Sunday, December 19, 2021

உறவுபோட்டமுடிச்சு_72

உறவுபோட்டமுடிச்சு_72

கடலூர் திருவஹந்திபுரம் சிவானந்தையர் வீடு.  வாசல் திண்ணையில் சிவானந்தம் உட்கார்ந்திருக்க அவரை நோக்கி சேஷாத்ரி ஐயங்கார் வருகிறார்.

சேஷாத்ரி ஐயங்கார் பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்.  பல வருடங்களாக சிவா குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர்.

'என்ன ஓய்?  என்ன யோசன?  எதுவாயிருந்தாலும் கவலைய விடும்.  ஆத்து வாசலுக்கு மாப்பிள்ள வந்துட்டார்.  இனிமே பந்தி போடறது ஒண்ணு தான் பாக்கி.'

'புரியலயே சேஷா நீ சொல்றது.'

'இப்பத்தான் மெட்ராஸ்லேந்து வரேன்.  அக்கா வாத்துக்கு போயிருந்தேன்.  உம்ம பொண்ணு ஜாதகமும் ஃபோட்டோவும் அனுப்பிச்சோமே ஞாபகம் இருக்கோல்யோ? அத்த எங்க அக்கா அவளுக்கு தெரிஞ்சவா கிட்ட கொடுத்திருக்கா.  அவா மூலமா அருமையான வரன் அமஞ்சிருக்கு உன் பொண்ணு சுபத்ராவுக்கு.'

'பையன் யாரு?  எந்த ஊரு புள்ளையாத்துக்காரா?  என்ன பண்றான்?'

'என்ன பேச விடு.  சொல்றதுக்குள்ள அவசரம் காட்டினா எப்படி? மொதல்ல என்ன ஒக்கார சொன்னியா நீ?'

'சாரி சேஷா.  இங்கேயே பேசலாமா?  உள்ள போய் சௌகர்யமா உட்காந்து பேசலாமா?'

'மொதல்ல இங்கேயே ஆரம்பிக்கறேன்.  அப்பறமா உள்ள போய் சுசீலா மன்னி கிட்டேயும் சொல்லிட்டு சூடா ஒரு காப்பிய உள்ள தள்ளிட்டு கிளம்பறேன்.'

'சுசீஈஈஈஈலா?'  பெரிய குரலில் சிவா உள்ளுக்குள் தூது விடுகிறார்.

'சரி, மன்னியும் வரட்டும்னு சொல்றயாக்கும்.  அதுவும் நல்லது தான்.  எதுக்கு ரெண்டு தடவ சொல்லிண்டு?'

'என்னன்னா?  கூப்டேளா?'

'சேஷா வந்திருக்கான் பாரு. நம்ம சுபிக்கு ஏதோ நல்ல வரன் கொண்டு வந்திருக்கானாம்.  நீயும் வந்துடட்டும்னு பேச்ச நிறுத்தியிருக்கேன்.'

'சேஷா, எப்படி இருக்க?  நீ ஏதோ மெட்ராஸ்ல செல்லத்த பார்க்க போயிருக்கறதா உன் ஆத்துக் காரி உஜ்ஜி சொன்னாளே?'

செல்லம் என்பவள் சேஷாவின் அக்கா.  செங்கமலம் முழு பெயர்.  மெட்ராஸில் வசிப்பவள். உஜ்ஜி என்கிற உஜ்ஜிவனம் சேஷாவின் பாரியாள்.  சேஷாவுக்கும் உஜ்ஜிவனத்துக்கும் பூர்வீகம் திருமெய்யம்.

'செல்லத்துக்கு தெரிஞ்சவா என்ன பையனாத்துக்கே அழச்சிண்டு போனா. மந்தவெளியில அவா ஆம். பையன் பேரு சுந்தர ராமன்.  சுரேஷ்னு ஆத்துல கூப்படறா.  என்ஜினியர்.  அஷோக் லயலன்டுல ப்ரொடக்ஷன் மேனேஜர் உத்யோகம்.  நாலு டிஜிட்ல சம்பளம்.  சுபத்ராக்கும் அவனுக்கும் ஆறு வயசு வித்யாசம்.  பையனுக்கு அக்கா கல்யாணமாகி தில்லில இருக்கா.  மாப்பிள்ளைக்கு ஆகாஷவாணியில வேலை.  என்ன சிவா.  அசந்துட்டியா இதுக்கே.  இன்னும் சொல்லட்டுமா?'

'சொல்லு சொல்லு கேட்டுண்டுதான இருக்கேன்.'

'பூர்வீகம் திருவாரூர் பக்கத்துல செருவாமணி.  பேச்சு வாக்குல உங்க மச்சினர் சபேஸய்யர் பேர சொன்னோன்ன குஷியாயிட்டா பிள்ளையாத்துல.  பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் வேண்டாம், எப்ப தட்ட மாத்திக்கலாம்னு கேழ்க்க ஆரம்பிச்சுட்டா'

'என் மச்சினன எப்படி தெரியுமாம்?'

'மன்னார்குடி தாசில்தார் மஹாலிங்கய்யரும் இவாளும் தாயாதிக்காராளாம்.  அவர் மூலமாத்தான் சபேஸய்யர தெரியுமாம்.  உன் மச்சினர கொண்டாடிக்கறாளோ கொண்டாடிக்கறாளோ அப்படி கொண்டாடிக்கறா.'

'எங்காத்த பத்தி சொன்னியா அவா கிட்ட.'

'சொன்னேன்.  சொன்னேன்.  சொல்லாம இருப்பேனா?  உங்காத்த பத்தி சொன்னேன்.  உங்க சொத்து பத்து பத்தியும் சொன்னேன்.  கோச்சிக்க கூடாது என்ன.   அவா அதுக்கு என்ன சொன்னா தெரியுமா?  யாருக்கு வேணும் சொத்து பத்தெல்லாம்.  சபேஸய்யரோட மருமாள்.  அது ஒண்ணு போதும்னு சொல்லிட்டா.'

'சம்மந்திகள பத்தி விவரம் சொல்லவே இல்லையே?'

'பார்த்தியா உன் வாயிலியே சம்மந்தின்னு டக்குன்னு வந்துடுத்து பார்.  எனக்கும் பையன பார்த்தோன்னயே சுபத்ரா ஆத்துக்காரன் இவன்தான்னு சட்டுனு மனசுல விழுந்துடுத்து.'

சேஷா வரனைப் பத்தி பேசப் பேசு சிவா மனசு பூரா பிரார்த்தனைகள் நிறைந்து கொண்டே இருந்தது.  கிட்டத்தட்ட க்ஷேத்ராடனம் போகாத குறை.

'விஷயத்துக்கு வரேன்.  பையனுக்கு அப்பா சந்திரசேகரன். செக்ரடேரியட்டுல ஹோம் செக்ரடரியா இருந்து போன ஜனவரி மாசம் தான் ரிடையர் ஆனார்.  அத்தன மினிஸ்டர்ஸ் கிட்டேயும் நல்ல பேரு அவருக்கு.  இவர் ஆம் தேடி அவாள்லாம் வருவான்னா பார்த்துக்கோயேன்.  பையனோட அம்மா மஹாலக்ஷ்மி.  சுசீலா மன்னி மாதிரி ஆத்து நிர்வாகத்துல பொளந்து கட்டறா.'

'என்ன சேஷா.   சந்தடி சாக்குல என் தலைல ஐஸ வைக்கற?'

'ஐஸ் வெச்சே மன்னி கையால எத்தன காப்பி வாங்கி குடிச்சிருப்பேன்?'

'சரி சேஷா.  பையன் ஜாதகம் கொண்டு வந்தியா?'

'வராம வருவேனா?  கூடவே ஃபோட்டோவையும் கேட்டு வாங்கிண்டுன்னா வந்திருக்கேன்.'

மஞ்சள் பையைத் திறந்து ஜாதகத்தையும் பையனின் புகைப் படத்தையும் சிவாவிடம் தருகிறார் சேஷா.

படத்தை பார்த்த உடனேயே ஸ்டன்.  'மாப்பிள்ள நன்னா அழகா இருக்கானே.   சுசீலா இங்க பாரு.'

'பையன் நன்னா இருக்கான்னா.  எல்லாம் கூடி வரணுமே'

'எல்லாம் வரும் மன்னி.  உங்க தம்பி சபேஸன் கிட்ட ஒரு வார்த்த போட்டு வெச்சுட்டேள்னா பந்தல போட்டுட வேண்டியது தான்.'

'சேஷா, கொஞ்சம் நிதானமாவே பேசுவோம்.  அப்பறம் நம்மோட கண் திருஷ்டியே விழுந்துடப் போறது.'

'அன்னா, எனக்கென்னவோ முடிச்சுடலாம்னு தான் தோணறது.  சேஷா உள்ள வா.  ஆத்து சக்கரைய ரெண்டு ஸ்பூன் போட்டுண்டு காப்பி சாட்டு.  நல்ல சமாச்சாரம் சொல்லியிருக்க. சர்க்கரைப் பொங்கல் பண்ணி ஆத்துக்கு அப்பறம் அனுப்பறேன்  ஒரு மணி வாக்குல.'

'சுபத்ரா இல்ல?'

'அவளோட ஃப்ரெண்டுக்கு கல்யாணமாம் கடலூர்ல .  நலங்கு முடிச்சுட்டுத்தான் வருவேன்னு சொல்லிட்டு போனா.'

'அட, சகுனம் கூட எப்படி அமையறது பாருங்கோ மன்னி.  கல்யாணத்துக்கு சுபத்ரா போயிருக்கா.  இங்க அவளுக்கே கல்யாணம் வந்துடுத்து.'

'சேஷா, உன் கிட்ட எதுக்கு மறைக்கணும்? இத்தன நாள் என் தம்பி பையனத் தான் மனசுல வெச்சிண்டிருந்தேன் சுபிக்கு பார்க்கலாம்னு.  ஆனா மேற்கொண்டு படிச்சிட்டுதான் வேலைக்கு போவானாம்.  அதுக்கு இன்னும் நாலஞ்சு வருஷமாவது ஆகுமேன்னு கவலப் பட்டுண்டு இருந்தேன். நல்ல வேள நீ இந்த வரன கொண்டு வந்ததும் ஒரு நல்ல விஷயமாத்தான் படறது  எனக்கு.'

'இந்த வரன்ல எந்த ஒரு சின்ன கொற கூட இல்ல.  உங்க திருப்திக்காக பொருத்தம் பார்த்துட்டேள்னா நானே உங்க ரெண்டு பேரையும் அழச்சிண்டு போய் பையனாத்துல வுட்டுடுவேன்.'

'நீ தான் பெருமாள் பக்கத்திலேயே நின்னுண்டு அவரோட பேசிண்டிருக்கியே.  எங்களுக்காக வேண்டிக்கோ இந்த வரன் சுபத்ராவுக்கு அமையணும்னு.:

'கண்டிப்பா மன்னி.'

மெல்ல மெல்ல பாலாஜி அத்தையாத்து கனவுகளிலிருந்து நகர்கிறான்.

தொடரும்.....

No comments:

Post a Comment