Saturday, December 25, 2021

திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −10

திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −10

"அம்மணி... இப்படியெல்லாம் எண்ணி எண்ணி வருத்தப்படறயே!..

உனக்கு இதுக்கு முன்னாடி பகவானுக்கும் ஆசார்யனுக்கும் கைங்கர்யம் பண்றதுக்குச் சந்தர்ப்பமே வாய்க்கலையோ?.." என்று ஆதரத்தோடு திருவல்லிக்கேணி அம்மையாரைப் பார்த்து மாமுனிகள் வினவவும்,

ஒருகணம் அவ்வம்மையார் திகைத்தவள்போல் நின்றாள்..

பின்னர், தன்னைச் சுதாரித்துக் கொண்டு,

"ஸ்வாமி... சந்தர்ப்பம் வந்தா மட்டும் போறுமா?..

கைங்கர்யம் பண்ணணும்னு ஒரு திடமான ஸங்கல்பம் அடியேன் கிட்ட இல்லயே!..

நேத்து வரைக்கும் ஸம்ஸாரத்தக் காரணம் காட்டிதானே, கைங்கர்ய ப்ராப்திய ஒதறினேன்!.

அடியேன் என்ன,

#கோல் வேண்டாமென்றெனோ நஞ்சீயரைப் போலே?..# 

என்ற கேள்வியைக் கேட்டு, அதற்கான தன் விளக்கத்தையும், வழக்கம்போல் தொடர்ந்தாள்..

பராசர பட்டரோட சிஷ்யர் நஞ்சீயர், தன்னோட ஆசார்யர் மேல ரொம்ப ப்ரீதியும் பக்தியும் உடையவர்..

அவர் ஆசார்ய கைங்கர்யங்கள ரொம்பவும் ஆசையோட செய்வார்..

ஒரு சமயம் பட்டர், ரொம்பவும் களைச்சுப் போய், நஞ்சீயரோட மடியில தலைய வெச்சு, அப்படியே உறங்கியும் போயிட்டாராம்!..

ஆசார்யர் கண்விழிக்கறதுக்குச் சில மணி நேரங்கள் ஆயிருக்கு!..

அதுவரையிலும் நஞ்சீயர், தன்னோட தொடையக் கொஞ்சம்கூட அசைக்கலையாம்!..

அப்படியே சிலை மாதிரி உட்கார்ந்திருந்தவர், ஆசார்யர் கண்விழிச்சு எழுந்தப்பறம்தான், தன்னோட உடலையே அசைச்சாராம்!.

அவ்ளோ ஆசார்ய அபிமானமாம் அவருக்கு!..

இன்னொரு சமயம், பட்டர் கோயில்ல கைசிக புராணம் வாசிச்சாராம்..

அப்போ அவருக்குப் பரிவட்ட மரியாதை எல்லாம் கொடுத்துக் கௌரவிச்சு, கோயில்ல  பல்லக்கும் கொடுத்துத் திருப்பி அனுப்பி வெச்சாளாம்!..

அந்தப் பல்லக்கச் சொமந்துண்டு வந்த ஶ்ரீபாதம் தாங்கிகள் கிட்ட, நஞ்சீயர் தனக்கும் அந்தப் பல்லக்கத் தூக்கற பாக்யத்த தரணும்னு பிரார்த்திச்சாராம்..

அதுக்கு அந்த ஶ்ரீபாதம்தாங்கிகள்,

"ஜீயரே!..ஒங்களோட ஸந்யாச தர்மத்துக்கு இது சேராது.. நீர் தள்ளி இரும்"னு சொல்லி, அவர ஒதுக்கினாளாம்..

உடனே நஞ்ஜியர்,

"அடியேனோட ஆசார்ய கைங்கர்யத்துக்கு அடியேனோட சந்யாஸ தர்மமும் இந்தத் திரிதண்டமும்தான் தடையாயிருக்கும்னா, அது ரெண்டுமே அடியேனுக்கு வேண்டாம்.."னு சொல்லி, தன்னோட கைக்கோல (திரிதண்டம்) முறிச்சுப்போடவே துணிஞ்சாராம்!..

பல்லக்குல ஒக்காந்துண்டு இந்தக் காட்சியப் பார்த்துண்டிருந்த பட்டர், நஞ்ஜீயரோட ஆசார்ய அபிமானத்தப் பார்த்து நெகிழ்ந்து போயிட்டாராம்!..

அப்படி நஞ்ஜீயர் மாதிரி, தன்னோட தர்மத்த விட, ஆசார்ய  கைங்கர்யம்தான் ப்ரதானம்னு இருந்தவா நடுவுல, அடியேன போல ஒருத்தியும் இருக்கேனே!...

அடியேனுக்கெல்லாம் ஆசார்ய கைங்கர்யத்துலயும் சரி, பகவானோட கைங்கர்யத்துலேயும் சரி... அப்படி எல்லாம் ஒரு ஈடுபாடு என்னிக்குமே இருந்ததில்லயே ஸ்வாமி...

அடியேன் என்னோட ஸ்த்ரீ தர்மத்தயும், ஸம்ஸாரத்தையும் காரணம் காட்டிதானே, இந்தமாதிரி ஸத்விஷயங்கள்லேந்து இதுவரையிலும் ஒதுங்கி இருந்தேன்.."

.....சொல்லிக் கொண்டே வந்தவளின் கண்கள், அவளறியாது கலங்கின..

(வளரும்..)



No comments:

Post a Comment