Friday, January 14, 2022

மனதோடுமலர்கள்_49

மனதோடுமலர்கள்_49

அத்யாயம் 49

கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா 

ஒரு வைபவ ஏற்பாடுகளை ஒரு அத்யாயத்தில் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. முயற்சிக்கிறேன் முடிந்தவரை சுருக்கமாக.

மொத்தம் பொண் ஆத்திலிருந்து இருபது அல்லது இருபத்தைந்து பேர்கள் வருவதாக செய்தி அனுப்பப் பட்டு விட்டது.

திருச்சியிலிருந்து மாலதியும் அவள் ஹாஸ்டல் மேட் நீரஜாவும் வேலூருக்கு வெள்ளி இரவு வந்து விடுவது உறுதியானது.

சம்மந்தி மாமா, மாமி, ஸ்ரீதர், கற்பகம், குழந்தை சுரேஷ் சனிக்கிழமை காலை வேலூருக்கு இரு கார்களில்.

பக்கத்தாத்து தையல் நாயகி மாமி, எதிர் ஆத்து சுகுணா அவர் கணவன் ராமச்சந்திரன் கிளம்ப தயார்.

காஞ்சீபுரத்திலிருந்து மாலதியின் அத்தை குடும்பத்திலிருந்து மூவர், நேராக மெட்ராஸுக்கு.

ஸ்ரீதரின் பால்ய நண்பன் சத்யாவும் அவன் மனைவியும் ஞாயிறு காலை மெட்ராஸ் புறப்பட சேர்ந்து கொள்வது தீர்மானம் ஆகியது.

ஜானகியின் அலுவலக நண்பிகள் மூவர்.

மாலாவும் நீரஜாவும் ஞாயிறு அதிகாலை மெட்ராஸ் புறப்பட்டு சென்று அண்ணு, சந்துரு, ராஜி, அவள் அம்மா, சச்சு மாமி, அவள் பெண் நித்யா ஆகியோரை அழைத்துக் கொண்டு நேராக மாம்பலம் வந்துவிடவேண்டியது.

தி.நகர் சிவா விஷ்ணு கோவிலில் நிச்சயதார்த்தம், மாலை ஆறு மணிக்கு துவக்கம். வைபவம் நிறைவுற்றதும், எல்லோருக்கும் சாப்பாடு மாப்பிள்ளை வீட்டில்.

மாலாடு, ஏழு சுற்று முறுக்கு இவைகள் 51 எண்ணங்களில், இரண்டு கிலோ திரட்டுப்பால், பழத்தட்டுகள், தாம்பூல தட்டு தேங்காய்களோடு, மனோஹரம் பருப்பு தேங்காய் கூடுகள் இரண்டு எண்ணம், ட்ரை ஃப்ரூட்ஸ் வகைகள், கற்கண்டு, சர்க்கரை, பப்பர்மிண்டுகள், அரிசி டைப் சீரக மிட்டாய்கள், சாக்லேட்டுகள், மாப்பிள்ளைக்கு ரெடிமேட் சில்க் சட்டை, பட்டு வேஷ்டி, அரை பவுனில் மோதிரம், ஒண்ணரை பவுனில் ஒரு மைனர் செயின், ஒரு முக்கால் பவுனில் ஒரு ப்ரேஸ்லட். இவை ஸ்ரீனிவாசனின் ஏற்பாடுகள்.

பதினைந்து பேர் கிளம்ப மூன்று கார்கள், திருப்பூரிலிருந்தே கொண்டு வர சம்மந்தியின் ஏற்பாடுகள்.

வெள்ளி இரவு மாலதியும் நீரஜாவும் வந்தது முதல் களை கட்டிவிட்டது சத்துவாச்சாரி வீடு. வீடு ரெண்டு பட்டது போங்கள் ஆட்டமும் பாட்டமும். ஜானா, மாலதி, நீரஜா வின் அலுவலக நண்பர்களைப்போல நடித்து மிமிக்ரை.

சனிக்கிழமை மன்னியும் சேர்ந்து கொண்டாள் சந்தோஷங்களில்.   மன்னியின் கைக்குழந்தைக்கு மாறி மாறி முத்தங்களுடன் கொஞ்சல்கள், சீண்டல்கள், சமாதானங்கள்.

சம்மந்தி மாமாவும் ஆனந்த கோதாவில் கலந்து கொண்டார். அவர் அவிழ்த்து விட்ட அவருடைய பழைய கால நினைவுகள் மற்றும் ஜோக்குகள்.

அவ்வப்போது டென்ஷனுடன் அலைந்த ஸ்ரீனிவாசனும் ஸ்ரீதரும் கூட அவ்வப்போது களிப்புகளில்.

இரவு இழை கோலங்கள் திண்ணையிலும் தாழ்வாரங்களிலும், ஸ்வாமி அறைக்கு முன்பாகவும், எதிர் ஆத்து சுகுணா மாமி உதவியுடன்.

ஒரு புறம் சிரிப்பலைகளுடன் மருதாணிப் படலம். ஒருவருக்கொருவர் கைகளில் இட்டுக்கொண்டு.

மாம்பலம் பாகிரதி மாமி வீட்டில் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ள அனுமதி முன்னரே பெற்று விட்டாள் மாலதி. இரண்டு மணியிலிருந்து நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கும் வரை. அதற்குண்டான புடவைகள், மேட்சிங் ப்ளவுஸ் டிஸ்கஷன்ஸ். 

நீ இதைப் போட்டுக்கோ, நான் அதைப் போட்டுக்கறேன், உனக்கு இது எடுப்பா இருக்காது, அய்யய்யே இது உனக்கு நல்லாவே இருக்காது, சொல்லியிருந்தா திருச்சியிலேயே வாங்கிண்டு வந்திருப்போமே, அம்சு ஸ்டோர்ஸ் திறந்திருந்தா இப்பவே வாங்கிண்டு வந்துடலாம்..அப்பப்பா, பெண்களின் அலங்கார வாத விவாதங்களுக்காகவே ஒரு புத்தகம் போடலாம்.

வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து சளைக்காது சமையலறையிலிருந்து வாசம் கொடுத்துக் கொண்டிருந்தாள் கமலம். அவள் கை மணத்துக்கு எந்த நாக்கும் சப்பு கொட்டும்.

ஞாயிறு அதிகாலை நீரஜாவையையும் மாலதியையும் ஸ்ரீதர் அரைத் தூக்கத்தில் பஸ் ஸ்டாண்டுக்கு காரில் அழைத்துச் சென்றான். மெட்ராஸ் பஸ் ரெடியாக இருந்தது.

தொடரும்

No comments:

Post a Comment