Sunday, December 19, 2021

உறவுபோட்டமுடிச்சு_82

உறவுபோட்டமுடிச்சு_82

தீபாவளிக்கு மறுநாளுக்கு மறுநாள் மாலை பாலாஜி மெட்ராஸ் திரும்ப வேண்டும்.  தீபாவளி அன்று மாலையிலிருந்தே சமையல் அறை பக்ஷண வாசம் மீண்டும் தூக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது.  ஓச்சல் ஒழிவு இல்லாமல் சீதா அடுப்பங்கறையிலேயே பக்ஷணங்களை செய்து கொண்டிருந்தாள்.

'உன் பொண்ணுக்கு தான் பாலாஜி பைத்தியம் பிடிக்கும்னு பார்த்தா, உனக்கு அவன் கிறுக்கு புடிச்சிருக்கே.  எதுக்கு இவ்வளவு இழுத்து விட்டுண்டு.'

'பாலாஜி அங்க தனியா இருப்பான் மெட்ராஸ்ல மன்னி.  பண்ணி கொடுத்தா ஒரு வாரம் வாய் அலுத்து வரும்போதெல்லாம் சாப்பிடுவான் இல்லையா?  வாசனைய பார்த்துட்டு அவன் ஃப்ரெண்ட்ஸ் யாராவது லவுட்டிண்டிடுத்துன்னா பாலாஜிக்கு ஒண்ணும் இல்லாம போயிடுமே.  அதனால கொஞ்சம் கூடவே பண்றேன்.  அப்படியே பாலாஜிய மெட்ராஸ்ல அப்பைக்கப்ப பார்த்துண்டு இருக்கற பத்ம விஜயம் மாமாவாத்துக்கும் வேணும் இல்லையா மன்னி.'

'ஒண்டியா கஷ்டப் படறேயே டி.  என்னையும் கிட்டக்க வராதேன்னு சொல்லிட்ட.  கீதாவையாவது கூட்டி வெச்சிக்கலாமோன்னோ ஒத்தாசைக்கு?'

'பாவம் மன்னி.  ரெண்டும் சின்னஞ் சிறுசுங்க.  அண்ணா, தை மாசம் நிச்சயதார்த்தம்னு சொன்னதுலேந்து அவா ரெண்டு பேருக்கும் பூமிலேயே கால் பதியல.  ஃப்ரெண்ட்ஸ்,  அரட்டைனு அது இதுன்னு சந்தோஷமா இருக்கா ரெண்டு பேரும்.   பரவாயில்ல மன்னி.  எனக்கு  ஒண்ணும் கஷ்டமா தோணல.'

'அசோகா கொடுத்து அனுப்பறையோன்னோ அந்த படவாவுக்கு.'

'மன்னார்குடிலேந்து எடுத்துண்டு வந்த சம்படத்த கிட்ட தட்ட காலி பண்ணிட்டான் பாலாஜி.  போறச்சேயும் வரச்சேயும் ப்ளீஸ் அத்தைனு கேட்டு கேட்டே வாங்கி தீர்த்துட்டான்.  பரவாயில்ல.  புதுசா பண்ணி கொடுத்து அனுப்பிச்சா போச்சு.'

'சீதா, அன்னிலேந்து இன்னி வரைக்கும் அவனுக்கு அசாத்ய செல்லம் கொடுத்துண்டு வர.  இப்படி ஓச்சலே இல்லாம பக்ஷணம் பண்ணிண்டே இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகறது?  மணமேடைல ஒக்காந்து அசோகா கொடுத்தா தான் கீதா கழுத்துல தாலி கட்டுவேன்னு அடம் பிடிக்கப் போறான்.  எனக்கென்ன?'

ஞானமும் சீதாவும் சிரித்துக் களிக்கிறார்கள்.

'அவனுக்கு கேட்டும் போதெல்லாம் கொடுத்துட்டு என் கண்ணுல ஒரு bபிட்டு கூட அசோகாவையே காட்டலயே.'

'உங்களுக்கு அந்த சின்ன டிஃபன் பாக்ஸ்ல பாலாஜிக்கு தெரியாம ஒளிச்சு வெச்சிருக்கேன்.  எடுத்துக்கோங்கோ.'

'இப்படி வேற நடக்கறதாக்கும். நம்மாத்துல நாமே ஒளிச்சு வெச்சு சாப்பிடணுமாக்கும்.'

ஞானம் அந்த டப்பாவிலிருந்து ஒரு ஸ்பூன் அசோகாவை எடுத்து சீதா வாயை கட்டாயப் படுத்தி திறக்க சொல்லி ஊட்டி விடுகிறாள்.

'சீதா, நீ மன்னார்குடியில இனிமே இருக்க வேண்டாம்.  தேமேனு இங்கேயே வந்துடு.'

'இல்ல மன்னி.  மன்னார்குடியில இருக்கற பெரிய மனுஷா ஆதரவுல தான் வண்டி ஓடறது.  கீதா கல்யாணம் வரைக்குமாவது அவாள தண்ட கட்டிண்டு தான ஆகணும்.  பெரிய செலவாச்சே கல்யாணம்ங்கறது.  நீங்க எவ்வளவுதான் எனக்காக விட்டுக் கொடுப்பேள்?  எப்படியும் ரெண்டு வருஷம் இருக்கே கல்யாணத்துக்கு.  அதுக்குள்ள மொத்த சரீரத்தையும் உழப்புல போட்டு சேர்த்துடுவேன் மன்னி.'

'ஏன் கீதா.  இவ்வளவு கஷ்டப்படணுமா?  அண்ணா கிட்ட பேசு.  அவரே வழி சொல்லுவார்.'

'எனக்கும் தெரியும் மன்னி.  எனக்கு கீதா ஒரே பொண்ணு.  வாழ்க்கையில கிடைக்கற மறக்க முடியாத சந்தோஷம் கல்யாணம்தான்.  என் பொண்ணே என் கல்யாணம் இப்படியெல்லாம் நடக்கலையேன்னு என்னிக்காவது வருத்தப் பட்டுட கூடாது.  என்னால முடிஞ்ச அளவு பண்ணிடறேன் மன்னி.  நான் எத செஞ்சாலும் கடைசியா பெரிய மனசோட ஏத்துக்கற உங்க ரெண்டு பேர் குணமும் எனக்கு தைரியத்தையும் ஒரு பக்கம் கொடுத்துடுமே.  எனக்கு என்ன கவலை?'

'உன் இந்த பிடிவாதம் தான்.... சொன்னா கேட்டுக்கவே மாட்ட. ஏற்கனவே கோச்சிண்டு பூவனூர் பக்கமே வராம... ஏதோ கீதா புண்ணியத்துல ஒண்ணு சேர்ந்துட்டோம்.  ஏதோ உடம்ப வருத்திக்காம முடிஞ்சத பண்ணு.  சொல்லிட்டேன்.  நமக்குள்ள என்ன பெரிய சம்பிரதாயமெல்லாம் வேண்டியிருக்கு?'

சீதாவுக்கு ஒரு புறம் மலைப்பு.  ஒரு புறம் நம்பிக்கை.  ஒரு புறம் தைரியம்.  ஒரு புறம் ராஜகோபலன் கொடுக்கும் நம்பிக்கையால் அலட்சியம்.  ஒரு புறம் மேலேயிருந்து ரங்கன் கொடுக்கும் உற்சாகம்.  

எதுவுமே கையில் இல்லாமல் எல்லாம் கையில் இருக்கும் அதிசயம் சீதாவிடம் மட்டுமே இருக்கும் அற்புதம்.  துணிந்த மனம் என்றைக்காவது துயர் கொண்டிருக்கா என்ன?'

சபேஸய்யர் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு மாத்திரைகளையும் விழுங்கி விட்டு தூங்கவே ஆரம்பத்து விட்டார்.  குழந்தைகள் வரட்டும் குழந்தைகள் வரட்டும் என்று கொட்டாவிகள் விட்டுக்கொண்டு சொல்லிக் கொண்டிருந்த ஞானம் கூட பொறுமை இழந்து, 'அதுங்க வரபடி வரட்டும்.  நேக்கு அன்னத்த போடு.  பசிக்கறது' என்று சீதாவிடம் கேட்டு சாப்பிட்டு விட்டு பாயை விரித்து உறக்கம் கண்டு விட்டாள்.

இரவு பத்து மணி பாலாஜியும் கீதாவும் சிரித்துக் கொண்டே உள்ளே நுழையும் போது.

'அத்தை இன்னும் தூங்கல?  மணி பத்தாச்சே.'

'இப்பத்தான் பக்ஷணம் பண்ணி முடிச்சேன். உனக்கு ஊருக்கு கொண்டு போக வேணுமே.'

கேட்டுக் கொண்டிருந்த கீதாவுக்கு சற்று கில்ட்டி.

'சாரிம்மா.  சொல்லியிருக்கலாமே.'

'இதுக்கெல்லாம் வருத்தப்படாதே.  நான் வேணும்னு தான் உன்ன துணைக்கு கூப்டுக்கல.  ஆச்சு, இன்னும் ரெண்டு நாளுல பாலாஜி கிளம்பிடுவான்.  பேசறதுக்கு உங்க ரெண்டு பேர் கிட்டேயும் நிறைய இருக்குமே.'

'சாப்டேளா அத்தை?'

'உங்களோட சேர்ந்து சாப்டலானும்னு இருக்கேன்.  கை கால் அலம்பிண்டு வாங்கோ.'

'அம்மா, எனக்கு வேண்டாம். வயறு மந்தமா இருக்கு.'

'பாலாஜி, நீ சாப்புடு முதல்ல.  அப்பறம் நாங்க சாப்டறோம்.'

'அத்தை.  எல்லாராத்துலேயும் ஸ்வீட் சாப்ட்டு வயறு ஃபுல்லா இருக்கு.  எனக்கு வேண்டாம்.  நீங்க சாப்டுங்கோ.'

'இப்ப அப்படித்தான் இருக்கும்.  ராத்திரி பசிக்கும்.  கொஞ்சம் மோருஞ்சாதமா பெசஞ்சு கையில போடறேன்.  சாத்து நடுவுல குழிச்சிப்பியாம்.  சாம்பார் ஊத்துவேனாம்.'

'அப்படின்னா ஓகே அத்தை.  எத்தனை வருஷம் ஒடிப்போச்சு இப்படி அத்தை கையில போட்டு.'

'அம்மா இப்படி செல்லம் கொடுத்து பாலாஜிய கெடுக்காத. அப்பறம் என் பாடு திண்டாட்டமாயிடும்.'

'என்னையாவது கையில போட சொல்றான்.  ஆனா உன்ன ஊட்டி விட சொல்வான்.  செஞ்சுதான் ஆகணும்.'

'தேர் யூ ஆர் அத்தை.'

வாய் விட்டு சிரிக்கிறாள் சீதா.  எத்தனை வருடங்கள் ஓடிவிட்டது இவளுடைய முகத்தில் சிரிப்பு மலர்ந்து.  இந்த இரண்டு குழந்தைகளோடு பாசத்தை ஊட்டி ஊட்டி களித்துக் கழித்த அந்த நாட்கள்.  சோகத்தில் அன்று உறைந்து நின்றவளுக்கு அன்று பாலாஜி கொட்டிய அன்பு மழை.

அப்போது கிருஷ்ணர் கதையை இவளிடம் கேட்டு வாங்கிக் கொள்வான்.  இன்று இவள் பெற்ற ராதையை கேட்காமலேயே எடுத்துக் கொண்டு விட்டான்.

பொங்கிப் பொங்கி பழைய நினைவுகள் வந்து அவள் மனதை பூரிப்பில் முழுவதுமாக நிரப்புகின்றன.

'இவ்வளவு பசிய வெச்சிண்டு படுத்துக்கப் போறேன்னியே.'

'அதான் அத்த எனக்கும் புரியல.  நீ சிரிச்சிண்டே போட்டுண்டே இருந்தியா?  உன்ன பார்த்துண்டே உள்ள தள்ளிட்டேன்.'

'சரி பாலாஜி.  ரவ தூக்கம் இல்ல இன்னிக்கு முழுக்க உனக்கு.  பஸ்ஸுல வேற நின்னுண்டு வந்தேன்னு சொன்ன.  போய் படுத்துக்கோ.  நானும் கீதாவும் சாப்டுட்டு படுத்துக்கறோம்.'

'ரொம்ப த்தேங்க்ஸ் அத்த.  மோருஞ்சாம் சாப்ட்ட மாதிரியே இல்ல.  ஏதோ வெண்ணெ உருண்டைகள சாப்ட மாதிரி இருந்தது.'

'ஸ்வீட் ட்ரீம்ஸ் கீதா.  குட் நைட்.'

'ட்ரீம்ல இன்னிக்கு வந்து கிந்து தொலைக்காதே.  ஐ அம் ஆல்ஸோ டயர்ட்டு டுடே.'

மனதில் கீதா இப்படி சொல்லிக் கொண்டாலும் வார்த்தைகளாக வந்து விடுமா என்ன?

பதிலுக்கு குட் நைட் சொல்லிவிட்டு சிரித்துக் கொள்கிறாள்.

தொடரும்....

No comments:

Post a Comment