உறவுபோட்டமுடிச்சு_83
தீபாவளிக்கு மறுநாள் மதியம் சுமார் இரண்டு மணி இருக்கும். அக்ரஹார தெருவில் ஒரு பெரும் கூட்டமாக சிலர் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
தற்செயலாக இதைப் பார்த்த அக்ரஹார வாசிகள் சிலர் உற்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். வந்து கொண்டிருந்தவர்கள் வேறு யாரும் இல்லை. சபேஸய்யரின் தமக்கைகள் குடும்பத்தினர்கள்தான்.
எப்போதும் அமைதியாக ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அக்ரஹார தெருவில் கூட்டமாக பேசிக்கொண்டு சிலர் வருவது அங்கு வசிப்பவர்களுக்கு ஆச்சரியம் தரும் விஷயம் தானே? அவர்களின் வந்து கொண்டிருப்பதை வைத்த கண் வாங்காமல் அவரவர் வீடுகளை அவர்கள் கடக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை அடையாளம் கண்டு சிரித்து விட்டு உள்ளே சென்றவர்கள் சிலர். குசலம் விசாரித்துவிட்டு பிறகு தொடர வைத்தவர்களும் சிலர்.
வந்து கொண்டிருப்பவர்கள் வேறு யாரும் இல்லை.
சுசீலா, சிவாநந்தம், அவர்களின் குழந்தைகள் ரவி, ரவியின் மனைவி, கணேசன், மற்றும் சுபத்ரா.
அதேபோல பவானி, ராமநாதன், மற்றும் ஜானகி.
அவர்கள் சபேசய்யர் ஆத்துக்குள் நுழையும்போது பாலாஜி சந்தானத்தாத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் நண்பர்களுடன். சபேசய்யர் ஆஸ்வாசத்துடன் அமைதியாக படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார். ஞானமும் சீதாவும் சமையலுள்ளில் ஸ்வாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள். கீதாவோ பின்புறம் மாட்டுக் கொட்டகையில் கருப்பனுக்கும் ஸ்வர்ணத்திற்கும் தீனி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
ஏதோ பெரிதாக பலர் குரல்கள் வாலில் கேட்பதை உணர்ந்து சபேஸய்யர் கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொள்கிறார்.
'வாங்கோ... வாங்கோ....' வாயார வரவேற்பு வந்தவர்களுக்கு.
விஷயம் கேள்விப் பட்டு பாலாஜி வந்துவிடுகிறான். ஞானமும் சீதாவும் சமையலறையிலிருந்து வெளியே வருகிறார்கள்.
சிறிது நேரம் பரபரப்பு. ஒருவருக்கொருவர் கங்கா ஸ்நான விசாரிப்புகளில் துவங்கி இதர குசலங்களில் தொடர்கிறார்கள்.
'சித்தி, கீதா எங்க போயிருக்கா?'
பதில் கிடைத்தவுடன் ஜானா கொல்லைப்புறம் ஒடுகிறாள். சுபத்ராவும் அவளை பின் தொடர்கிறாள்.
'ஹலோ ஜானா. ஹாய் சுபத்ரா.. வாங்கோ வாங்கோ. எப்படி இருக்கேள்? ரவி கல்யாணத்துல பார்த்தது உன்ன சுபத்ரா. கல்யாணப் பொண்ணாட்டம் ஷோக்கா இருக்க இப்போ. ரெண்டு நிமிஷம் பொறுத்துக்கோங்கோ. வந்துட்டேன்.'
கையிலிருந்த சாணிப் பிசுக்கை அலம்பி விட்டு இடுப்பு வரை உசத்திக் கட்டிய பாவாடையை தளர்த்திவிட்டு ஈரக் கைகளை புடவைத் தலைப்பில் ஒத்தி துடைத்து விட்டு வழியும் வியர்வைக்கும் விடி மோட்சம் கொடுத்து விட்டு மீண்டும் அவர்களை வரவேற்கிறாள்.
பிறகு அவர்களிடம் கருப்பனையும் ஸ்வர்ணத்தையும் அறிமுகப் படுத்துகிறாள்.
'இந்த கருப்பன் இருக்கானே ரொம்ப பொல்லாதவன். எதுக்கும் தள்ளியே நில்லுங்கோ. முட்டிடப் போறான். ஸ்வர்ணத்து கிட்ட நான் போனாலே கண்ணுல கடுகு வெடிக்கும் இவனுக்கு. இப்பத்தான் கொஞ்ச நேரமா சமாதானமாகி சமத்தா இருக்கான்.'
'கீதா. இதையெல்லாம் நீதான் பார்த்துக்கறையா?'
'கிராமத்து வேலைகள்ல இதுவும் ஒண்ணு தான? உனக்கும் தான் தெரியுமே சுபத்ரா. வாங்கோ உள்ள போகலாம்.'
உள்ளே வந்து பெரியம்மா பெரியம்மாக்களை சிரித்த முகத்துடன் வரவேற்கிறாள். பிறகு ரவி, கணேசனை விசாரிக்கிறாள். ஹலோ மன்னி, ஹௌ ஆர் யூ? கல்யாணத்துல பார்த்தது. குட் நியூஸ் மாதிரி தெரியறதே?'
வெட்கத்துடன் ரவியின் மனைவி நெளிகிறாள்.
'அம்மா, இவாளுக்கெல்லாம் காஃபி.....?'
'பாலாஜி பால் வாங்கிண்டு வர போயிருக்கான். சித்த பொறுத்து பக்ஷணம் கொடுக்கறேன். நீ ஒன்னோடத்தவாளோடு பேசிண்டிரு. நான் இவாள கவனிச்சுக்கறேன்.'
'ரொம்ப த்தேங்க்ஸ் மா. எத்தனை நாளாச்சு சுபத்ராவையெல்லாம் பார்த்து. வாங்கோ, நாமல்லாம் திண்ணைல உட்கார்ந்து பேசிண்டிருக்கலாம்.'
ரவி, ரவியின் மனைவி மஞ்சு (கூப்பிடும் பெயர்), கணேஸன், சுபத்ரா, ஜானகி எல்லோரையும் அழைத்துக் கொண்டு வாசல் திண்ணைப் பக்கம் போகிறாள் கீதா. கல கலப்பான திண்ணைப் பேச்சுகளை துவக்குகிறாள். சந்தோஷப் பேச்சுகள் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்றன.
'மன்னி, நான் டிகாக்ஷன் போட்டுண்டிருக்கேன். நீங்க வந்தவாளோடு பேசிண்டிருங்கோ.'
தமக்கை தம்பதியினர்களின் பேச்சுகள் சபேஸய்யரின் உடல் நிலை விஷயங்களோடு ஆரம்பமாகிறது இருவரிடத்தும்.
'ஏதோ பொழச்சு வந்துட்டேன். பாலாஜியும் கீதாவும் என்ன யமன் கிட்ட சண்ட போட்டு அழச்சிண்டு வந்துட்டா.'
கீதா என்ற சொல்லை அவர் நுழைத்தது பவானி முகத்தில் எரிச்சலை கொடுத்திருக்க வேண்டும்.
'சபேசா, சீதாவும் கீதாவும் கெட்டிக்காரிகளாச்சே. நேரம் பார்த்து உதவிகள் செஞ்சா உன் உச்சியும் குளிர்ந்துடும்னு அவாளுக்கும் தெரியுமே. நீயும் யார் உனக்கு உதவி செஞ்சாலும் ஒண்ணுக்கு பத்தா திருப்பிடுவேன்னு சீதாவுக்கு நன்னாவே தெரியுமே. கஷ்டப்படறவா சுகப்படறவாள தண்ட கட்டிண்டு தான காலத்தை ஓட்டணும். என்ன சுசீலா, நான் சொல்றது சரிதான?'
சபேஸய்யர் அவருக்கு வந்த கோபத்தை முகத்தில் காட்டாமல் மனதுக்குள் சிரமப் பட்டு புதைத்துக் கொள்கிறார்.
பவானியின் பேச்சை திசை திருப்பும் விதமாக சுசீலா தன் ஆத்துக்காரர் பக்கம் திரும்பி, 'அன்னா, வந்த விஷயத்தை மறந்துடப் போறோம்.'
சுசீலா இப்படிச் சொன்னவுடன் ஏற்கனவே மனதோடு கணித்திருந்த சுபத்ராவிற்கு வந்த வரனைப் பற்றித்தான் இருக்கும் என்று யூகிக்கிறார் சபேஸயயர்.
கொஞ்சம் பீடிகையோடு ஆரம்பிக்கிறார் சிவானந்தம்.
'இன்னிக்கு கார்த்தால ராமநாதனாத்துக்கு வந்தோம். கங்கா ஸ்நானத்த விசாரிச்சிட்டு பூவனூர் போகப் போறதா சொன்னோம். அவாளும் உன்ன பார்க்கனும்னு என்னோடையே அவா கார்லியே கிளம்பிட்டா. ரெண்டு காரையும் கோவில் பக்கம் நிறுத்திட்டு அக்ரஹாரம் வரைக்கும் நடந்து வந்தோம்.'
'அதான் நானும் யோசிச்சேன். எப்படி ரெண்டு அத்திம்பேரும் சொல்லி வெச்சா மாதிரி ஒண்ணா வரேளேன்னு.'
'சபேஸா. என் பொண்ணு சுபத்ராவுக்கு ஒரு நல்ல வரன் வந்துருக்கு. அப்படியும் இப்படியும் பேசினதுல மாப்பிள்ளையாத்து மனுஷா ஒன்ன ரொம்ப தெரியும்னு சொன்னா.'
'அப்படியா? பேஏஏஏரு.... என்ன நன்னா தெரியும்னா சொன்னா?'
வரன் பற்றிய முழு விவரத்தையும் சிவானந்தய்யர் கூறுகிறார்.
'வர ஞாயித்துக் கிழம பொண் பார்க்க திருவேந்திபுரம் வரேன்னு சொல்லியிருந்தா. நல்ல வரன். அமஞ்சா நன்னா இருக்கும்.'
'அத்திம்பேர். எனக்கு சந்துருவ நன்னா தெரியும். வரன் தீர்மானமானதாவே நெனச்சுக்கோங்கோ. நீங்க சொன்ன தாசில்தாரும் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் தான்.'
'இந்த வரன்ல ஏதோ ஒரு குழப்பம் எப்படியோ வந்துடுத்து. அந்த தாசில்தார் ஏதோ குட்டையை கொழப்பிட்ட மாதிரி தெரியறது.'
'என்ன குழப்பம்? தீர்த்துட்டா போறது.'
'பிள்ளையாத்துல ஏதோ உன்னோட மருமாளான்னு தாசில்தார் கிட்ட விசாரிக்கப் போய் அவர் நம்ம கீதா தான் பொண்ணுன்னு கன்ஃப்யூஸ் பண்ணிண்டு தனக்கு நன்னா தெரியும்னு ஆஹா ஓஹோன்னு சொல்லப் போய் இப்ப புள்ளையத்துல கீதாவ மொதல்ல பார்க்கலாம்னு சொல்றாளாம். எங்களுக்கும் அவாளுக்கு இத எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னு தெரியாம முழிச்சிண்டு இருக்கோம்.'
'நீங்க ஒண்ணும் கவலப் படாதீங்கோ. நான் தாசில்தார் கிட்ட சொல்லிக்கறேன். கீதாவுக்கு வேற ஒரு பையனோட நிச்சயம் ஆயிடுத்துன்னு சொல்லிக்கலாம்.'
'என்ன சொல்ற சபேஸா? நிச்சயம் ஆயிடுத்துன்னு சொல்றதா? ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்றது தான். ஆனா இது சரிப்பட்டு வருமா? கீதாவும் உன் மருமா இல்லையா?'
'அத்திம்பேர். கீதா கிட்ட இப்படி சொல்லப் போரேன்னு சொல்லிட்டே தாசில்தார் கிட்ட சொல்லிடுவோம். ஒண்ணும் தப்பா நெனச்சிக்க மாட்டா.'
ஞானத்தை தவிர கேட்டுக் கொண்டிருந்த மற்ற நால்வருமே ஆச்சர்யமாக சபேஸய்யரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தொடரும்...
No comments:
Post a Comment