மனதோடுமலர்கள்_1
அத்தியாயம் 1
திருச்சிக்கு செல்லும் ராக்ஃபோர்ட் எகஸ்ப்ரஸ் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. ஒரு மணி நேரம் முன்பாகவே கம்பார்ட்மெண்ட் ஏறிவிட்டான் சந்துரு. கொண்டு வந்த மூன்று நாட்கள் லக்கேஜ் பெட்டியை காலுக்கடியில் தள்ளிவிட்டு ரயிலை விட்டு வெளியே வந்தான் எக்மோர் ஸ்டேஷனில் மனித நடமாட்டத்தை வேடிக்கை பார்க்க.
முதல் முறையாக திருச்சிக்கு பயணம். மாமா பையன் அம்பிக்கு கல்யாணம். கல்யாணத்தில் இவன் எதிர்பார்க்கும் இவனை ஒத்த சொந்தங்கள் அப்பு, கணேஷ், வெங்குட்டு, பிரேமா, நந்தினி, ஜெயராம், மோஹன், ராஜம், பவானி, கோபால், மணி,....எல்லோரும் அத்தை, மாமா, சித்தி, பெரியம்மா பசங்க. இரண்டு மூன்று வயதுகள் இங்கேயும் அங்கேயும் வித்தியாசம் இருக்கும். இவன் பாலகனா இருக்கும் போது எல்லா அராத்துகளும் மாமா வீட்டில் அடித்த லூட்டிகள் இவன் ஆர்வத்தை மேலும் மேலும் அவனை அறியாமல் உசுப்பேத்திக் கொண்டிருந்தது.
எல்லோர் நினைப்பாகவே ஒரு வாரம் இருந்ததால் இருப்பு கொள்ளவில்லை. அதான், ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டான்.
புதிதாக வாங்கிய வாட்ச் மணிக்கட்டில் லூசாக இருந்ததால் கையை ஆட்டி ஆட்டி அடிக்கடி மணியை பார்த்துக் கொண்டிருந்தான்.
இவன் சீக்கிரம் வந்துவிட்டு, ச்சே ச்சே என்று எக்மோர் ஸ்டேஷனை திட்டிக் கொண்டிருந்தான்.
அப்போது தான் ஸ்டேஷனுக்கு எதிரில் இருந்த பொட்டிக் கடையில் வாங்கிய இரண்டு சார்மினார் சிகரெடுகள் ஞாபகம் வந்தது. சட்டைப் பையில் பர்ஸ் வைத்திருந்ததால் சற்று கோணிக் கொண்டிருந்தது சார்மினார்.
ரயில் பயணத்தில் சட்டென முழிப்பு வந்தால் டாய்லட்டில் அடிக்கலாம் என நினைத்து வாங்கியிருந்தான். ஆனால் இப்போது போர் அடிக்கிறது, என்ன செய்ய?
ஒரு சிகரெட்டின் பெண்டை நிமிர்த்தினான். பேண்ட் பாக்கெட்டில் இரட்டைக்கிளி தீப்பெட்டி. பற்ற வைத்தான். புசு புசுனு புகை. ரெண்டு நிமிஷத்தில் அந்த சிகரெட் இவனிடம் டாட்டா சொன்னவுடன் காலால் மிதித்து நசுக்கி விட்டான்.
அவன் செயின் ஸ்மோக்கர் இல்லை. ஆனால் பட்ஜெட் ஸ்மோக்கர். நாளைக்கு நாலு தாண்டாது. இருந்தாலும் சூழல் சாதகமாக இருந்தால் அப்போதெல்லாம் ஒரு பாக்கெட் தாண்டிவிடும்.
இன்னும் இருபது நிமிடம் இருக்கே? கொஞ்சம் லேட்டா கிளம்பியிருக்கணுமோ?
இப்படி சிந்தித்துக் கொண்டிருந்தவன் சட்டென்று கம்பார்ட்மெண்ட் உள்ளே சென்றான். அங்கு ஒரு பெரியவர் தன் குடும்பத்தோடு மற்ற பெர்த்துகளுக்கு உரிமை கொண்டாட வந்திருந்தார்.
அவரை சற்று தள்ளச் சொல்லிவிட்டு, சீட்டுக்கு அடியில் வைத்த பையின் ஸிப்பைத் துறந்து ஏதோ ஒன்றை தேடினான். 'அப்பா, இருக்கு'. ஒரு நிம்மதி.
பிறகு பையை வைத்த இடத்தில் வைத்து விட்டு மீண்டும் ப்ளாட்ஃபாரத்திற்கு இறங்கி விட்டான்.
என்ன தேடினான்?
அது ஒண்ணுமில்லை. ராஜி கொடுத்த லெட்டர். யாருக்கு? யாரோ மாலாவாம், மாலதின்னு முழு பெயராம். திருச்சி ஸ்டேஷனில் இந்த லெட்டரை வாங்க வருவாளாம். அவசரத்தில் அந்த லெட்டரை மாத்திரம் விட்டுட்டு வந்திருந்தா, ராஜி கொன்னுடுவா. நல்லவேளை, அப்படி நடக்க சான்ஸ் இல்லை.
அவன் சிந்தனை சற்று ராஜி பக்கம். டாக்டர் ராஜேஸ்வரி,MBBS. இரு வருடம் முன்பு முடித்து விட்டு ஏதோ ந்யூரோ சப்ஜக்டை ஸ்பெஷலாக எடுத்து பெங்களூர் காலேஜில் தற்போது படித்துக் கொண்டிருக்கிறாள். பத்து நாள் முன்னர் லீவுக்கு பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தாள்.
சந்துருவை விட இரண்டு மூன்று வயது பெரியவள்.
க்ரோம்பேட்டை ராதாநகரில் இவன் குடியிருக்கும் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ராஜி வீடு. அக்கா தம்பி உறவு கெட்டது போங்கள், இருவரிடத்தும்.
ராஜி ஊருக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்து பார்க்கப் போனான் சந்துரு. அப்போது தன் மாமா பையனின் கல்யாணத்தைப் பற்றி பேசினான்.
'திருச்சிக்கு போறையாடா. எனக்கு ஒரு உபகாரம் செய்வியா?'
'சொல்லு ராஜி. எதாவது வாங்கிண்டு வரணுமா?'
'இல்லடா, எனக்கு தெரிஞ்ச பொண்ணு. மாலதின்னு பேரு. அவ, அங்க YWCA ல தங்கி சென்டரல் கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கிறா. சமீபமாதான் கெடச்சுது வேலை. ஆறேழு மாசம் ஆயிருக்கும். அவ கிட்ட நான் கொடுக்கற லெட்டரை கொடுக்கணும்.'
'ப்பூ, இவ்வளவு தானா ராஜி. நான் என்னவோ அவளை கடத்திண்டு வான்னு சொல்லப் போறையோன்னு நெனச்சேன்'.
'ஹலோ. ரொம்ப கனவெல்லாம் வெச்சுண்டு அலையாத. நீ கடத்தற அளவுக்கு கூட அழகா இருக்க மாட்டா. கருப்பு.... போண்டா முழி. இப்ப லெட்டரை வாங்கிப்பையோனோ?'
'என்ன ராஜி. அழகு மனசுல இருந்தாலே போதும். சாயந்திரம் வரேன். லெட்டர் வாங்கிக்கறேன்.'
தந்தாள். 'நானும் அவ கிட்ட பேசிட்டேன். உன்னை ஸ்டேஷன்லியே ரிஸீவ் பண்ணி லெட்டரை வாங்கிக்கறதா சொல்லியிருக்கா. உனக்கு YWCA க்கு போய் ஸைட் அடிக்க முடியாம போச்சேங்குற வருத்தம்தான் எனக்கு'.
அவள் எப்போதுமே அப்படித்தான். அப்படி ஒரு உரிமையை எடுத்துக் கொண்டு பேசுவாள். இவனிடம் ஏனோ அப்படி ஒரு தம்பி பாசம். இரண்டு பேரும் சேர்ந்துவிட்டால் ஒரே அரட்டைதான்.
கார்டு கொடி அசைத்தாகி விட்டது. வெளியே இருந்த சந்துரு ரயிலில் தன் இருக்கை இடத்திற்கு வந்து விட்டான்.
இதோ, மெல்ல மெல்ல ரயில் கிளம்பிவிட்டது.
தொடரும்.
No comments:
Post a Comment