Monday, December 27, 2021

வேட்டையாடும் வெங்கடேஸன்

 பத்மா கோபால் பதிவு

(வேட்டையாடும் வெங்கடேஸன்..)

சற்று நேரம் முன்புதான்  இராஜபாளையத்தில் அமைந்துள்ள "வேட்டை வேங்கடேச பெருமாள் கோயில்" என்றழைக்கப்படுகின்ற தொன்மை வாய்ந்த திருக்கோயிலுக்குச் சென்று வந்தேன்..

ஆளரவமே இல்லாத பழமையான கோயில்....

ஆனால் வௌவால்களால் உண்டாகும் வாடை இன்றி, மிக மிகத் தூய்மையாக இருக்கிறது!..

நுழைவாயிலிலிருந்து சற்று உள்ளே நடந்தால், கலைநயம் மிகுந்த கல் தூண்களோடு கூடிய பெரிய மண்டபம் நம்மை வரவேற்கிறது..

சிறிய கருடாழ்வார் சந்நிதி..

அவருக்கெதிரே நின்ற கோலத்தில் வேங்கடேஸப் பெருமான்..

வெள்ளியாலான மிகவும் அழகான உற்சவ மூர்த்தியும் அங்கேயே எழுந்தருளியிருக்கிறார்..

மாலை ஐந்து மணியாகியும், கோயிலில் பெருமானும் நாமும்தான்!..

ஓரோர் இடங்களில் பெருமானுக்கு மிக நீண்ட வரிசையில் காத்திருந்து சேவையாகும் பொழுது,

இங்கே பெருமான் தன்னைத் தேடி எவரேனும் வருவரோ என்று நின்ற நிலையில் காத்திருக்கிறான்!

சேவார்த்திகள் முக்யமான நாட்களில் மட்டுமே வந்து போவதாகத் தெரிகிறது..

அங்கே பெருமாள் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்த பட்டாச்சாரியார் வாயிலாக அறிந்த விஷயங்களிலிருந்து, 

.....இக்கோயில் சுமார் எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், இங்கு பெருமானுக்குத் தினமும்  இருகால பூஜைகள் மட்டுமே நடப்பதாகவும் தெரிய வருகிறது..

பெருமாள் கோயிலைச் சுற்றி வரும்பொழுது, அழகாகப் பரிமாறிக்கப்பட்டு வருகின்ற பூச்செடிகளோடு கூடிய தோட்டத்தைக் காண முடிந்தது..

ப்ரகாரத்தில் சஞ்சீவி பர்வதத்தை தனது வலது கையில் தாங்கிய வெகு அழகு அனுமன் சேவையாகிறார்..

பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே பத்மாவதி தாயார் தனிக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறாள்..

வெகு சமீப காலத்தில்தான் தாயாருக்குத் தனியாகக் கோயில் எழுப்பினார்கள் என்று பட்டர் மூலமாக அறிய முடிந்தது..

தாயார் கோயிலுக்குள் ப்ரவேசித்ததும், தாயார் சந்நிதி நுழைவதற்கு முன்பாகவே பளிச்சென்று சுதர்ஸன மூர்த்தி சேவையாகிறார்..

ப்ரதக்ஷிணமாக வந்து தாயாரின் சந்நிதிக்குள் நுழைந்தால், ஊஞ்சலில் எழுந்தருளியிருக்கின்ற உற்சவ மூர்த்தி தாயாரின் அழகு நம்மை அசர வைக்கிறது!..

பிரதி வருஷமும் கார்த்திகை இருபத்து ஒன்று முதல் இருபத்து மூன்றாம் தேதி வரை லக்ஷார்ச்சனையும், தொடர்ந்து இருபத்துநான்காம் தேதி 

பெருமாளுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவமும், மிகப் பெரிய அளவில் அன்னதானமும் நடைபெறுகிறது என்று பட்டாச்சாரியார் கூறினார்..

அடுத்த படியாக, வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் வழியாகப் பெருமானை எழுந்தருளப் பண்ணுகின்ற நிகழ்ச்சி விமரிசையாக நடை பெறும் என்றும் பட்டர் கூறினார்..

இவற்றைத் தவிர வேறெந்த உற்சவங்களும் இங்கே நடப்பதாகத் தெரியவில்லை..

கோயிலின் முன்னே உள்ள சிறிய திருக்குளமும் அதன் முகப்பில் அமைந்துள்ள சிறிய மண்டபமும் வெகு அழகாகப் பரிமாறிக்கப்பட்டு வருகிறது...

இக்கோயிலின் கல்வெட்டுக்களிலிருந்து, இந்த வேட்டை வெங்கடேஸ பெருமானே இந்தத் தலத்தில் வாழ்கின்ற ராஜுக்களுக்கு, குலதெய்வம் என்று அறிய முடிகிறது..

கோயிலின் அருகிலேயே சுமார் நான்கைந்து திருமண மண்டபங்களும் காணப்படுகின்றன..

இவற்றை எல்லாம் பார்க்கும்பொழுது, ஒருகாலத்தில் இங்கே ஜனநடமாட்டம் நிறைய இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது...

ஆனால் தற்சமயம், பெருமான் ஊருக்கு ஒதுக்குப்புறமாய், ஆள் அரவமற்ற சூழலில், தனியே கோலாச்சுகிறார்....

அது சரி... 

"நாமே அறியாமல் மறைந்திருந்து,

நம் எதிரிகளை (வேறென்ன! காம, க்ரோத  இத்யாதிகள்தான்!..) வேட்டையாட வல்லவன் என்பதை உணர்த்துகின்ற விதமாய், இந்தத் திருநாமத்தோடு இங்கே ஏகாந்தமாய் எழுந்தருளியிருக்கிறான் போலும்!.." என்று அவனின் தனிமைக்குச் சமாதானமாய் ஒரு காரணத்தை நானே கற்பித்துக்கொண்டு, 

ஆதங்கத்தோடு வந்து சேர்ந்தேன்..



No comments:

Post a Comment