மனதோடுமலர்கள்_14
அத்யாயம் 14
கல்யாண சத்திரத்துக்கு சந்துரு வந்த போது மாமாவாத்து மனுஷாள்களைத் தவிர அனைவரும் கல்யாணம் முடிந்து திரும்பியிருந்தனர். அம்பி, அம்பி ஆத்துக்காரி, பிரேமா மட்டும் ஹாலில் சேர்களில் விஸ்ராந்தையாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
'வாடா சந்துரு. சமயபுரம் தரிஸனம் ஆச்சா?' பிரேமா கேட்டாள்.
'சந்துருவை யாரோ YWCA பக்கம் பார்த்ததாக சொன்னாளே?'. அம்பியின் கிண்டல். அம்பி காதுக்கும் சென்றிருக்கிறது.
'ஏய், அம்பி. அவன இனிமே கலாட்டா பண்ணுனா, அழுதுடுவான்.'
அம்பியும், புது மணப்பெண் அனுவும் சற்று நகர்ந்ததும், பிரேமா கேட்டாள் சந்துருவை 'ஏண்டா, அவளோட தானே சமயபுரம் போன?'
அவளிடம் என்னவோ மறைக்க தோன்றவில்லை அவனுக்கு. நடந்தவைகளை சொன்னான்.
'குட். மனசுக்குள்ளேயே போட்டுண்டு குழம்பறத விட இதான் பெட்டர். என் மனசுல என்னமோ டக்குனு பட்டுது. அவ ஒனக்காகவே பொறந்தவ மாதிரி. கவலைப் படாதே. அத்தைகிட்ட பேச கூச்சமா இருந்தா சொல்லு. பாம்பேலேந்து ஓடி வந்துடறேன்'.
ஆறுதலா இருந்தது. உண்மையாக இதை சொன்னதாகவும் தெரிந்தது அவனுக்கு.
'இவ்வளவு சீக்கிரம் லவ்வுல ப்ரபோஸ் பண்றதெல்லாம் பொதுவா நடக்கிற விஷயமில்லை. உன் விஷயத்துல நடந்துருக்குன்னா அது சாக்ஷாத் சமயபுரத்தாள் தீர்மானிச்சுருக்கான்னு தான் அர்த்தம். கவலையே படாதே. எல்லாம் நல்ல படியா நடக்கும். அவ ஆஃபீஸ் நம்பரை கொடு. நானும் பேசறேன் அவ கிட்ட'
'தேங்க்ஸ் பிரேமா. நம்பர் கிம்பர்லாம் இனிமேத்தான் வாங்கிக்கணும்?'
'சாயந்திரம் ஸ்ரீரங்கம் போறியா அவ கூட'
'அவ கூட இல்ல. நான் தனியாத்தான் போறேன். சீக்கிரம் கிளம்பி க்ளோக் ரூமுல லக்கேஜை போட்டுட்டு ஸ்ரீரங்கம் போயிட்டு எட்டு மணிக்கு ஸ்டேஷன் வரலாம்னு இருக்கேன் '
'எதுக்கு அங்கேயும் இங்கேயும் அலஞ்சுண்டிருக்கே. எங்களுக்கு ட்ரெயின் எட்டரைக்குதான் கோயம்பத்தூருக்கு. நான் உன் லக்கேஜை எடுத்துண்டு உனக்கு தயிர்சாதம், புளியஞ்சாதம் கட்டிண்டு வந்துடரேன். சீர் பக்ஷணமும் கொண்டு வந்துடறேன். அதுக்கு ஏத்தமாதிரி ப்ளான் பண்ணி வந்துடு, என்ன?'
'உனக்கு எதுக்கு சிரமம் பிரேமா?'
'ஏண்டா, நானா தலையில சுமக்கப் போறேன். டாக்ஸி தலைமேல போட்டா ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துடப் போறது'.
சரி என்றான். நான்கு மணிக்கு மாமா மாமியை நமஸ்கரித்து ஸ்ரீரங்கம் கிளம்பினான். அற்புதமாக அரங்கன் தரிஸனம். வேண்டிக் கொண்டான். இனிமேல் மாலதி கையைப் பிடிக்கும் வரை எந்த கோவில் சென்றாலும் ஒரே பிரார்த்தனைதானே 'நல்லபடியா முடிச்சு கொடப்பா'.
கோயம்பத்தூர் வண்டி மூன்றாவது ப்ளாட்ஃபார்ம் என்று உறுதி செய்து கொண்டு கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டா தேடிக் கொண்டு கடைசியில் பிரேமாவை சற்று தூரத்தில் பார்த்துவிட்டான்.
'பிரேமா பக்கத்தில் நின்னுண்டு பேசிண்டுருக்கறது யாரு? அட, நம்ம மாலு இல்ல?
மாலதியே தான். 'அவ, எங்கே இப்படி, இவாளோட?!!'
புரியவில்லை. இருந்தாலும் மீண்டும் மாலதி. அது போதும் அவனுக்கு. அதுவும் 'நம்ம மாலதி'. கல்யாணத்துக்கு முன்னரே 'நம்ம மாலதி' உரிமை? உரிமை இல்லை, அது ஒரு பொஸஸிவ்நெஸ். எ க்ரேட் ஃபீலிங்.
'நீ எப்படி இங்க?' மாலதியை பார்த்து சந்துரு கேட்டான்.
'போதும், போதும். சூப்பர் ஆக்டிங். ஒத்துக்கறேன். மாலதி இப்பத்தான் நடிச்சு மாட்டிகிட்டா. இப்ப நீயா?'
'உன்ன வழியனுப்ப இந்த ரெண்டும் வந்ததுங்க. நாங்க ஸ்டேஷன் உள்ள நொழஞ்சதும் எஸ்கேப்பாக நெனச்சா. வசமா மாட்டிகிச்சுங்க ரெண்டும்'.
'இவங்க யாரு?' நீரஜாவை பார்த்து மாலதியிடம் கேட்டான்.
'பேர் நீரஜா. ஹாஸ்டல் மேட். துணைக்கு அழச்சிண்டு வந்தேன்'.
'ஹலோ'. சின்னதாய் சிரிப்புடன் நீரஜா.
தன்னைப் பற்றிய சிறு அறிமுகப் பேச்சுடன் கம்பார்ட்மெண்ட் உள்ளே இருந்த பிரேமாவின் கைக்குழந்தையை கொஞ்ச உள்ளே சென்றுவிட்டாள் நீரஜா. இங்கிதமும் ஒரு காரணம்.
பிரேமா இப்போது மாலதியைப் பார்த்து பேசினாள்.
'எல்லாம் சந்துரு சொன்னான் மாலதி. அவன் ஆத்துல பிரச்சனை இருக்காது. உங்க அப்பா அம்மாவிடம் மெல்ல பேசி நீதான் நல்ல முடிவா எடுக்கணும். எங்களுக்கெல்லாம் சந்துருன்னா உசுரு. நன்னா ஒருத்தருக்கொருத்தர் பேசி நல்ல முடிவா எடுங்கோ. என்னோட பாம்பே நம்பரை கொடுக்கறேன். எனி ஹெல்ப், ப்ளீஸ் ஃபீல் ஃப்ரீ.'
கொஞ்சம் கலங்கியிருந்தாள் மாலதி. தேற்றினாள், தலையைத் தடவி.
நம்பபர்களை பறிமாரிக் கொண்டார்கள். கல்யாண பக்ஷணங்களை இருவருக்கும் கொடுத்தாள். 'சந்துரு, உன் பையிலேயே, சாப்பாடும் பக்ஷணமும் வெச்சுருக்கேன். மறக்காம எடுத்துக்கோ'.
மாமா, மாமி, அம்பி, அனு சகிதம் கை அசைத்து விடை பெற்றாள் பிரேமா.
வண்டி நகர்ந்தது. வண்டியோடு சிறிது அடிகள் ஸ்ரீராமிடம் டாட்டா சொல்லிக் கொண்டே விடைபெற்றான் சந்துரு.
இனி ராக்ஃபோர்ட் எக்ஸ்ப்ரஸ்ஸில் ஏறவேண்டும். ரம்ய உணர்வுகளில் மூன்று நாட்கள். போனதே தெரியவில்லை.
சொந்தங்களோடு நாட்களை கழிக்க வந்தவன் துணைக்கு அச்சாரம் போட்டு விட்டான்.
பிரமித்து கோவை வண்டி நகர்வதையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் மாலதி வந்தாள்.
'உங்க வண்டி முதல் ப்ளாட்ஃபாம்னு அனௌன்ஸ் பண்ணா. என்ன கிளம்பலாமா?'
தொடரும்
No comments:
Post a Comment