மனதோடுமலர்கள்_48
அத்யாயம் 48
கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா
நிறைய பேசிக்கொண்டு போனார்கள் மாலதியும் ஸ்ரீனிவாசனும். திருச்சி இறங்கும் போது இரவு பனிரெண்டுக்கு மேலே ஆகிவிடும். சுமார் நான்கு மணிக்கு சந்துரு தாம்பரத்தில் ஏற்றி விட்டான்.
பேச்சுக்கள் அண்ணு மாமியை பற்றி, மாப்பிள்ளை ஆத்துக்காரா பற்றி, ஜானாவின் விரக்தி, ஸ்ரீதரின் கோபம், கற்பகத்தை பற்றி. மாலதி அப்பாவை சாந்தப்படுத்துவதும் ஆறுதல் கூறுவதுமாகவே இருந்தாள். சந்துருவைப் பற்றி அப்பாவும் பேசினார்.
'ரொம்ப ஸ்மார்ட்டாவும் டீஸண்ட் பிஹேவியர் உள்ளவனாகவும் இருக்கானே அண்ணு மாமி பையன்'.
அவளிடமே சொன்னதில் சற்று சிரித்தாள். இந்த ரெண்டுல தானே நான் விழுந்துட்டேன்னு அப்பாவிடம் வெளிப்படையாக கூற முடியுமா என்ன, சிரித்துக் கொள்ளத்தானே முடியும்.
பேசிக்கொண்டிருக்கும் போது மாலதி சொன்னது அவருக்கு பிடித்திருந்தது.
'அப்பா, நீங்க ஏன் திருப்பூர் போய் சம்மந்தி மாமாவ நேரில் பார்த்து நிச்சயதார்த்தத்துக்கு கூப்பிடக் கூடாது. ஸ்ரீமதி மாமியோட முதல் கேள்வியே அண்ணா வரலியான்னு தானே. நம்ம கிட்ட இருக்கிற மனஸ்தாபங்கள் ஏன் அவாளுக்கு தற்சமயம் தெரியணும். ஐ திங்க் அண்ணாவோட மாமனார் கிட்ட சொன்னா அவர் அண்ணா கிட்ட எடுத்து சொல்லலாம் இல்லையா?'
ஸ்ரீனிவாசன் இப்படி யோசிக்கவே இல்லை. மாலதியிடம் 'வயசுல சின்னவளா இருந்தாலும் நீ சொல்றது நல்ல அட்வைஸா தெரியறது. ட்ரை பண்றேன் மாலதி.'
ஹாஸ்டல் வந்தவுடன் வார்டன் சூர்யகலாவிடம் அப்பாவை அறிமுகப் படுத்தினாள். சிறிது நேரம் பேசிவிட்டு வேலூர் கிளம்பினார்.
அவர் போனபின்பு சூர்யகலாவிடம் அக்கா நிச்சயதார்த்தத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்து படுத்தாள். ஸோ டயர்ட். இருக்காதா பின்னே. என்ன அலைச்சல் அவளுக்கு.
'வாங்கோ, வாங்கோ. குழந்தைகள் எல்லாம் சௌக்கியமா. ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாமே?'
இரண்டாம் நாள் திருப்பூர் வந்த ஸ்ரீனிவாசனை அவர் சம்மந்தி வைதீஸ்வரன் வரவேற்றார்.
'நேரம் சரியா இருந்தது. அதான் வரதுக்கு தள்ளிப் போயிண்டே இருந்தது. மாமி சௌக்யமோண்ணோ?'
'அவளுக்கென்ன கொறச்சல். அவ சாப்பாடு சாப்பிடற நாம தான் உடம்ப பார்த்துக்கணும்', ஜோக் அடித்தார்.
'உமா, யார் வந்திருக்கா பாரு. நம்ம சம்மந்தி வந்திருக்கார் டி'
அப்புறம், சொல்லுங்கோ சம்மந்தி.'
'ஒண்ணுமில்லை. என் மூத்த பொண் ஜானாக்கு வரன் ஒண்ணு அமஞ்சு வர ஞாயித்துக் கிழமைக்கும் அடுத்த ஞாயித்துக் கிழமை மெட்ராஸுல நிச்சயதார்த்தம். அத சொல்லிட்டுப் போகலாம்னு...'
'போன வாரம் பொண் பார்த்துட்டு போனான்னு மாப்பிள்ளை சொன்னார். ரொம்ப சந்தோஷம். அவசியம் நாங்க நிச்சயதார்த்தத்தில கலந்துக்கறோம்.'
'பொண் பார்க்க அவா வரும்போது உங்களையும் நான் கூப்பிட்டிருந்துருக்கணும். ஏதோ அசட்டுத்தனமா இருந்துட்டேன். க்ஷமிக்கணும்.'
'ச்சே ச்சே, இதெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்கோ. மாப்பிள்ளை கூட உங்களை எல்லாம் கோச்சிண்டதா சொன்னார். நான் என்ன சொன்னேன் தெரியுமோ. உங்க தங்கை சமாசாரத்துக்கு நீங்க என்னை உங்காத்து சார்பா கூப்பிட்டிருக்கலாமேன்னு சொன்னேன். அவரும் பொண்ணுக்கு அண்ணா தானே?இந்த காலத்துக் குழந்தைகள் எப்போதுமே அதுங்களோட குறைகள சொன்னா ஒத்துக்கறதில்ல. அத விடுங்கோ. எப்படி அலையன்ஸ் கிடச்சது, மாப்பிள்ளை என்ன பண்றார்,..அதெல்லாம் கொஞ்சம் சொல்லுங்கோ'.
சொன்னார். சந்தோஷப் பட்டார் வைதீஸ்வரன். இதற்கிடையில் சம்மந்தி மாமியின் காஃபி உபசரிப்பு.
என்ன தோணியதோ வைதீஸ்வரனுக்கு. மில்லுக்கு ஃபோன் போட்டு மாப்பிள்ளையுடன் பேசினார்.
'மாப்பிள்ள, ஆஃபீஸ் வேலைய அப்படியே போட்டுட்டு ஆத்துக்கு போய் கற்பகத்தையும் பேராண்டியையும் அழைச்சுண்டு நேர நம்மாத்துக்கு வாங்கோ. மத்தத நேரில பேசிக்கலாம்.'
மாமனார் வீடு வந்த ஸ்ரீதருக்கு அங்கிருந்த அப்பாவை பார்த்தவுடன் ஷாக்.
'என்ன மாப்பிள்ள, ஏன் திகைச்சு நிக்கறேள். உங்க தங்கைக்கு நிச்சயம் பண்ணிட்டு என்ன கூப்பிட வந்திருக்கார் உங்க அப்பா. நானும் உமாவும் போகப் போறோம். உங்களோட தங்கை நிச்சயதார்த்தத்திற்கு நான் போகலைனா எப்படி? அதான்'
பதில் ஏதும் சொல்லவில்லை ஸ்ரீதர்.
'மாப்பிள்ள, பொண் பார்க்க அவா வரும்போது என்ன கூப்பிடாததற்கு நாங்க ரெண்டுபேரும் பேசி சமாதானம் ஆயிட்டோம். அவருக்கு மூத்த பையன்கிற அடிப்படையில நீங்க கூப்பிட்டிருந்தா போதும், அவர் சார்பாவே ஏந்த்துண்டிருப்பேன். நடந்து முடிஞ்சதையே தோச்சு தோச்சு பேசக் கூடாது.'
'கற்பகம், நீ அந்தாத்து மாட்டுப் பொண். ரெண்டு நாள் முன்னாடியே வேலூர் போய் அவாளுக்கு பக்க பலமா இரு. சம்மந்தி அப்ப சம்மதிச்சு இருக்கலைனா நீயே அந்தாத்து மாட்டுப் பொண்ணா இப்ப இருந்திருக்க மாட்டே.'
'எனக்கு பணம் காசு இருக்கலாம். அவா கிட்ட அதுக்கு மேல மனசு இருக்கு. என் பொண்ணு வசதியான பொண்ணுங்கறதுக்காக எங்காத்து மாட்டுப் பொண்ணா ஏத்துக்கறேன்னு அப்ப சொல்லல. தன் பையனுக்கு நல்ல இடமா பொண்ணு கிடைக்கறதுன்னு தெரிஞ்ச உடனேயே தன் கஷ்டங்களை ஒதுக்கி வெச்சுட்டு உங்க கல்யாணத்துக்கு ஒத்துண்டார். கோபத்தெல்லாம் ஒடப்புல போட்டுட்டு, நீங்க ரெண்டு பேரும் அவாளுக்கு பலமா இருங்கோ. நீர் அடிச்சு நீர் விலகறது இல்ல. என்ன, புரிஞ்சுதா?'
ஆச்சர்யம், உள்ளுக்குள்ள சிலிர்ப்பு, ஸ்ரீனிவாசனுக்கு. எப்படியெல்லாம் அவருடைச ஸ்டேட்டஸை மனசுல வெச்சிண்டு தப்பு கணக்கு போட்டு இவர் கிட்டேந்து இத்தனை வருஷம் விலகி நின்றிருக்கிறோம்.
இத்தனை நாள் நாம சொல்றதை மனசு கேட்டுதா அல்லது நம் மனசே நமக்கு வீணான கற்பனைகளை கொடுத்து சத்ருவாக இத்தனை நாள் துர்போதனை செஞ்சிருக்கா. புரியலையே.
'சம்மந்தி நானும் உங்க பையனும் ரெண்டு கார்ல முதல் நாளே வேலூர் வந்துடறோம். தேவைப்பட்டா இன்னொரு காரை வாடகைக்கு எடுத்துப்போம். அக்கம் பக்கத்துல உங்களுக்கு தெரிஞ்சவாளையும் சேர்த்துக்கோங்கோ. நிச்சயதார்த்தத்தை ஜமாய்ச்சுடலாம்.'
சாப்பாட்டை முடித்துக் கொண்டு நிறைந்த மனசுடன் வேலூர் கிளம்பினார் ஸ்ரீனிவாசன். வழி நெடுக மாலதிக்கு மனதோடு பாராட்டை சொல்லிக் கொண்டே வந்தார்.
தொடரும்
No comments:
Post a Comment