Sunday, December 19, 2021

உறவுபோட்டமுடிச்சு_74

உறவுபோட்டமுடிச்சு_74  - Written by Baskar Sathya 

ஞானம் யாரிடமும் சொல்லக் கூடாது என்று சீதாவிடம் சொல்லிய அவளது விருப்பத்தை நைச்சியமாக கேட்டு தெரிந்து கொள்கிறாள் கீதா.

'ஓஹோ... இப்படியெல்லாம் நடந்திருக்கா எனக்கு தெரியாம ?'

'அப்ப மன்னி உன் கிட்ட எதுவும் சொல்லலையா?'

நமுட்டு சிரிப்பு கீதாவிடமிருந்து.

'உனக்கு பாலாஜிய பிடிச்சிருக்கோன்னோ?'

'அய்யே.  அவன யார் போய் கல்யாணம் பண்ணிப்பா?  நான் மாட்டேம்ப்பா'

சொல்லும் போதே உதட்டோரத்தில் உதிர்ந்த கள்ளச் சிரிப்பு அவளை சீதாவுக்கு காட்டிக் கொடுத்து விடுகிறது.

'விளையாடாத கீதா.  சித்த நாழில பக்குனு ஆயிடுத்து.  பகவான் நம்மள பார்த்து கண் தொறந்துட்டான் கீதா.  உழைச்சு முன்னேறரது பிரச்சனை இல்ல.  ஆனா உடம்ப வருத்திண்டு ஓடா தேஞ்சு கடமையெல்லாம் முடிச்சுட்டு அப்பாடான்னு அமைதியா இருக்கப்போற சமயத்துல பகவான் உன் கல்யாணத்து மூலமா சோதனைய கொடுத்துட்டா என்ன பண்றதுன்னு ஒரே கவலையா இருந்தது.  உனக்கு வரப்போறவன் சமத்தா இருக்கணுமே, உன்ன கையில வெச்சு தாங்கணுமேன்னு ஸ்கூல் பிள்ளையார் கிட்ட தெனமும் கதறுவேன்.  பரவாயில்ல,  இந்த சமயக்காரி கிட்டேயும் அந்த ஆனந்த விநாயகருக்கு கருணை இருக்கு.'

'ஏம்மா இப்படி ஏதாவது கவலப் பட்டுண்டே தான் இருப்பியா?  உன்னோட புள்ளையார் சோதன கொடுக்கணும்னு நெனச்சா எப்ப வேணாலும் கொடுப்பார்.'

'கீதா, வாய மூடு.  நல்ல விஷயம் பேசிண்டிருக்கும் போது இப்படியெல்லாம் பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும் பார்த்துக்கோ.  பாலாஜிக்கும் உனக்கும் போட்ட முடிச்சு உறவுகள் மாத்திரம் போட்டதுன்னு நெனச்சியா.  பிள்ளையார் தீர்மானிச்சது.  நம்ம ஊர் ராஜகோபாலன் தீர்மானிச்சது.'

சொல்லிவிட்டு கண்ணீர் பிரவாகம் சீதாவிடமிருந்து.

'அம்ம்ம்..மா.  லூஸாட்டம் அழாத.  மாமாவும் என் கிட்ட கேட்டுட்டா நீ பாலாஜிய பண்ணிக்கறையான்னு?'

'அப்படியா?  என் கிட்ட சொல்லவே இல்ல?'

'மாமா என் வாய கட்டி போட்டுட்டா யார் கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு.  நான் என்ன பண்றது?'

மாமாவுக்கும் அவளுக்கும் நடந்த அன்றைய சம்பாஷணைகளை சொல்கிறாள் சீதாவிடம்.

'நான் இப்படியெல்லாம் உன் கல்யாணம் நல்லபடியா தீர்மானமாகும்னு கனவுல கூட நெனக்கல.  நான் தான் துரதிர்ஷடக் கட்டையா போயிட்டேன்.  நீயாவது தொங்க தொங்க தாலிய கட்டிண்டு நன்னா இருக்கணும்.'

'அதெல்லாம் இருக்கட்டும்.  நாளைக்கே மாமா வாத்துல கல்யாண ஏற்பாடு பண்ணுன்னு சொன்னா பணம் வெச்சிருக்கியா?'

'அந்த கவல மட்டும் தாண்டி எனக்கு இப்ப.  வழக்கம் போல இதுக்கும் பிள்ளையாரத் தான் பிடிச்சிண்டிருக்கேன்.  ஏதோ அசட்டு நம்பிக்கைல கற்பனைய ஓட்டிண்டிருக்கேன்.  ஸ்கூல் ஹெச்சம் ஆயிரம் தரேன்னார்.  பர்மா ஷெல் ஆத்துலேயும் ஆயிரம் கொடுத்துடுவா.  ஸ்கூல் வாத்யார்கள் எல்லாம் ரெண்டு அஞ்சு பத்துன்னு போட்டு கொடுக்கலாம்.  காளாஞ்சுமோடாத்துல கவலப் படாத சீதா பார்த்துக்கலாம்னு தைரியம் சொல்றா.  செருவாமணி மாமா எங்காம் அரண்மனையாட்டம் இருக்கு எங்காத்துலேயே கல்யாணம் நடத்திக்கோங்கோன்னு சொல்லியிருக்கார்.  சகாய விலையில மளிகையும் கொடுப்பார்னு நெனைக்கிறேன்.  இதெல்லாம் விட ரகு சாஸ்திரிகள் வைதீக செலவ பத்தி துளிக் கூட கவலப் படாத சீதா அப்படின்னு சொல்லிட்டார்.'

'நீ சொல்றத பார்த்தா மன்னார்குடில எல்லா எடத்துலேயும் போஸ்டர் ஒட்டிட்ட போல இருக்கே?'

'ஆமாண்டி, கிட்டத்தட்ட அப்படித்தான்.  நீ இப்ப கேட்ட மாதிரி நாளைக்கு நிச்சயதார்த்தம் நாளண்ணிக்கு கல்யாணம்னு வந்துடுத்துன்னா என்ன பண்றது?  அதான் இப்பவே எல்லார் கிட்டேயும் தயாரா இருக்க சொன்னேன்.'

'உன் பொண்ணு கல்யாணத்துக்கு அவாள்லாம் பைஸா வெச்சிண்டு தயாரா இருக்கணுமாக்கும்?'

'பின்ன இங்க உங்க தாத்தாவா வெச்சிட்டு போயிருக்கா?  அப்பா கூட எதுவும் உனக்குன்னு விட்டுட்டு போகலையே டீ.  எனக்குன்னு அவர் போய் சேரதுக்கு முன்னாடி கடைக்கு அழச்சிண்டு போய் மூணு பவுன்ல வளையல வாங்கிப் போட்டார்.  எதுக்குன்னான்னேன்.  தீபாவளிக்கு போட்டுக்கோன்னார்.  அதான் தீபாவளியே இல்லாம போச்சே அந்த வருஷம்.  அந்த வளையல்கள அப்படியே போட்டுக்கணும்னாலும் போட்டுக்கோ. இல்ல அதுகள போட்டுட்டு புது டிஸைன்ல வாங்கிக்கறதுன்னாலும் வாங்கிக்கோ.'

'உனக்கு ஆசையா அப்பா வாங்கி கொடுத்தது. எனக்கு அது வேண்டாம்.'

'அப்படியெல்லாம் சொல்லாத.  நடுத்தர பொருளாதாரமே இப்படித்தான்.  நேத்திக்கு என்னுது இன்னிக்கு ஒன்னோடது ஆகும்.  நாளைக்கு என் பேத்தி உன் கிட்டேந்து புடிங்கிப்பா.  வாங்கிண்ட அன்னிக்கு கடையிலேயே வெச்சு ஸைஸு சரியா இருக்கான்னு அவன் கடையில இருக்கற வளையல் எல்லாத்தையும் போட்டு போட்டு ஆசைய தீர்த்துண்டுட்டேன் அன்னிக்கே. உங்க அப்பாவும் அத புரிஞ்சிண்டு இது நன்னாருக்கும் அது நன்னாக்கும்னு அவர் கையால கடை வளையல் நாலஞ்ச நைஸா போட்டு விட்டார்.  கடைக்காரனும் இதுங்க அல்பம்னு தெரிஞ்சும் கண்டும் காணாம இருந்திருப்பான்னு தான் நெனைக்கிறேன்.'

அவள் படும் கஷ்டங்களை அவள் வாயாலேயே கேட்க கேட்க ஏதோ ஒரு விதத்தில் தான் ஆத்ம பலம் பெருவதை கீதா உணர்கிறாள்.  மனதில் உள்ளவைகளை அவள் கொட்டித் தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறாள்.  அவள் யதார்த்தமாக சொல்பவை தனக்கு தன்னம்பிக்கை விதைகளாக மனதில் ஊன்றப் படவேண்டும் என்று விரும்புகிறாள்.  வேண்டுமென்றே உசுப்பேத்துகிறாள் அவளை.

'சரிம்மா, வளையல் எனக்கு போட்டுட்டே. திருமாங்கல்யத்துக்கு என்ன பண்ணுவ?  உங்க அண்ணா மன்னி கேட்பாளே?'

'மனசுல ஒண்ணு இருக்கு.  ஒண்ணும் பிரட்ட முடியலைனா, நோரா காஞ்சிபுரம் போவேன். பெரியவாள பார்ப்பேன். ஒரு நமஸ்காரத்த பண்ணுவேன்.  கதறுவேன்.  மத்தத அவர் பாத்துண்டுடுவார்.'

'என்ன ஒரு வெள்ளேந்தியான நம்பிக்கை மனுஷா கிட்ட, குருநாதர் கிட்ட, தெய்வங்கள் கிட்ட.  இது எங்க அம்மா கிட்ட இருக்கற வரைக்கும் எனக்கு பகவான் அனுக்ரஹத்துக்கு ஒரு கொறச்சலும் இல்ல.'

'என்னம்மா அவா கிட்டேயும் இவா கிட்டேயும் பிச்சி பிச்சி கைமாத்து வாங்கறையே.  நானும் கல்யாணம் பண்ணிண்டு போயிட்டா கடன அடைக்க என்ன பண்ணப் போறே.'

'இப்ப நான் சொன்ன மனுஷா யாரும் திருப்பி கேட்க மாட்டான்னு தான் தோணறது.  இவாளுக்கெல்லாம் நானும் பல வருஷமா சரீர ஒத்தாச பண்ணியிருக்கேன்.  சமையலுக்கு மாத்திரம் பேசுவா.  சமையல் முடிஞ்சோண்ண வேலக்காரி வரல பாத்திரத்த தேச்சுட்டு போன்னு சொல்லுவா.  நான் அதுக்கல்லாம் அட்ட கணக்கு பொட்ட கணக்கெல்லாம் பார்க்கறதில்ல.  அப்பளம் கருவடாம் கூட இட்டதுல மிச்சம் மீதியையும் அவா கிட்டேயே கணக்கு பண்ணி கொடுத்துடுவேன்.   இதெல்லாம் கண்டிப்பா மனசுல வெச்சிண்டிருப்பாளே. அவாளுக்கு திருப்பி கேட்க மனசு வருமா சொல்லு.   அப்படியே கேட்டா உழச்சு அடச்சுட்டா போச்சு.  நீ அதுக்கெல்லாம் கவலப் படாத.'

'இவ்வளவு உனக்கு கஷ்டத்த கொடுத்துட்டு நான் கல்யாணம் பண்ணிக்கணுமா சொல்லு?'

'இப்படியெல்லாம் பேசறதா இருந்தா நான் இதோட நிறுத்திக்கறேன்.  குழந்தைகளுக்காக பெத்தவா செய்யறதெல்லாம் கஷ்டமா என்ன?  கடன் வாங்கி கல்யாணம் பண்ணாதவா யார் சொல்லு?  வெங்கடாஜலபதியே குபேரன் கிட்ட கடன் வாங்கிட்டு இன்னும் வட்டி கட்டறாராமே!  வசதி படச்சவா அடகு வெச்சு கல்யாணத்துக்கு கடன் வாங்குவா.  நம்ம மாதிரி இல்லாத பட்டவா அன்ப வெச்சு கடன் வாங்கறோம்.  அவ்வளவு தான'.

'பாலாஜிய ஒன்னோட சேர்த்து வைக்கணும்னு நான் ஆசப் பட்டதே தெரிஞ்ச பையன், நல்ல பையன், உறவா இருக்கறதால ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுப்பேள், நான் உங்க ரெண்டுபேர் பத்தி கவலப்பட்டுண்ணு இருக்க  வேண்டாம் இல்லையா?  அதான்.'

'அம்மா, உன்ன விட்டு நான் மெட்ராஸெல்லாம் போக மாட்டேன்.'

'நன்னா இருக்குடி நீ பேசறது.  அப்புறம் பாலாஜி என்ன அத்தைனு பார்க்காம கொன்னே போட்டுடுவான்.  கல்யாணம் பண்ணிண்டு கொஞ்ச வருஷம் குடும்பம் நடத்து.  மாமா மாமி கிட்ட நல்ல பேர் எடுத்துண்டிரு.  நல்ல வேலையா மெட்ராஸ்ல தேடிக்கோ.  நானும் இங்க இருக்கிற பிக்கல் புடுங்கல் எல்லாம் முடிஞ்சோண்ண மெட்ராஸுக்கு வந்துடறேன்.  அதுக்குள்ள இரண்டு வால்கள பெத்துட மாட்டே.'

'அதான பார்த்தேன்.  பேரக் குழந்தைகளுக்காகத் தான அங்க வரப்போறையா?'

'பின்ன, உங்களுக்காக யார் வரப்போறா?  பேரப் பசங்கள மூக்கு சிந்தி விட்டு, ட்ரெஸ் பண்ணி, ஸ்கூலுக்கு கொண்டு விட்டு, பக்ஷணம் பண்ணி கொடுத்து அதுங்களுக்கு....'

'அம்மா, முடியல.... நீ அதுங்களுக்கு சிக்ஷுஸ பண்றதுக்கு இங்கேயே இருக்கலாம்.  ரெஸ்டாவது கிடைக்கும்.'

'கீதா, உன்னோட பேசிண்டே நேரம் போனதே தெரியல.  சந்தானம் சாராத்துல நாளைக்கு ஸ்ரார்தம்னு சொன்னா.  டைம் கேட்டுண்டு ஓடி வந்துடறேன்.  சித்த ஆத்த பாத்துக்கோ.'

'அப்ப என்னோட பூவனூருக்கு வரப் போறதில்லையா?'

'இல்லடி, உன் கல்யாணம் வரைக்குமாவது அடிக்கடி அங்க நான் வரக்கூடாது.  என்ன தான் அண்ணா மன்னியானாலும், மன்னிக்கு நான் நாத்தனார்னு ஒண்ணு இருக்குல்யோ?  காரணம் இல்லாம ஏதாவது நாக்கு தடிச்சு வரன பாதிச்சுடக் கூடாது என்னால.'

சீதா வாத்தியாராத்துக்கு கிளம்பியவுடன் யாருமில்லா வீட்டில் கண்ணில் அடக்கி வைத்திருந்த குற்றாலத்தை ஒட்டு மொத்தமாக திறந்து விடுகிறாள்.

தன் நிலையை கீதா மீண்டும் பெறுவதற்கும் சீதா திரும்ப வருவதற்கும் சரியாக இருக்கிறது.

மோர் சாதம் மாவடுகளோடு பார்ட் டூ பேச்சுகள் தொடர்ந்து இரவு ஒரு மணி வரை ஓடுகிறது.

என்ன பேசியிருப்பார்கள் அப்படி ?  வேறு என்ன? வயலும் வாழ்வில் துவங்கி, ஜானா காதலில் இடைவெளி கொடுத்து, தாசில்தார் மஹாலிங்கத்தின் குழப்பம் வரை.

'கீதா, மாமா சொன்னதை தான் நானும் சொல்றேன்.  அவாளா உன்ன கூப்டாத வரைக்கும் ஜானா விஷயத்துல தலையிடாதே.  நமக்கே ஆயிரத்தெட்டு மண்டைல ஓடிண்டு இருக்கு.  எல்லாம் அவாவாளுக்கு தெரியும் பிரச்சனைய எப்படி தீர்க்கறதுன்னு.  நம்மளால சித்த வருத்தப்படலாம் அவாளுக்காக.  இல்லாட்டி பகவான் கிட்ட பிரார்த்தித்துக்கலாம்.'

தொடரும்.....

No comments:

Post a Comment