திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −12
"சரிம்மா...வேற எதுவும்கூட வேணாம்..
ஆத்துல இருக்கற பெரியவாளுக்கெல்லாம் நன்னா சேவை பண்ணியிருந்தா, அவா உனக்கு நல்ல விதமான ஆசீர்வாதம் நெறய பண்ணியிருப்பாளே!..
அது போறுமே!.. ஒனக்கு தன்னால பகவத் க்ருபையும், ஆசார்ய க்ருபையும் வந்து சேருமே..."
....வருத்தத்தினால் தலைகுனிந்திருந்த திருவல்லிக்கேணி மாதரசியைப் பார்த்து மாமுனிகள் இப்படிச் சொன்னதும்,
அவள் விரக்தியோடு சிரித்தாள்...
"ஸ்வாமிகளே!..
வாஸ்தவம்தான்!..
ஆத்துப் பெரியவாளோட ஆசீர்வாதம் அடியேனுக்கு நெறயவே இருக்கு!..
ஆனா, அதெல்லாம் லௌகீகமான பலன்களுக்கான ஆசீர்வாதம்தான்...
இந்த ஆத்ம சம்ரக்ஷணத்துக்கான ஆசீர்வாதம்னு பார்த்தா அதுல எதுவுமே இல்ல!..
இருந்தாலும், அடியேன் அல்ப சந்தோஷியா அந்த ஆசீர்வாதங்கள் கெடைச்சுதல ரொம்ப திருப்தியாயிட்டேன்..
ஆத்துப் பெரியவாள்லாம்,
#நாடு புகுவீர் என்றாரோ ஆண்டாளைப் போலே?..#
அடியேன் என்ன,
#வேண்டுவது இதே என்றேனோ பட்டரைப் போலே?.."#
என்று ஆதங்கம் மேலிட ஒன்றுக்கு இரண்டு கேள்விகளை அடுக்கினாள்..
"அம்மா... இதென்ன நீ சொல்லிண்டே போறயே...
அந்த வ்ருத்தாந்தங்கள்ல அப்படி என்ன சங்கதி இருக்கு?.." என்று ஏதுமறியாதவர்போல் வினவினார் பெரிய ஜீயர்..
அவருக்குப் பதில் சொல்லத் தொடங்கினாள் திருவல்லிக்கேணி மாதரசி..
கூரத்தாழ்வாருக்கு ஏத்த ஞானமும், குணபூர்த்தியும் உடையவள் அவரோட தர்ம பத்தினி ஆண்டாள்..
இவா ரெண்டு பேரோட திருக்குமாரர்தான் பட்டர்..
பட்டரோட ஞானா விலாஸமும், சாதுர்யமும் ரொம்ப பிரஸித்தம்...
அதுவுமில்லாம இவர் நம்பெருமாளுக்கும், ஶ்ரீரங்கநாச்சியாருக்கும் அபிமான புத்ரன் வேற!..
ஒரு கைசிக த்வாதசி அன்னிக்கு, பட்டர், அரங்கன் முன்னாடி கைசிக புராணம் வாசிச்சு, அதுக்குப் பலவிதமா வ்யாக்யானங்கள் செய்தார்..
அதக்கேட்ட பெரியபெருமாள் ரொம்ப சந்தோஷமடைஞ்சு,
"ஓய் பட்டரே!.. உமக்கு மேல் வீடு தந்தோம்!.."னு திருவாய் மலர்ந்தான்..
...பெருமாள் வாக்குலேந்தே இந்த மாதிரி வரவும், பட்டரும் ரொம்ப ஆனந்தம் அடைஞ்சு, பெருமாள கண்கள்ல நீர்பெருக சேவிச்சு நிற்க,
பெருமாள் அவருக்கு பஹுமானமா (கௌரவித்தல்) நெறய சீர் வரிசைகளக் கொடுத்து, பல்லக்கு மரியாதையோட பட்டரோட திருமாளிகையில கொண்டு விடும்படி நியமித்தார்..
அப்படி திருமாளிகை வந்து சேர்ந்ததும், பட்டர் முதல் காரியமா தன்னோட திருத்தாயாரன ஆண்டாளோட திருவடிகள்ல விழுந்து சேவிச்சார்...
ஆண்டாள் அம்மையாருக்குப் பெரிய பெருமாள் தன்னோட புத்ரனை கௌரவிச்ச விஷயம் எதுவும் தெரியாது..
இருந்தாலும், தன்னோட கால்ல விழுந்து நமஸ்கரிச்ச பிள்ளைக்கு, "நலமந்தமில்லதோர் (பரமபதம்) நாடு புகுவீர்!.." என்று ஆசீர்வதித்தார்..
பட்டரும்,"அம்மா!.. அடியேன் வேண்டுவது இதே!.." என்று பெரும் உவப்போடே பதிலளித்தார்..
ஒரு தாய், தன் மகனை,"தீர்காயுஸா நன்றாக வாழுவாய்!.." என்றே வாழ்த்துவாள்!..
ஆனால், இந்தத் தாயோ, "நீர் மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைப் பெறுவீர்!.." என்று வாழ்த்துகிறாள்..
பிள்ளையும்,"என்னைச் சீக்கிரம் முடியும்படி சொல்ல, நான் உம்மிடம் என்ன அபசாரப்பட்டேன்?.." என்னாமல்,
"அம்மா! அடியேன் வேண்டுவது இதே!.." என்று தாயாரின் ஆசியை உகந்து ஏற்கிறார்!..
என்னே, தாய் − மகன் சேர்த்தி!..
கூரத்தாழ்வான் திருவடி சம்பந்தம் இருந்தாதான் இதுமாதிரிப் பேச முடியும்!..
அடியேன் ஆத்துப் பெரியவாதான் இதுமாதிரி ஒரு ஆச்சர்யமான ஆசிர்வாதம் பண்ணாளா?..
இல்ல... அவா அப்படிப் பண்ணி இருந்தாலும், அடியேன் அத உகந்து ஏத்திருப்பேனா?..
ஸ்வாமிகளே!..
அடியேனுக்கெல்லாம் இந்த தேஹத்து மேல இருக்கற ஆசை என்னிக்குமே விடாது!.."
......என்று கண் கலங்கக் கூறி விம்மினாள்..
(வளரும்..)
No comments:
Post a Comment