன்று கேட்கலாமா?"
"கேளுங்கள்"
"நான் சொல்ல வேண்டிய விஷயத்திற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா?"
"என்னால் முடிந்தால்..."
"ஏன்?"
"பப்ளிக் ரிலேஷன்ஸ்....."
"இது சர்வதேச பெண்கள் வருஷம்" என்றாள்
"அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"
"பெண்கள் நாட்டை ஆளுகிறார்கள். ஏரோபிளேன் ஓட்டுகிறார்கள். இந்த மாதிரி பப்ளிக் ரிலேஷன் வேலையும் செய்கிறார்கள். பெண்கள் கவர்ச்சிப் பொருளாக, சந்தைப் பொருளாக உபயோகிக்கப்படுவதை எதிர்த்து மெக்சிகோவில் மாநாடு ஒன்று கூடியது தெரியுமா?"
"எதற்காக உங்களை எப்படி உபயோகப்படுத்த அனுமதிக்கிறார்கள் ஊர் பேர் தெரியாத ஒருவனை அழைத்து பேசி, பிளாட்டுக்கு அழைத்து….."
"மிஸ்டர் அனந்தராமன் நான் உங்களிடம் கேட்டது ஒரு எண்ணிக்கை…. ஒரு நம்பர்….. உபதேசம் அல்ல….. உபதேசம் செய்ய நூற்றுக்கணக்கான ஆசாமிகள் இருக்கிறார்கள்"
கார் நின்றது. கையில் ஒரு குழந்தையுடன் மற்றொரு கையில் ஈவினிங் நியூஸ் பேப்பர்களுடன் ஒரு பெண் நின்று கொண்டிருக்கும் கார்களின் இடையே ஓட்டமும் நடையுமாக கெஞ்சி கெஞ்சி செய்தித்தாள் விற்றுக் கொண்டிருந்தாள்
"சர்வதேச பெண்கள் வருஷம்" என்று சொல்லி புறப்பட்டுச் சென்றாள் ப்ரியா.
==================================
துளசிதாஸர் ராமாயணம் முடிந்து புல்வெளி காலியாக இருந்தது. அலுவலகத்தில் லிஃப்ட் வேலை செய்யவில்லை. மெதுவாக ஒவ்வொரு படியாக ஏறினான். முழங்கால் வலித்தது. சுலபமாக ஐயாயிரம் ரூபாயை வேண்டாம் என்று சொல்லிவிட்டேனே …..தான் ஏதோ ஒரு மகத்தான காரியம் செய்துவிட்டதாக அவனுக்கு படவில்லை. பாவம் செய்வதற்கும் ஒரு ஜாதகம் வேண்டும். தைரியம் வேண்டும். ராசி வேண்டும். சுலபமாக அவளிடம் விலாசத்தை வாங்கிக்கொண்டு அவளை சினிமாவுக்கு கூப்பிட்டு இருக்கலாம்…. ஏன் அதை செய்யவில்லை…. நான் ஒரு கோழை.... அவ்வளவுதான்
தன் அறைக்குச் சென்ற உடனே "பெரியவர் கூப்பிடுகிறார்" என்று பியூன் சொன்னான்
நேராக அவர் அறைக்குச் சென்றான்.
"என்ன, ஏன் இவ்வளவு நேரம்?"
"மன்னிக்க வேண்டும். நான் ஒரு….."
"மணி என்ன என்று பார். லஞ்சுக்கு போனால் இரண்டு மணி நேரமா? உனக்கு எல்லாம் சம்பளம் கொடுப்பது வீண்...…"
"மன்னிக்க வேண்டும் சார்"
"நாளைக்கு ஒரு டெண்டர் போக வேண்டும். அதை டைப் செய்தாயா?"
"இல்லை சார்"
"போ உடனே அதை செய். மாலை எத்தனை நேரமானாலும் அதை முடித்துவிட்டு தான் போக வேண்டும். நீயே கைப்பட நாளை மினிஸ்ட்ரி கொண்டு செல்ல வேண்டும் புரிகிறதா?"
"சரி சார்"
"ஓவர் டைம் விடுவாயா?"
"இல்லை சார்"
"ஒரு பதினைந்து நிமிடம் அதிகமாக வேலை செய்தால் உடனே ஓவர்டைம் போட்டு வாங்கி விடுகிறாயே .....இப்போது இரண்டு மணி நேரம் லேட்…. உன்னை என்ன செய்வது?"
"தவிர்க்க முடியாதபடி…."
"நான்சென்ஸ் மான்....... கேஷியரிடம் உன் சம்பளத்தில் பணம் கட் செய்ய சொல்லப் போகிறேன். இது உனக்கு முதல் எச்சரிக்கை கொடுக்கிற சம்பளத்திற்கு ஒழுங்காக உழைக்கவேண்டும்"
டைரக்டரின் அறையை விட்டு வெளியே வந்த அனந்த ராமனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
No comments:
Post a Comment