சுஜாதாவின் " கணையாழி . கடைசிப் பக்கங்கள் . " ( 1965.....1998 )
******"*"******
சுஜாதா கணையாழியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது . கலை ,
இலக்கியம் , சினிமா , நாடகம் , சமூகம் ,அறிவியல் , வேடிக்கைகள் என விரிகிறது . இவை வெளி வந்த காலத்தில் பரவலாகப் படிக்கப் பட்டவை .
விவாதிக்கப் பட்டவை . அதில் ஒன்றுதான் நான் இப்பொழுது பதியும் இப் பதிவு .
முப்பட்டை நகரம் .
*******
ஐந்து வருஷத்துக்கு ஒரு முறைதான் இந்த மாதிரிக் கவிதைத் தொகுப்புக்கள் வருகின்றன . கடைசியாக 'சனங்களின் கதை ' .இப்போது இந்திரனின் முப்பட்டை நகரம் . முழுக்க நகரத்தைச் சுற்றி இயங்கும் வாழ்க்கையைக் கவனித்து எழுதப் பட்ட உண்மைக் கவிதைகளில் பல அற்புதமானவை . 'அடுக்கு மாடிகளில் வாழ்பவர்கள் சூரியனைக் கான்க்ரீட்டில் புதைப்பதையும் .....' சோடியம் விளக்குகளின் மஞ்சள் நனைந்த மனிதர்கள் தொலைக் காட்சிப்.பெட்டியின் முன்னால் மரத்துப் போவதையும் கவனிக்கும் இவர் கவிதைகள் தமிழுக்கு ஒரு பரிமாண விஸ்தரிப்பு என்று கூடச் சொல்வேன் .
புராதனமானது பசியைக் காட்டிலும் வேறென்ன என்றும் குளிர்ந்த காற்று உறங்குவதற்கா விழிப்பதற்கா என்றும் கேட்கும் இவர் கேள்விகளே வினோதமானவை . சில சமயம் ஹைக்கூவின் சிக்கனம் வருகிறது .
புல்லின் நுனியில் கடுகாய்ப் பூத்த
மஞ்சள் பூவிலும்
வண்ணத்துப் பூச்சி "
இதில் கடுகையும் பூவின் ' உம் ' விகுதியையும் நீக்கி விட்டால் அசல் ஹைக்கூ .
குறுந்தடியின் வலிமை காட்டி
பழம் பறிக்கும் போலீஸ்காரனைத்
தட்டிக் கேட்க முடியாத
கையாலாகாத்தனம்
கவிதை எழுதினால் அதிகமாகுமென்று
புரிஞ்சு போச்சோ மனசுக்கு "
என்று தான் கவிதை எழுதாமல் இருப்பதைப் பற்றியே கவிதை எழுதியுள்ள இந்திரன் கவனத்துக்கு உரியவர் .
ஒரு வெள்ளைக்காரனும் சைனாக்காரனும் தத்தம் இறந்துபோன நண்பர்களின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தப் போனார்களாம் .
வெள்ளைக்காரன் மலர்க் கொத்து கொண்டு வந்திருக்க , சைனாக்காரன் நிறையப் பழங்களும் தின்பண்டங்களும் கொண்டு வந்து சமாதி மேல் வைத்தான் .
வெள்ளைக்காரன் அதைப் பார்த்து வியந்து " உன் இறந்த நண்பன் எப்போது இதையெல்லாம் சாப்பிடப் போகிறான் ? "
என்று கேட்க சைனாக்காரன் பதட்டமில்லாமல் " உன் இறந்த நண்பன் மலர்களை வாசம் பார்க்க வரும்போது "என்றானாம்
கி.மு.2500 சுமேரியன் நாகரிகத்திலிருந்து , இறந்தவர்கள் இறந்த பின்னும்
ஏதோ ஒன்று உயிரோ ஆத்மாவோ , 'கா ' என்கிற எகிப்திய 'மறு உடலோ 'நீடித்திருப்பதை மனித சமுதாயம் அனைத்துமே நம்பி வந்திருக்கிறது .ஆழ்வார் கூறும் 'உடல் மிசை உயிர் எனக் கரந்திருக்கும் அந்தராத்மா' வில் நம்பிக்கை இருந்திருக்கிறது . ரொம்பக் கஷ்டப்பட்டு பெற்ற உணவை எல்லாம் இறந்தவர்களுக்கு அளிக்கும் பழக்கம் மனித குலத்தின் மிக மிகப் புராதன வழக்கம் .
எல்லாமே மூடத்தனம் என்று சயின்ஸ் சொல்கிறது . ஆனால் இத்தனை ஆயிரம் வருஷங்கள் ஒரு மூடத்தனம் நிலைத்து நிற்குமா என்று இப்போது யோசிக்கிறார்கள் ராஜீவின் ஆத்மா எங்காவது மிதந்து கொண்டிருக்கிறது என்று யாராவது சொன்னால் சிரிக்கத் தோன்றவில்லை . ' முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள நல்ல காண்குவம் மா அயோயே ' என்று ஐங்குறுநூறு சொல்வதும் ஒரு வாசமுள்ள உயிரின் உருவத்தைத் தானோ ? என்று தமிழ்ப் பண்டிதர்கள் யாராவது கணையாழிக்குக் கடிதத்தில் விளக்கினால் உபகாரம் .
****************
இந்தத் தொகுப்பினை நமக்கு அளித்த தேசிகன் அவர்கள் கூறுவது போல்
சுஜாவின் எழுத்துக்களின் எல்லை எது என்று காண்பது அரிது . ஹெவியான பல விஷயங்களை லைட்டாகச் சொல்லி விடுகிறார் . எந்த எழுத்தாளரிடமும் இல்லாத ஒரு Broad Spectrum இவரிடம் காணப்படுகிறது . இது இறைவனின் வரம் இவருக்கு .
No comments:
Post a Comment