Sunday, December 19, 2021

உறவுபோட்டமுடிச்சு_77

உறவுபோட்டமுடிச்சு_77

கால ஓட்டம் பிரச்சனைகளில் எவரையும் ஒரே நிலையில் வைப்பதில்லை.  அப்படித்தான் ராமநாதன் வீட்டுப் பிரச்சனையும்  தன் நிலையை மாற்றிக் கொண்டது.

ஜானாவின் பிடிவாத உறுதியை பெற்றோரின் பேச்சு வார்த்தைகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

'சரின்னா, இப்படியே பேசிண்டிருந்தோம்னா நமக்கு தான் பைத்தியம் பிடிச்ச பாய சுரண்டிண்டு இருப்போம்.  நாம பெத்தது சரியில்ல.  இதுக்கு மத்தவாள குற சொல்லி என்ன பிரயோஜனம்?  ஊர் உலகத்துக்கு தெரியறதுக்கு முன்னாடி அந்த பையனைத்துக்கு போய் என்ன ஏதுன்னு கேட்டுண்டு வாங்கோ.  எல்லாம் நாம பண்ணின பாபம் கோடாரி கொம்பா நம்ம பொண்ணு ரூபத்துல வந்து நெஞ்ச பொளக்கறது.'

'அந்த கம்மனாட்டிக்கு வேலையே இல்லையேடி?  எப்படி குடும்பம் நடத்துவான்?  ஆசை ஆசையா பொண்ண வளர்த்து, கடைசில அவன் இவள நாலு ஆத்துல பத்து பாத்திரம் தேய்க்க உடப் போறானேன்னு நெனைக்கவே பயமா இருக்கே.'

'சரி, நான் சொல்றபடி கேளுங்கோ. உங்க சிபாரிசுல அரசாங்க உத்யோகம் அந்த பையனுக்கு வாங்கித் தாங்கோ.  ஒப்புத் தாம்பூலமா வாயால அந்த புள்ளையாண்டானாத்துல சொல்லிட்டு ஜானா படிப்பு முடிஞ்சோண்ணேயே சட்டு புட்டுனு முடிச்சுடலாம்.'

'என்னன்னவோ கனவு கண்டுண்டிருந்தோம் பொண்ணுக்கு சகல சௌகரியங்களோட மாப்ள வேணும்னு.  இப்படியா பகவான் அனுக்ரஹம் பண்ணனும்?'

பகவானைத் திட்டிக் கொண்டு இனி அவர்கள் ஏதோ ஒரு பயணத்தில் அமைதியையும் சந்தோஷத்தையும் தேடிக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் திருவஹந்திபுரத்தில் வரப்பிரசாதமாக கிடைத்த வரனை நினைத்து மகிழச்சி கொண்டிருந்தார்கள்.

சுபத்ராவை வரனுக்கு சம்மதிக்க வைக்க முயற்சிகள் துவங்கின.

'அம்மா, எனக்கு இந்த மாப்பிள்ள வேண்டாம்மா.  சின்ன வயசுலேந்து பாலாஜி பாலாஜின்னு சொல்லிட்டு இப்ப இன்னொரு பையன கல்யாணம் பண்ணிக்க சொல்றேளே.  எனக்கு ஒரு அவசரமும் இல்லையேம்மா?  பாலாஜி படிச்சு முடிச்சோண உத்யோகம் பார்க்கப் போறான். வெயிட் பண்றேம்மா, ப்ளீஸ் மா.'

'சமத்தோனோ.  புரிஞ்சுக்கோடி.  உங்க மாமாவுக்கு தொத்து அது இதுன்னு பயமுறுத்தறா.  ஒரு சின்ன தொத்துக்கே அப்பா தன்னோட சொந்த அம்மாவ தனியா மாடில வெச்சு நமக்கும் வந்துடக் கூடாதுன்னு அவ்வளவு கவனமா பார்த்துக்கறா.  உன்ன பூவனூர்ல கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்ட தெனமும் நாங்க மடியில நெருப்ப கட்டிண்டு இருக்க முடியுமா சொல்லு?  உனக்கோ பாலாஜிக்கோ தொத்திண்டுடுத்துன்னா எவ்வளவு கஷ்டம்?'

'அதெல்லாம் ஒண்ணும் ஆகாதும்மா.  பாலாஜிக்கு மெட்ராஸில வேல கிடச்சா நான் பாலாஜியோட அங்க இருக்கப்போறேன்.  மாமா மாமி பூவனூர்லயே இருக்கப் போறா.'

'மாமா பட்டாமணியார் வேலைய விட்டுடுவார்.   உடம்பு சரியில்லையோன்னோ?  விவசாயம் பண்ண தெம்பும் இருக்காது.  அதுவும் தவிர இப்ப ஏதோ சட்டம் வந்திருக்காம்.  ஜாஸ்தி நிலத்தையெல்லாம் அரசாங்கமே பிடிங்கிடப் போறதாம்.  அவாளுக்கு இருக்கற இவ்வளவு கஷ்டத்துல உன்ன அங்க போய் தள்ள முடியுமா?  எங்க தங்க கட்டியோன்னோ நீ.  அப்பா அம்மா உன் நல்லதுக்கு தான செல்ரா?  புரிஞ்சுக்கோ செல்லம்.'

பெற்றோரின் உறுதியான கண்டிப்பிற்கு முன் சுபத்ராவின் பேச்சுக்கள் எடுபடவில்லை.

ஆத்தில் இருக்கும் அவளுடைய ரூமுக்குள் சென்று கதவைத் தாழ்பாள் போட்டுக் கொள்கிறாள் சுபத்ரா.  

'ஆசப்பட்டதெல்லாம் வாழ்க்கையில கெடச்சுடறதா என்ன?'  இந்த சமாதானம் தான் சுபத்ராவின் நெடுநேர கண்ணீருக்குப் பிறகு மருந்தாகிறது.

'பாலாஜி ஒண்ணும் என்ன கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லலையே இதுவரைக்கும்?'

இது போன்ற சமாதானங்களும் சுபத்ராவை தேற்றி விடுகின்றன.  முடிவு இப்படித்தான் போகும் என்று தெரிந்து விட்டால் ஆறுதல்களை ஒட்ட வைப்பதா கஷ்டம்?

நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் பயந்தே போனாள் சுசிலா.  கதவை பதட்டத்துடன் தட்டி, 'சுபி.... சுபி.. வேண்டாண்டி.... நான் சொல்றத கேளு.'

அம்மாவின் அழுகுரல் அவளை அசைத்திருக்க வேண்டும்.  கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியே வருகிறாள்.

'என்னடி அழுதியா?  நான் இவ்வளவு எடுத்து சொல்லியும் இப்படியா புரிஞ்சுக்காம....'

'பயப்படாத.  நான் ஒண்ணும் பண்ணிக்க மாட்டேன்.'

சுபத்ராவின் தலையைத் தடவிக் கொடுக்கிறாள் சுசீலா.

'புரியறது டி உன் மனசு எனக்கு.  நானும் இந்த விஷயத்துல தப்பு பண்ணியிருக்கேன்.  அவாத்துல இப்ப நிலைமை சரியில்லையோன்னோ.  மாமா வாத்துல எல்லாம் சரியாகற வரைக்கும் உனக்கு கல்யாணம் பண்ணாம ஆத்துலேயே வெச்சுக்க முடியுமா சொல்லு.  ஊர்ல நாலு பேர் அப்புறம் ஏதாவது கொளுத்தி விட்டு அந்த கஷ்டமெல்லாம் வேற படணுமா நாங்க ரெண்டு பேரும்?  சொல்லு.'

'சரிம்மா.  ஒத்துக்கறேன்.  ஆனா ஒண்ணு, மெட்ராஸ் மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கலைனா, நான் பாலாஜியை தான் பண்ணிப்பேன்.  சொல்லிட்டேன்.'

'ஒன்ன போய் பிடிக்காதுன்னு யாராவது சொல்வாளா?  தங்க விக்ரஹமாட்டம் இருக்க நீ.  சரி, மொகத்த அலம்பிண்டு வா.  அப்பாகிட்ட நானே பேசிக்கறேன்.'

பெண்ணின் சம்மதத்தைப் பெற்ற சுசீலா, ஆத்துக்காரரிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறாள்.

'நீங்க உடனே கிளம்பி மெட்ராஸ் காராள பார்த்து ஜாதகம் பொருந்தியிருக்குன்னு சொல்லிட்டு எப்ப பொண் பார்க்க வரேன்னு கேட்டுண்டு வாங்கோ.  சேஷாவையும் கூட்டுண்டு போங்கோ.  ஒருத்தருக்கு ரெண்டு பேரா போரை நீங்க மறந்தத சேஷா கேப்பான்.  சேஷாவும் நீங்க பேசறதுக்கு பக்க பலமா ஏதாவது சொல்லி சமாளிப்பான்.'

'உன் தம்பிய பத்தி கேட்டா என்ன சொல்றது?'

'உடம்பு சரியில்லன்னு கேள்வி பட்டோம்.  போய் பார்க்கணும்னு மாத்திரம் சொல்லுங்கோ.  தொத்து அது இதுன்னு உளறி கொட்டாதீங்கோ.  பயப்படப் போறா அவா.'

'ஏண்டி, ஃபோன் போட்டு ஜாதகம் பொருந்தியிருக்குன்னு சொன்னா போதாதா?  நீட்டி முழக்கிண்டு இத சொல்ல ஒரு கோடி போகணுமா?'

'நேரா போனாத்தான் நம்ம பொண்ணு மேல நாம எவ்வளவு தூரம் அக்கறையா இருக்கோம்னு அவாளுக்கு தெரியும்.  நீங்களும் அவா முகத்த பார்க்க செளகர்யமா இருக்கும்.'

'பேசாம நீயும் வேணா வாயேன்?'

'புரிஞ்சுதான் இந்த கேள்விய கேட்கறேளா?  பெண் குழந்தைய தனியா வுட்டுட்டு எப்படின்னா முடியும்?  போதா கொறைக்கு அம்மா வேற தனியா ... முதல்ல பேசிட்டு வாங்கோ.  லெளகீகமா பேசப்போறேள்.  பொண் பார்க்க அழைக்கப் போறேள்.  என்ன பத்தி நான் ஏன் வரலைனு கேட்டா நான் சொன்னத அவா கிட்ட சொல்லி புரிய வையுங்கோ.'

'இந்த வரன் எப்படியாவது அமஞ்சுடணும் சுசீலா.'

'நீங்க மெட்ராஸ் போய் பேசிட்டு வாங்கோ.  வந்த உடனே நாம பூவனூர் போய் சபேஸன் கிட்ட விவரத்த சொல்லி அவன விட்டே மேற்கொண்டு அவா கிட்ட பேசி முடிக்க சொல்லுவோம்.'

'இதுக்கு மாத்திரம் இவா வரா பார்னு சபேசன் நினைக்க மாட்டானா?  பாலாஜி நம்ம கிட்ட வந்து சபேசன் உடம்ப பத்தி பேசி மாசக் கணக்காச்சு.  இன்னும் போய் நம்மளால பார்க்க முடியல.'

'தப்புதான். என்ன பண்ண சொல்றேள் என்ன?  உங்களுக்கும் ஓச்சல் இல்ல, ஒழிவும் இல்ல.  படுக்கையில மாமியார், வயசு வந்த பொண்ணு.  நானும் மனுஷி தான.  தம்பிதான புரியும் படி சொன்னா புரிஞ்சப்பான்.'

சேஷாத்ரியுடன் கோவிலில் இது குறித்து சிவா பேசிவிட்டு மறுநாளே காரில் மெட்ராஸ் புறப்படுகிறார்கள் இருவரும்.

தொடரும்...

No comments:

Post a Comment