Sunday, December 19, 2021

திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −1

 பத்மா கோபால்  

தங்களுடன் ஒரு நிமிடம்...

நாம் அனைவருமே "திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியம்" என்று கொண்டாடப்படுகின்ற திருக்கோளூர் பெண்பிள்ளையின் எண்பத்தியோரு வார்த்தைகளையும் அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒளிந்துள்ள நிகழ்வுகளையும் நிச்சயம் அறிந்திருப்போம்..

இவ்வார்த்தைகளை ஊன்றிப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும், இதுபோல இன்னும் எத்தனையோ ஆன்மீக நிகழ்வுகள் மனதில் நிச்சயம் உதயமாகியிருக்கும்!

ஆனால், அது அப்பொழுது தோன்றி மறைகின்ற மின்னலைப் போல, சிறிது நேரத்திற்கெல்லாம் நமது சிந்தையை விட்டு மொத்தமாய் நீங்கியிருக்கும்...

அவற்றை எல்லாம் நாமும் ஏடுபடுத்தி இருப்போமானால், அது இனி வருகின்ற சந்ததியினருக்கு ஒரு ஆன்மீக விருந்தாகவே அமைந்திருக்கும்!..

....அப்படிப் பொறுப்புணர்ந்து, பின் சந்ததியினருக்காகச் செயலாற்றியவர்தான், நாம் தற்பொழுது காணப் போகிற "திருவல்லிக்கேணி பெண்பிள்ளை" என்பவர்..

இவரின் இயற்பெயர் ரங்கநாயகி என்பதாகும்..

இவர் திருவல்லிக்கேணியில் ஒரு ஆசார அனுஷ்டானங்கள் நிறைந்த குடும்பத்தில் ஶ்ரீமான் ஶ்ரீநிவாஸாசாரியர் என்கிற மஹாவித்வானுக்கு மூத்த குமாரத்தியாகப் பிறந்தவர்..

அக்காலத்தில் ஆரம்பப் பள்ளிக்கு மேல் அவரைப் படிக்க வைக்கவில்லை..

சிறுவயதிலேயே இவரைச் சிங்கப்பெருமாள் கோயிலை அடுத்த வெங்கடாபுரம் என்கிற கிராமத்தில் வசித்துவந்த ஒரு ஆசாரசீலருக்குத் திருமணம் செய்து தந்துவிட, அவர் அங்கேயே குடும்பம் நடத்தி வந்தார்..

மஹாவித்வானுடைய பெண்ணாகிய படியால், இவருக்கு ஆன்மீக நூல்களை வாசிப்பதில் நிறையவும் ஆர்வம் இருந்தது..

தமது ஓய்வு நேரத்தில், இது போன்று ஸத்விஷயங்களைப் படித்து தமது அறிவையும், பக்தியையும் வளர்த்து கொண்ட இவர், அக்காலத்திலேயே ஆன்மீகப் பத்திரிகைகளில் விஷயதானம் செய்திருக்கிறார்...

அதுவுமன்றி, திருக்கோளுர் பெண்பிள்ளையின் வார்த்தைகள் இவரைப் பெரிதும் பாதித்தனாலோ என்னவோ, தாமும் அதுபோன்ற நூற்றெட்டு வார்த்தைகளைத் தொகுத்து, "திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை" என்று தலைப்பிட்டு ஒரு நூலாகவே எழுதி வைத்துள்ளார்...

இதில் மொத்தம் நூற்றெட்டு வாக்கியங்கள் இருக்கின்றன..

ஒவ்வொன்றும் ஒரு ரத்தினமாய் ஜ்வலிக்கிறது..

சில நாட்களுக்கு, இங்கே திருவல்லிக்கேணி அம்மாளின் வார்த்தைகளில் ஒரு சிலவற்றையேனும், அடியேன் அறிந்த வரையில் விளக்கத்தோடு தருவதற்கு ஆசைப்படுகிறேன்...

தங்களிடமிருந்து அதற்கான வரவேற்பு இருக்குமா?...

பத்மா கோபால்

🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹

(திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம்..)

(பகுதி −1..)

இத்தனை நேரமாய் காலக்ஷேபம், உபன்யாசம் என்று இடைவெளி இல்லாமல் செய்து கொண்டிருந்ததில், மணவாள மாமுனிகள் ரொம்பவும் ஆயாஸமாக உணர்ந்தார்...

சிறிது நாட்களாகவே அவரது உடற்சோர்வு அவரை ரொம்பவும் படுத்தி எடுத்தது...

இருந்தும் எதையும் பொருட்படுத்தாமல் "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுவாய்" சிஷ்யகோடிகளுக்குத் தாம் அறிந்ததை எல்லாம் சொல்லித் தந்து விட வேண்டும் என்று தமது சக்திக்கு மீறி ப்ரயத்தனப்பட்டதில், அவரறியாமலேயே அவரது தேஹம் ஓய்வை நாடியது..

சிஷ்ய கோடிகள் இப்போதைக்கு வரமாட்டார்கள்..

ஆஹாரம் செய்த பின்னே, அவர்கள் கற்றுக் கொண்டதை எல்லாம் அப்யாசம் செய்தாக வேண்டும்..

இதற்கு மேல் மாலையில்தான் மறுபடி உபன்யாசம் என்பதால், அருகிலிருந்த தூணில், சற்றே தலைசாய்ந்தார்..

சிறிது நேரம்தான் சென்றிருக்கும்..

வாசலருகே ஏதோ சிறு அரவம்...

 நிழலாடவும், யாரோ வந்திருப்பதை உணர்ந்தார்...

"யாரப்பா அங்க நிக்கறது?.. உள்ள வாயேன்!.."

.....மாமுனிகள் ஆதரத்தோடு குரல் கொடுத்தார்..

அவரே சற்றும் எதிர்பாராத வண்ணம் உள்ளே நுழைந்தாள் ஒரு  பெண்மணி...

வந்த வேகத்திலேயே மாமுனிகளின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தாள்..

நிமிர்ந்து எழுந்தவளின் கண்களில் நீர் திரையிட்டிருந்தது...

"இவள் யாருனு தெரியலயே.." என்ற நினைவோடு, மாமுனிகள் அவளை உற்றுநோக்கினார்..

வந்தவளுக்குச் சுமார் அறுபது வயதிருக்கும்..

ஒடிசலான தேஹம்..

ஆனால் தீக்ஷண்யமான கண்கள்..

அந்தக் கண்களில் இருந்த ப்ரகாசம், 

"இவள் விஷய ஞானம் உள்ளவள்!.." என்பதைச் சந்தேகத்துக்கிடமில்லாமல் கூறியது..

"யாரம்மா நீ?.. உனக்கு என்ன வேணும்?.."

.....ஆதரவாய் மாமுனிகள் கேட்டதும்தான் தாமதம்..

...அந்தப் பெண், மாமுனிகளை வினயத்தோடு கைகூப்பித் தொழுதாள்..

"தேவரீருக்குக் கைங்கர்யம் செய்யற பாக்யத்தை இந்த அடியாளுக்குத் 

தந்தருளணும்.."

"கை...ங்....கர்....யமா?... 

....நீ யாரு மா?

ஒன்னோட ஊர் எது?.. 

பேர் என்ன?..

ஒன்னோட பந்துக்கள்லாம் எங்க இருக்கா?.."

"ஸ்வாமி... அடியேன் திருவல்லிக்கேணியில பிறந்து வளர்ந்தவள்..

தற்சமயம் எனக்கு பிதா, மாதா, ஸகானு எல்லாமா இருக்கறவன் அந்தப் பார்த்தசாரதிதான்!.."

....இதைக் கேட்டதும் பெரிய ஜீயருக்கு (மாமுனிகள்) முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது...

"இருக்கட்டும் மா!.. ரொம்ப நல்ல விஷயம்தான்!..

ஆனா... அந்தத் திருவல்லிக்கேணி திவ்யதேசம்...

...கோயில், திருமலை, பெருமாள்கோயில்  எம்பெருமான்கள் மூணு பேருமே உவப்போடு வந்து அருளற திவ்யதேசமாச்சே!..

அதுதானே ஜகதாசாரியரான நம்ம இராமானுஜரோட திருவவதாரத்துக்கு வித்திட்ட திவ்ய தேசம்!..

"ஒப்பாரில்லாத மாதர்கள்வாழும் திருவல்லிக்கேணி" னு ஆழ்வார்கூட கொண்டாடியிருக்கற திவ்யதேசமாச்சே அது!..

அங்க...

ஒருவர் இருக்கற எடத்துல, பலர் இருந்தாவது அந்த எம்பெருமான மங்களாசாஸனம் பண்ணணும்... அதுதான் பெரும்பேறுனு சொல்வாளே!..

நீ அத விட்டுட்டு, இங்க வந்து நிக்கறயே!.."

.....மாமுனிகளின் கேள்விக்குப் பதில் சொல்ல, இப்பொழுது அம்மாதரசி மெல்ல வாய் திறந்தாள்...

(வளரும்..)

No comments:

Post a Comment