Tuesday, January 4, 2022

பெங்களூரில் சில விஷயங்கள்...

 சில விஷயங்கள்...

பெங்களூரில் இன்னும் மிச்சமீதமிருக்கும்  சில ஆச்சரியங்களில் ஒன்று ப்ரீபெய்ட் ஆட்டோ. நயாபைசா கணக்கு பண்ணி சரியாக வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். பேச்சு, வம்படி ஒன்றையும் நான் அனுபவிக்கவில்லை! 

இங்க சென்னையில் வரவர ஓலா யூபர் ஆசாமிகளே மீட்டருக்கு மேலே கேட்பதாக நண்பர்  அங்கலாய்த்திருந்தார்.

முன்பு போல இல்லாமல் இப்பவெல்லாம் தமிழே சுத்தமாக அறியாத கூட்டம் பெங்களூரில் அதிகமாகி விட்டிருப்பதைக்காண முடிகிறது ஹோட்டல் சிப்பந்திக்கும் எனக்குமான உரையாடல்:

“கமர்ஷியல், ஸ்ட்ரீட்டுக்கு எப்படி போகணும்?”

.“ தமிழ் கொத்தில்லா சார்! நம்மிள்க்கு கன்னடா கொத்தா?

“ உங்கள்க்கு தமிழ் கொத்தில்லாவா?

” தமிழ் சொல்ப கொத்து சார்”

“ ஆனா எனக்கு கன்னடா நெறயவே குத்துமே!”

ஒரு வழியாக கார் டிரைவரின் சகாயத்தோடு போய்ச்சேர்ந்தேன், 8 கிமிக்கு ரெண்டரை மணி நேரத்தில்!

பங்களூர் நண்பர்கள் இனிமே சும்மா சென்னை சீதோஷணம் பத்தி பேசி உங்கூரை மெச்சிக் கொண்டால், நானும் சென்னை ட்ராஃபிக்கின் மேன்மையைப்பற்றி சிந்து பாட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்!

ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!

மெட்ரோ போடுகிறேன் என்கிற பேரில் கூத்து அடிக்கிறார்கள். நான் சல்லாபித்த இடங்களில் ( மத்திக்கெரி எக்ஸ்டென்ஷன், மல்லேஸ்வரம், யெஷ்வந்த்பூர்) ரோடுகள் குண்டும் குழியுமாய் ப்ரசவமே ஆகிவிடும்போல இருந்தன. இந்த ப்ரதேசங்களில் ப்ராணாயாமம் பண்ணுகிரேன் என்று மூச்சை கீச்சை இழுத்தீர்களானால், முக்கால் கிலோவுக்கு புழுதி உள்ளேபோய்விடும் அபாயம் இருக்கிறது.

என் அபிப்ராயத்தில் சென்னை எவ்வளவோ தேவலை.

Free Rental Cart available for elders and Physically challenged

இந்த போர்டுக்கு அடியில் படு சூப்பராக ஒரு பாட்டரி வண்டி வைத்திருக்கிறார்கள். நான் பார்த்தபோது அதில் திடகாத்திரமாக ஒரு கவுடர் உட்கார்ந்துகொண்டு தன்னைச்சுற்றிலும் சிப்ஸ், கடலை உருண்டை, பர்பி போன்ற பாக்கேட்டுகளை ஏற்றி ராயசமாக ப்ளாட்ஃபாரத்தை சுற்றி சுற்றி வியாபரம் பண்ணிக்கொண்டிருந்தார். 

ரெயில்வேஸ் இந்த மாதிரி எதானும் புதுமை ஆரம்பித்திருக் கிறார்களோ என்கிற சம்சயம் எனக்கு சுத்தமாக இல்லை!!

ஏஸி டிக்கட்டுக்காரர்களுக்கு என்று ஒரு ஏஸி வெய்ட்டிங்கி ஹால். 

நுழைந்து பார்த்தேன். மூன்றூ மூன்றாக நாற்காலிகள் போட்டு ஆறு வரிசை. ஒரு இடமாவது காலி இல்லை. எல்லாவற்றிலும் காலை நீட்டிப்படுத்துத் தூங்கும் ரெயில்வே சிப்பந்திகள்.

அந்த கேர்டேக்கிங் பெண்மணி “நை ட்யூட்டி மாடி சார்! அதான் ஸ்லீப்பிங்!” என்று நான் கேட்காமலேயே எனக்கு சமாதானம் சொன்னார்.

சௌத் இண்டீஸ் என்னும் இன்ஃபண்ட்ரி ரோடு ரெஸ்டாரண்ட்டில் Buffet அபாரம் தெரியுமோ?

அந்த மிந்திரி பருப்பை வறுத்து லேசாக குங்குமப்பூ போட்டு வைத்த சேமியா ஸூஃப்ளேவில் ராயசமாக சொருகி வைத்திருந்த வேஃபர் பிஸ்கெட்டுக்கே கட்டை விரலை வெட்டித்தரலாம்!

அந்தக்காலத்திலெல்லாம் வீட்டுக்கு கோபி என்று மஞ்சள் வெள்ளையாக ஒரு கலர் அடிப்பார்களே, அந்த நிறத்தில் பயத்த மாவில் அல்வா செய்து அதைச்சுற்றி ரத்தச்சிகப்பில் ஜெல்லியால் பார்டர் போடு அதன் மேல் வெள்ளை க்ரீமும் சொட்டி, நடுவில் செங்குத்தாக ஒரு ஜிலேபியின் சக்கரம் வைத்திருந்தால் பார்த்துக்கொண்டிருப்பதா இல்லை எடுத்து சாப்பிடுவதா?

மாங்காய் சாதம் என்று ஒரு சமாச்சாரம். அது 18 வயதுப்பெண் வெட்கப்படும் மஞ்சள் கலரின் லேசான வெண்மையும் கலந்த நீள நீளமான மாங்காய்த் துருவல் தெளித்த, கடுகு விழிக்கும் சொர்கக சாதம்! அதனுடன் தொட்டுக்கொள்ள Tangyஆக ஒரு சிகப்பு சட்னி!

எல்லாம் முடிந்து வாசலுக்கு வந்தால் ஒரு ஆசாமி, ”சாக்லேட் பான் சாப்பிடுங்க”!

“என்னது?” என்று இன்பமாக திடுக்கிட்டு வாங்கி வாயில் போட்டால் பனாரஸ் பானை நன்கு பழுத்த பேரீச்சம்பழத்தில் அமுக்கி அதை சாக்லேட் சாஸில் திளைத்து…..

அட போங்க சார்! மூணுக்கு மேல சாப்பிடமுடியல!

கொரோனா சகித ஒமைக்ரான் அம்மன் சகாயம் வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment