உறவுபோட்டமுடிச்சு_84
வந்த உறவுகளோடு பேசிக் கொண்டிருந்தாலும் சபேஸய்யர் மனதில் குடும்ப சொத்தைப் பற்றிய தன் எண்ணத்தை எல்லா சகோதரிகளிடமும் எப்படியாவது பகிர்ந்து விட வேண்டும் என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது.
எல்லோரும் கூடியிருக்கும் இந்த தருணத்தை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். பாலாஜி கீதா நிச்சயதார்த்த திட்டத்தை பகிர்வதற்குள் இந்த குடும்ப நில சம்மந்தமான பேச்சுகளை தொடங்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
'அத்திம்பேர், சுபத்ரா கல்யாணத்த பத்தி கவலையே வேண்டாம். நான் சொன்னா தாசில்தார் புரிஞ்சிண்டு புள்ளையாத்துக்காரா கிட்ட அவரே எடுத்து சொல்லிடுவார்.'
'எல்லாம் சரி சபேஸா. உன் உடம்பு இருக்கற நிலைமைல எப்படி தாசில்தார பார்த்து சொல்லுவ. நீ பார்த்து பேகறதுக்குள்ள என்ன வேணா நடக்கலாமே.'
'கவலைப் படாதீங்கோ அத்திம்பேர். அந்த தாசித்தார நம்ம கீதாவுக்கு நன்னாவே தெரியும். அவளையே தாசில்தார நேர பார்த்து பேசி புரிய வைக்க சொல்றேன்.'
அதுவரை கேட்டுக் கொண்டிருந்த பவானி குறுக்கிடுகிறாள்.
'நன்னா இருக்கே சபேஸா. கீதாவையே போகச் சொல்லப் போறையா? பெரிய இடத்து சம்மந்தம். சுபத்ரா அப்பாவே இந்த நல்ல சம்மந்தம் நல்லபடியா முடியணுமேன்னு வயத்துல நெருப்ப கட்டிண்டு இருக்கார். கீதாவுக்கு என்ன தெரியும்? உனக்கு உடம்பு நன்னா இருந்தா கையோடையே உன்னயும் கார்ல அழச்சிண்டு மன்னார்குடி போய் அந்த அசட்டு தாசில்தார் கிட்ட போய் விவரமா சொல்லிட்டு சம்மந்தத்துக்கு எந்த வில்லங்கமும் வராம முடிச்சிட்டு வரணும்னு தான் நாங்களும் வேலையெல்லாம் அப்பப்படியே போட்டுட்டு வந்தோம். நீ என்னடான்னா திருடன் கிட்டேயே சாவிய கொடுக்கறேன்னு சொல்றையே?'
அதுவரை பொறுமையாக இருந்த சபேஸய்யர் கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டார்.
'பவானி, கொஞ்சம் வாய அடக்கி பேசறையா? ஏழைன்னா என்ன வேணா பேசலாம்னு இல்ல. இதுக்கும் மேல நீ கீதாவையோ சீதாவையோ பேசறத கேட்டுண்டு சும்மா இருப்பேன்னு நெனைக்காத. உனக்கு அவாளப் பத்தி என்ன தெரியும்னு இப்படி கரிச்சு கொட்டற? உனக்கும் சீதா தங்க தான இல்ல அவ வேறாத்துப் பொண்ணா?'
சபேஸய்யரின் கோப வார்த்தைகளை அவர்கள் எதிர் பார்க்க வில்லை. நிலைமையை சமாளிக்க சிவானந்தம் முயற்சிக்கிறார்.
'உங்கள எல்லாம் கெஞ்சி கேட்டுக்கறேன். உங்க அக்கா தம்பி சண்டைய அப்பறமா வெச்சுக்கோங்கோ. சுபத்ரா கல்யாணத்துக்கு எல்லாரும் ஒத்துமையா இருந்து ஒரு வழிய காட்டுங்கோ.'
'சாரி அத்திம்பேர். என்னால ப்ராமிஸ் தான் பண்ண முடியும். எங்க குடும்பத்தாலோ அல்லது கீதாவாலோ எந்த ஒரு சின்ன எடஞ்சலும் உங்களுக்கு வராது.'
'அது போதும் சபேஸா. உன்ன பத்தி எனக்கு நன்னா தெரியும். என்னவோ மனசு வியாக்யூலமா இருந்தது அந்த தாசில்தார் விவரம் புரியாம பையனாத்துக் காராள குழப்பினதுலேந்து. நீயே இந்த குழப்பத்த தீர்த்து வெச்சிடு. அது போதும். இது கூட பையனாத்துக் காராள உனக்கு நன்னா தெரியுமேங்கறதுனால தான்.'
வேண்டு மென்றே சபேஸய்யர் தான் கொல்லைப்புறம் போக வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
இதற்குள் வெளியே சென்றிருந்த பாலாஜி, ரவி, கனேசன் அக்ரஹார நண்பர்களுடன் பேசிவிட்டு ஆத்துக்குள் நுழைகிறார்கள்.
அதேபோல சிறிது நிமிடங்களிலேயே கீதா வந்திருந்த மஞ்சு, சுபத்ரா மற்றும் ஜானாவை வயல்களை சுற்றிக் காண்பித்து விட்டு அவர்களோடு ஆத்துக்குள் வருகிறாள்.
'அம்மா, கீதா பிரமாதமா நெல்ல வளர்த்துருக்காம்மா. பச்ச பசேல்னு அழகா நட்டு வெச்சிருக்காம்மா. எவ்வளவு விஷயம் தெரியறது வயலப் பத்தி கீதாக்கு. இப்பத்தான் எல்லாத்தையும் ஒவ்வொண்ணா கத்துண்டு வராளாம். நம்பவே முடியல.'
ஜானாவின் புளகாங்கித பாராட்டை பவானியால் ஏற்க முடியவில்லை.
'போதும். ஜானா போதும். இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பணும் தஞ்சாவூருக்கு. மூஞ்சி கீஞ்சிய அலம்பிண்டு ரெடியாகு.'
'அம்மா என்னம்மா அவசரம்? நாங்கல்லாம் இங்க தங்கிட்டு நாளைக்கு வரோமே. நீயும் அப்பாவும் வேணா போங்கோளேன். நீங்க சொல்லுங்கோ மாமி.'
'ஏன் பவானி, அதுக வேணா ரெண்டு நாள் தங்கிட்டு போகட்டுமே?'
'வேணாம் ஞானம். நாளைலேந்து காலேஜ் இருக்கு அவளுக்கு. படிப்பு கெட்டு போயிடும்.'
இதற்குள் தன்னை ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு சபேஸய்யர் தன் கட்டிலுக்கு வந்து கீதாவை அழைக்கிறார்.
'கீதா, நீ வந்திருக்கற குழந்தைகள அழச்சிண்டு நம்மாத்து தோட்டத்துக்கு போய் பேசிண்டிரு. நான் இவளோட சித்த பேச வேண்டியிருக்கு. போறச்சே சமையல் உள்ள இருக்கற சீதாவை நான் கூப்டேன்னு சொல்லிட்டு போ. பாலாஜி, நீயும் சுசீலா பசங்கள தோட்டத்துப் பக்கம் கூட்டிண்டு போ. இவாளோட பேசி முடிக்க அரை மணி நேரமாவது ஆகும்.'
'சரிப்பா.'
'குழந்தைகளுக்கு தீபாவளி பக்ஷணங்களையும் எடுத்துண்டு போ. ஜாலியா சாப்டுண்டே பேசிண்டுருங்கோ எல்லாரும்.'
சின்ன வயதில் பாலாஜி ஆடிய மினி கிரிக்கட் பேட், கவர் பால், ரிங் பால், பக்ஷண சம்பங்களோடு வாலிபங்கள் எஸ்கேப்.
சீதா வரவையும் உறுதி செய்து விட்டு சபேஸய்யர் பூர்வீக சொத்து பற்றி மெல்ல பேச்சை ஆரம்பிக்கிறார்.
தொடரும்.....
No comments:
Post a Comment