மும்பை வாழ்க்கை: வருடம் 1990.
லேடீஸ் கோச்.
மும்பையில் வேலை தேடி காலடி எடுத்து வைத்ததும் நம்மை நடு நடுங்க வைப்பது, அங்கு ஓடும் லோக்கல் எலக்டிரிக் டிரெயின்களின் பிரயாண வாழ்க்கை. ஏற்கெனவே எழுதி இருந்தேன். ஆரம்ப நாட்களில் வண்டியினுள் ஏறி, இறங்க திக்கு முக்காடி உடலில் அடிபட்டு வாழ்க்கைப் பயணம் ஓடியது. சில மாதங்கள் ஆன பின்பு எவ்வாறு ரயில் பிரயாணம் செய்ய வேண்டும் என சில நுணுக்கங்களை படித்த பின்பு, அன்றாட ரயில் வாழ்க்கை ஜாலியாக அமைந்தது.
நான் வேலை தேடும் நாட்களில் ரயில் வண்டி பிளாட்ஃபார்மில் சத்தம் போட்டுக்கொண்டு உள்ளே வரும் நேரம் மக்கள் அனைவரும் வண்டியினுள் ஏறுவதற்கான தயார் நிலைக்கு வந்துவிடுவார்கள். பெண்கள் புடவையை இடுப்பில் எடுத்து முடிந்து கொள்வதும், துப்பட்டாவை மாலையாக போட்டுக்கொண்டும் ரயில் ஏறுவதற்கு தயார் ஆவார்கள்.
பிளாட்ஃபார்ம் விளிம்போரம் அலையென திரண்டு நிற்கும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே சிக்கி சின்னா பின்னம் ஆகி, எப்படியோ கம்பார்ட்மெண்டுக்குள் ஏறி, டப்பாவிற்குள் உள்ளே ஒரு குட்டி ஓட்டப்பந்தயம் போட்டு, கோடியில் கடைசி சீட்டில் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு நடுவில் போய் நின்று கொள்வது என் வழக்கமானது. அந்தக்காலத்தில் VT என அழைக்கப்பட்ட கடைசி ஸ்டாப்பான Victoria Terminus ல் இறங்குவதால் உள்ளே போய் நிற்பதுதான் உசித்தம் என கொஞ்ச நாளைக்கு அப்பறம் உணர ஆரம்பித்தேன்.
எங்களது கோச்சிற்கு பக்கத்தில் இருக்கும் கோச் பெண்களுடையது. சில ரயில்களில் முழுவதுமாக இரண்டு கோச்சிற்கும் நடுவில் தடுப்பு இருக்கும். சில வண்டிகளில் கிரில் கதவு போல ஜன்னல் வைத்த தடுப்பு மட்டும் இருக்கும். அந்தப்பக்கம் இருக்கும் பெண்களின் கோச் நன்றாக தெரியும். அவர்களை நன்றாக பார்க்க முடியும்.
அன்று நான் ஏறிய வண்டியில் ஜன்னல் வைத்த தடுப்பு இருந்தது. ஆண்கள் கோச்சிற்குள் எப்படி பஜனை பாட்டு, சினிமா பாட்டு, சீட்டு விளையாட்டு என டைம் பாஸ் செய்வார்களோ அதே போல பெண்கள் கோச்சினுள்ளும் அவர்கள் எப்படி ரயில் பிரயாண நேரத்தைக் கழிக்கிறார்கள் என கண்கூடாக என்னால் பார்க்க முடிந்தது.
அன்றைய தினம், ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி தனது ஹேண்ட் பேக்கில் இருந்து குட்டி லஞ்ச் டப்பாவை எடுத்து அதன் மூடியை திறக்கிறார். உள்ளே அழகாக முக்கோண வடிவில் மடித்து வைக்கப்பட்ட மெல்லிய மூன்று சப்பாத்திகள் இருந்தன. அதற்குக் கீழே பீன்ஸ் சப்ஜி. வெளியே சப்பாத்தியை எடுத்து தனது தோழிக்கும் கொடுத்து இருவரும் பேசிக்கொண்டே சாப்பிடத் தொடங்குகிறார்கள். அந்தத் தோழியும் இவரைப்போலவே டிபன் எடுத்து வந்திருந்தார். மாற்றுப் பரிவர்த்தனை நடந்தது அங்கே.
காலையில் நேரம் இல்லாததால் காலை டிபனை கையோடு கொண்டு வந்து விடுகிறார்கள் என புரிந்தது.
அடுத்த பக்கம் ஐந்து ஆறு பெண்கள் சேர்ந்து கொண்டு படங்களின் புதிர் போட்டியான “அண்டாக்ஷரி விளையாட்டை” ஜாலியாக விளையாடுகிறார்கள். கால் வலி தெரியாமல் நின்று கொண்டே அதைப்பார்த்து ரசிக்கறது ஒரு கூட்டம்.
இன்னொரு பக்கம் கையில் ஊசியையும், நூலையும் வைத்துக்கொண்டு, கொண்டு வந்த வளையத்தின் மேலே இருக்கும் காட்டன் துணியில் அழகாக வண்ண வண்ண நிறங்கள் கொண்ட நூல்களால் எம்பிராய்டரி வேலையை செய்து கொண்டு இருந்தார் ஒருவர். ஸ்வெட்டர்க்கு எம்பிராய்டரி போடுவார் போல தெரிந்தது.
இதுமட்டுமில்லாமல் ஸ்லோகங்களும், பஜனைகளும் கூடிய ஒரு குரூப் தனியாக ஓடிக்கொண்டு இருந்தது. அவர்கள் பாடும் தெய்வீக ராகங்களை காதுக்கு இனிமையான கேட்டுக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தேன்.
மும்மரமாக இயங்கும் மும்பையின் இயந்திர வாழ்க்கையில், நெரிசலான அந்த ஒரு மணி நேர ரயில் பயணத்தின் நடுவில் தனது கவலைகளையும், சோர்வுகளையும் மறந்து, தனக்குத்தானே மனதை உற்சாகப்படுத்திக்கொண்டு அலுவலக வேலைக்கு அன்றாடம் செல்கின்றனர். இந்தப்பயணம்தான் அனைவருக்கும் ஒரு Stress buster ஆக இருக்கிறது எனக்கூட சொல்லலாம்.
VT யில் இருந்து திரும்பி வரும்போது ரயிலில் ஏறி உள்ளே சென்றேன். அதே ஜன்னல் கம்பி வைத்த கோச். அடுத்த பக்கம் லேடீஸ் கோச். அங்கு ஒரு பெண்மணி தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு பிளாஸ்டிக் பையை எடுக்கிறார். கூடவே காலியான லஞ்ச் டப்பாவையும் எடுக்கிறார். அடுத்ததாக ஒரு சிறிய கத்தி. பிறகு பிளாஸ்டிக் பையில் கையை விட்டு ஒவ்வொரு பீன்ஸாக எடுத்து நறுக்கி அதை அந்த டப்பாவில் போடுகிறார்.
அன்றைய இரவு சாப்பாட்டுக்கு ரயிலில் பயணிக்கும் நேரத்தில் ரெடி செய்து கொண்டு இருந்தார் என புரிந்தது. இதுதான் மும்பையின் நடுத்தர வர்க்க குடும்பங்களில் வேலைக்கு செல்லும் பெண்மணிகளின் அன்றாட வாழ்க்கை எனவும் புரிந்தது.
No comments:
Post a Comment