Sunday, December 19, 2021

உறவுபோட்டமுடிச்சு_76

உறவுபோட்டமுடிச்சு_76

ஒவ்வொரு நாளும் மனது அந்த நாளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தது கீதாவுக்கு மட்டுமே தெரியும்.  வரப் போகும் நாற்று நடும் பணிகள் துவக்கத்திற்கு முன்னர் பேச்சியிடம் தினமும் பேசிப் பேசி அவளுக்கு ஆசை தீர்ந்த பாடில்லை.

'எத்தன பேர் வேலை செய்வாங்க?'

'அவ்வளவு பேரா?  நம்மூர்ல அத்தனை ஜனம் இருக்கா?'

கீதாவின் ஒவ்வொரு கேள்வியும் பேச்சிக்கு சிரிப்பு.  பேச்சியின் ஒவ்வொரு பதிலும் கீதாவுக்கு ஆச்சரியம்.  விதைகள் தெளிக்கப் பட்டதிலிருந்தே இது தான் ஓடிக்கொண்டிருக்கிறது நாள் தவறாமல்.  நாற்று நடும்போது இவர்கள் பாடும் பாடல்களை நோட்டில் குறித்துக் கொண்டு போவாள்.  தானாகவே அவற்றிற்கு ட்யூன் போடுவாள்.  பிறகு மாற்றிப் பார்ப்பாள்.

பித்தளைத் தூக்கில் பேச்சி இவளுக்காக கொண்டு வரும் பழைய சோறும் கூழும் பச்சை மிளகாயும் கோடௌனில் வைத்து விடுவாள்.  பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வப்போது அங்கு சென்று ருசி பார்த்து விட்டு வந்து கீதா பேச்சை தொடர்வாள்.

'கீதா புள்ள, இப்படித்தான் சின்ன அய்யரு எங்க வூட்டுக்கு வந்து கூழு குடிச்சிட்டு போவும்.  நாங்க யாரும் யார் கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு சத்தியமெல்லாம் வாங்கிக்கும்.'

'என் கிட்ட இப்ப சொல்லிட்டியே சத்தியத்த மீறி.'

'அடி போப்புள்ள, நீயும் தம்பியும் வேற வேறயா என்ன?  தம்பியத்தான கட்டிக்கப் போறீய?'

'யார் சொன்னது? உங்க ஊர் அய்யர எனக்கு பிடிக்காதே.'

'சும்மா கதவுடாதிய.  உன் மனசு முழுக்க மாமன் மவன் மீன் பிடிச்சிகிட்டு இருக்கான்.  எனக்கு  தெரியாதா என்ன?  கண்ணாலம் கட்டிக்காம இந்த பூவனூர தாண்டி போயிட முடியுமா?  வுட்டுடுவோமா உன்ன ?  நீ வேணா பாரு, பெரிய அய்யரு சாகுபடி முடிஞ்சு பரிசம் போட ஏற்பாடு பண்றாரா இல்லையா பாரு.'

'பார்க்கலாம்'.  

கிட்டத்தட்ட ஒவ்வென்றும் ஒரு அடிக்கு வளர்ந்த நெற்செடிகளை நாற்றுகளாக கட்டி பிறகு நன்கு பதப்படுத்தப்பட்டு உழுத அறுபது ஏக்கர் நிலத்திலும் இடைவெளிகள் விட்டு நடவேண்டும்.  வேலை செய்யும் ஒவ்வொரு விவசாயியும் ஒரு அக்ரிகல்ச்சர் இன்ஞினியர்தான்.  ஒவ்வொரு நாளும் இவர்களிடமிருந்து கீதா எவ்வளவு கற்றுக் கொண்டிருக்கிறாள். அவர்களும் தங்கள் வீட்டுப் பெண் போல இவளை நினைத்து எவ்வளவு பாசம் காட்டியிருக்கிறார்கள்.

செடிகளை எடுத்து கட்டுவதற்காக நிலத்தில் இறங்கும் அந்த நாள் வந்துவிட்டது.  மாமா மாமியை வயலுக்கு அழைத்து வர அப்புவிடம் சொல்லிவிட்டு சூரிய உதயம் ஆனவுடனேயே கீதா கிளம்பி விட்டாள்.

சிவலிங்கத்தோடு ஏற்பாடுகள் பற்றிய பேச்சுகள் வயல் வரப்புகள் முழுவதும் நடந்து கொண்டே.

'போதும் புள்ள.  அதான் முப்பது பேர் எறங்காரவுள?  பேச்சி டாண்ணு ஏழு மணிக்கு அவுகள அழச்சிட்டு வந்துடும்.  பதினஞ்சு பேருகட்ட பதினஞ்சு பேரு நட.  அவங்களுக்குள்ள மாத்திப்பாவ வேலைக்கு தக்க.'

'நான் இறங்கணும்.'

'பிடிவாதமா இருக்கியே தங்கச்சி. அன்னிக்கு அய்யர் என்னைய சத்தம் போட்டாரு.  பதினஞ்சு நிமிஷம் தான் அய்யரு சொல்லியிருக்காவ.  அப்புறம் என்னிய மாட்டி உட்டுடாத தாயி அவர் கிட்ட.  போட்டோ எடுக்க முதலியார் அய்யாவும் வருவாங்களாம்.  ஏதோ ஆசைக்கு எறங்கு.  பச்ச புள்ள மாதிரி அடம்புடிக்கிறியே கீதா இப்படி.'

ஏழு மணி வாக்கில் பேச்சியோடு ஜே ஜே என்று மற்ற பெண்களும் வந்து விட்டார்கள்.  கொண்டு வந்த பித்தளை தூக்குகளையும் சம்படங்களையும் ஒயர் கூடைகளாயும் மஞ்சள் பைகளையும் ஷெட்டில் வைக்கிறார்கள்.  அதில் மூன்று பேர்கள் அவர்களுடைய கைக் குழந்தைகளுக்கு தூளி கட்ட கிளைகளைத் தேடுகிறார்கள்.

கைக் குழந்தைகள் ஒரு புறம் இருக்க அம்மாக்களின் பின்னால் ஒட்டிக் கொண்டே கீதாவை வித்யாசமாக பார்த்துக் கொண்டே செல்லும் நடக்கும் குழந்தைகள் மூன்று.

'அவுக வரலியா?'  'ராக்காயி எப்ப வரும்?'  'முத்தரசிய கூப்படல'

எல்லா குசலங்களும் விசாரிப்புகளும் அவர்களுக்குள் முடிந்து வரிசையாக நின்று கொண்டு சூர்ய பகவான் இருக்கும் இடத்தை நோக்கி கும்பிடுகள் போட்டு விட்டு வழக்கம் போல சிறு பூஜையை முடித்துவிட்டு களம் இறங்குகிறார்கள்.

வரப்பை ஒட்டி பேச்சி நிற்க தன் பக்கத்திலேயே வரப்பின் மேல் கீதாவை நிற்க சொல்கிறாள்.

'நல்லா பார்த்துக்கோ தாயி.  அப்புறம் நான் சொன்னப்பறம் இறங்கலாம் என்ன?'

'பேச்சி, கவனமா இருக்கணும் கீதா புள்ள இறங்கும்போது.'  சிவலிங்கம் இது.

எக்ஸைட்மெண்ட்.  கீதாவின் மனம் முழுவதும் ஆனந்த மத்தாப்புகள்.  அலை பாய்கின்றன அவள் கண்கள் எல்லோரும் எவ்வளவு லாவகமாக நெற்செடிகளை பிடுங்கி குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் அடுக்கி கட்டுகிறார்கள்.  கட்டுகளின் எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பேச்சி சீதாவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு புடவையோடு பாவாடையையும் சற்று மேலே தூக்கிக் கொண்டு இறங்கிவிட்டாள் நிலத்தில்.  ஆரம்பத்தில் தடுமாற்றம் சேற்றில் கால் வைத்த போது.  சுதாரித்துக் கொண்டு பேச்சியின் பயிற்சியில் 'இது சரியா இருக்கா? இது பரவாயில்லையா?'  கேட்டுக் கேட்டு ஒரு கட்டு பறித்தாகி விட்டது.  பரம சந்தோஷம்.

அப்புவோடு மாமா மாமி வந்தாச்சு.  ஷெட்டில் ஏற்கனவே கீதா வைத்திருந்த இரண்டு சேர்கள் வந்தவுடன் உட்கார்கிறார்கள்.

'மாமா, மாமி.... இங்க பாருங்கோளேன்.  நான் பறிச்சது, நானே கட்டினது.'

சொல்லிக் கொண்டே அவர்களை நோக்கி வேகமாக வருகிறாள்.

அவர்களிடத்தும் எல்லையில்லா பெருமிதம் இவளின் குழந்தைத் தனத்தையும் வெகுளித்தனத்தையும் பார்த்து.

'கீதா, அதுக்குள்ள பாரு, ட்ரெஸ்ஸெல்லாம் எவ்வளவு சேறு?  போதும்.  ஆசைக்கு இறங்கியாச்சு.  அப்பறம் நாத்து நடும்போது இறங்கு சித்த நாழி.  இதுக்குதான நாங்க ரெடியாகறதுக்குள்ள வயலுக்கு ஓடி வந்த?'

மாமா இப்படி சொன்னவுடன் வெட்கத்துடன் ஒரு குறும்பு சிரிப்பு கீதாவிடமிருந்து.  மாமியின் கையை கீதா வேகமாக இழுத்துக் கொண்டு போகிறாள் வயலுக்கருகில்.

சபேசய்யரைப் பார்த்தவுடன் சிவலிங்கம் ஓடி வந்து பத்தடி தள்ளி நின்று கொண்டு பேசுகிறான்.

'என்ன சிவலிங்கம்?  நாத்து நன்னா வளர்ந்துருக்கே.  அடர்த்தியாவும் இருக்கே.  நான் இல்லேன்னா தான் வேல ஒழுங்கா நடக்கும் போல இருக்கு.'

அசட்டுச் சிரிப்பு சிவலிங்கத்திடமிருந்து.

'கீதா மேல கவனம் இருக்கட்டும்.  சிறுபுள்ளத்தனம் ரொம்ப ஜாஸ்தி அவளுக்கு.'

'பார்த்துக்கறேன் ஜயா.  நானும் பேச்சியும் சொல்லிகிட்டேதான் இருக்கோம்.  கீதா ரொம்ப நல்ல பொண்ணு அய்யா.  நம்ம தம்பிக்கு...'

'நீ என்ன சொல்ல வரேன்னு புரியறது. மனசுல இருக்கு. கல்யாணி அம்மனும் மனசு வைக்கணும் சீக்கிரம் நடக்க.  சரி, நீ போய் வேலைய கவனி.  நான் சித்த நாழி உட்காந்துட்டு கிளம்பறேன்.'

கற்றுக் கொண்ட ஒரு நாட்டுப்புற நடவுப் பாடலை உரக்க பாடுகிறாள்.  அவளைத் தொடர்ந்து பேச்சியும் அவள் சகிகளும்.

முதலியாரும் அப்போது கேமராவோடு வந்து கீதாவை நாற்றுக் கட்டோடும், நடுவது போல பாவனையாகவும் படங்களை எடுத்துத் தள்ளுகிறார்.  வயலில் வேலை செய்பவர்களுடனும் அவளை நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்து தள்ளுகிறார்.

பிறகு மாமா மாமியோடு முதலியார் பேசிவிட்டு அவர்களோடு கிளம்புகிறார்.

வேலியில்லாத காற்றுக்கு இணையாக கீதாவின் எல்லையில்லா சந்தோஷம் அன்று பசுமையோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.

பசுமை சேர்ந்தால் இனிமையும் ஒட்டிக் கொண்டு விடாதா என்ன?  சட்டென்று பாலாஜியின் நினைவு.

'பாலாஜி லீவ் போட்டு வந்திருக்கலாம்.'

'இன்னிக்கு ஆத்துக்கு போகறதுக்கு முன்னாடி போஸ்ட் ஆஃபீஸ் போய் கவர் வாங்கிண்டு போகனும்.  இங்க நடந்ததெல்லாம் பாலாஜிக்கு எழுதணும்.  அட, மறந்தே போயிட்டேனே.  பாலாஜி, உங்க அம்மாவே 'நீ தான் என் மாட்டுப் பொண்ணுன்னு சொல்லிட்டா தெரியுமா?'  அன்னிக்கு நானும் மாமாவும் மாமிய எப்படி அழவிட்டோம் தெரியுமா?  பாவம் என் வருங்கால மாமியார்னு உண்மைய சொல்லிட்டோம்.'

'எல்லாத்தையும் எழுதணும்னா நாப்பது பக்க நோட்டு கூட பத்தாது பாலாஜி.  அதனால முக்கியமானது மட்டும் என்ன?'

'நேத்திக்கு நான் மருதாணி இட்டுண்டேன்.  ஐயோ பாவம் உன்னால பார்க்க முடியாதே?'

'தீபாவளிக்கு வருவியோன்னோ?  அம்மா தனியா இருப்பாளே.  அதனால நான் மன்னார்குடிக்கு போயிடுவேன் தீபாவளிக்கு.'

நினைக்க நினைக்க எண்ணங்கள் ஊற்றாய் வருகிறது கீதாவுக்கு.  இனி அவை வடிவம் பெற வேண்டும் எழுத்துக்களாய் மனச் சித்திரங்களாய் ரகசிய ஸ்பரிஸங்களோடு.

கடிதம் எழுதும் போது பாலாஜி தெரியவேண்டும்.  படிக்கும் போது கீதா கண்ணுக்குள் வரவேண்டும்.

'சிவலிங்கம், பேப்பர் பேனா இருக்கு உன் கிட்ட?'

'ஷெட்டுல நோட்டு இருக்கு.  அதுலேந்து கிழிச்சிக்கோ.  பேனா அங்கேயே இருக்கும்.  ஏன்  புள்ள?  கணக்கு எழுதணுமா?'

'கடுதாசி எழுதணும்.  இங்கேயே மரத்தடியில உக்காந்து எழுதலாமான்னு பார்க்கறேன்.'

'எழுது தங்கச்சி.  உன்னோட இன்னிக்கு சந்தோசத்தெல்லாம் எழுது புள்ள.  படிச்ச உடனே தம்பி ரயில் ஏறணும்.'

'ஏய் சிவலிங்கம்.  லெட்டர் எழுதணும்னு தான் சொன்னேன். உங்க சின்னய்யருக்கு ஒண்ணும் இல்ல.  அவருக்கு நான் எதுக்கு எழுதணும்?'

சிவலிங்கம் சிரித்துக் கொண்டே ஷெட்டுக்கு சென்று அந்த பெரிய லெட்ஜர் நோட்டையும் பேனாவையும் எடுத்து வந்து கீதாவிடம் கொடுத்து விட்டு வயலை கவனிக்க சென்று விடுகிறான்.

'ஆமாம்.  இந்த லெட்டருக்கு பிள்ளையார் சுழியும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி துணையும் போடணுமா என்ன?  பக்தி மனசுல இருந்தா போதாது?'

தொடரும்.....

No comments:

Post a Comment