திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −18
பத்மா கோபால் 🌺🌹🌹🌹🌺🌹
"ஆத்மார்த்தமா நீ எந்தக் கைங்கர்யம் பண்ணாலும், ஒனக்கு ஆசார்ய அனுக்ரஹம் கண்டிப்பா கெடைக்கும்...
பெரிய அளவுல நம்மால கைங்கர்யம் பண்ண முடியலையேனு நீ கொறபட்டுக்காதே!..
சின்ன கைங்கர்யமானாலும், அதுல ஒனக்கு இருக்கற ஈடுபாடுதான் முக்கியம்...
"இந்த கைங்கர்யம் நமக்குப் பெரிய கொடுப்பினை.."னு நெனச்சு செய்!..
அதுவே போறும் அம்மணி..."
.....மாமுனிகள் திருவல்லிக்கேணி அம்மையாரின் மனக்காயத்துக்கு மருந்திடுவது போல் பேசினார்...
அதுவே அம்மையாரின் கண்களில், தற்பொழுது கண்ணீரை வரவழைத்தது...
"ஸ்வாமி... தேவரீருக்கு அடியேன் மேல இருக்கற அபரிமிதமான வாத்ஸல்யத்துனால, இப்படியொரு வார்த்தை சொல்கிறீர்!..
ஆத்மார்த்தமா கைங்கர்யம் பண்ணறதுனா அடியேனுக்கு என்னவென்னே தெரியாதே ஸ்வாமி!...
த்ரவிய (தனம்/பொருள் இத்யாதி..) த்யாகம் பண்ணிக் கைங்கர்யம் பண்ணாட்டாலும் பரவாயில்ல..
சரீரத்தால உபகாரமோ அல்லது சரீர த்யாகம் பண்ணி ஒரு கைங்கர்யம் பண்ணணும்னோ அடியேனுக்கு என்னிக்காவது தோணி இருக்கா?..
அடியேன் என்ன,
#சரிவிலிழந்தேனோ தோழப்பரைப் போல?.."
என்று நெஞ்சு தழுதழுக்க வார்த்தை சொன்னாள்...
"இதனுடைய வ்ருத்தாந்தத்தையும் நீயே சொல்லிவிடேன்.." என்பதுபோல் மாமுனிகள் கண்களாலேயே நியமிக்க,
திருவல்லிக்கேணி அம்மையார் தொடர்ந்தார்...
ஸ்வாமி...அடியேன் சொல்லிண்டிருந்தேன் இல்லையா?..
திருமாலிருஞ்சோலையில இருந்த நம்பெருமாளையும், நம்மாழ்வாரோட திருமேனியயும், கேரள நாட்டிலிருக்கிற கோழிக்கோட்டுல கொஞ்ச காலம் எழுந்தருளப் பண்ணி, நித்ய ஆராதனங்கள்லாம் பண்ணிண்டு இருந்தா..
அப்போ... அங்கேந்து நம்பெருமாள் திருவேங்கடம் எழுந்தருளினதாலே, சில வைஷ்ணவர்கள்லாம் சேர்ந்துண்டு,
ஆழ்வார் திருமேனிய, தென்மேற்கு திசையில வெகுதூரம் எழுந்தருளப் பண்ணிச் சென்று, மேலே போக வழியில்லாம, கள்ளர் பயத்தால,
"முந்திரிப்பு"ங்கற மலைச்சரிவில, ஒரு பெட்டியில சேமவைப்பா வெச்சு, ஒரு சங்கிலியில் கட்டித் தொங்கவிட்டு, பத்திரப்படுத்தி வெச்சுட்டு, தம்மோட ஊருக்குத் திரும்பிட்டா...
அப்படி ஆழ்வார எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போனவர்கள்ல, "தோழப்பர்"னு ஒரு ஶ்ரீவைஷ்ணவரும் இருந்தார்..
ஆழ்வார் இந்த மாதிரி நித்ய திருவாராதனம் எதுவும் இல்லாம, ஒரு பெட்டிக்குள்ள அடைஞ்சு கெடக்கறத, அந்தத் தோழப்பரால சகிச்சுக்க முடியல..
ஆழ்வார எப்படியாவது அந்த மலைச் சரிவிலேந்து வெளிப்படுத்தி, அவருக்கு நித்ய திருவாராதனத்துக்கு ஏற்பாடு பண்ணணும்னு ஆசப்பட்டவர், நேரே மதுரைக்கு வந்து,
அங்க ராஜப்ரதிநிதியா ஆட்சி பண்ணிண்டிருந்த திருமலையாழ்வார சந்திச்சு,
ஆழ்வாரோட நிலமையையும், தன்னோட ஆசையையும் அவர்கிட்ட சொன்னார்..
அந்த செய்தியத் தெரிஞ்சுண்ட திருமலையாழ்வாரும் உடனே மலையாள ராஜாவுக்கு ஶ்ரீமுகம் (ஓலை/கடிதம்) எழுதிக் கொடுத்து, நிறைய த்ரவியங்களோட மனுஷ பலத்தையும் உண்டாக்கிக் கொடுத்தார்..
தோழப்பர் திருவாங்கோட்டூருக்குப் போய், மலையாள ராஜாவ சந்திச்சு, அவர்கிட்ட திருமலையாழ்வாரோட ஶ்ரீமுகத்தக் கொடுத்து, சேதியயும் சொன்னார்..
அந்த மலையாள ராஜாவும் நிறைய ஆட்கள தன்சார்பில தோழப்பரோட சகாயத்துக்காக அனுப்பிக் கொடுத்தார்..
மலையுச்சிக்குப் போய், சங்கிலிப் பலகைகள் எல்லாம் தயார் பண்ணியாச்சு...
ஆனா...ப்ராண பயத்துனால, அந்தச் சரிவில இறங்க எல்லாரும் அச்சப்பட்டா...
அப்போ தோழப்பர், தாமே இறங்குவதாகச் சொல்லி, கையில ஒரு எழுத்தாணியும், ஓலையும் எடுத்துண்டு, அந்தச் சங்கிலிப் பலகை மூலமா அதலபாதாளத்துல இருந்த அந்த சரிவில போய் இறங்கினார்..
ரொம்ப நேரம் ஆழ்வார் இருந்த பெட்டகத்த, அந்த அடர்காட்டுல தேடிண்டு இருக்கச்சே, ஒரு க்ஷேமகார பக்ஷியோட இனிய குரல் அவர் செவியில வந்து விழுந்தது..
குரல் வந்த திசையில பார்த்தா, அந்த பக்ஷி ஆழ்வார் இருந்த பெட்டகத்து மேலே அழகா அமர்ந்து கூவிண்டிருக்கு!..
அதிசயிச்சுப் போன தோழப்பர், பெட்டியக் கண்டு, அத திறந்து பார்த்து, உள்ள இருந்த ஆழ்வாரை சேவிச்சு, ரொம்பவும் சந்தோஷமாகி, அங்க நடந்ததை எல்லாம் அந்த ஓலையில எழுதி, பெட்டியில வெச்சுக் கட்டி, சங்கிலியைக் குலுக்கவும்,
மேல இருந்தவாள்லாம் சங்கிலிய மெதுவா இழுத்து ஆழ்வார மீட்டெடுத்தா...
திரும்பவும் தோழப்பர மீட்கறதுக்காக, தொங்குப்பலகைய கீழே விடவும், தோழப்பர் அதில ஏறி மேல வந்துண்டு இருந்தார்..
ஆனா... பாதி வழியில, மலையோட ஒரு முகடு தட்டுப்பட்டு, தோழப்பர் அதல பாதாளத்துல விழுந்து, தமது ப்ராணன விடும்படி ஆயிடுத்து!..
பாவம்!..
வேறவழியில்லாம....
.....மேல நின்னுண்டு இருந்தவாள்லாம், தோழப்பரோட குமாரரான அப்பன் பிள்ளைக்கு ரொம்பவும் சமாதானம் சொல்லி, அவர ஊருக்குக் கூட்டிண்டு வந்தா....
சொல்லுங்கோ ஸ்வாமி...
ஒரு ஆழ்வார் திருமேனியில இவ்வளவு ஆசை வெச்சு, அவர மீட்கறதுக்காக, தன்னோட உயிரயே த்யாகம் பண்ண தோழப்பர மாதிரி நம்ம சம்பிராதயத்து மேல ஒரு ஈடுபாடோ, இல்ல அதக் கட்டிக் காக்கற தேவரீரப் போன்ற ஆசார்ய ஸ்வாமிகள் மேல ஒரு பக்தியோ அடியேனுக்கெல்லாம் ஸித்திக்குமா என்ன?.."
......கேள்வி கேட்டபடி தன்னெதிரே நின்றவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், மாமுனிகள் சற்றே யோஜனையில் ஆழ்ந்தார்...
(வளரும்..)
No comments:
Post a Comment