Tuesday, January 4, 2022

ஏகாந்தமான இடம்

 சங்கராம்ருதம் - 19

தெய்வீக தேனம்பாக்கம் - பகுதி 10

பெரியவா  சரணம்

பெரியவா,  காஞ்சிபுரத்தை   அடுத்துள்ள   தேனம்பாக்கம் (சிவாஸ்தானம்)  கோயில்   பக்கத்தில்   வெகுகாலம்   தங்கியிருந்தார்கள்...

கல்லூரி   மாணவன்   ஒருவன்,  ஒரு நாள்   தரிசனத்துக்கு  வந்தான்..  அதிகக்    கூட்டமில்லாத  சமயம்..

"பெரியவாளுக்கு,   பெரிய   காஞ்சிபுரத்தில்    மடம் இருக்கு..  சின்னக்   காஞ்சிபுரம்   ஆனைகட்டித்  தெருவில்   ஒரு  மடம்  இருக்கு.   அதையெல்லாம்   விட்டுட்டு   இந்த  குக்கிராமத்தில்   பெரியவா   ஏன்  தங்கியிருக்கணும்?" என்று கேட்டான்..

பெரியவா   சிரித்துக்   கொண்டே  பதில்   சொன்னார்கள், " இந்தக்   கேள்வியை   என்னிடம்   கேட்கணும்னு   ரொம்ப   பேருக்கு  ஆசை.   ஆனா,  யாருக்கும்   தைரியம்  வரலை!  நீ  கேட்டுட்ட!   சந்தோஷம்..   சந்நியாசிகள்,   அதிக ஜன நடமாட்டம்   இல்லாத,  ஏகாந்தமான   இடத்தில்   இருந்து  கொண்டு  நிறைய   ப்ரணவ ஜபம்  பண்ணனும்.    காஞ்சிபுரம்,   பெரிய பட்டணம்...  ஜனங்கள்,  போக்குவரத்து,  வண்டி - வாகனங்கள்   சப்தம்   அதிகம்..   இந்தக்   கிராமம்   டவுனிலிருந்து   குறைஞ்ச  தொலைவில்   இருக்கு..  சப்தம் - இரைச்சல்,   சண்டை - சச்சரவு   எதுவுமில்லை..

"விஷ்ணு  காஞ்சி   எனப்படும்   சின்னக் காஞ்சிபுரத்தில்   கொஞ்ச நாள்   இருந்தாச்சு..   சிவ காஞ்சியில்  சிறிது   காலம்   இருந்தாச்சு..   தேனம்பாக்கம்   சிவாஸ்தானம்  என்பது   பிரம்ம காஞ்சி..  பிரம்மா  யாகம்   செய்த  இடம்...   இங்குள்ள  சுவாமிக்கு,   பிரம்ம புரீஸ்வரர்   என்று  பெயர்..  இங்க   ஸோம கணபதி   இருக்கார்.. "

 சில   நிமிடங்கள்    இடைவேளை.

" ஸோமாஸ்கந்தர் - னு   கேள்விப்பட்டிருக்கியோ? "

" சில   கோயில்களில்   பார்த்திருக்கிறேன். "

" அதிலே   என்ன  விசேஷம்? "

" பார்வதி  பரமேஸ்வரனுக்கு   நடுவில்   குழந்தையாக   சுப்ரமணியர்   இருப்பார்.. "

" அதே மாதிரி,   இந்த   ஊரில்   பார்வதி   பரமேஸ்வரனுக்கு  நடுவில்   குழந்தை  கணபதி   இருக்கார்!   ஆதிசங்கரர்   வந்து,  சிறிது   காலம்    தங்கியிருந்ததாக  கர்ண  பரம்பரையாகச்   செய்தி   உண்டு..   இங்கே   கோயில்   பக்கத்திலேயே    குளம்   இருக்கு..  ஜனநடமாட்டம்   அதிகமா   இல்லாததாலே   ஏகாந்தமா  இருக்கு..   ரொம்ப   நேரம்  ஜபம்   செய்ய  முடியறது..  அதனாலே   இங்க   தங்கியிருக்கேன்.. "

பெரியவா   சொன்ன  பதில்,  அந்த மாணவனுக்கு   மட்டுமில்லை ;  நெஞ்சுக்குள்   வேதனையுடன்   முணுமுணுத்துக்   கொண்டிருந்த   எத்தனையோ   பக்தர்களுக்கும்  தான்..

பிரம்ம காஞ்சி   என்ற   பெயரும்,  ஸோம கணபதியின்   சிறப்பும்   பெரியவாளுக்கு   கைங்கர்யம்   செய்யும்   அணுக்கத்   தொண்டர்களுக்குமே   புதிதான   செய்திகள்..

(தேனம்பாக்கத்தில்   பெரியவா    தங்கியிருந்த   கட்டடம்   இன்னும்   இருக்கிறது..   தற்போது   வேத பாடசாலையும்   நடந்து   வருகிறது..   

கஜபிருஷ்ட  விமானத்துடன்   விளங்கும்   பிரம்ம புரீஸ்வரர்   கோயில்   நன்றாகப்   பராமரிக்கப்பட்டு  வருகிறது...   தனியாக    அம்பாள்   சந்நிதி  இல்லை...   காஞ்சி காமாக்ஷி தான்,  அந்தப்   பிரதேசம்   முழுவதற்குமே   பொதுவான   சக்தி..)

No comments:

Post a Comment