உறவுபோட்டமுடிச்சு_81
மெட்ராஸிலிருந்து வந்த பாலாஜி காஃபி குடித்தாகிவிட்டது. கங்கா ஸ்நானம் முடிந்து விட்டது. புது ட்ரெஸ் போட்டுக் கொண்டாகி விட்டது.
பெற்றோரை நமஸ்கரிக்க இருவரையும் கூப்பிடுகிறான்.
'நன்னா படிச்சு நல்ல உத்யோகத்துல சேர்ந்து சீக்கிரம் கீதாக்கு மூணு முடிச்ச போட்டுட்டு கூட்டிண்டு போ.'
இது அம்மா. ஆசீர்வாதமா கட்டளையா? இரண்டும் சேர்ந்த ரகம் இது.
அக்ரஹார நண்பர்கள் சேர்ந்து விட்டார்கள். அரட்டைகளும் நட்பு பரிமாற்றங்களும் மத்தாப்புகளும் வெடிகளும் அமர்க்களப் பட்டன ஓரிரு மணி நேரத்திற்கு மேல்.
இது நாள் வரை அரசல் புரசலாக பாலாஜி கீதா கல்யாணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த அக்ரஹார நட்பு உறவுகள், 'எப்போ கல்யாணம்?' என்று முகத்துக்கு நேராகவே கேட்க ஆரம்பித்து விட்டனர்.
அவ்வப்போது தனிமையில் கிடைத்த நிமிடங்களைக் கூட விட்டுவைக்காமல் கீதா அவன் மெட்ராஸ் சென்றதிலிருந்து அன்று வரையிலான இடைப்பட்ட இரண்டு மூன்று மாத அவளுடைய பூவனூர் வாழ்க்கையை துளிக் கூட அலுப்பே தட்டாமல் பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
காதல் கடித பரிமாற்றங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் சீண்டிக் கொண்டு பேசினார்கள். மாமி வாயால் அவளைப் பிடித்திருக்கிறது என்று சொல்ல வைக்க மாமாவுடன் சேர்ந்து போட்ட நாடகம். வயலில் இறங்கியது. நாற்று கட்டியது. நாற்றை நட்டது. ஸ்வர்ணம் ஆத்துக்கு வந்தது. தொலைந்த ஸ்வர்ணத்தை தேடியது. அவள் கர்பமாயிருப்பது, தஞ்சாவூரில் ஜானகி காதல்..... ஒன்றைக் கூட விட்டு வைக்கவில்லை பாலாஜியிடம்.
அவள் ஒவ்வொரு நிகழ்வாக ஸ்லாகித்து பேசும்போது அவள் முகத்தில் ஏற்படும் bபாவங்கள் அவனுக்கு ஒரு நவரச விருந்தாகவே இருந்தது.
'நீ இப்படியெல்லாம் கூட பேசுவியா? நீ இப்படி பேசிண்டே இருக்கணும் கீதா. எனக்கு வேலை கிடைக்கற ஊருக்கு என்னோட வருவியா இல்ல பூவனூர்ல தான் இருப்பேன்னு சொல்லிடுவியா?'
'எனக்கே ஒண்ணுமே புரியல பாலாஜி. அப்பா ஏன் என்கிட்ட வயல பார்த்துக்கறையான்னு கேட்கணும்? நான் ஏன் என் அம்மாவ கூட மறந்துட்டு பூவனூரிலேயே தங்கணும்? ஏதோ ஒண்ணு இந்த கிராமத்துல என்ன காந்தம் மாதிரி இழுத்துண்டே இருக்கு. என்ன சுத்தியிருக்கிற வயலா இல்ல இங்க என்னோட பழகிண்டிருக்கிற இந்த இருக்கற மனுஷாளா மாமாவா மாமியா இல்ல நீயா சாமுண்டியா கல்யாணியா....'
அழுகிறாள். புழியப் புழிய அழுகிறாள். அவனை வெறித்துப் பார்க்கிறாள். அது சிறிது நிமிடங்களில் ஏக்கமாக மாறுகிறது.
'கல்யாணத்துக்கு முன்னாடி தொட்டு பேசறதுல எனக்கு பிடிக்காது பாலாஜி. ஆனா இப்ப என்னவோ உன் கிட்ட நெருக்கம் கேட்கறது. நீ எப்போதும் என் பக்கத்துல இருக்கணும்னு மனசு கேட்டுண்டே இருக்கு. அது சீக்கரம் நடக்கணுமேங்கற ஏக்கம் .... எல்லை தாண்டிய கற்பனைகள் என்ன ரொம்ப தினம் தினமும் சித்திரவதை பண்றது. நல்ல வேள இந்த சித்திரவதைகள தாங்கிக்கற சக்திய இந்த மண்ணே எனக்கு கொடுத்துடறது.'
'ஏய், கீதா. இப்படியெல்லாம் பேசாத. நான் ஊருக்கு போய் இதெல்லாம் அங்க போய் நெனச்சிண்டு இருந்தா எவ்வளவு கஷ்டம் எனக்கு இருக்கும்? உனக்கு வேணுங்கற டைவர்ஷன் இந்த ஊரே கொடுத்துடறதே. நீ ரொம்ப கொடுத்து வெச்சவ. வருத்தப்படாத. நான் அஞ்சு மாசம் முன்னாடி பார்த்து ரசிச்ச கீதா மாதிரி போல்டா, அதிகாரம் பண்ணிண்டு, சின்ன சின்ன கோபம் பட்டுண்டு நீ எப்போதும் அப்படியே இருக்கணும். கண்ண தொடச்சிக்கோ. ஓடற ஓட்டம் ரெண்டு மூணு வருஷம்.'
'சாரி பாலாஜி. என்னவோ உன்ன பார்த்தவுடனே கொட்டணும்னு தோணித்து. கொட்டிட்டேன். நான் சரியாயிடுவேன். வெள்ளாம முடிஞ்சு மன்னார்குடி போயிட்டா படிப்பு வேல தேடறதுன்னு வேற மாதிரி டைவர்ஷன்ல வருஷம் ஓடிடும்.'
'கூல் கீதா. உன் உணர்வுகள புரிஞ்சிக்க முடியறது. ஆமாம், கேட்கணும்னு நெனச்சேன். நம்மாத்து தோட்டத்த பிரமாதமா பண்ணிட்டியே.'
அவளை வருத்தத்திலிருந்து மீட்க பேச்சை திசை திருப்புகிறான் பாலாஜி.
'நீ தான செங்கிப்பட்டில ஆசப் பட்ட. நம்மாத்து தோட்டத்த பிருந்தாவனம் மாதிரி ஆக்கணும்னு. அதான் நீ வரதுக்குள்ள பார்வையா பண்ணினேன். நீ எதெல்லாம் ஆச படறேன்னு சொல்லு. செஞ்சுடறேன்.'
அழுகை நிறைவுறாத நிலையில் விசம்பலுடன் கேட்கிறாள் கீதா.
'இப்பவேவா சொல்லணும் இல்ல கல்யாணத்துக்கு அப்பறமா ?'
அவள் விசும்பலையும் மீறி வந்த சிரிப்பு அவளை அவளிடம் அழைத்து செல்கிறது.
'அதான பார்த்தேன். ஐயா நெனப்பல்லாம் ரொம்ப நேர்மையா போயிண்டிருக்கேன்னு. நானும் கல்யாணத்துக்கு அப்பறம் கேட்க ஆரம்பிச்சா, நீ தாங்க மாட்ட.'
'மிஞ்சி மிஞ்சி புடவ கேட்ப. நாலஞ்சு நகை கேட்ப. என்ன பெரிசா கேட்கப்போற.'
'போதும். அப்பறம் எங்கெல்லாமோ போகும் டாபிக். கிளம்பலாம்.'
'சந்தானத்த கார்த்தால பார்த்தேன். அவனுக்கு வேல வாங்கி கொடுத்தியாமே. ஒன்ன ரொம்ப கொண்டாடிக்கறான்.'
'இப்ப அவன் கிட்ட விளையாட்டுத் தனமெல்லாம் போயிண்டிருக்கு. ஆஃபீஸரா ஆயிட்டார் இல்லையா?'
ஆசை தீர பேசிவிட்டு ஆத்துக்குள் நுழைந்தவர்களை சபேஸய்யர் கூப்பிட்டு அவர் அருகில் உட்கார சொல்கிறார்.
'கீதா, உங்க அம்மாவையும் ஞானத்தையும் கை வேலைகள முடிச்சிட்டு நான் கூப்பிட்டேன்னு சொல்லிட்டு வரையா?'
சிறிது நேரத்தில் அவர்களும் சபேசய்யர் பக்கத்தில் வந்தார்கள். எல்லோரையும் ஒரு முறை பார்த்துவிட்டு பேச்சை ஆரம்பிக்கிறார் சபேஸய்யர்.
'இன்னிக்கு பண்டிகையா இருக்கு. எல்லார் மனசும் சந்தோஷமா இருக்கற இந்த நேரத்துல என் மனசுல படறத பேச ஆசைப்படறேன். நல்ல வேள பாலாஜியும் வந்துட்டான் மெட்ராஸ்லேந்து.'
'சீதா, பாலாஜிக்கு உன் பொண்ணு கீதாவ ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கும் ஞானத்துக்கும் இதுல பரிபூரண சம்மதம். கீதாவை நானே கேட்டுட்டேன். அவளுக்கும் பாலாஜிய பிடிச்சிருக்குன்னுதான் தோணறது.' இப்படிச் சொல்லிவிட்டு நமுட்டு சிரிப்புடன் கீதாவைப் பார்த்து விட்டு அவளிடமிருந்து வந்த வெட்கத்தை ரசிக்கிறார்.
'நானும் கேள்விப்பட்டேண்ணா. இருந்தாலும் நீங்க உங்க வாயால சொல்ற வரைக்கும் பேசாம இருந்தேன்.'
'அத உணர்ந்து தான் எல்லாரையும் கூப்ட்டு வெச்சு பேசிடலாம்னு தோணித்து எனக்கு.'
'எனக்கு மாப்பிள்ளையா பாலாஜியே வரதுங்கறதுல நாங்க கொடுத்து வெச்சிருக்கோம்.'
'நாங்களும் கீதாவ எங்காத்து மாட்டுப் பொண்ணா அழச்சிக்கறதுல ரொம்ப கொடுத்து வெச்சிருக்கோம் சீதா. கீதா நாங்க இருந்த இக்கட்டான நேரத்துல செஞ்ச செஞ்சிண்டிருக்கற உதவிகள மறக்கவே முடியாது. நீயும் உன்னோட குழந்தைய எங்காத்துலேயே தங்க வெச்சு எங்களுக்கு பக்க பலமா இருக்க வெச்சு எங்களுக்கு பெரிய ஒத்தாச பண்ணியிருக்க.'
'உதவின்னு பெரிய வார்த்தையா சொல்லாதீங்கோண்ணா. எங்க ரெண்டு பேருக்கும் கடமைண்ணா அது.'
'சரி, அது இருக்கட்டும். தெரிஞ்சோ தெரியாமலோ குழந்தைகளோட கல்யாண பேச்சு ஆரம்பிச்சிட்டோம். உனக்கே புரியும், சம்மதம் எல்லாருக்கும் இருந்தாலும் உடனேயே மணையில உட்கார வைக்க முடியாது ரெண்டு பேரையும். எப்படி பார்த்தாலும் குறைந்த பக்ஷம் ரெண்டு வருஷம் கீதா வெயிட் பண்ணித்தான் ஆகணும். அவன் படிப்பு முடிஞ்சு, சின்ன வேலையிலயாவது உட்காரணும் இல்லையா? ஆசைய பொண் குழந்த மனுசுல விதச் சுட்டு வருஷக் கணக்குல காக்க வைக்கறது கூட சங்கடமாத்தான் இருக்கு. சீதா, உனக்கு ஏதாவது மனசுல பட்டுதுன்னா மனச விட்டு பேசு. எந்த தயக்கமும் வேண்டாம்.'
'நீங்க சொல்ற மாதிரி வேற வழி இல்லையேண்ணா. கீதா வெயிட் பண்ணுவா. நீங்க கவலப் படாதீங்கோ. என்னடி, நீயே வாயத் துறந்து சொல்லேன் உன் வாயால மாமாகிட்ட.'
'குழந்த கிட்ட ஏன் கேட்டுண்டு. பெரியவா நாம முதல்ல தீர்மானம் பண்ணுவோம். உனக்கும் பயம் இருக்கலாமே. பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு வருஷக் கணக்குல வாய் வார்த்தைலேயே இழுத்துண்டு போறாளே அண்ணான்னு என் மேல வரலாம் இல்லையா? அதனால என் மனசுல ஒண்ணு வெச்சிண்டிருக்கேன். வெள்ளாம முடிஞ்சு வர தை மாசம் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு வருஷத்துல பாலாஜி கீதா கழுத்துல முடிச்சு போடறதா எழுத்து பூர்வமா ஒத்துண்டு நிச்சயதார்த்தம் பண்ணலாம்னு நெனச்சிண்டிருக்கேன். சீதா, இதுக்கு சம்மதமா?'
'நமக்குள்ள என்னண்ணா? வாயால நீங்க சொன்னாலே போறாதா?'
'அப்படி இல்ல சீதா. இப்பவே நம்ம குழந்தைகள இணச்சு பூவனூர் முழுக்க எல்லாரும் பேசிண்டிருக்கறதா கேள்விப் பட்டுண்டிருக்கேன். கீதா எங்க மருமாளா மாசக் கணக்குல தங்கறதுக்கும் நிச்சயம் பண்ணாத மாட்டுப் பொண்ணா இங்க தங்கறதுக்கும் வித்யாசம் இருக்கு இல்லையா. ஊர் மனுஷா பார்வை எப்போதும் ஒரே மாதிரி இருக்கும்னு சொல்ல முடியாது. நாலு பேர் நாலு விதமா நாளைக்கு பேசினா கீதா மனசு ரொம்ப கஷ்டப்படும்.'
'சரி அண்ணா, உங்க விருப்பம் போல செய்யுங்கோ. நாங்க ரெண்டு பேரும் பூர்வ ஜன்மத்துல ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கோம். எனக்கும் என் பொண்ணுக்கும் நீங்க ரெண்டு பேரும் பார்வதி பரமேஸ்வரா மாதிரி. பட்ட கஷ்டத்துக்கெல்லாம் உங்க ரெண்டு பேர் ரூபத்துல வந்து பகவான் படி அளக்கிறான். வேற எதுவும் சொல்றதுக்கில்ல.'
'சரி, நல்லது. எல்லாருக்கும் இதுல உடன்பாடு தான.'
பேச்சிலே ஞாயம், நேர்மை, தர்மம் எல்லாம் இருக்கும் போது யார் மறுப்பு சொல்ல முடியும்? ஆனந்தத்தோடு ஆமோதிப்பு அனைவரிடத்தும்.
'இனிமே, யார் கேட்டாலும் தைரியமா வர தை மாசம் நிச்சயதார்த்தம் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம்னு சொல்லுங்கோ. இனிமே, பாலாஜி கீதா ரெண்டுபேருமே கல்யாண கனவுகள மனசோட வெச்சிண்டு படிச்சு நல்ல உத்யோகம் தேடறதுல ஃபோகஸ் பண்ணனும் சரியா?'
மாமி மாமாவை நமஸ்கரித்து ஆசி பெறுகிறாள் கீதா. ஞானம் தன் எல்லையில்லா மகிழ்சியை அவளை இறுக அணைத்து வெளிப் படுத்துகிறாள்.
சங்கேத மொழிகளில் விழிகள் மூலம் பாலாஜியும் கீதாவும் பேசிக்கொள்கிறார்கள்.
கல்யாண சந்தோஷத்துடன் உறவுகள் பண்டிகைக் களிப்பை தொடர்கின்றன.
தொடரும்..
No comments:
Post a Comment