இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்
சோழ நாடு காவிரி வடகரை தலங்கள்
49. வடகுரங்காடுதுறை (ஆடுதுறைபெருமாள்கோயில்)
வடகுரங்காடுதுறை
இறைவன் பெயர்
தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர், வாலிபுரீஸ்வரர், அழகுசடைமுடிநாதர்
இறைவி பெயர்
அழகுசடைமுடி அம்மை, ஜடாமகுட நாயகி
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
கோங்கமே குரவமே
எப்படிப் போவது
கும்பகோணம் - திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி
ஆடுதுறை பெருமாள் கோவில்
உள்ளிக்கடை அஞ்சல்
வழி கணபதி அக்ரஹாரம்
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 614202
தொடர்பு : 04374 - 240491, 244191
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு
மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று வழங்குகிறது.
கர்ப்பிணி ஒருத்தியின் தாகத்தைத் தீர்க்கத் தென்னங்குலையை இறைவன் வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கீஸ்வரர் என்றும், சிட்டுக்குருவி வழிபட்டதால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் வழங்கப்படுகிறார்.
திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் வாலியால் வழிபடப்பட்ட இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியில் திருவிடைமருதூருக்கு அருகாமையில் சுக்ரீவனால் வழிபடப்பட்ட ஆடுதுறை என்ற பெயரிலேயே இன்னொரு தலம் இருப்பதாலும், இந்தத் தலத்துக்கு அருகில் பெருமாள்கோவில் என்றோர் ஊர் இருப்பதாலும், இரண்டையும் வேறுபடுத்துவதற்கு, வடகுரங்காடுதுறை என்ற இந்த தேவாரத் தலம் இன்று ஆடுதுறை பெருமாள்கோவில் என்று அழைக்கப்படுகிறது. சிறிய ஊர். சாலையோரத்திலேயே, சற்றே உள்ளடங்கினாற் போல் கோயில் தென்படுகிறது. ஐந்து நிலை கிழக்கு ராஜ கோபுரமும் இரண்டு பிரகாரங்களும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், வலப் பக்கம் பழைய வாகன மண்டபம். அதற்கு மேற்காக, நவக்கிரகச் சந்நிதி. சமீபகாலப் பிரதிஷ்டை. அதற்கும் மேற்காக, அம்பாள் சந்நிதி. மூலவர் கோயிலுக்குப் போகும் உள் வாயிலுக்கு எதிரே பிரதோஷ நந்தியைக் காணலாம். இவற்றைத் தவிர, இந்த வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை. வெளிப் பிராகாரத்தின் ஒரு பகுதியில் பசு மடம் உள்ளது. உள் வாயில் வழியே நுழைந்து உள் பிராகாரத்தை அடையலாம். வாலி இராவணனுடன் போரிட்ட சமயத்தில் அறுந்த வால் வளர இத்தலத்து இறைவனை வழிபட்டான். வாலி வழிபட்டதால் இறைவனுக்கு வாலிபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.
இறைவன் கருவறை வலம் வரும்போது மூலவர் சந்நிதியின் தெற்குச் சுற்றுச் சுவரும் மேற்குச் சுற்றுச் சுவரும் சந்திக்கிற இடத்தில், வாலி சிவபெருமானை வழிபடுவதைக் காட்டும் சிறிய சிற்பம் உள்ளது. மூலவர் பின்புறக் கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருப்பதற்கு பதில் இங்கு அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். இந்த அர்த்த நாரீஸ்வரர் வடிவம் மிகமிக அழகாகவுள்ளது. தென்மேற்குப் பகுதியில், மஹா கணபதி சந்நிதி உள்ளது. அடுத்து வள்ளி- தேவசேனா சமேத சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்கு முருகப்பெருமான் ஒரு திரு முகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருப்புகழில் இத்தலத்து முருகப்பெருமான் மீது 3 பாடல்கள் உள்ளன. அடுத்து காசிவிஸ்வநாதரும் கஜலட்சுமியும் உள்ளனர். வடக்குச் சுற்றில் வடகிழக்கு மூலையில், தெற்குப் பார்த்த நடராஜர் சபை உள்ளது. இங்கே எழுந்தருளி ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற நடராஜப் பெருமான் மூலவராக, சிலாரூபமாக (கற்சிலை) காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மையும் நடராஜரும் மூலவர்களாக இங்கு தரிசனம் தருவது வெகு விசேஷம். கிழக்குச் சுற்றில் சனி பகவான், பைரவர், சூரியன், நாகர், தேவாரம் பாடிய மூவர் மற்றும் . அவர்களை அடுத்து எந்தப் பெண்ணுக்காகத் தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அந்தச் செட்டிப் பெண் சிலையும் உள்ளன.
கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிப் பெண்கள் இத்தல இறைவனை வணங்கி வந்தால் எவ்வித தொல்லையும் இன்றி சுகப்பிரசவம் நடக்கும்.
தல வரலாறு: இத்தலத்தில் நல்ல வெய்யில் காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருமுறை நடந்து வந்து கொண்டிருந்தாள். வெய்யிற் காலமானதால் தாகம் தாங்க முடியவில்லை. தாகமும், களைப்பும் மேலிட அவள் மயக்கமுற்றாள். இதலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன் இங்கு அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள். தென்னங்குலைகளை வளைத்து அருள் புரிந்ததால் இறைவன் குலைவணங்குநாதர் என்று பெயர் பெற்றார்.
இறைவன் சந்நிதி முன் உள்ள முக மண்டபத் தூண் ஒன்றில் சிவலிங்கத்தை வழிபடும் ஆஞ்சநேயரைக் காணலாம். அனுமன் சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில் வடகுரங்காடுதுறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர் ஒரு பிரார்த்தனா மூர்த்தி. இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பார். கருவறையைச் சுற்றி வரும்போது காணப்படும் தட்சினாமூர்த்தி சந்நிதி மிகவும் விசேஷமுடையதாகும். இவரை மனமாற பிரார்த்திதால் குருபலம் பெருகும். மேலும் இவ்வாலயத்தில் இறைவன் கருவறை வடக்கு கோஷ்டத்தில் காணப்படும் விஷ்னு துர்க்கை மிகவும் சக்தி உடைய தெய்வம். எட்டு கைகளுடன் காணப்படும் துர்க்கைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாக மாறிவிடுவது சிறப்பாகும். இத்தலத்தில் துர்க்கைக்கு ராகுகாலபூஜை செய்யும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.
முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் கூடிய சந்நிதியில் அருள்மிகு அழகுசடைமுடியம்மை எனும் பெயருடன் அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது வடமொழிப் பெயர். அம்பாளும் பிரார்த்தனா சக்தி, கேட்டதெல்லாம் தருபவள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள் பௌர்ணமி நாட்களில், மடியில் பாலிகை கட்டி வந்து, அம்மனுக்கு மஞ்சள் மாலை சார்த்தினால், பிள்ளைப் பேறு சித்திக்கும். அம்மனுக்கு மஞ்சள் இட்டு, மருதாணி அரைத்துப் பூசி, அவள் பெயரால் வருகிற பெண்களுக்கு மருதாணி அரைத்து இட்டால், தடைப்பட்ட திருமணங்கள் கூடி வரும் எனபது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சிறப்புகள்
தேவார திருத்தலங்கள் திருவடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் திருக்கோவில் திருமுறை பதிகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர்.
தேவியார் - அழகுசடைமுடியம்மை.
இங்கு கிட்கிந்தையின் அரசன் வாலியின் வால் வளர இறைவன் அருள் புரிந்துள்ளார்.ஒரு சிட்டுக்குருவியின் பக்திக்கும் இறைவன் செவிமடுத்து அதற்கு முக்தி அளித்துள்ளார்.
முன்னொருகாலத்தில் ஒரு கர்ப்பிணி பெண் இவ்வழியே வரும்போது மிகுந்த தாகத்தால் உயிர்போகும் நிலை வந்தபோது இவ்விறைவனை வணங்கி நிற்க அவளின் தாகம் தீர்க்க தென்னையை வளைத்து குலை சாய்த்து இளநீரை பரித்து அவளுக்கு அளித்து அவள் உயிரை காப்பாற்றி அருளியுள்ளார்.இதனால் இறைவன் திருநாமம் குலைவணங்குநாதர். கருணையோடு அருள்வதால் தயாநிதீஸ்வரர்.குரங்கு வழிபட்டதால் குரங்காடுநாதர்.சிட்டுக்குருவிக்கு அருளியதால் சிட்டிலிங்கேஸ்வரர் என பல திருப்பெயர் இறைவனுக்கு உண்டு.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺அருளியவர்:திருஞானசம்பந்தபெருமான்
🌺🌺🌺பாடல் 1:
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மே யவழகார்
குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே.
பொருளுரை:
பூதகணங்கள் சூழ இரவில் சுடுகாட்டில் நின்று எரி ஆடுபவனும், அரவணிந்த சடையினை உடைய அந்தணனும் ஆகிய சிவபிரானது குராமரப் பொழில் சூழ்ந்த குரங்காடுதுறையைப் பரவ வலிய வினைகள் கெட்டொழியும்.
🌺🌺🌺பாடல் 2 :
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே.
பொருளுரை:
தன்னோடு பகை பூண்டவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த விமலனும், இண்டங்கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கும் மெல்லிய கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.
🌺🌺🌺பாடல் 3:
இறைவில் லெரியான் மழுவேந் திநின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்தும்
குறைவில் லவனூர் குரங்கா டுதுறையே.
பொருளுரை:
நிறைதல் இல்லாத சுடுகாட்டுள் நின்று அழிவற்ற எரியைக் கையில் உடையவனாய் மழு ஏந்தி உமையம்மையோடு ஆடுபவனும், வேத ஒலியால் தேவர், அசுரர் ஆகியோரால் தொழப்படும் குறைவற்றவனும் ஆகிய சிவபிரானது ஊர், குரங்காடுதுறை.
🌺🌺🌺பாடல் 4 :
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.
பொருளுரை:
விழியை உடைய நெற்றியின்மேல் தலையின் முன்பாகத்தில் பிறைசூடி, ஒலிக்கும் சுடுகாட்டை அடைந்து எரியாடி, எல்லோரும் பழித்துரைக்கப் பலியேற்றுத்திரியும் சிவபிரானது ஊர் பொன் கொழிக்கும் காவிரி நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறையாகும்.
🌺🌺🌺பாடல் 5 :
ஏறார் கொடியெம் மிறையீண் டெரியாடி
ஆறார் சடையந் தணனா யிழையாளோர்
கூறா னகர்போல் குரங்கா டுதுறையே.
பொருளுரை:
நீறு பூசிய மேனியன். நெற்றிக் கண்ணன். விடைக்கொடியை உடைய எம் தலைவன் மிகுதியான தீயில் நின்று ஆடுபவன். கங்கை சூடிய சடையினை உடைய கருணையாளன். உமையொருபாகன். அவனது நகர் குரங்காடுதுறை.
🌺🌺🌺பாடல் 6 :
துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி மிளிரும்
மரவார்த் தவன்மே வியகோயில் குளிரும்
புனல்சூழ் குரங்கா டுதுறையே.
பொருளுரை:
குளிர்ந்த கொன்றைமலர், மணம் வீசும் சிவகரந்தைத் தளிர் ஆகியவற்றைக் கலந்தணிந்து சுடுகாட்டில் எரியில் நின்றாடும் அழகனாய், விளங்கும் பாம்பை இடையில் கட்டியவன் ஆகிய சிவபிரான் மேவிய கோயிலைக் கொண்டது குளிர்ந்த நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறை.
🌺🌺🌺பாடல் 7 :
முழவங் குழன்மொந் தைமுழங் கெரியாடும்
அழகன் னயின்மூ விலைவேல் வலனேந்தும்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே.
பொருளுரை:
பிறவிதோறும் பழகிய வினைகளைத் தீர்ப்பவன். பார்வதி தேவியோடு முழவு, குழல், மொந்தை ஒலிக்க இடுகாட்டுள் முழங்கும் தீயில் நின்று எரியாடும் அழகன். கூரிய மூவிலைவேலை வெற்றிக்கு அடையாளமாக ஏந்தும் இளையோன் ஆகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.
🌺🌺🌺பாடல் 8 :
நிரையார் விரலா னெரித்திட் டவனூராம்
கரையார்ந் திழிகா விரிக்கோ லக்கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.
பொருளுரை:
கயிலைமலையை ஆரவாரித்துப் பெயர்த்த இராவணனின் வலிமை கெடுமாறு காலிலமைந்த விரலால் நெரித்தவனாகிய சிவபிரானது ஊர், கரையைப் பொருந்தி ஓடிவரும் காவிரியாற்றின் அழகிய கரைமேல் ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்திலங்கும் குரங்காடுதுறையாகும்.
🌺🌺🌺பாடல் 9 :
படியா கியபண்டங்கனின் றெரியாடி
செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியா னகர்போல் குரங்கா டுதுறையே.
பொருளுரை:
திருமால், பிரமர்கள் நினையவும் ஒண்ணாத இயல்பினன். பாண்டரங்கக் கூத்தை ஆடியவன். எரியில் நின்று ஆடு பவன். முடை நாற்றம் வீசும் தலையோட்டை ஏந்தியவன். சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெள்விடையைக் கொடியாக உடையவன். அவனது நகர் குரங்காடுதுறை.
🌺🌺🌺பாடல் 10 :
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர் குரங்கா டுதுறையே.
பொருளுரை:
துவராடை அணிந்த புத்தர்களும், வேட மல்லாத வேடம் பூண்ட சமணர்களாகிய கீழோரும் பேசும் ஐய உரைகளை விரும்பாத சிவபிரானது ஊர், மலைகளிலிருந்து சிதைந்து வந்த மணிகள், பொன், அகில், சந்தனம் ஆகியவற்றை உந்திவந்து குவியலாகக்கரையில் சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரங்காடுதுறையாம்.
🌺🌺🌺பாடல் 11:
கொல்லே றுடையான் குரங்கா டுதுறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே.
பொருளுரை:
நல்லவர்கள் வாழும் காழியுள் தோன்றிய ஞான சம்பந்தன் கொல்லேற்றை ஊர்தியாக உடைய சிவபிரான் எழுந்தருளிய குரங்காடுதுறைமேல் பாடிய தமிழ்மாலை பத்தையும் பாடித்தொழ வல்லவர், வானவரோடு உறைவர்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம்
இத்தலத்தில் நடராசப் பெருமான் சிவகாமியுடன் மூலவராகக் காட்சியளிக்கின்றார்.
இத்தலத்து தல வரலாறான (கர்ப்பிணி) செட்டிப் பெண்ணின் உருவம் உள்ளது.
தொடரும்
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment