(திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −17
திருவல்லிக்கேணி பெண்மணி வெகுநேரமாய் தான் எந்த கைங்கர்யமும் செய்ததில்லை என்று வருத்தப்படுவதைக் கண்ட மாமுனிகளுக்கு அவள் மீது அனுதாபம் பிறந்தது..
"அம்மணி...
இழந்த காலத்துக்கெல்லாம் சேர்த்து, இப்போ ஏதானும் பெரிசா கைங்கர்யம் பண்ணணும்னு நீ ஆசப்படற மாதிரி தெரியறதே...
ஒன்னோட சக்தி என்ன அம்மணி?.."
....என்று ஆறுதலாகக் கேட்டார்...
....மாமுனிகள் அப்படிக் கேட்டதும், திருவல்லிக்கேணி அம்மையாருக்குத் துக்கம் இப்பொழுது மேலும் அதிகரித்தது...
அந்த துக்கத்தை அடக்கமாட்டாமல்,
"ஸ்வாமி... அடியேன் என்ன,
#காடுவெட்டிக் கண்டேனோ திருமலையாழ்வாரைப் போலே?.."
என்று சட்டென்று மாமுனிகளைப் பார்த்து ஒரு எதிர் கேள்வி கேட்டாள்...
பெரிய ஜீயருக்கோ தமது ஆசார்யரின் பெயரைக் கேட்டதும், மேனியெல்லாம் சிலிர்த்தது!
தமது ஆசார்யரின் வைபவங்களை நிறைய அறிந்திருந்தாலும், மீண்டும் அவற்றை அசைபோடும் ஆவலில், திருவல்லிக்கேணி அம்மையாரை அந்த விருத்தாந்தத்தைச் சொல்லுமாறு தூண்டினார்...
"அம்மணி... திருமலையாழ்வார் வைபவத்த ஒன் வாயால சொல்லு... கேட்க ரொம்ப ஆசயா இருக்கு..."
என்று ஒரு குழந்தையின் ஆர்வத்தை, தமது குரலில் காட்டினார்...
திருவல்லிக்கேணி மாதரசியும் மாமுனிகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினாள்...
"திருவரங்கத்துலேந்து நம்பெருமாள் கோயிலைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்தமாதிரி, நம்மாழ்வாரும் ஆழ்வார் திருநகரியிலேந்து வேற பாதுகாப்பான எடத்துல எழுந்தருள வேண்டிய நிர்பந்தம் உண்டாச்சு...
அப்போ... ஆழ்வார் நம்பெருமாளோட ஒன்னா திருமாலிருஞ்சோலைல கொஞ்சகாலம் எழுந்தருளியிருந்தார்..
சில நாட்கள் கழிச்சு, நம்பெருமாளையும் ஆழ்வாரையும் கேரள தேசத்துக் கோழிக்கோட்டில் எழுந்தருளப் பண்ணினா..
கொஞ்ச காலம் கழிச்சு, அங்கேந்து நம்பெருமாள் திருவேங்கட மலைக்கு எழுந்தருளவும்,
ஆழ்வார சேமமா பாதுகாக்கணும்கற எண்ணத்துல, பாகவதாள்லாம் சேர்ந்து, கேரள தேசத்துல இருக்கற "முந்திரிப்பு"ங்கற ஒரு மலைச்சரிவில ஒரு பெட்டியில பாதுகாப்பா வெச்சிருந்தா...
தகுந்த காலத்துல அங்கேந்து ஆழ்வார மீட்டெடுத்து,
"திருக்கணாம்பி"ங்கற ஒரு எடத்துல எழுந்தருளப்பண்ணி, அவருக்கு நித்ய திருவாராதனம் எல்லாம் பண்ணிண்டு இருந்தா...
அந்த சமயத்துல பிள்ளை லோகாசாரியரோட சிஷ்யரான திருமலையாழ்வார்,
....ஆழ்வார மறுபடியும் யதாஸ்தானம் எழுந்தருளப் பண்ணணும்னு ஆழ்வார் திருநகரிக்கு வந்தார்...
ஆனா, அப்போ ஆழ்வார் திருநகரி பெரிய காடாக மாறி, ரொம்பவும் பாழாகி இருந்தது..
அதக் கண்ட திருமலையாழ்வார், ரொம்பவும் ப்ரயத்தனப்பட்டு, அந்த இடத்துல இருந்த காடு எல்லாத்தயும் வெட்டி, நாடாக்கி, பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலையும், திருப்புளி ஆழ்வாரையும் கண்டுபிடித்து, கோவிலச் செப்பனிட்டு, ஊரில நல்லார்கள எல்லாம் மறுபடி குடியேத்தி,
திருகணாம்பியில இருந்த ஆழ்வார, மறுபடியும் ஸந்நிதியில திருப்ரதிஷ்டை பண்ணி, இன்னிக்கு நாமெல்லாரும் சேவிக்கற "குருகூர்ச் சடகோபன்"கற திருநாமம் விளங்கும்படி செஞ்சார்..
நம்மாழ்வார் ரொம்பவும் மனசு சந்தோஷப்பட்டு, திருமலையாழ்வாருக்கு, "சடகோப தாஸர்" னு திருநாமம் கொடுத்து கௌரவிச்சார்...
அதற்கப்பறம், திருமலை ஆழ்வார் நம்மாழ்வாரோட திருவாய்மொழிய தம்மோட ஆயுசுபர்யந்தம் காலக்ஷேபம் பண்ணிண்டு இருந்ததுனால, அவருக்குத் "திருவாய்மொழிப் பிள்ளை"ங்கற நாமமே நிலைச்சும் போயிடுத்து!...
அப்படி நம்ம சம்ப்ரதாயத்து மேல அவருக்கு இருந்த அதீத ஈடுபாட்டால, அவர் செஞ்ச அந்த மஹத்தான கார்யங்கள் போலவா அடியேன் செஞ்சுடுவேன்?..
அந்த அளவுக்கெல்லாம் அடியேன்கிட்ட எதிர்பார்க்கக் கூடாது ஸ்வாமி...
ஏதோ கை அசைச்சுட்டு, கைங்கர்யம் செஞ்சதா சொல்லிப்பேன்...
அவ்வளவுதான் ஸ்வாமி அடியேனோட லக்ஷணம்.."
என்று அங்கலாய்த்துக் கொண்டாள்..
(வளரும்..)
No comments:
Post a Comment