உறவுபோட்டமுடிச்சு_78
அதிகாலையே முழித்துக் கொண்டுவிட்டாலும் கட்டிலிலியே ஒரு மணி நேரம் கால்களை தொங்க விட்டுக்கொண்டு இரண்டு கைவிரல்களையும் பின்னிக்கொண்டு தலையையும் குனிந்து கொண்டு ஒரு மணி நேரமாக உட்கார்ந்து கொண்டிருப்பதை கீதா அவரைக் கடந்து போகும் போதும் வரும் போதும் கவனிக்கிறாள்.
'மாமா, ஆர் யூ ஆல்ரைட்?'
'ஒண்ணுமில்ல கீதா. நன்னாத்தான் இருக்கேன். ஏதோ பழைய ஞாபகமெல்லாம் வந்து போயிண்டிருந்தது.'
பழைய ஞாபகங்கள் இருக்கே, அது நாம தனியா இருக்கும்போது பண்ற தியானம் மாதிரி. கண்ண மூடி அமைதியா உட்கார்ந்தா மனசோட திரையில சினிமாஸ்கோப் ஸைஸ்ல தன்னோட படத்த ஓட்டிவிடும். அப்பைக்கப்ப பெருமூச்சு விட்டு ரசிச்சிண்டோ அழுதுண்டோ படத்துக்கு தகுந்த மாதிரி இருந்துட வேண்டியது தான்.
'கீதா, நீ ஸ்னானம் பண்ணிட்டியா?'
'பண்ணிட்டேன் மாமா. ஏன் மாமா கேட்கறேள்?'
'நீ கல்யாணி சந்நிதிக்கு போய் இந்த கவர அவ பாதத்துல வெச்சிட்டு வரயா எனக்காக?
கவரை வாங்கியவுடன் புரிந்து கொள்கிறாள்.
'உங்க ரெசிக்னேஷன் லெட்டரா மாமா?'
அவரது தலையசைப்பு ஆமாம் என்கிறது. இத்தனை நேர அவருடைய வித்யாசமான அமைதிக்கும் அவளுக்கு சேர்த்தே விடை கிடைக்கிறது. கிராமத்து ஜனங்களோடு அவருக்கு இருந்த அதிகார பந்தத்தை துறப்பது அவ்வளவு லேசான விஷயமா என்ன?
'சரி மாமா. முடிவெடுத்துட்டேள். அப்பறம் என்ன? மனச அமைதியா வெச்சுக்கோங்கோ. சம்பளம் வந்துதாங்கறது இல்லையே நம்மாத்துக்கு. நாங்க இருக்கோம். ஜாலியா இருங்கோ ஊர் கவல இல்லாம.'
'ஞானம் இல்லையா?'
'குளத்துல போய் குளிச்சிட்டு வரேன்னு போயிருக்கா மாமா. வர்ர நேரம் தான். மாமி வந்தோண்ண வேணா நான் கோவிலுக்கு போகட்டுமா?'
'பரவாயில்ல. நீ கிளம்பு. நான் ஞானம் வந்தோண்ண மெதுவா எழுந்து பல் தேச்சுட்டு எக்ஸைஸ் பண்ண ஆரம்பிக்கிறேன்.'
கல்யாணி அம்மன் கோவிலுக்கு போகும் போது கீதாவின் எண்ண ஓட்டங்கள் அவளோடு சேர்ந்து கொள்கின்றன.
'ஆச்சு, தீபாவளி முடிஞ்சு களை எடுக்கணும். பரவாயில்ல, பிடுங்கி நட்டது எல்லாமே பூமீல புடிச்சிண்டுடுத்து. இனிமே தண்ணி பாய்ச்சறதுல கவனமா இருக்கணும்.'
'சாமுண்டி என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ, பூச்சி பட்ட வயல் பக்கம் அண்ட விடாம பார்த்துக்கோ. நீ தான் பொறுப்பு அதுக்கு. பூச்சி மருந்தெல்லாம் நாங்களும் அடிச்சு பாத்துக்கறோம். இருந்தாலும் நீயும் பார்த்துக்கணும். செய்வியா?'
கேள்வியை கேட்டு விட்டு இவளே சிரித்தால் சாமுண்டியும் சிரித்தது போலத் தானே. கூடவே மெட்ராஸிலிருந்து பாலாஜி வேறு சேர்ந்து சிரிக்கிறான்.
'உனக்கென்ன பாலாஜி. ஏன் சிரிக்க மாட்டே? உன்ன மாதிரி நான் என்ன ராஜா வீட்டு கன்னு குட்டியா? அங்க மெட்ராஸ்ல உக்காந்து ஏதோ படிக்கற மாதிரி பாவ்லா காட்டிண்டு வாரத்துல ரெண்டு படம் பார்த்துண்டு, கிரிக்கெட் காமென்ட்ரி கேட்டுண்டு..... ம்ம்ம்.. என்னப் பாரு.'
மனதோடு இப்படி அவனோடு பேசிவிட்டு முகத்தை வாட்டமாக வைத்துக் கொள்கிறாள்.
'கல்லுளி மங்கன், கண்ண தொடச்சி விடரானா பார். தீபாவளிக்கு வருவியோன்னோ. அப்ப பார்த்துக்கறேன் உன்ன.'
'ஏய் கீதா, கன்ட்ரோல் பண்ணிக்கோ. கல்யாணி வந்துட்டா. இனிமே பீ ஸீரியஸ்.'
கல்யாணி சந்நிதி முன் இப்போது.
'மாமா, இந்த கவர அம்பாள் பாதத்துல வெச்சு வாங்கிண்டு வரச் சொன்னா என்னோட மாமா.'
'கொடும்மா. நான் வைக்கறேன். அன்னிக்கு ஒரு நாள் கனகதாரா ஸ்தோத்திரம் சொன்னியே அதச் சொல்லு. அது வரைக்கும் கவர் கல்யாணி பாதத்துல இருக்கட்டும்.'
என்னவோ குருக்கள் மூலமா கல்யாணி கேட்டுவிட்டாளே! கணீர் ஆரம்பம். முடிந்ததும் அம்பாள் பூவோடு சேர்த்து கவர் திரும்பக் கிடைக்கிறது.
வாங்கிக் கொண்டு ஆத்துக்குள் வருகிறாள்.
'மாமா இந்தாங்கோ. கனகதாரா ஸ்தோத்திரம் மாமா படிக்க சொன்னார். அதான் லேட்டு.'
இவள் பேச்சுக்குரலைக் கேட்டு கருப்பனின் சத்தம்.
'மாமா, கருப்பன் புடுங்கல் வர வர தாங்க முடியல. போய் பார்த்துட்டு வரேன்.'
பின்புற மாட்டு கொட்டகைக்கு ஓட்டம். கருப்பனைப் பார்த்த மறு க்ஷணம் கீதாவின் கண்கள் ஸ்வர்ணத்தை தேடுகின்றன. அங்கு அவள் இல்லை. கட்டப்பட்ட கயிறு பாம்புபோல கீழே இருக்கிறது.
மனம் பகீர். 'ஸ்வர்ணம் ... - ஸ்வர்ணம்.. ஸ்வர்ணம் ....' அழைத்துக் கொண்டே தோட்டத்துப் பக்கம் பதட்டத்தோடு போகிறாள்.
ஒவ்வொரு அழைப்பிற்கும் ஸ்ருதி ஏறி உச்சஸ்தாயியில் இப்போது. கண்களின் பார்வையை விசாலமாக்குகிறாள்.
'எங்க போயிருப்பா. தானா போகத் தெரியாதே அவளுக்கு.'
கிராமமாச்சே. ஆள் நடமாட்டம் இல்லை. இவளின் குரல் இவளுக்கே திரும்புகிறது.
'எங்கடி போனே? ஸ்வர்ணம்.... ஸ்வர்ணம்.'
ஏதோ ஒரு பயம், பதட்டம். இருப்பினும் மனதுக்குள் ஒரு ஆராய்ச்சி.
'எப்படி கட்டி வைத்தது அவுத்துண்டு போக முடியும்?'
'கொல்ல பக்கத்து கதவு சாத்தினேனா கார்த்தால?' சந்தேகம்.
'அவ சமத்தாச்சே'
பதில் வராது என்று தெரிந்தும் கருப்பனிடம் அதிகார கேள்வி.
'மரியாதையா சொல்லு. எங்கடா போனா ஸ்வர்ணம். நீ இங்கதான இருக்க.'
வாசலுக்கு நாலு கால் பாய்ச்சலாக ஓடுகிறாள். கண்ணில் தென்பட்ட வெங்குட்டுவிடம் கேட்கிறாள்.
'எங்காத்து ஸ்வர்ணத்த பார்த்த? கட்ட அவுத்துண்டு போயிடுத்துடா.'
'நான் பார்க்கலையே கீதா. எங்க போயிருக்கும். தோட்டத்துல பார்த்தியோ?'
'பார்த்தேண்டா. மாங்குட்ட வரைக்குமே பார்த்துட்டேன். இல்ல எங்கேயும்.'
நெஞ்சு படபடக்க ஓடுகிறாள் இங்கும் அங்கும். அக்ரஹாரம் தாண்டி.
'சாமுண்டி எங்க ஒளிச்சு வெச்சுருக்க சொல்லு. வீணா என்னோட விளையாடாத. நீ ஒளிச்சு வைக்கலைன்னா என்னோட சேர்ந்து தேடு'
அவளுடைய அப்போதைய சூழலுக்கு இளிச்சவாயள் சாமுண்டி. பரம பக்தையாச்சே கீதா, அவள் வேலையை விட்டுவிட்டு இவளோடு சேர்ந்து தேடியே ஆகவேண்டும். ஸ்வர்ணத்தை தேடிக் கொடுக்காவிட்டால் இவளுடைய திரிநூல் கிடையாது, விளக்கு கிடையாது, எண்ணெய் கிடையாது, ஊதுபத்தி கிடையாது, சூடம் கிடையாது.
கண்கள் குளம் இப்போது. தேடுவதில் தோற்றுவிட்டு உள்ளே நுழைகிறாள்.
'மாமா மாமி கிட்ட முதல்ல கேட்டுட்டு தேட போயிருக்கனும்.'
மண்டையிலே தன் கையாலேயே ஒரு குட்டு.
'மாமா, ஸ்வர்ணத்த காணுமே. பார்த்தேள்?'
'என்னோட சட்டப் பையில இருக்காளா பார்த்தியா?'
'அய்யே. ஜோக்கு? சொல்லுங்கோ மாமா? ஒரே டென்ஷனா இருக்கு.'
'சிவலிங்கம் வந்தான் நீ கோவிலுக்கு போயிருந்த போது. அவன் ஓட்டிண்டு போயிருக்கான். சாயந்திரம் தான் வருவா ஸ்வர்ணம்.'
மூச்சு வந்தது அவளுக்கு. ஆனாலும் மீதி கேள்விகள்?
'அவன் ஏன் ஓட்டுண்டு போகணும்?'
'நேத்திலேந்து ஒரு மாதிரியா கத்திண்டு இருந்தா இல்லையா ஸ்வர்ணம்? அதான் ஓட்டிண்டு போக சொன்னேன்.'
'புரியல மாமா எனக்கு.'
'ஒண்ணும் புரிய வேண்டாம் உனக்கு. நீ பொண் குழந்த. யோசிச்சு புரிஞ்சுக்கோ.'
யோசிக்கிறாள். புரிகிறது. சிரிக்கிறாள். இதுவரை அவள் முகத்தில் இருந்த அத்தனை கவலைகளும் ஒரு க்ஷணத்தில் மறைந்து மனசு முழுவதும் பூரிப்பு.
'அப்படின்னா மாமா... ஸ்வர்ணம் ப்ரக்னண்ட் ஆகப் போறாளா? சாமுண்டி நம்மாத்துலேயே பொறக்க போறாளா?'
தலையை பக்க வாட்டில் சாயத்து கண்ணில் முட்டிக் கொண்டிருந்த ஆனந்தக் கண்ணீரை ப்ளௌசிலேயே துடைத்துக் கொள்கிறாள்.
சபேஸய்யருக்கு இப்போது ஒரு கவலை:
'நாளைக்கு கல்யாணம் ஆகி பாலாஜியோட மெட்ராஸ்ல ஸெட்டில் ஆகும்படி இருந்தா இவ பூவனூரை விட்டு வருவாளா?'
எல்லா ப்ரேமைகளும் இவள் வசப்படும்போது கிராமத்துக் காற்று இவளை அவ்வளவு எளிதில் அனுப்பித்து விடுமா என்ன?
தொடரும்.....
No comments:
Post a Comment