டிவியில் ஆங்கில செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது . கண்கள் என்னவோ புத்தகத்தில் இருந்தாலும் உள்ளே அம்மா கடலைப்பருப்பு வறுக்கும் வாசனை வந்து கொண்டிருந்தது.
அம்மா, அப்பாக்காக தேங்காய் துகையல் அரைக்கப்போறா போல…. தம்பி முணுமுணுத்தான்…
நமக்கு மட்டும் மத்தியான குழம்புதாண்டா..
ஏன் வழிச்சு வழிச்சு குத்திண்டு சாப்பிட்டியே, அதிலிருந்த வத்தமொளகாவைக் கூட விடல…
சரி சரி படி…..
கவனம் புத்தகத்திற்குள் போவேனா என்றது. அம்மா ஒன்றிரண்டாய் சில்லுசில்லாய் தேங்காயைப் பேர்த்து அம்மியில் நசுக்கும் சப்தம் கேட்டது.
வாசலில் அப்பா காலலம்பும் சத்தம் கேட்டது. மாட்டுக்கு வைக்கோல் வைத்து விட்டு வந்துவிட்டார். கப்சிப்பென்று தலையை புத்தகத்துக்குள் புதைத்துக் கொண்டோம்..
சுடச்சுட சாதத்தைப் போட்டு செக்கில் ஆட்டிய நல்லெண்ணையை கைநிறைய விட்டு தேங்காய் துகையலைப் பரிமாறி ஒரு சுட்ட அப்பளத்தை தட்டில் போட்டார் அம்மா.. அப்பா சுடச்சுட சாதத்தைப் பிசைந்து சரியாக மூன்று கவளங்கள் உருட்டி, “ஏய் தம்பி ! இந்தாடா, ஏ கீதா இந்தாடி, ஏ குட்டி மொட்ட இந்தா என்று எங்களின் கைகளில் தந்துவிட்டு நாங்கள் அந்த இளம்சூட்டு சாத உருண்டையை ஆசையோடு அள்ளி விழுங்குவதைப் பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பிப்பார்.
அதென்ன சுமதி மாமி அரைக்கற துகையல் வெள்ளைவெளேர்னு வேற மாதிரி இருக்கு?
கல்யாணமான புதிதில் ஊரிலிருந்து பொங்கல் சீராக அப்பா கொண்டு வந்திருந்த மூட்டை தேங்காயில் இருந்து இளம்தேங்காய் எடுத்து அரைத்த துகையலை ரசித்துக் கொண்டே அப்பா கேட்டார்.
மாமி கடலைப்பருப்பு போடமாட்டா, உளுத்தம்பருப்பு தான், அதே மாதிரி வத்தமொளகா இல்லப்பா, பச்சைமிளகாய் தான். கடைசில கொஞ்சம் இஞ்சி கொத்தமல்லி போட்டு அரைச்சுடுவா….
இதுவும் நன்னாத்தான் இருக்கு … அப்பா லேசில் புகழமாட்டார் . மாமியாரின் முகம் மலர்ந்து போயிற்று.
வெகுநாட்கள் கழித்து ஊருக்குப் போயிருந்தோம். நம்மாத்து தேங்காய் துகையல் சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சுல்ல………
உன்னை நினைச்சுண்டு தான் அரைச்சேன். சாப்பிடறியா? தம்பி தட்டில் போட்டு நீட்டினான்.
உருட்டி உருட்டி அடைத்துக் கொள்கையில் புரையேறியது. “எப்பப் பாரு கைல ஃபோனை வச்சுண்டு ! இந்தா தண்ணியைக் குடி… தம்பி தலையில் தட்டினான்.
அம்மா சாப்பிடுன்னு சொல்லி தட்டில் சாதத்தையும், துகையலையும் போட்டு நீட்டிவிட்டு , இரு மோர் கொண்டு வரேன்னு சொல்லிவிட்டு மோரோடு அம்மாவின் அறையில் நுழைகையில்……..
அம்மா கண்ணீரோடு , துகையல் சாதத்தை உருட்டி அப்பாவின் படத்திற்கு முன் ஒரு தட்டில் வைத்துக் கொண்டிருந்தார்….
(படம் திரு. Govindaraj Lakshminarayanan sir. ஒவ்வொரு முறையும் எழுதவேண்டும் என நினைப்பேன். இன்று டக்கென்று தோன்றியது. மிக்க நன்றி)
No comments:
Post a Comment