Sunday, December 19, 2021

உறவுபோட்டமுடிச்சு_79

உறவுபோட்டமுடிச்சு_79

மாமாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றங்கள் தென்படத் துவங்கின.  அவருடைய விடாமுயற்சியும் கண்ணும் கருத்துமாக பணிவிடைகளை கவனித்துக் கொண்டு வரும் ஞானத்தின் அக்கறைகளும் அவரை மீட்டெடுத்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை.  அஃப் கோர்ஸ், மனரீதியாக அவருக்கு தெம்பைக் கொடுத்துக் கொண்டு தன் விளையாட்டுத் தனத்தாலும் குறும்புகளாலும் பொய்க் கோபங்களாலும் அன்பான சொற்களாலும் மாமாவின் வீடு முழுவதுமே தன்னை நிரப்பிக் கொண்ட கீதாவும் காரணம் தானே.

'கீதா, தீபாவளிக்கு பாலாஜி வர முடியாதுன்னு எழுதியிருக்கானே.  ஏதோ மறுநாள் பரீட்சை இருக்குங்கறான் வேற.  பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம்னு இந்த காலம் ஓடிண்டிருக்கு.  ஞானம் ரொம்ப ஒடிஞ்சு போயிடா கடுதாசிய படிச்சு காமிச்சதுலேந்து.'

'மாமி ஓன்னு அழுதேபுட்டா என் கிட்ட சொல்லி.  பாலாஜிக்கு பிடிச்ச அசோகா பண்ணலாம்னு நெனச்சிண்டுருந்தாளாம்.   சொல்லி சொல்லி விசும்பி விசும்பி அழுதா.  என்ன பண்றது மாமா?  மேற்படிப்புன்னா சும்மாவா?'

'நீயும் மன்னார்குடிக்கு போகனுங்கற . ஏதோ பழசு பட்ட போட்டுண்டு ஏதோ எங்காத்துலேயும் கங்கா ஸ்நானம் ஆச்சுன்னு சொல்லிக்க வேண்டியது தான் போல இருக்கு.  சின்னஞ் சிறுசுங்களோடு பண்டிகை கொண்டாட எல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும்.  அதுவரைக்கும் எங்களுக்கும் தெம்பு இருக்கணுமே.  வயசாக வயசாக தான் இதெல்லாம் வேணும் வேணும்னு மனசு கேட்க ஆரம்பிக்கறது.  இத்தன நேரம் ஒரு வேலைல பாலாஜி சேர்ந்திருந்தான்னா இன்னிக்கு எட்டு நாளும் அவனுக்கு தல தீபாவளியா பண்ணியிருப்பேன்.  படிக்கணும்னு பிடிவாதமா இருந்துட்டான்.'

'அதான.  இந்த அத்த மகள கூட சட்டை பண்ணலையே மாமா.  ரொம்ப மோசம் உங்க புள்ள.'

'ஏதேது எங்கள விட உன் பாடு இந்த தீபாவளி கஷ்டமா இருக்கும் போல இருக்கே கீதா.  சரி, நாம ரெண்டு பேருமே பாலாஜி வரலயேன்னு வருத்தமா இருக்கோமோன்னோ?  நீ என்ன பண்ற, இன்னிக்கோ நாளைக்கோ நோரா மன்னார்குடிக்கு போற.  இந்த ரெண்டு கிழவாளுக்கு துணிமணிய எடுக்கற.  மத்தாப்பெல்லாம் வாங்கிக்கற.  உங்க அம்மா கிழத்தையும் கூட்டிண்டு பூவனூர் வர.  இங்க நன்னா கொண்டாடுவோம்.  தீபாவளி முடிஞ்சோன்ன பாலாஜிய வெறுப்பேத்தி லெட்டர் போடுவோம்.  அழட்டும்.'

'ஐடியா நன்னா இருக்கு மாமா.  ஆனா பாலாஜி பாவம்.  லெட்டர் மாத்திரம் வேண்டாம்.  அவன் தனியா இருக்கான்.  புழியப் புழிய அழுவான் மெட்ராஸ்ல.'

பின்னாலிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஞானம் பெரிதாக சிரிக்கிறாள்.

'அன்னா, நம்மாத்துக்கு மாட்டுப் பொண்ணா வரப் போறவ கீதா .  பணங் காசு கொஞ்சம் கூட கொடுத்து அனுப்புங்கோ.  பட்டுப்புடவையா வாங்கிக் கட்டும்.  எனக்கு சின்னாளம்பட்டி புடவ போதும்.  சீதா தீபாவளி அன்னிக்கு புதுசு போடமாட்டா.  இருந்தாலும் அவளுக்கும் நல்ல புடவையா எடுக்க சொல்லுங்கோ.'

'மாமி, எனக்கு உங்க புள்ள தான் பட்டுப் புடவை முதல் முதல்ல எடுத்து தரணும்னு மனசுல வெச்சிண்டிருக்கேன்.  அதனால நானும் இந்த தடவ சாதாரணமாத் தான் எடுத்துப்பேன்.'

'அதுக்கு இன்னும் மூணு வருஷம் இருக்கே.  புடிவாதம் புடிக்காத. சொன்னா கேளு. எங்களுக்கு எங்க மாட்டுப் பொண் பட்டுப்புடவ கட்டிண்டு எங்களோட தீபாவளி கொண்டாடணும்னு ஆசையா இருக்கு.  சொல்றத கேளு.'

மாட்டேன் என்று பிடிவாதமாக மறுக்கிறாள்.

'ஞானம், வற்புறுத்தாத அவள.  அவளுக்கு எது ப்ரியமோ அத வாங்கிண்டு வரட்டும்.  உன்னோட அளவு ரவிக்கையையும் கொடுத்து அனுப்பு.  தெச்சிண்டே வந்துட்டும்.'

'பார்த்தியா கீதா, உங்க மாமாவுக்கு அளவு ரவிக்க அது இதுன்னு பொம்மனாட்டி சமாச்சாரங்கள் கூட தெரியறது.'

சிறிது நேரத்தில் பாலாஜி தீபாவளிக்கு வரவில்லையே என்று தேக்கி வைத்திருந்த வருத்தம் பஞ்சாய் பறந்து விட்டது இருவருக்கும் கீதாவின் கலகலப்பான பேச்சுக்களால்.

மன்னார்குடிக்கு வருகிறாள் கீதா.  அம்மாவோடு அரட்டை.

'அம்மா இங்க பார்.'

'ஏதுடி இவ்வளவு பணம்?  மாமா கொடுத்தாரா?'

'எஸ்.  மாமா, மாமி, எனக்கு, உனக்கு எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்துண்டு நாளைக்கே பூவனூர் வர சொன்னா.  பாலாஜி தீபாவளிக்கு வரலைனு லெட்டர் போட்டுட்டதால நாம அங்க போய் பூவனூர்ல கொண்டாடப்போறோம்.'

'ஏண்டி, துணி மணிக்கெல்லாம் போய் காசு வாங்கிண்டு வருவாளா மாமாகிட்டேந்து.'

'என் வருங்கால மாமனார் மாமியார் ஆசையா கொடுத்தா.  நான் வேலைக்கு போனோன்ன நான் அவாளுக்கு வாங்கி கொடுப்பேன்.  எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.'

'இப்படி உனக்கு பூவனூர் பைத்தியம் பிடிக்க வேண்டாம்.  மன்னார்குடியையே மறந்துட்ட.  அம்மா கூட வேண்டாம் இப்பல்லாம் உனக்கு.'

'எனக்கு உன்னோட மன்னார்குடியில கொண்டாடணும்னு தான் ஆசை.  ஆனா அவா ரெண்டு பேர பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு.'

'ஏன்?  என்ன பார்த்தா அப்படி தோணலையாக்கும்?'

'நீ ஸ்பெஷல்.  நீ மன்னார்குடி ஜான்ஸி ராணி.  தைரியமா எந்த சிச்சுவேஷனையும் சமாளிப்ப.  ஆனா அவா இப்படி இல்லையே.'

'உனக்கு இப்பவே அவா இவ்வளவு உரிமை கொடுத்துண்டு வர்றது ரொம்ப பயமா இருக்கு கீதா எனக்கு. த்ருஷ்டி படாம அவாத்துக்கு நீ நல்ல படியா போகனுமேன்னு வயத்த ஒரு பக்கம் பிசஞ்சிண்டுதான் இருக்கேன்.  நீ புரிஞ்சுப் பேன்னு நெனச்சுதான் இத உன் கிட்ட சொல்றேன்.'

'அம்மா, கவலப் படாத.  எனக்கென்னவோ அவா ரெண்டு பேரும் தீர்மானம் பண்ணி அவாளுக்குள்ள பேசிண்டதுக்கப்பறம் தான் என் கிட்ட கேட்டுட்டு உன் கிட்ட சொல்லியிருப்பா.'

'அதெல்லாம் சரிதான்.  மண மேடைல உட்காரப் போற பையன அவா கேட்டுட்டதா சொல்லலையே?  அதான்.  அவன் வேற மெட்ராஸ்ல சுத்திண்டு இருக்கான்.  அங்க அவனுக்கு யாரையாவது பிடிச்சுப் போய் அப்பா அம்மா கிட்ட வந்து கேட்டா அவாளோட புள்ள பாசம் தான பெரிசா இருக்கும் அவாளுக்கு?'

சீதா இப்படி கேட்டவுடன் கீதாவின் மனதில் செங்கிப்பட்டி சிரிப்பு.

'அம்மா, பயப்படாதம்மா. உன் வாலுப் பையனும் இந்த க்ளியோபாத்ராவ கல்யாணம் பண்ணிக்க ஆர்வமா இருக்கான்.'

'என்னடி சொல்ற?  நெஜமாவா?  நீ கேட்டியா அவன் கேட்டானா?  இதெல்லாம் எப்ப?'

'அம்மா, நான் சொன்னா நம்பணும்.  எல்லாத்தையும் உன் கிட்ட படம் போட்டு காமிக்க முடியாது.  நான் உண்மையத் தான் சொல்றேன்.'

'உண்மையா இருந்தா நல்லது.  கேட்டகவே சந்தோஷமா இருக்கு. நான் வேற மன்னார்குடில முக்கியமானவா கிட்ட தம்பட்டம் அடிச்சுட்டோமே பாலாஜி மனசு தெரியாமன்னு பயந்துண்டு தான் இத்தனை நாள் இருந்தேன்.'

'அம்மா, அப்பாவ தெரிஞ்சவா எல்லாரும் என் கிட்ட சொல்றது நான் அப்பா மாதிரி தைரியமா இருக்கேன்னு.  ஆனா எனக்கு அப்பாவ அவ்வளவா தெரியாது.  எனக்கு தைரியம்னு ஒண்ணு இருக்குன்னா அது நீ சாப்பாட்டோட சேர்ந்து ஊட்டுனது.  நம்ம வாழ்க்கை நன்னா இருக்கும்னு நம்பிக்கைய வெச்சிண்டு என்ன வளர்த்த.  அது வீண் போகாது.  இருந்தாலும் சாமுண்டி நம்ம வாழ்க்கைல வேற படம் ஓட்டிப் பாரிக்கணும்னு நெனைக்கறாளா?   நெனைக்கட்டும், அவ ஆசை தீர வதைக்கட்டுமே.  அதுக்காக நான் கோழையா இருப்பேன்னு கொஞ்சம் கூட கவலப் படாத.  கைகள என்னிக்கும் நம்பறவா அன்பைக் கூட பெரிசா நம்ப வேண்டாம்.  வண்டிய ஒட்டிடலாம்.'

'மன்னிச்சிக்கோடி என்னை.  ஏதோ சட்டுன்னு ஒரு பயம் வந்து வயத்த பெசஞ்சுதேன்னு கேட்டேன்.  நீ இவ்வளவு தைரியமா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கல.  இனிமே எனக்கு கிஞ்சித்தும் பயம் இல்ல.  வரவும் வராது.'

சொல்லி விட்டு கீதாவின் மடியில் தலையை சாய்க்கிறாள் சீதா.  எப்போதும் அம்மா மடிதான் ஆறுதலுக்கு என்பது விதியா என்ன?

கண்களிலேயே சிந்தாத கண்ணீர் சிந்தனைகளிலேயே வற்றி ஓய்ந்த பிறகு கீதாவின் மடியை விட்டு எழுந்து கொள்கிறாள்.

'அம்மா, கபிலா மாமியாத்து ஜமுனாவையும் சத்யாவையும் கூட்டிண்டு சாயந்திரம் லக்ஷ்மி ஸில்க்ஸ் போகணும்.  மாமிக்கும் எனக்கும் ப்ளவுஸ் தைக்க ஜமுனா கிட்டேயே கொடுத்து வாங்கி எடுத்துண்டு போகனும் பூவனூருக்கு.  அவ தான் பிரமாதமா தைப்பாளே.'

'சரி, போயிட்டு வா.  நானும் ரெண்டு மூணு பக்ஷண ஆர்டருக்கு சாமான் வாங்கனும்.'

'அம்மா, அப்ப என்னோட நாளைக்கு பூவனூர் வரலையா?'

'நீ போ ட்ரெஸ்ஸெல்லாம் எடுத்துண்டு முதல்ல.  நான் முதல் நாள் எப்படியாவது வந்து சேர்ந்துடறேன்.  மாமி கிட்ட அங்க எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லு.  நான் எடுத்துண்டு வரேன்.'

'அசோகாவும் மறக்காம பண்ணி எடுத்துண்டு வா.'

'பாலாஜி வரலைன்னு சொன்னியே?'

'உனக்கும் தெரியுமா பாலாஜிக்கு  அசோகான்னா உசுருன்னு.  ஏன்?  நானெல்லாம் உனக்கு மனுஷியா தெரியலையாக்கும்.  பாலாஜிக்கு பிடிக்கறதெல்லாம் எங்களுக்கும் பிடிக்கும்.'

சந்தேக ரேகை மறைந்து சந்தேஷ ரேகை சீதாவின் முகத்தில்.

தொடரும்...

No comments:

Post a Comment