Saturday, December 25, 2021

டோம்பிவிலியில் திருவாதிரை

 #திருவாதிரையில்_சிவதரிசனம்

நேற்று திருவாதிரை.. தென்னாடுடைய சிவனுக்கு உகந்த நாள்.. வெல்லம் போட்டு இனிப்பான களியும், ஏழு வகை காய் சேர்த்த குழம்பும் செய்து படைத்து நடராஜனின் அருளைப் பெறும் அற்புத நாள்.. 

இந்தவருடம்  திருவாதிரை நோன்பு மும்பையில் டோம்பிவிலியில் உள்ள என் சம்பந்தி வீட்டில் செய்தோம். நம்மூரில் இருந்திருந்தால் கபாலியையோ, மருந்தீஸ்வரரையோ, ரத்னகிரீஸ்வரரையோ தரிசனம் செய்திருக்கலாமே.. இன்று சிவதரிசனம் கிடைக்க வில்லையே என்று சற்று தாபமாக இருந்தது. 

என் சம்பந்தி என் மனதைப் புரிந்து கொண்டாற் போல் இன்று காலை 9 மணிக்கு கிளம்பி கல்யாண் அருகில் உள்ள அம்பர்நாத் சிவாலயத்திற்கும், டிட்டுவாலா கணபதி கோவிலுக்கும் போக டேக்ஸி ஏற்பாடு செய்து விட்டார்கள்.. 

டோம்பிவிலியில் இருந்து அம்பர்நாத் 16 கிமீ.. 1060 ஆம் ஆண்டு சித்தராஜா என்ற மன்னரால் கட்டப் பட்ட சிவாலயம்.. அற்புதமான சிற்ப வேலைப் பாடுகள், நிறைய சேதமடைந்து உள்ளது.. 

கர்ப்ப கிரகத்தில்  20 படிகள் கீழே இறங்கி போய் அம்பரேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும்.. இன்று ஓரளவிற்கு கூட்டமும் இருந்தது.. அங்கு நல்ல தரிசனத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து டிட்டுவாலா பிள்ளையாரையும்  தரிசனம் செய்து விட்டு திரும்பினோம். 

மாலை 5 மணிக்கு கிளம்பி பாந்த்ரா கார்ட்டர் ரோடில் உள்ள என் தோழி வீட்டிற்கு போனேன். அவர்கள் வீட்டு பால்கனியிலிருந்து அரபிக் கடல் கண்ணெதிரே விரிந்து பரந்து கிடந்தது. 

ஆ' வென்று வியந்து பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் 

'அங்கே பார்.. கடலுக்கு நடுவில் ஒரு சுயம்பு பிள்ளையாரும், சுயம்பு சிவலிங்கமும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.. போய் பார்த்து விட்டு வரலாமா.. என்றாள்.. 

உடனே கிளம்பி போனோம்.. கடல் நீரில் மூடியிருக்கும் பாறைகளின் மேல் இப்போது கடல் நீர் உள்ளே போய் விட்டதால் பொது மக்களுக்கு தென்பட்டு அதற்கு சுமாராக வழியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.. கடலுக்கு நடுவில் காற்று வாங்கிக் கொண்டிருந்த பிள்ளையாரையும் சிவனையும் தரிசனம் செய்து திருவாதிரை அமர்க்களமாக நடந்தது.. 

பாலிவுட் நடிகர்கள், சச்தின் டென்டுல்கர் போன்ற பிரபலங்கள், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வாழும் இடமான கார்ட்டர் ரோடில் இந்த தரிசனம் கிடைத்தது இன்னும் எனக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் உள்ளது.

இப்படியாக திருவாதிரையன்று மும்பையின் ஒரு கோடியில் அம்பர்நாத் மறுகோடியில் சாகர் நாத் என்று இரண்டு சிவபெருமான் தரிசனம் ..வேறென்ன வேண்டும்.. 

டாக்ஸியில் போய்க் கொண்டே எழுதுவதால் அதிகம் விபரமாக எழுத முடியவில்லை.. ஃபோட்டோக்கள் இணைத்திருக்கிறேன். பாருங்கள்..




No comments:

Post a Comment