சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 7
ஒன்னு நேர்வழில பெங்களூர் அழச்சுண்டு போறதா இருந்தா போங்கோ. இல்லன்னா மெட்ராஸ் போறேங்கறேன்.
இவரோ பிடிவாதமா ஊர் சுற்றி புது வழியில் புது ஊர் பாத்துண்டே சாகச டூர் போயே ஆகணும்கறார்.
தலை விதியேன்னு மேட்டூர் பஸ் வரலைன்னு மேச்சேரி பஸ்ல ஏறரோம்.
12 மணிக்கு நல்ல பசி எறங்கறோம். அழுக்கா ஒரு ஓட்டல்தான் இருக்கு. நான் பழம் சாப்ட்டுக்கறேன்டு வெளியில உக்காந்துக்கறேன். இவர் எதையோ கொறிச்சு முடிச்சுட்டு வரார். மேட்டூர்பஸ் கூட்டமாவரது.
அடிச்சி புடிச்சி ஏத்தி விடறார். எதோ போன் வரது ..டென்ஷனா பேசறார்.
நந்திவரம் ஸ்கூல் யமுனா மேடம் போன் பண்ணி வெள்ளிக்கிழமை HM மீட்டிங் னு சொன்னாங்கன்னு டென்ஷன் ஆறார்.
மறுபடி AHM ஆறுமுகம் சாருக்கு போன் பண்ணினா அவர் கேரளால இருக்கேங்கறாராம்.
மறுபடி அருணா மேடத்துக்கு போன் பண்ணி அட்டென்ட் பண்ண சொல்ல
அவங்க ஒத்துக்கறாங்க..எக்கச்சக்க லீவு இருந்தும் இந்த HM வேலைல எந்த நேரத்துல கூப்புடுவாங்கன்னு தெரியாதுன்னு பொலம்பிண்டே வரார்.
நாம திரும்பிடுவோமாங்கறேன். மொறைக்கறார்.
ராத்திரி ஆயிட்டதால மேட்டூர்ல எறங்கி ரூம் பாக்கலாம்னு அழைச்சுண்டு போறார்.வரும் போது ஐடி கார்டு எடுத்துட்டு வர மறந்துட்டதாலே எல்லா ஓட்டல்லயும் ஐடி இல்லாம எடம் இல்லைங்கறான்..கடைசியா ஒத்தன் ATM card ல பேர் இருக்கறதால அதை வாங்கி வச்சுண்டு allow பண்றான். (டேம் இருக்கதால போலீஸ் தீவிரவாதி தங்கறாலான்னு செக்கப் பண்ணுவாளாம்)
பெரிய தீவிரவாதி வீரப்பன் காட்டுக்கு பக்கத்துல இருந்துண்டு ஒங்களுக்கு எங்கள பாத்தா தீவிரவாதியா தெரியறதான்னு நெனச்சுக்கறேன்..
மறுநாள் டேம் பார்க்க ஆட்டோல போறோம்.
இனி இவர்….
காவிரியில் தண்ணீர் வருமா என்று தமிழகமே காத்திருக்க காவேரி தண்ணீரை விட்ருவோமா என்ன என்று கர்நாடகத்தில் காலரைத் தூக்கி கர்ஜிக்கின்றனர் சிலர். காவிரியில் நீர் வந்தால் மேட்டூர் அணை நிரம்பி வழியும் இதனால் விவசாயிகள் மகிழ்வார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்... இந்த மேட்டூர் சுற்றுலா பற்றி தெரியுமா உங்களுக்கு
நீரைத் தேக்கி வைத்திருக்கும் ஒரு இடத்தில் அப்படி என்னதான் இருக்கப் போகிறது என்று உங்கள் ஆழ் மனதில் எழுந்த வினாவை கவ்விப் பிடித்துவிட்டோம். அட... என்னங்க தெரியும் மேட்டூர் பத்தி..
சுற்றுலா அப்படினாலே குடும்பத்தோட குழந்தைகளோட அன்ப பரிமாறிக்கிட்டு அழைத்து செல்வதும், அங்க மனம் மகிழ சுத்திப் பாத்துட்டு வருவதும்தான். அதிலும் குழந்தைகள் பக்கத்து தெருவுல இருக்குற பூங்காவுக்கு குடும்பத்தோட போனாலே மிகவும் மகிழ்ச்சியடைவாங்க.
அழகிய ஒரு கட்டிடத்தில் கொஞ்சி விளையாடும் மீன்களை கண்ணாடியில் அடைத்து வைத்து அதைக் காட்சிக்கு கொண்டு வந்து குழந்தைகளை அதன் முன் நிற்க வையுங்கள். அய்யோ.. அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அப்படி ஒரு இடம் மேட்டூரில் இருக்கிறது.
பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது மற்றும் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது.
இவர் மேட்டூர் அணையைப்பத்தி எதேதோ சொல்ல பெருமாள் கோயிலா அழச்சிண்டு போகாம எனக்கு மட்டும் ஏன் இந்த காடு மலைன்னு சுத்தற இணையைக்கொடுத்தே பகவானேன்னு கேக்கறேன்.
அணைய எட்டிப்பாக்கறேன். மே மாசம்கறதால ஜீவனே இல்லாம கொஞ்சமா தண்ணி. தூரத்துல பெரிய நந்தி சிலை பாதி தண்ணில மூழ்கிண்டு…..
ஜல சமாதில சிவன் கோயில் போயிடுதேன்னு மனசுக்கு கஷ்டமாயிருந்தாலும் நம்ம பெருமாள் கோயில் இந்த ஏரியால இல்லையேன்னு இருந்த வருத்தம் போய் லேசா ஒரு ஆறுதல்.
மறுபடிஓட்டல் வந்து ரூமை காலி பண்ணின்டு மாதேஸ்வரன் மலை போறோம்கறார்.
ஒரு மினி பஸ் வர அதுல ஏறி கெளம்பின ஒடனே காடு வர ஆரம்பிக்கறது. ஒரே முள்ளு மரங்கள் கொளுத்தற வெயில்.
இங்கதான் வீரப்பன் காட்டு ராஜாவா இருந்ததுங்கறார். எனக்கு வயத்த கலக்கறது.
==================================================================
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடிக்கு கீழே சரிந்ததால், நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோயிலின் நந்தி சிலை நீருக்கு வெளியே தெரிகிறது.
மேட்டூர் அணை கட்டப்பட்டபோது நீர் தேங்கும் பகுதிகளாக 60 சதுர மைல் பரப்பளவு கணக்கிடப்பட்டது. அப்போது அப்பகுதிகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
கிராமங்களைக் காலி செய்து சென்ற மக்கள் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தினால் தெய்வக் குற்றம் ஏற்படும் எனக் கருதி, கோயில்களில் இருந்து கடவுள் சிலைகள், சிற்பங்களை மட்டும் எடுத்துச் சென்று தாங்கள் குடியேறிய பகுதிகளில் புதிய கோயில்களைக் கட்டிக் கொண்டனர்.
இதனால், பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் பிரம்மாண்டமான நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயிலும், 100 அடி உயரக் கோபுரங்கள் கொண்ட கிறிஸ்தவ தேவாலயமும் நீர்த்தேக்கப் பகுதியில் அப்படியே விடப்பட்டன. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடிக்கு மேலே உயர்ந்தால் இந்தக் கோயில்கள் நீரில் மூழ்கிவிடும். நீர்மட்டம் 78 அடிக்கு கீழே சரிந்தால் கோயில்கள் நீருக்கு மேலே தெரியத் தொடங்கும்.
கடந்த 14-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடிக்கு கீழே சரிந்ததால் கிறிஸ்தவ தேவாலய கோபுரம் நீருக்கு வெளியே தெரிந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 68.67 அடியாகச் சரிந்ததால் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோயிலில் இருந்த மிகப் பெரிய நந்தி சிலையின் தலை நீருக்கு வெளியே தெரியத் தொடங்கி உள்ளது.
நந்தி சிலை சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டதாகும். பல் ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருந்தாலும் இந்த சிலை சேதம் அடையாமல் உள்ளது.
இதைக் காண செல்லும் பார்வையாளர்களும், இப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களும் கற்களைப் பெயர்த்துச் செல்வதால் மட்டுமே சில இடங்களில் நந்தி சிலை பெயர்ந்து காணப்படுகிறது. நந்தியின் இடது காதுப் பகுதி உடைபட்டுள்ளது. நந்தி சிலையைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். தற்போது கரோனா பரவல் காரணமாக போக்குவரத்து முடங்கி இருப்பதால் இப் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
No comments:
Post a Comment