என்ஜினியரான என் தம்பி கட்டிக் கொண்டிருக்கும் சிறிய அபார்ட்மென்ட் ஒன்று , முடியும் தருவாயில் இருந்தது.
அந்தக் கட்டிடத்தின் மின் இணைப்புகளை கவனித்துக் கொண்ட பாலகிருஷ்ணன் என்பவர் , ஒருவாரம் வேலை செய்வதும் அப்புறம் வாரம் பத்து நாட்கள் காணாமல் போய்விடுவதுமாக இருந்தார். ஒவ்வொரு முறையும் அவரை வீடு தேடிச் சென்று அழைத்து வருவார் தம்பி.
இம்முறையும் இரண்டு வாரமாக பணிக்கு வராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார். அவரால் மற்ற வேலைகளும் தொடராமல் பாதியிலேயே நின்றிருந்தது.
அன்று தம்பி என்னிடம், "பாலகிருஷ்ணனுக்கு போன் போட்டிருக்கிறேன். வீட்டுக்குப் போய் அவரைக் கூட்டி வந்து சைட்ல விட்டுட்டு வாங்க " என்று கார் சாவியைக் கொடுத்தார்.
"தொடர்ச்சியா இருந்து வேலை பார்க்கிற எலக்ட்ரீசியனே உங்களுக்கு கிடைக்கலயா ... இவரை ஏன் போட்டு தொங்கணும் தம்பி" என்றேன்.
"இவரு நம்ம ஊர் பக்கம்தான். ரொம்ப டேலன்ட்டா வேலை பார்ப்பாரு. நல்ல உழைப்பாளிதான். குடிதான் அவரைக் கெடுக்குது. திறமை இருக்கிற இடத்துல கொஞ்சம் திமிரும் இருக்கத்தான் செய்யும். நாமதான் பொறுமையா போகணும் "
"சரி தம்பி" என்று காரைக் கிளப்பி அவர் வீட்டுக்கு சென்ற போது காலை எட்டு மணி. தயாராக நின்றவரை அழைத்துக் கொண்டு வரும் போது கேட்டேன். "டிபன் பண்ணிட்டீங்களா "
"இல்லை. போற வழில டீயும் வடையும் சாப்பிட்டாப் போதும் "
"அதுக்கு டிபனே பண்ணிரலாமே"
"எனக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போயிரும். சாப்பிட முடியாது."
"பார்த்தா சின்ன வயசா இருக்கீங்க. அப்படி என்ன பிரச்சினை உடம்புல" என்று கேட்ட போதே டீக்கடை வந்திருந்தது. காரை நிறுத்தி இரண்டு டீ சொல்லிவிட்டு இரண்டு உளுந்துவடை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்.
சாப்பிட்டுக் கொண்டே பேசினார். "நான் கொஞ்சம் குடிப்பேன். அதுதான் உடம்பு கெட்டு விட்டது."
"தம்பி சொன்னார். திறமையான தொழில்காரர் நீங்கள் . குடித்துக் குடித்தே கெட்டு விட்டீர்கள் என்று . அதை ஏன் விடக் கூடாது "
"முன்னாலெல்லாம் இந்த அளவு இல்லை. சமீபமாகத்தான் அதிகமாகி விட்டது "
"உங்களுக்கு எத்தனை குழந்தைகள்"
"ஆணொன்னு பொன்னொன்னு. ஆனா என் பொண்ணு ரெண்டு வருசம் முன்னால ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டா. அதை மறக்கத்தான் நான் அதிகமா குடிக்கிறேன்"
"ஓஹோ ... " என்று சொல்லி டீ வடைக்கு காசைக் கொடுத்து விட்டு காரில் அம்ர்ந்து கிளம்பினோம்.
"குடிக்கிறவங்க யாருமே ஆசைப்பட்டு குடிக்கிறேனு ஒத்துக்கிறதில்ல. அதுக்கு ஒரு காரணத்தை தேடிப் பிடிச்சு சொல்லிர்றாங்க"
அமைதியாக என்னைப் பார்த்தார்.
"எப்படி சொல்றேன்னு பாக்குறீங்களா? நான் குடிக்க மாட்டேன் , ஆனா சிகரெட் பிடிப்பேன். யார் யாரோ சொல்லிப் பார்த்தும் நான் விடல. கேட்டா, மன அமைதிக்காக புகை பிடிக்கிறேன்னு சொல்வேன். என்னை அறியாமலே நான் அடிமை ஆகி இருக்கேன். சிகரெட் கையில இல்லாத சூழ்நிலைகள்ல முகம் தெரியாதவர்ட்ட கூட ஒரு பீடி குடேன்னு பிச்சை கேட்டிருக்கேன் "
என் பார்வை சாலையில் கவனமாய் இருக்க, அவர் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
"குடிச்சு அழியுறது அந்த ஒரு நபரோட போனா பிரச்சினை இல்ல. ஆனா எந்த தப்பும் செய்யாத அவங்க குடும்பம் பாதிக்கிறது பாவமில்லையா ... " என்று அவரைப் பார்த்தேன்.
"ஆமாங்க " என்றார் சங்கோஜமாக.
"மகள் இறந்த துக்கத்தை குடிச்சுதான் மறக்கணுமா ... ஏன் உங்க குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்து, பையனை உயர் படிப்பு படிக்க வைத்து, பெண் பிள்ளையின் ஞாபகமாய் ஏழைகளுக்கு முடிந்த அளவு செலவு செய்தால் நிம்மதி கிடைக்காதா "
"உண்மைதான் சார். கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறதை நிறுத்துறேன்"
"கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் விட முடியாது. மனசுல உறுதி இல்லாதவங்கதான் அப்படி சொல்வாங்க. ஆனா விடமாட்டாங்க. இப்பவே விட்ருங்கனு சொல்ல எனக்கு எந்த அருகதையும் இல்ல. ஏன்னா நானும் இன்னும் புகை பிடிச்சுட்டுதான் இருக்கேன்"
"நீங்களும் விட்ருங்க சார்"
"ரெண்டு பேருமே விடணும்னா ஒரு போட்டி வைப்போம். இந்த நிமிசத்திலிருந்து நீங்க குடியையும் நான் புகையையும் விடணும். யார் ஜெயிக்கிறாங்கனு பார்ப்போம் " என்றபடி என் சிகரெட் பாக்கெட்டை காருக்கு வெளியே விட்டெரிந்தேன்.
"ரெண்டு பேருமே ஜெயிப்போம் சார்" என்ற பாலகிருஷ்ணனின் முகத்தில் ஒரு ஒளி வீச்சு தெரிந்தது.
அவரை சைட்டில் இறக்கி விட்டு, "வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். மாறக் கூடாது" என்றேன்.
"நீங்களும் மாறி விடாதீர்கள் சார்"
"இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. தினமும் சைட்டுக்கு வரும் போதெல்லாம் கவனித்தேன். என்ன ஆச்சரியம் ... அவர் குடிப்பதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. அதைவிடப் பெரிய ஆச்சரியம் ... நானும் புகைப்பதை அடியோடு நிறுத்தி இருந்தது. யாரெல்லாமோ சொல்லிப் பார்த்தும் நிறுத்த முடியாத புகைப்பழக்கம் பாலகிருஷ்ணனின் நேர்மைக்கு முன் தோற்றுப் போயிருந்தது.
ஒருநாள் தம்பி கேட்டார் , "கவனிச்சீங்களா ... பாலா இப்ப குடிக்கிற மாதிரியே தெரியல. எப்படியோ திருந்திட்டாரு. இப்படியே இருந்தார்னா அவர் குடும்பம் நல்லா இருக்கும் " என்றார் சந்தோசமாக.
"எனக்கும் சந்தோசம்தான் தம்பி " என்றேன், என்னையும் சேர்த்து திருத்திய பாலகிருஷ்ணனை நன்றியோடு நினைத்தபடி !!
No comments:
Post a Comment