உறவுபோட்டமுடிச்சு_99
By பாஸ்கர் சத்யா
நிச்சயதார்த்த நிகழ்ச்சி நிரலை சடகோப முதலியாரோடு கலந்து பேசி திட்டமிட்டு விட்டே அழைப்புக் கடிதங்களை எழுதத் துவங்கினார் சபேஸய்யர்.
12 - 2 - 1967 ஞாயிற்றுக் கிழமை.
காலை 8.00 to 9.30 : ஸ்ரீ கல்யாணி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம்.
10.00 to 11.30 : நிச்சயதார்த்தம் (கல்யாணி அம்மன் சந்நிதிக்கு எதிரிலேயே). இரு காரணங்களுக்காக தன் ஆத்தில் வைத்துக் கொள்ளவில்லை. முதல் கல்யாணி அம்மனின் திவிர பக்தர் அவர் என்பது தான் நமக்கு தெரியுமே. அம்பாளின் முன் தன் குடும்பம் உறுதிமொழி பெண் வீட்டாருக்கு கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இரண்டாவது, வீடு முழுவதும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.
நிச்சயதார்தத்தை தொடர்ந்து அவரது ஆத்மார்த்த நண்பர் வடுவூர் ராமசாமி அய்யரின் ஆன்மீக சொற்பொழிவை அம்பாள் சந்நிதி முன் நிகழ்த்தலாம் என்று நினைத்து ஒப்புதல் கேட்டு அவருக்கு தனிக் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். ஒப்புதல் பெறப் பட்டவுடன் அனைவருக்கும் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தார்.
மாலை: 6.00 to 7.00 : பெரியகோவில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவிக்கு அபிஷேகம் அவங்காரம், மற்றும் ஸ்ரீ சதுரங்க வல்லப நாதர், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ கற்பகவல்லி சந்நிதிகளில் அர்ச்சனைகள்.
மாலை ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை ராயப்பன்சாவடி முத்தையா குழுவினரின் கரகாட்டம் பெரிய கோவில் கோபுரத்திற்கு முன்பு. அதைத் தொடர்ந்து அதே இடத்தில் பிரத்யேக மேடையில் பிரபல விற்பன்னர் சுப்பு அவர்களின் வில்லுப்பாட்டு.
அதைத் தொடர்ந்து செங்குளம் அருகே வாணவேடிக்கைகள் சுமார் அரை மணி நேரத்துக்கு. பெரிய கோவிலிருந்து அக்ரஹாரத்தில் மாப்பிள்ளை மேள தாளங்களோடு தன் அகம் வரும் வரை ஐம்பது மீட்டருக்கு ஒரு ஸீரியல் மத்தாப்புச் சரங்களும் தீர்மானிக்கப்பட்டது.
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முதலில் சபேஸ்யர் விருப்பம் தரவில்லை சடகோபனிடம்.
'இல்ல சபேசா. ஆறு மாசமா ஏதாவது ஒரு நிலத்துல நம்ம ஊர் குடியானவங்க நேரம் காலம் பார்க்காம உழச்சிகிட்டு வராங்க. இந்த ஊர்ல அவங்களுக்குன்னு எந்த பொழுது போக்குக்கும் வழி இல்லையே. பாலாஜி கல்யாணத்த சாக்கு வெச்சு ஏதாவது இப்படி செஞ்சா அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க இல்லையா? பண சிரமமா உனக்கு தோணிச்சுதுன்னா நானும் வேணா இந்த செலவுகள்ல கலந்துக்கறேன்.'
'நான் ஏன் தயங்கறேன்னா சடகோபா, வெவரம் கெட்ட பசங்க பீடி,சிகரட்ட பிடிச்சிட்டு கோவில் முன்னாடி போட்டுடுவாங்க.'
'இதான. நான் பார்த்துக்கறேன். எந்தந்த பயலுவ புகவண்டின்னு எனக்கு நல்லா தெரியும். அந்த பயலுகள கூப்டு கண்டிப்பா சொல்லிடறேன். வேணும்னா, செங்குளத்துக்கு அப்பால போய் படிச்சிட்டு வரட்டும்.'
'அப்புறம் ராமசாமி அய்யரு கத சொல்லப் போறதா சொன்னியே சபேசா? அத பெரிய கோவில்ல வெச்சிக்கலாமே டா.'
'என்னோட தூரத்து உறவு வேற அவர். எப்படியும் ஃபங்ஷனுக்கு கூப்பிடணும் அவர. அவர் ஒத்துண்டா கல்யாணி கோவில்லயே கத சொல்லட்டும். அக்ரஹாரத்து ஜனங்களுக்கும் ஏத்தா மாதிரி ஏதாவது வேண்டாமா? சாயந்திரம் சாயந்திரம் அவர் ரொம்ப பிஸி. ஏதாவது ஊர்ல ஏதாவது கதாகாலக்ஷேபத்துக்கு கூப்டுகிட்டே இருப்பாங்க அவர.'
காலை சிற்றுண்டி மதியம் மற்றும் இரவு சாப்பாடு ஏற்பாடுகள்:
சீதாரமய்யராத்தில் அக்ரஹார வாசிகள் மற்றும் ஊர் பெரிய மனிதர்கள் குடும்பங்களுக்கும்; மன்னார்குடியிலிருந்து வரும் பெண் வீட்டாருக்கு அக்ரஹாராத்தில் உள்ள சுந்தர ராமய்யர் ஆத்திலும்; வயலில் வேலை செய்யும் பூவனூர் தொழிலாளிகள் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு பெரிய கோவில் பிரகாரங்களிலும்.
நிச்சயதார்த்தம் முடியும் வரை பெண் வீடு சுந்தர ராமய்யர் அகம் என்றும் தீர்மானிக்கப் பட்டது.
தவிர மாப்பிள்ளை அகத்திலிருந்து கல்யாணி அம்மன் கோவில் வரை உள்ள சுமார் இருநூறு மீட்டருக்கும், மாப்பிள்ளை அகத்திலிருந்து சுந்தரராம வாத்தியார் வீடு வரை (எதிர்திசை) யில் சுமார் ஐம்பது மீட்டர் அக்ரஹார சாலையில் அலங்கார பந்தல் அமைப்பது என்பதையும் முடிவு செய்திருந்தார். அதேபோல கல்யாணி அம்மன் பிரகாரங்களிலும் கீத்துப் பந்தல் போட தீர்மானித்தார்கள் இருவரும்.
முதல் நாள் இரவிலிருந்து கேட்டரிங் வேலை மன்னார்குடி வேணு மாமா குழுவினரிடம் கொடுக்கவும் தீர்மானிக்கப் பட்டது. சமையல் வேலைகளை எஸ்.பி. கோபாலய்யராத்துக்கு பின்புறம் கோட்டை அடுப்புகள் உருவாக்கி நடத்துவது என்றும் முடிவெடுக்கப் பட்டது.
பாலத்தடி அருகே நிச்சயதார்தத்துக்கு வரும் வயது முதிர்ந்த விருந்தாளிகளின் செளகர்யங்களா உத்தேசித்து ஞாயிறு காலை ஆறு மணி முதல் பத்து மணி முதல் வில் வண்டிகள் ஸர்வீஸுக்கும் ஏற்பாடுகள் தீர்மானிக்கப்பட்டது.
ஏற்பாடு விவரங்கள் எல்லாவற்றையும் தனி பேப்பரில் ஒரு முறை எழுதி பிரதிகளை பாலாஜியின் நண்பர்களை வைத்து எழுத வைத்து அதனையும் கடிதத்துடன் இணைத்து அனுப்ப ஏற்பாடுகள் தயாராகி கொண்டிருந்தன.
கீதா அவ்வப்போது கொண்டு வரும் வயற்புற செய்திகள் சபேஸய்யருக்கும் ஞானத்திற்கும் அபரிமிதமான ஆச்சர்யங்களையும் சந்தோஷங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தன.
சுருக்கமாக, கீதா கவனித்துக் கொண்டிருந்த விளைச்சலில் சென்ற முறையை விட ஒன்றரை மடங்கு லாபம் உறுதியாக கிடைக்கும் என்பதே அவர்களின் சந்தோஷங்களுக்கு காரணம்.
'எல்லாம் என் மாட்டுப் பொண் கைராசி ஆக்கும்.'
'நீங்க இல்லாம, இவ்வளவு தூரம் கீதாவ தவிர வேறு யாரும் பார்த்துக்க முடியாது. கட்டிச் சமத்துன்னா கீதா.'
'சின்ன பொண்ணு தலையில இவ்வளவு பொறுப்ப கொடுக்கறேளேன்னு பயமா இருந்துது நேக்கு. ராட்சசி எல்லாத்தையும் தவிடு பொடியாக்கிட்டாளே.'
'கல்யாணத்த சீதா எப்படி வேணா நடத்தட்டும். நாம பண்ற நிச்சயதார்த்தம் கொழந்தைகள் மனசுல எப்போதும் நெலச்சு நிக்கற மாதிரி பண்ணுங்கோன்னா. பணம் காசெல்லாம் பார்க்க வேண்டாம்.'
'பொம்மனாட்டிகள் ட்ரெஸ்ஸுக்கு நீங்க ஒண்ணும் கடைக்கு போக வேண்டாம். நானும் கீதாவும் திருபுவனம் போய் எடுத்துப்போம். சொல்லிட்டேன் இப்பவே. வேணும்னா, ஆம்பளைகள் லிஸ்டும் கொடுங்கோ. போனாப் போறது, உங்களுக்கும் வாங்கிண்டு வரோம்.'
'கீதாவுக்கு நன்னா காத்ரமா காசுமாலையே போட்டுடலாம் நிச்சயதார்தத்துக்கு. பாலாஜிக்கு ரெண்டு பவுன்ல மோதரமும் ரெண்டு புவுன்ல ப்ரேஸ்லட்டும் போடணும். பணமெல்லாம் ரெடியா வெச்சிக்கோங்கோ, என்ன. மறந்துட்டேன், பாலாஜிக்கு மைனர் செயினையும் சேர்த்துக்கோங்கோ.'
'கார்த்தால நிச்சயதார்த்ததுக்கு பட்டு வேஷ்டி ஜிப்பா சாயந்தரத்துக்கு கோட்டு சூட்டு பாலாஜிக்கு. அவனுக்கு மணி ஆர்டர் அனுப்பிச்சு அவனையே அந்த வாங்கி, தெச்சு எடுத்துண்டு வர சொல்லுங்கோ. பணத்த தாராளமா அனுப்புங்கோ.'
'என்ன லாபம் கூட கெடச்சிருக்கோ அது எல்லாமே பாலாஜிக்கும் கீதாக்கும் தான். சொல்லிட்டேன்.'
ஞானம் போகும்போதும் வரும்போதும் நினைத்து நினைத்து ஒவ்வொன்றாக சொல்லி விட்டு போவதைக் கேட்டு சிரிக்கிறார் சபேஸய்யர்.
'இங்க வா ஞானம். இப்படி உட்கார். எனக்கு பட்டாமணி உத்யோகமும் கிடையாது சம்பளமும் கிடையாது தெரியுமோன்னோ? இந்த தடவ வெள்ளாமல கெடச்சத வெச்சுதான் பாலாஜிக்கு நல்ல வேலை கிடைக்கற வரைக்கும் மெட்ராஸ்ல புள்ளையாண்டான் சாப்பிடணும், படிக்கணும். நாமும் இங்க சாப்பிடணும். ஏற்கனவே சடகோபன் சாமர்த்தியமா பேசி என்ன நிறைய செலவுகள்ல அகலக் காலுல இறக்கி விட்டுட்டான். நீ சொல்லிட்டியோன்னோ எல்லாத்தையும்? நானே முக்கியமானத செய்யறேன். வருத்தப்படாத உனக்கு பட்டுப் புடவை உண்டு கண்டிப்பா.'
'நான் தப்பு பண்ணிட்டேன். உங்க கிட்ட நேரா சொல்லாம சடகோபன் மூலமா சொல்லியிருக்கணும். ஒத்துண்டிருப்பேள்.'
'கவலைப் படாத ஞானம். நிச்சயதார்த்தம் போது கொஞ்சமா கல்யாணத்தும்போது கொஞ்சமா கொழந்தைகளுக்கு நிறைய செஞ்சுடலாம். உனக்கு என்னன்ன தோணறதோ குறிச்சிண்டு வா. கண்டிப்பா செஞ்சு கொடுத்துடறேன்.'
ஞானத்தின் எதிர்பார்ப்புகளோடு நம் எதிர்பார்ப்புகளும் நிச்சயதார்த்தத்தை நோக்கி நகரட்டும்.
தொடரும்....
No comments:
Post a Comment