ஶ்ரீமுக்கூர் ஸ்வாமியின் உபன்யாஸத் துளிகள் - பகுதி −5
"நீங்காத செல்வம் நிறைந்து" என்கிறாள் ஆண்டாள்...
அதாவது எடுக்க எடுக்கக் குறையாத ஐஸ்வர்யம்..
அப்படி ஒரு ஐஸ்வர்யம் ஸித்திக்க யாருடைய கடாக்ஷம் வேணும்?..
வேறு யார்?..
சாக்ஷாத் மஹாலக்ஷ்மியாலதான் அந்தமாதிரியான ஒரு குறைபடாத ஐஸ்வர்யத்த நமக்குக் கொடுக்க முடியும்!.
அந்த மஹாலக்ஷ்மி எங்கே வாசம் செய்கிறாள் என்று சாஸ்திரம் சொல்லுகிறது?..
நம் நாக்கு நுனியில் இருக்கிறாளாம்!
இது என்ன கேள்விப்படாத விஷயமா இருக்கே என்று யோஜனை வரும்!
ஆனால், சாஸ்திரம் அப்படித்தான் சொல்கிறது!..
நம் வீட்டை நாடி மஹாலக்ஷ்மி வர வேண்டுமானால், நம் நாக்கு நல்ல முறையில் இருக்க வேண்டும்..
"அகீர்த்திகரமான, அமங்கலமான, அலக்ஷ்மிகரமான வார்த்தைகளைப் பேசாதே!.." என்று வேதம் சொல்லுகிறது..
அப்படிப் பேசினால் என்ன ஆகும்?..
மஹாலக்ஷ்மி அங்கே தங்கமாட்டாள்.. அவ்வளவுதான்!..
நாம் நாக்கை ரொம்ப ஜாக்ரதையாக உபயோகப்படுத்த வேண்டும்..
ஒரு சமயம் நாக்கு பற்களுடன் பேச ஆரம்பித்தது..
"பற்களே!.. உங்களுக்கு என்னால் என்ன ப்ரதிஉபகாரம் பண்ண முடியும்?..
எப்படிப்பட்ட கடினமான வஸ்துவைப் போட்டாலும், நன்கு அரைத்து மாவாக ஆக்கி, நான் சுவைக்கும்படி கொடுக்கிறீர்களே!..
இப்படி உபகாரம் பண்ணும் உங்களுக்கு நானும் ப்ரதியாய் ஏதேனும் செய்ய வேணுமென்று தோன்றுகிறது.."
உடனே பற்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு, ஒரே குரலில்,
"நீ ஒன்றும் உபகாரம் பண்ண வேண்டாம்!..
உன்னையும் எங்களையும் பரமாத்மா எப்படி வைத்திருக்கிறான் என்று உணர்ந்து நீ இருந்தாயானால், அதுவே நீ பண்ணக்கூடிய ப்ரதி உபகாரத்தைக் காட்டிலும் மேலானது.." என்றன..
"பரமாத்மா நம்மை எப்படி வைத்திருக்கிறான்?."
"உன்னை உள்ளே வைத்து, எங்களை வெளியில் வைத்திருக்கிறான்!..
இதன் தாத்பர்யம் என்ன?..
எங்களைத் தாண்டி நீ வெளியில் வரக்கூடாது.. இதுதான் பகவானுடைய ஸங்கல்பம்!.."
"ஏன், நான் வெளியில் வந்தால் என்ன?.."
"நீ வெளியில் வந்தால் உனக்கு உபத்ரவம் இல்லை.. கஷ்டம் எங்களுக்குத்தான்!.
நாக்கினால் நீ எதையாவது சொல்ல, யாராவது நாக்கை அறுக்கிறேன் என்று சொல்கிறார்களா?..
பற்களை உடைக்கிறேன் என்றல்லவா சொல்லுகிறார்கள்!.
நீ தப்புப் பண்ணினாலும், தண்டனை எங்களுக்குத்தான்!..
அதனால், நீ எங்களுக்குக் கட்டுப்பட்டு இருந்தாயானால், நாங்கள் சௌக்யமாக இருப்போம்.. அது நீ எங்களுக்குப் பண்ணக்கூடிய ப்ரதி உபகாரத்தைக் காட்டிலும் மேலானது!.." என்றன பற்கள்..
நம்முடைய நாக்கு வெளியில் வரும்போது, நாக்குக்கும் பற்களுக்கும் இடையே நடந்த இந்த சம்பவத்தை நினைக்க வேண்டும்..
நாக்கை அடக்க சக்தி இல்லை என்றால், ஆஞ்சனேயனின் திருவடிகளைப் பிரார்த்திக்க வேண்டும்..
ஏனெனில் அவனுடைய நாக்கிலிருந்து அமங்கலமான பேச்சு வந்ததே இல்லை...
அமங்கலமான வார்த்தைகள் வராத க்ருஹங்களில் மஹாலக்ஷ்மி நித்யவாஸம் பண்ணுவதாய் வேதமும் சொல்லுகிறது..
வெறும் தனப்ராப்தி மட்டும் ஐஸ்வர்யம் இல்லையே!..
தனத்தோடு கூடவே, நிம்மதியும், மனநிறைவும், அதனால் உண்டாகக்கூடிய சந்தோஷமும் இருக்க வேண்டும்..
அதுதான் ஆண்டாள் நமக்காக ப்ரார்த்திக்கின்ற நீங்காத செல்வம்.. நிறைவான செல்வம்..
மஹாலக்ஷ்மியின் காருண்யம், பகவானின் காருண்யத்தைக் காட்டிலும் உயர்ந்தது என்று வர்ணிக்கிறார் பராசர பட்டர்..
யாரையும் தவறாகக் கருதாத உத்தமமான மாத்ரு ஹ்ருதயம் கொண்டவள் மஹாலக்ஷ்மி தாயார்..
சீதா பிராட்டியாய் இருக்கும் போது, இராக்ஷஸிகளுக்கும் க்ருபை பண்ணி அவர்களை இரக்ஷித்தவள் இல்லையா?..
அவள் நமக்கும் க்ருபை பண்ண வேண்டுமானால், நாம் அமங்கலமானதும் அலக்ஷ்மிகரமானதுமான வார்த்தைகளைப் பேசக்கூடாது..
(வளரும்..)
No comments:
Post a Comment