(ஶ்ரீமுக்கூர் ஸ்வாமியின் உபன்யாஸத் துளிகள்..)(பகுதி −4..)
"உத்தமனைப் பாடி" என்று சொல்லாமல், "உத்தமன் பேர் பாடி" என்கிறாள் ஆண்டாள்..
இங்கே ஆண்டாள் நாம ஸங்கீர்த்தனத்தைக் குறிப்பிடுகிறாள்..
அப்படி அதில் என்ன விசேஷம்?..
பகவானைக் காட்டிலும், அவன் திருநாமம் உயர்ந்தது..
"பகவான் என்பவன் கட்டிப் பொன் போலே..
அவன் திருநாமம் ஆபரணப் பொன் போலே.." என்கிறார்கள் பெரியோர்..
தங்கத்தைக் கட்டியாக வைத்திருந்தால் அதை அணிய முடியுமா?..
அதுவே ஆபரணமாக இருந்தால் அதை உடனே எடுத்துப் போட்டுக் கொள்ளலாம்...
பகவான் என்பவன் கட்டிப் பொன் போலே..
அவனை சுலபமாக எடுத்தாள முடியாது..
அவனைப் பார்த்திருக்கிறோமா?..
அப்படியே அவன் நம்மைத் தேடிக் கொண்டு வந்துவிட்டாலும், அவனை எங்கே உட்கார வைப்பது?..
அவனுக்கு எப்படி உபசாரம் பண்ணுவது?..
இதுவே... அவனுடைய திருநாமங்களானால், நம்மால் சுலபமாகச் சொல்ல முடியும்..
ஆபரணத்தை இவர்தான் போட்டுக் கொள்ளலாம், அவர் போட்டுக் கொள்ளக் கூடாது என்று உண்டோ?..
யார் வேணுமானாலும் போட்டுக் கொள்ளலாம் இல்லையா?..
....அதே மாதிரி பகவன் நாமாவை யாருமே சொல்லலாம்!..
"பகவானுடைய சஹஸ்ரநாமங்களைச் சுலபமாகச் சொல்லக்கூடிய வழி எது?.." என்று பார்வதி கேட்கவும், ஈஸ்வரன்,
"ராம..ராம..ராம.." என்று மூன்று முறை சொன்னாலே ஸஹஸ்ரநாமம் சொன்னதற்குச் சமம் என்கிறார்..
ஏன் அப்படி?..
ஸர்வத்தையும் கொடுக்கக்கூடியது "ராம" நாமம்..
"ரா" என்று சொல்ல வாய் திறந்தால், உள்ளே இருக்கும் பாபம் வெளியே போகிறது..
"ம்" என்று சொல்லி வாயை மூடிக் கொண்டால், வெளியே போன பாபம் உள்ளே வராது..
"ராம்" என்று சொன்னால் பாபத்தை வெளியே தள்ளி புண்ணியத்தைச் சேர்க்கும்.. அப்படிப்பட்ட திவ்யமான நாமா அது!..
அதனாலேயே நம்மாழ்வாரும்,
"கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?.." என்கிறார்!
மூலமந்திரமான திருமந்திரத்தைக் காட்டிலும் உயர்ந்தது "ராம" நாமம்..
பின் முளைத்த கொம்பு, முன் முளைத்த காதைக் காட்டிலும் பெரிதாகிவிட்டதைப் போல், ராம நாமா மூலமந்திரத்தைக் காட்டிலும் உயர்ந்தது..
காது முதலில் முளைக்கிறது.. கொம்பு பிறகு முளைக்கிறது..
ஆனால் குப்பி போட்டு, வர்ணம் தீட்டி அலங்காரம் எல்லாம் கொம்புக்கு நடக்கிறது..
அதைப் போன்று, மூல மந்திரத்துக்குப் பின்பு தோன்றிய ராம நாமத்திற்குப் பெருமை அதிகம்..
மூல மந்திரத்தைச் சொல்ல நியமங்கள் உண்டு..
ராம நாமம் அப்படி அல்ல!..
அதை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்..
ஆக, பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும்!.. அவ்வளவே!!
முறை தவறிச் சொன்னாலும் பலன் ஏற்பட்டு விடும்..
ஒருவர் "ஶ்ரீக்ருஷ்ணாய நம:" என்று கற்றுக் கொடுத்தார்..
ஆனால் கற்பவருக்கு "க"காரம் வராது..
"த" என்றுதான் வரும்..
அதனால் "க்ரு" என்பதற்கு பதில் "த்ரு" என்று சொன்னார்..
ஆசார்யர் எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும், இவருக்கு "க்ரு" வரவில்லை..
கோபம் வந்து ஆசார்யர் அடிக்கிற அளவிற்குப் போய்விட்டார்..
அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஒரு மஹா வித்வான், "ஏன் அவரை அடிக்கணும்?..
அவர் சொல்வதும் சரிதானே!.." என்றார்..
ஆசார்யர் "க்ருஷ்ணா என்பதற்குப் பதில், த்ருஷ்ணா என்று சொன்னால் எப்படிச் சரியாகும்?.." என்றார்..
"நீர் சொல்வதையே இவரும் சொல்கிறார்.
"ஶ்ரீ க்ருஷ்ணாய நம:" என்றால் பகவானைக் குறிக்கும்.
"ஶ்ரீ" என்றால் மஹாலக்ஷ்மி;
த்ருஷ்ணாய நம: என்றால் "லக்ஷ்மியினிடத்தில் ஆசையுள்ளவனின் பொருட்டு.." என்று அர்த்தம்..
லக்ஷ்மியினிடத்தில் பரமாத்மா அளவு கடந்த ப்ரீதியை உடையவன்தானே!..
அதனால், "ஶ்ரீ த்ருஷ்ணாய நம:" என்பதும், பகவானையே குறிக்கிறது.. அதில் ஒன்றும் தோஷம் இல்லை.." என்றார்..
ஒருவர் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் படிக்கும் போது, "வாசுதேவோ மரப்ரபு:" என்று படித்தார்..
பரமாத்மா மரங்களுக்கெல்லாம் ப்ரபு என்று தனக்குத் தானே தீர்மானம் பண்ணிக்கொண்டு, ஊர்கோடியிலிருந்த ப்ரம்மாண்டமான அரச மரத்தை, "வாஸுதேவோ மரப்ரபு:" என்று சொல்லிக்கொண்டே நூற்றெட்டு ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு வந்தார்..
தற்செயலாக அதைக் கேட்ட வித்வான் ஒருவர், "வாஸுதேவோ அமரப்ரபு:" என்றுதான் சொல்ல வேண்டும்..
"அமர ப்ரபு:" என்றால் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று அர்த்தம் என்று சொல்லிக் கொடுத்தார்..
"தெரியாது ஸ்வாமி.. இனிமேல் சரியாகச் சொல்கிறேன்" என்றவர்,
"வாஸுதேவோ அமரப்ரபு:" என்று சொல்ல ஆரம்பித்து, திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டார்..
மரத்தை ப்ரதக்ஷிணம் செய்வதை நிறுத்தி விட்டார்..
இப்பொழுது, "மரப்ரபு:" என்பது தவறானால், பகவான் மரங்களுக்கெல்லாம் ப்ரபு இல்லை என்று தீர்மானம் பண்ணிவிட்டார்..
இவரைத் திருத்திய வித்வானின் ஸ்வப்பனத்தில், பரமாத்மா தோன்றி,
"உம்மை யார் ஸம்ஸ்க்ருதம் படிக்கச் சொன்னது?.." அவர் தினமும் அஸ்வத்த வ்ருக்ஷத்தை ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டிருந்ததைக் கெடுத்து விட்டீரே!..
மரப்ரபு என்று அவர் சொன்னதில் என்ன தப்பு?..
நான் மரங்களுக்கெல்லாம் ப்ரபு இல்லையா?..
"வ்ருக்ஷங்களில், நான் அஸ்வத்த வ்ருக்ஷமாக இருக்கிறேன்.." என்று நான் பகவத்கீதையில் சொன்னதை மறந்தீரோ?..அவரைப் பழையபடியே "மரப்ரபு" என்று சொல்லச் சொல்லும்.." என்றான்..
மறுநாள் வித்வான் அவரிடம், "நீர் மரப்ரபு" என்று சொல்வதில்தான் பகவானுக்கு விருப்பமாம்.. அதனால் நீர் அப்படியே சொல்லும்" என்று சொன்னார்..
....அப்படி, தெரியாமல் சொன்னதுக்கும் பலன் கொடுக்கிறேன் என்கிறான் பகவான்..
சின்னக் குழந்தை மழலையில் பேசுகிறது.. அதில் தாய்க்கு எவ்வளவு ஆனந்தம்!..
அதேபோல், பகவானுடைய குழந்தைகளான நாம் தவறுதலாக உச்சாடணம் பண்ணினாலும், பகவான் அதை போக்யமாக ஏற்றுக் கொள்கிறான்..
அதற்காக, நன்றாகப் படித்துத் தெரிந்து கொண்ட பிறகும், தவறாகச் சொல்லக் கூடாது..
தெரியாமல் தவறாகச் சொல்லிவிட்டால் பகவான் தண்டிப்பானோ என்று பயப்படத் தேவையில்லை..
தெரிந்தோ, தெரியாமலோ, எப்படியானாலும் சரி...
....உயர்ந்தவனான பகவானின் நாமத்தைச் சொன்னால் மட்டும் போதும்.. பகவான் பலன் கொடுப்பான்...என்கிறது வேதம்..
அதையே ஆண்டாளும், "உத்தமன் பேர் பாடி"என்கிறாள்..
(வளரும்..)
இது முக்கூர் ஸ்வாமியின் அனுபவம்...
முக்கூர் ஸ்வாமி, திருமலை ஸ்வாமி புஷ்கரிணியில் தீர்த்தமாடிக் கொண்டிருந்தாராம்..
அப்பொழுது அவர் அருகே ஒருவர், "கோஹிந்தா!..
கோஹிந்தா!.." என்று சொல்லிக் கொண்டே ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்தாராம்!
முக்கூர் ஸ்வாமி,"அப்பனே!.. "கோஹிந்தா" இல்லப்பா!..
"கோவிந்தா"னு சொல்லணும்.."னு சொல்லி, அவனைத் திருத்த எண்ணினாராம்..
அதற்குள் அந்த நபர், "அப்பனே கோஹிந்தா!.. போன வருஷம் ஒன்னோட சந்நிதிக்கு வந்தேன்.. வருஷம் பூராவும் நல்லபடியா போச்சு..
இந்த வருஷமும் அடியேன் வந்துருக்கேன்..
போனவருஷம் மாதிரியே இந்த வருஷமும் நல்லபடியா போக நீதான் அனுக்ரஹிக்கணும்.."னு வாய்விட்டுச் சொன்னாராம்..
உடனே முக்கூர் ஸ்வாமிகள்,"போன முறை வந்திருந்த போதும், இவர் "கோஹிந்தா!.." என்று சொல்லித்தானே பெருமாளைச் சேவித்திருப்பார்!.. அதைக் கேட்டு, பெருமாள் இவருக்கு அனுக்ரஹம் செய்திருக்கிறானே!..
அப்படி பகவானே இவருடைய "கோஹிந்தா"வுக்கு அனுக்ரஹம் பண்ணும்போது, நாம்யார் இவரைத் திருத்த?."என்று தமது எண்ணத்தையே கைவிட்டாராம்!..
No comments:
Post a Comment