Monday, December 27, 2021

உறவுபோட்டமுடிச்சு_94

உறவுபோட்டமுடிச்சு_94

செங்கிப் பட்டியிலிருந்து கிளம்பிய கார் ஐந்தாறு மைல்கள் கடந்திருக்கும்.

'கீதா, நாம எக்ஸ்ரேய வாங்காம வந்துட்டோமே?'

'எக்ஸ்ரே எடுத்த ரூம்ல கேட்டேன்.    ஈரம் காஞ்சு டாக்டர் ரிபோர்டோட நாளைக்கு தான் கெடைக்குமாம்.  அதான் டாக்டர் பார்த்துட்டு ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டாரே.  இருந்தாலும் மீனாட்சி கிட்ட சொல்லியிருக்கேன்.  நிச்சயதார்தத்துக்கு வரும்போது கொண்டு வருவா.'

'அதான பார்த்தேன்.  நீ கெட்டிக்காரியாச்சே.  அது இருக்கட்டும், நாம இப்ப நேரா பவானி ஆத்துக்கு தான போகப் போறோம்?'

'ஆமாம் மாமா.  ஆனா ரெண்டு மணிக்குள்ள அவாத்துலேந்து கிளம்பிடணும்.  அப்படி கிளம்பினாத்தான் ஆத்துக்கு மூணு மணிக்குள்ள போக முடியும்.'

'சரி, கிளம்பிடறேன்.  அப்பறம் ஒரு விஷயம்.  ஒருவேள பவானி என்கிட்ட ஜானா கல்யாண விஷயமா பேசினா, நீ எதுவும் குறுக்க பேசக்கூடாது.  நாங்க பேசும்போது சித்த தள்ளி போனா கூட பெட்டர்.  இப்பத்தான் பவானி கிட்ட மாத்தங்கள் தெரியறது.  நிச்சயதார்த்தம் நடக்கற இந்த சமயத்துல நாம வேண்டாததையெல்லாம் தேவையில்லாம வரவழிச்சிக்க கூடாது.'

'சரி மாமா'

பவானி ஆத்துக்கு வரும்போது அவள் மட்டுமே இருந்தாள். சிறிது     நேரம் பேசிவிட்டு நிச்சயதார்த்த தேதியை சொல்லி விட்டு அழைத்தார் சபேசய்யர்.  லஞ்சுக்கு வந்த ராமநாதனும் சேர்ந்து கொள்ள நிச்சயதார்த்த அழைப்பு பூரணமானது.

'சபேசா திருவேந்திபுரம் நம்பர் தரேன்.  இங்கேந்தே ஃபோன் போட்டு பேசி அவா குடும்பத்தையும் அழச்சுடேன்.'

'நல்ல யோசனை.  அப்பறம் சொல்ல மறந்துவேன்.  சுபத்ராவ பொண்ணு பார்க்க தை மாசம் முதல் வாரமே அவா வரேன்னு சொல்லிட்டாளாம்.'

'ரொம்ப சந்தோஷம்.  அந்த பிரச்சனை இப்ப இல்லையோன்னோ?'

'சிவாவே அவாளுக்கு புரிய வெச்சுட்டான் போல இருக்கு.  கீதாக்கும் உன் பையனுக்கும் கல்யாணம் நிச்சயமாகப் போற விஷயத்தையும் சொல்லி புரிய வெச்சுருப்பான் போல இருக்கு.'

'நல்லது.  நானும் நிச்சயதார்த்தம் பத்திரிக்கைய சந்திரசேகரனுக்கும்  அனுப்பறேன் சீக்கரம்.'

பேசிக்கொண்டிருக்கும் போதே கீதா புக் செய்த திருவேந்திபுரம் ட்ரங்க் கால் லைன் கிடைக்க அவர்களோடும் அனைத்து விஷயங்களையும் பேசி விடுகிறார் சபேசய்யர்.

பிறகு ராமநாதனோடு ஒன்றாக லஞ்ச் எடுத்துக் கொள்கிறார்கள் சபேசய்யரும் கீதாவும்.

'சபேசன், உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.  இப்ப சப்திக்கு யார் கிட்டேயும் சொல்லிக்க வேண்டாம்.  நம்ம ஜானாக்கு மாப்பிள்ள பார்த்திருக்கோம்.  ஜானாக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னா.  நம்மடவா தான்.  அந்தஸ்து கம்மி.  ஆனா பையன் நன்னா, அழகா, புத்திசாலியா இருந்தான்.   பையனுக்கு வேலை இல்லேங்கறது குறையா இருந்தது.  கலக்டர் கிட்ட பேசி இப்ப சப்திக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்திருக்கேன் கும்பகோணம் பேங்குல.'

'ரொம்ப சந்தோஷம் அத்திம்பேர்.  எப்ப நிச்சயம் பண்ணப் போறேள்?'

'ஜானா படிப்பு முடியட்டுமேன்னு இருக்கேன்.  ஒரு ஆறு மாசம் தான் ஆகட்டுமே.  அதுக்குள்ளே அந்த பையனுக்கும் பர்மெனண்ட் ஆயிடும் இல்லையா?'

'நல்ல படியா நடக்கும் அத்திம்பேர்.  நானும் மாமா சீரோட காத்துண்டிருப்பேன்.'

விஷயங்களைத் துருவித் துருவி கேட்காமல் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறார் சபேசய்யர்.

'அத்திம்பேர், இன்னிக்கு அறுவடை ஆரம்பிக்கிறா நம்ம நிலத்துல.  மூணு மணிக்குள்ள பூவனூர்ல இருக்கணும்.  நம்மாத்து நிச்சயதார்த்தம் சமயத்துல நீங்க எல்லாரும் வரும் போது நிறைய பேசலாம்.'

'நிச்சயதார்த்த வேலையெல்லாம் எப்படி போகறது?'

'முந்தாநா தான் தேதி குறிச்சு கொடுத்தார் ஆத்து வாத்தியார். இன்னும் சீதாக்கு கூட தெரியாது.  முதல்ல அவள ஆத்துக்கு கூப்பிட்டனுப்பிச்சு பேசறதா இருந்தேன்.  இப்ப என்னோட வந்த கீதாக்கே தெரியாம அத மாத்திட்டேன்.  நானும் ஞானமும் மன்னார்குடி போய் சீதா கிட்ட போய் சொல்றது தான முறை.  இப்பத்தான் டாக்டர் என் உடம்பு நன்னாயிடுத்துன்னு சொல்லிட்டார்.  இனிமே ஒவ்வொண்ணா நிச்சயதார்த்த வேலைய ஆரம்பிக்கணும்.'

'பூவனூருக்கு பிப்ரவரி பத்தாம் தேதியே வந்துடறோம்.  அப்பறம், தஞ்சாவூர்லேந்து ஏதாவது பர்சேஸ் பண்ணனும்னா லெட்டர் போடு.  வாங்கி கொடுத்தனுப்பறேன்.'

'இத விட எனக்கு என்ன கொடுப்பின வேணும்?  அப்ப நாங்க கிளம்பறோம்.'

மாமா சொன்னதால் எதுவும் பேசாமல் சம்பாஷணைகளை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கீதாவுக்கு ஆச்சர்யம்.  'மன்னார்குடிக்கு போகப்போறாளா மாமா மாமியோட ?'

கீதாவை ராமநாதன் பவானி தம்பதியினரை நமஸ்கரிக்க சொல்கிறார் சபேஸய்யர்.

'என்ன கீதா ?  எப்போதும் கலகலன்னு பேசுவியே.  இப்பவே கல்யாண வெட்கம் வந்துட்டு தாக்கும்?'  என்று பெரியப்பா கேட்க அதற்கும் கீதா ஒரு வெட்கத்தை விடையாக அளித்து விட்டு இருவரும் கிளம்புகிறார்கள்.

ஏறியவுடன் முதல் கேள்வி மாமாவிடம் கேட்கிறாள்.

'மாமா, என்னத்தான அம்மாவ போய் அழச்சிண்டு வர சொன்னேள்?'

'ஆமாம்.  சொன்னேன்.  என் உடம்ப உத்தேசிச்சு சொன்னேன்.  இப்பத்தான் டாக்டர் ஒரு பிரச்சனையும் இல்லேன்னு சொல்லிட்டாரான்னோ?  நிச்சயதார்த்தத்துக்கு தேதி  குறிச்சோன்ன பொண்ணாத்துல   நேர போய் சொல்றது தான முறை.  அதத்தான் பண்ணப் போறேன்.'

அவர் சொன்னதும் காரிலே தலையை குனிந்து கொண்டு பொல பொலவென அழுதுவிட்டாள்.

அந்தஸ்து .... ஏழைத் தாய்க்கு கிடைக்கப் போகும் முதல் சம்மந்தி அந்தஸ்து மற்றும் கெளரவம்.

அன்பு கிடைத்தால் போதும்; அரவணைப்பு கிடைத்தால் போதும்; பரிவு கிடைத்தால் போதும்; ஆர்டர்கள் கொடுத்தால் போதும்....

இப்படி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த சீதாவுக்கு கிடைக்கப் போகும் சம்மந்தி அந்தஸ்து.

சாமுண்டி கல்யாணத்தை துவக்கி விட்டாள்.  அந்தஸ்துடன்.

'மாமா....... யூ ஆர் க்ரேட் மாமா.'

விசும்பி விசும்பி விசும்பலோடு உதிர்த்த வார்த்தைகள்.

அவர் யதார்த்தமாக சொன்னதை  இவள் அந்தஸ்தாக ஏற்றாள்..  ஏழ்மையின் கௌரவமே கிடைக்கும் அந்தஸ்தில் தானே.

தஞ்சாவூர் டு பூவனூர் பெரிய கோவில்.  மாமாவின் அசதித் தூக்கம் காருக்குள்.  ஆனால் கீதாவின் குடும்பக் கனவுகளோ கார் ஜன்னல் வழியே தெரியும் இயற்கையோடு இணைந்து பேசிக் கொண்டே வருகின்றன.

தொடரும்...

No comments:

Post a Comment